Personal Blogging Unknown Author

டொக், டொக், டொக்..

“யாரு, இந்த நேரத்துல” என்று அலுத்தபடியே கதவைத் திறக்க வந்தார் ரங்கநாத பட்டர். அவர் அழுத கண்ணீர் படிந்து, முகத்திலேயே ஒட்டியபடி இருந்தது. இத்தனை வருஷம் சாத்தூர் வெங்கடாஜலபதிக்கு சேவை செய்து வந்த ரங்கநாதபட்டர், சட்டென்று ஒரே நாளில் கோவிலைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

‘இனிமே நீங்க வரவேண்டாம்’ என்று போலீஸ் சொன்ன போது, வெங்கடாஜலபதியையே பார்த்துக்கொண்டிருந்தார், பட்டர். அவர் அடிவயிற்றைப் பிசைந்தது. நாம என்ன ஜாதி பார்த்தோமா, துவேஷம் பார்த்தோமா… ? அட, தமிழ்லதான திவ்யப் பிரபந்தம் பாடி உன்னை ஆராதனை செய்யறேன்.. என்னை ஏன் வெளியே அனுப்பறே, பகவானே ?

தூரத்தில், அவர் மனைவியும் வாக்குவாதம் செய்ய, ஆட்சிச்சக்கரத்தின் சுழலில் சிக்கிய அரசு இயந்திரம் வருடக்கணக்கான பந்தத்தை வெட்டி அறுத்துக்கொண்டிருந்தது.

வீடே நிர்மூலமாய்க் கிடந்தது, இழவு விழுந்ததுபோல. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்பது அல்ல, அவர் கவலை. நியாயமாக அந்தக் கவலையும் சேர்ந்தே படவேண்டும். ஆனால், தன்னில் ஒரு பகுதி, அனாதரக்ஷகனே அனாதையாக கர்பக்ரஹத்தில் நிற்கிறானே, அவன் சாப்டானோ இல்லையோ ! சீமாச்சு ஒழுங்கா பொங்கல் வெச்சானோ இல்லையோ.. ! இன்னிக்கு திங்கக்கிழமை.. சரோஜா ஆயா ஒரு பூமாலை வாங்கிட்டு வரும். அவளுக்கு துளசி ப்ரசாதம் கொடுத்தானோ இல்லையோ..

டொக், டொக்.. !!

மறுபடியும் போலீசா ? அதான் அனுப்பிட்டாளே.. இன்னும் என்னதான் வேணுமாம் ?

கதவைத் திறந்தார் ரங்கநாதபட்டர்.

வெளியில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

ரங்கா, பசிக்கறதுடா !
MKS

About the author

Srinivas Parthasarathy

Leave a Comment