Personal Blogging

இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!!

இறைவன் கதை கேட்டால் கவலை இல்லை!! ?
கங்கை நதிக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்ந்தவர் புண்ணியதாமா.
துறவியான பிருஹத்தபா என்பவர் அந்த ஊரில் தினமும் ஹரி கதைகள் சொல்லி வந்தார்.
புண்ணியதாமா அதைக் கேட்கத் தவறியதில்லை.ஹரிகதை கேட்பது, அன்னதானம் அளிப்பது இவையே அவரது அன்றாட பணி. ஆனால் அவர் ஒருபோதும் கங்கை நதியில் நீராடியதில்லை. ஒருமுறை ஆன்மிக யாத்திரையாக வந்த இரு பயணிகள் காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இரவு நேரம் என்பதால் தங்குமிடம் தேடி அலைந்தனர். புண்ணிய தாமாவின் குடில் தென்பட்டது. சுவாமி… தங்கள் வீட்டு திண்ணையில் இன்றிரவு நாங்கள் தங்கலாமா எனக் கேட்டனர்.
அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவளிக்கும்படி மனைவியிடம் புண்ணியதாமா வேண்டினார்.
அமர்ந்த பயணிகள், ஐயா! நாங்கள் புனித கங்கையில் நீராட விரும்புகிறோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு துாரத்தில் உள்ளது எனக் கேட்டனர். நான் இந்த ஊரில் தான் பிறந்தேன்.
ஆனால் கங்கையில் நீராடியதில்லை. இங்கிருந்து 4 மைல் 6 கி.மீதுாரத்தில் கங்கை நதி இருப்பதாகச் சொல்வார்கள் என்றார். திகைத்த பயணிகள், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கங்கா என ஒருமுறை சொன்னாலும் நம் பாவம் தீருமே.
அருகில் இருந்தும் கங்கையில் நீராடாத உங்களை விடக் கொடிய பாவி இருக்க முடியாது.
இங்கு தங்க நினைத்ததே பெரும் பாவம் என உணவை புறக்கணித்தனர்.
புண்ணிய தாமாவின் முகம் வாடியது. கங்கையில் நீராடாத இவரது வீட்டுக்கு வந்த பாவம் தீர கங்காதேவியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொண்டே வெளியேறினர்.
கங்கைக்கரையை அடைந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நதி வறண்டு கிடந்தது. கரையோரமாகச் சென்று உற்பத்தி ஸ்தானமான கங்கோத்ரியை அடைந்தனர்.
அங்கும் தண்ணீர் இல்லை.நீண்ட துாரம் யாத்திரையாக நடந்து வந்தும் கங்கையில் நீராட முடியாமல் போனதே என அழுது புலம்பினர்.
தாயே! கங்காதேவி! எங்களை ஏற்று அருள்புரிய வேண்டும் என கைகுவித்து நின்றனர்.
காட்சியளித்த கங்காதேவி, புனிதமான ஹரி கதையை தினமும் கேட்கும் புண்ணிய தாமாவை அவமதித்ததால் நீராடும் தகுதியை இழந்து விட்டீர்கள்.
அவரது பாதம் என் மீது ஒருமுறையாவது பட வேண்டும் என நான் காத்திருக்கிறேன்.
அவர் மன்னிப்பு வழங்கும் வரை நீங்கள் நீராட முடியாது என்று சொல்லி மறைந்தாள். இருவரும் புண்ணியதாமாவை சந்திக்க புறப்பட்டனர்.
அறியாமல் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டினர். புண்ணியதாமா மன்னித்ததோடு அவர்களை துறவி பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி ஹரி கதை கேட்டு பிராயச்சித்தம் தேடினர். பின்னர் அனைவரும் கங்கையில் நீராடி நற்கதி பெற்றனர்.
ஹரிகதையைச் சொன்னாலும், படித்தாலும், கேட்டாலும் நம் கவலைகள், பாவங்கள் மறைந்து புண்ணியம் சேரும்.
??

About the author

Palakarai Sakthivel

Leave a Comment