பிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்
For the people who do not understand tamil please ask your friend and relish
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
கட்டுரையாளர்-கணேச சர்மா
தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.
மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,
”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் “யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால்,அரைக்கால்,இருமா,மாகாணி,
ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!
என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்
source: https://srinivassharmablog.wordpress.com
Leave a Comment
You must be logged in to post a comment.