Personal Blogging

அகங்காரம், ஆணவம் ,செருக்கு

”அகங்காரம், ஆணவம் ,செருக்கு..”*
ஒரு ஊரிலே செல்லையாப் புலவர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார்.அவர் ஓரளவு கல்வி கற்றுக் கொண்டவுடன் தம்மை ஒரு பெரும் புலவராக எண்ணி ஆணவத்தோடு எல்லோரிடமும் நடந்து கொண்டார்.
யாரையும் இவர் பொருட்படுத்துவதே இல்லை.பல இடங்கட்கும் போய்த் தம்முடைய கல்விப் பெருமையைக் காட்டிச் சொற்பொழிவுகள் செய்து கொண்டு வந்தார்..
தாம் பேசுகிற இடங்களில் தம்முடைய பெருமிதம் தோன்றுமாறு பேசினார்.
ஓரிடத்தில் கல்வியறிவு பெற்றிராத பொதுமக்களைக் காட்டு மிராண்டிகள் என்றும், விலங்குகள் என்றும் கூறுவார். நூல்களில் அவ்வாறு தான் சொல்லப்பட்டு இருக்கிறது என்றும் பேசுவார்.
செல்லையாப் புலவருடைய ஆணவத்தை அடக்க வேண்டும் என்று சிலர் எண்ணிக் கொண்டு இருந்தனர்.
ஒரு சிறுவன், தான் புலவருடைய செருக்கை அடக்கி விடுவதாகச் சொன்னான்.புலவர் செல்லக் கூடிய வழியில் வேறு சிலரோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.
அவனுக்கு அகவை பன்னிரண்டு தான் இருக்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி புலவர் அவ்வழியே வந்தார்.
புலவரின் ஆணவத்தை அடக்குவதாகக் கூறிய சிறுவன்,புலவருக்கு எதிரே சென்று,
“எங்களுக்கு ஓர் ஐயம் இருக்கிறது;அதனைத் தாங்கள் தீர்க்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டான்.
புலவர் அவனைப் பார்த்து நகைத்து,
“தமிழ் நெடுங் கணக்கு முழுவதையும் இன்னும் கற்றுக் கொள்ளாத உன்னுடைய ஐயத்தை என்னால் தீர்க்க முடியாதா? கூறு, உடனே போக்குகிறேன்” என்றார்.
சிறுவன் புலவரைப் பார்த்து,”ஐயா எழுபத்தைந்தோடு “மை” சேர்த்தால் என்னாகும்?” என்று கேட்டான்.
அவன் கேட்பது புலவருக்கு விளங்கவில்லை.
என்னடா பையா உளறுகிறாய்?“என்று கேட்டார்…
இச்சமயத்தில் பல பெரிய மனிதர்கள் அவ்விடத்திற்கு வந்து விட்டார்கள். சிறுவன் புலவரைப் பார்த்து,
“ஐயா நான் உளறவில்லை; நன்றாக எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள்”என்று கூறி மறுபடியும்,
அதே கேள்வியைக் கேட்டான்.
புலவர் விழித்தார்.அங்கு கூடி இருந்தவர்கள் நகைத்தனர்.புலவர்,
நகைப்பவர்களைப் பார்த்து,”அவன் ஏதோ உளறுகிறான்;நீங்கள் நகைக்கிறீர்களே” என்று சினத்துடன்மொழிந்தார்.
சிறுவன் “நான் உளறவில்லை;எழுபத்து ஐந்தோடு”மை” சேர்த்தால் என்ன ஆகும் என்று கேட்டேன்.
எழுபத்தைந்து என்ற எண்ணைக் குறிக்கும் தமிழ் எண் “௭௫ ” இத்துடன் “மை” சேர்த்தால் “எருமை” வரும். இது படித்தவராகிய உங்களுக்கு விளங்கவில்லையே?” என்று கூறி நகைத்தான்.
கூடியிருந்தவர்களும் பலமாகச் சிரித்தனர். செல்லையாப் புலவர் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்.
ஆம்.,நண்பர்களே..,
அகங்காரம்,ஆணவம், செருக்கு கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் வாழ்வில் இன்னல்களை அடைய நேரிடும்.
‘நான் தான்’ என்னும் எண்ணம் மேம்படுதலே ஆணவத்தின் தொடக்கம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால், ‘நானும்’ என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆணவம் கல்வி அறிவு மிகுதியாகப் பெற்றவர்களிடமும் செல்வம் மிகுதியாகக் கொண்டவர்களிடமும் ஏற்படும்.
‘நான்’ என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்று பொருள்.
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.
நிறை குடங்களுக்கு அது வருவதில்லை…..

About the author

Palakarai Sakthivel

Leave a Comment