Entertainment Personal Blogging

#TurningPoint on #Netflix

Written by Mannai RVS

தீவிரவாதிகளின் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா அல் காய்தா தலைமையான பின் லாடனைத் துரத்திப் பிடிக்கவோ கொல்லவோ வேண்டும் என்று வெறியுடன் நடத்திய இராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆவணப்படம் ”TURNING POINT: 9/11 AND THE WAR ON TERROR”. Netflixல் செப்டம்பர் 1-2021ல் வெளியிடப்பட்டு காணக்கிடைக்கிறது. புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் சமீபத்தில் ஜனாதிபதியான பைடன் வரையில் அமெரிக்க அதிபர்களின் ஆஃப்கானிஸ்தான் பற்றிய எண்ணங்கள் செயல்பாடுகள், இராணுவ இயக்கங்கள் போன்றவற்றை வரிசைக்கிரமமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போல எடுக்கப்பட்டிருக்கும் ஐந்து எபிஸோடுகள் கொண்ட ஆவணப்படத் தொடர். அமெரிக்க மண் மீது தாக்குதல் நடத்த அல் காயிதாவினர் மூன்று வருஷங்களாக திட்டமிட்ட “Planes Operation”ஐ எப்படி படிப்படியாக நிறைவேற்றினார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். மலேஷியாவில் அவர்கள் ஒன்றுகூடி கூட்டம் போட்டதை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாமே மூவாயிரம் பேரைக் காவு வாங்கி தேசத்தினர் அச்சத்தில் அல்லாடியபிறகு கிடைத்த தகவல்கள். ஆனால் இந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் பின் லாடன் ஆஃப்கானிஸ்தானிலிருக்கும் குகைகளில் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்த அமெரிக்கா தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா நிகழ்த்திய போரைப் பற்றியும் இடையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சதாமின் ஈரானுடன் நிகழ்த்திய போரையும் பற்றி அமெரிக்க அதிகாரிகளே ஒருதலைபட்சமாக இல்லாமல் வெளிப்படையாகச் சொன்ன கருத்துகள் இந்த ஆவணப்படத்தை உச்சத்தில் தூக்கி நிறுத்துகிறது. தலிபான்களை ஒடுக்கிறோம் பேர்வழி என்று ஆஃப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்தி பல அப்பாவி ஜனங்களைக் கொன்று குவித்ததால் அவர்கள் இராணுவ ஒழுக்கத்தை மீறி நடந்துகொண்டதாக அமெரிக்கர்களின் நியாயத்தராசைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு வகையினர் போர்க்கொடி பிடிக்கிறார்கள். அமெரிக்க வீரர்கள் சிலரின் அருவருப்பான செய்கைகளினால் ஆஃப்கானிஸ்தான் அரசாங்க இராணுவமும் அமெரிக்க இராணுவமும் சேர்ந்து செய்த பாதுகாப்புப் பணிகளில் ஏற்பட்ட தேக்கமும் ஆஃப்கானிஸ்தான் வீரர்களே நடு இரவில் பக்கத்திலிருக்கும் அமெரிக்க வீரர்களை சுட்டு வீழ்த்தியது பற்றியும் விவாதிக்கிறார்கள். தீவிரவாதிகளின் கூடாரமாக ஆஃப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்று உள்ளே புகுந்த அமெரிக்கா ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை அடக்குமுறையால் வெல்வது கடினம் என்றெண்ணி ஆதரவு காட்டும் முயற்சிகளில் இறங்குகிறது. ஆஃப்கானிஸ்தானில் நலப்பணிகளில் இறங்குகிறது. அதாவது ஆஃப்கானிஸ்தானில் நலத்திட்டங்கள் செய்துகொடுத்து பொதுஜனங்களிடம் அமெரிக்கா இராணுவம் நற்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். அப்படிச் செய்யும் அதே வேளையில் இளைய சமுதாயத்தினர் தலிபான்களிடம் சேர்ந்துவிடாமல் சௌஜன்யமாக இருப்பார்கள் என்றும் கருதுகிறது. ஆனால் இப்படிப்பட்ட கனவுகள் எல்லாம் தீவிரவாதத்தின் முன்னேயும் காட்டுமிராண்டித்தமான ட்ரோன் பாணி தாக்குதல்களாலும் அமெரிக்காவே தகர்த்துவிடுகிறது. மேனியில் இரத்தச் சிகப்பு மாறாத பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். வயதுவித்யாசமில்லாமல் பெண்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். முதியோர்களுக்கு நிம்மதியில்லை. மதிப்பில்லை. தேசத்தில் யாருக்குமே முறையான படிப்பில்லை. மருத்துவ வசதிகள் கிடையாது. பசி. பட்டினி. முன்னேற்றம் என்ற திசையின் பக்கமே ஆஃப்கானிஸ்தான் திரும்பவில்லை. If I want to be a good soldier, or a good human being, I would choose the second option, good human being என்கிறார் அங்கே களத்தில் இறங்கிப் போராடிய அமெரிக்க