#தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .காரணம் மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். அதுவும் மனைவிக்கு தெரியாமல் இப்படியே வருடங்கள் கடந்தன.ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக முதியோர் இல்லத்திலிருந்து தகவல் வந்தது.மகனும் உடனடியாக தன் தாயை கண்ணீருடன் சந்திக்கச் சென்றார்.
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” அம்மா என்னை தயவுசெய்து மன்னித்துடுங்கள் நான் இருந்து உங்களை கவனிக்க இயலவில்லை… என மகன் கேட்டார். “அந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் செயல்படவில்லை. ஜன்னல் கூட திறந்து வைக்க ஆளில்லை வெளிக்காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
இங்கு தரும் உப்பு உரப்பில்லா சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமலும் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் எங்கள் உடலுக்கு ஏற்ற சாப்பாட்டை பாதுகாத்து கெடாமல் வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.மகன் மனம் கலங்கி ஆச்சரியப்பட்டான்.
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.ஒருநாள் கூட இப்படியொரு குறையை சொன்னதில்லையே. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாதேப்பா… என சற்று நினைத்து பார்த்து மிகவும் வருந்துகிறேனப்பா…ஆதலால்தான் இதுப்போன்ற வசதிகளை முன்னதாகவே உன்னை செய்துதர சொல்லி கேட்கிறேனப்பா…” என்றார்.
தாய் தந்தையரை கைவிடுவோர் நன்றியை மறந்த களிமண்கள்… அவர்களால் யாருக்கும் எந்த பலனுமில்லை… அவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நினைத்து பார்த்தால் போதும் இன்று இவர்களுக்கு நாம் செய்பவையே நாளை நமக்கு செய்வார்கள்.
“வாழ்க்கை என்றுமே ஓர் வட்டம்தான்”
Leave a Comment
You must be logged in to post a comment.