Personal Blogging

கடவுள்

கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. ” என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!
? பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்
?ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
?முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
?தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் – அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
?வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
?வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் – அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்
?அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் – அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்
?கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் – அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்
?பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் – அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
?கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் – அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
?முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
?நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் – உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்
?உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் – ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.
?கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் – அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
?சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் – அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
?தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் – அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!✍?

About the author

Palakarai Sakthivel

Leave a Comment