இராணுவ வீரர். தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் என்னென்ன அதிகாரங்கள் ஜனாதிபதிக்கும் இராணுவத்துக்கும் தரப்பட வேண்டும் என்பதற்கு விவாதம் நடந்து எல்லையில்லா அதிகாரங்களை அந்த நாட்டு நாடாளுமன்றம் வழங்குகிறது. ஆனால் அதை எல்லா ஜனாதிபதிகளும் இராணுவ அத்துமீறல்களுக்கு உபயோகித்தார்கள் என்று ஒரு சாரார் வருந்துகிறார்கள். இரானுடன் நடந்தது “Bad war” என்றும் ஆஃப்கானிஸ்தானில் நடைபெறுவது “Good war” என்றும் சொல்வதைப் பார்க்கும் போது போரில் எது நல்லது? எது கெட்டது? என்று வருந்துகிறார்கள். பின் லாடனை வீழ்த்தும் தினம் ஒரு திரைப்படத்தின் க்ளைமாஸ் போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நான் ஏற்கனவே என்னுடைய டைம்லைனில் குறிப்பிட்ட ஒரு ஹாட்ஸ்டார் சீரிஸ் “Homeland’யை முழுவதும் பார்த்தவர்கள் இந்த ஆவணப்படத் தொடரோடு ஒன்றிப் போய்விடுவது நிச்சயம். ஒரு fictionனும் non-fictionனும் எத்தனைக் கிட்டத்தில் மெல்லிய இழை போல இருக்கிறது என்பது புரியும்! அமெரிக்கர்களின் கருப்பு தினமாக இன்னமும் 9/11 துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. லாடனை வீழ்த்திய பின்னர் சிலர் கொதிப்படங்கியிருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் பன்னாட்டு உளவுநிறுவனமான CIA மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான NSA ஆகியவற்றுக்கிடையேயான செய்திசேகரிப்பு மற்றும் பகிரும் உறவு சங்கிலித்தொடர் போல இருந்திருந்தால் 9/11 நிகழ்ந்திருக்காது என்பதை உணர்ந்து இப்போது இவ்விரு நிறுவனங்களையும் கைக்குலுக்க வைத்திருக்கிறார்கள். தேசிய பாதுகாப்பை இன்னும் பலமடங்கு வலுவாக்கியிருக்கிறது அமெரிக்கா. இருபது வருஷ காலங்கள் இருபது ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை விரயமாக்கி லாடனைக் கொன்றோம் என்ற ஒரேயொரு பெருமையுடன் அமெரிக்க ராணுவம் பின்வாங்கி விட்டது. தாலிபான்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். வீதிகளில் இரத்த ஆறு ஓடுகிறது. அமெரிக்கா போன்ற பெரிய தேசமே ”இது நம் ஆட்டம் இல்லை” என்று ஒதுங்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்குதான் நாம் அங்கு சென்றோமே தவிர அந்த நாட்டை புனருத்தாரணம் செய்வதற்கு அல்ல என்றும் அது அந்த நாட்டின் தலைவலி என்றும் சொல்லி பைடன் அமெரிக்கப் படைகளை திரும்ப அழைத்துக்கொண்டார். உலகமே தீவிரவாதத்துக்கு பய்ப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எல்லைமீறிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த திணறுகின்றன. தாலிபான்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது என்பதற்கு சான்றாக ஆஃப்கான் – பாகிஸ்தான் எல்லையிலிருந்த பாகிஸ்தானின் Abbottabadல் லாடன் தங்கியிருந்த காம்பௌண்டைக் காட்டுக்கிறது அமெரிக்கா. இதைப் பற்றியும் இந்த ஆவணப்படத்தில் பேசுகிறார்கள். நான் இதைப் பற்றிச் சொல்வதை விட நீங்களே பார்த்தால் போரினால் வரும் எதிர்விளைவுகளைப் பற்றியும் ஆஃப்கானிஸ்தான் என்ற தேசத்தின் பரிதாபமான நிலைமையும் வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசுமே போராட்டக் குழு அந்தஸ்த்தில் இருக்கும் தாலிபான்களை ஏன் வெல்லமுடியவில்லை என்பதற்கான பதிலையும் இந்த ஆவணப்படத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். பயங்கரவாதம் என்ற முறையில்லாத தாக்குதல் என்ற தீவிரவாதப் போரையும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முறையான தாக்குதல் முகத்தையும் இந்த ஆவணப்படம் சீர்தூக்கிப் பார்க்கிறது. இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காத கொடூரம் என்பதும் இதனால் சாதாரண பொதுஜனம்படும் பாடுகளையும் அல்லல்களைப் பார்ப்பதுதான் வேதனையான விஷயமாக இருக்கிறது என்பதுதான் நிஜம். Brian Knappenbergerன் Brilliantஆன இயக்கம்! காணத் தவறாதீர்கள். ”ஆவணப்படத்திற்கு என்னடா இயக்கம் வேண்டிக்கிடக்கிறது?” என்று வாய்பொத்திச் சிரித்து எள்ளி நகையாடுவோர் அவசியம் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது!

About the author

Mannai RVS

Leave a Comment