Personal Blogging Unknown Author

மயிலாப்பூர் ஆலயங்கள்

சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

  1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)
    மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.
  2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)
    மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
    அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.
  3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)
    மயிலாப்பூரின் காவல் தெய்வம் என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.
  4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)
    மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.
  5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)
    இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.
  6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)
    மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
    வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை ‘கண் டாக்டர்’ என்றே கொண்டாடுகிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.
  7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)
    மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார்.
    எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
    நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?
  8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)
    திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
  9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)
    துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.
    சென்னையின் சிறப்பு மிக்க திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.
    சைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
    இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால் தான், மயிலையே கயிலை கயிலையே மயிலை என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

About the author

Srinivas Parthasarathy

Leave a Comment