மேலே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அடியேனுக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள். எப்படி என்று சொல்கிறேன்.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விதை எது ?
முதல் தனி வித்தேயோ, முழு மூவுலகு
ஆதிக்கு எல்லாம்!
முதல் தனி உன்னை, உன்னை
எனை நாள் வந்து கூடுவன்-நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு
முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து,
உயர்ந்த முடிவிலீ! ஓ!
மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் மூலப்பகுதியாகத் திகழுகின்றவனே, அனைத்துக்கும் தொடக்கமான, தனித்துவமானவனே, முதன்மையானவனாக, ஒப்பற்றவனாகச் சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த முடிவிலியே, இத்தகைய உன்னை, அனைத்துச் சிறப்புகளும் நிறைந்த முதல் தனிப்பொருளாகிய உன்னை, நான் என்றைக்கு வந்து கூடுவேனோ என்கிறார் நம்மாழ்வார்.
முதல் தனி வித்தேயோ
யார் இந்த வித்தாக இருக்க முடியும் ?
சீர்மை கொள் வீடு சுவர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா, மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய்ப் பரந்து தனி நின்ற
கார்முகில் போல் வண்ணன்,என் கண்ணனை நான் கண்டேனே.
கண்ணன் என்று அடித்துச் சொல்லுகிறார் நம்மாழ்வார்.
ஒரு நல்ல பயிர் வளர்வதற்கு நல்ல விதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ’விளையும் பயிர் முளையிலே தெரியும் ‘ என்பது போல அப்போது தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பூ, பழங்களைக் கொடுக்கும்.
நல்ல விதை என்பது கண்ணன் என்று நம்மாழ்வார் சொல்லிவிட்டார். நல்ல விதை மட்டும் இருந்தால் போதுமா ? நல்ல வளமான மண் வேண்டும். அந்த விதையை விதைக்கும் கை உயர்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த விதை நன்றாக வளரும். அந்த விதையிலிருந்து அது கொடுக்கும் காய் கனிகள் நமக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கும்.
பூமி பிராட்டியை காட்டிலும் நல்ல மண் எங்கே கிடைக்கும் ? பூமா தேவியே ஆண்டாளாக அவதரித்தாள். கண்ணன் என்ற உயர்ந்த விதையை, பூமிப் பிராட்டியின் அம்சமான ஆண்டாளின் மனதில் சின்ன வயதில் விதைத்தவர் பெரிய ஆழ்வார். அப்படி விதைத்தலால் அந்தச் செடி எப்படி வளர்ந்தது ? ஸ்ரீ மணவாள மாமுனிகள் தன் உபதேச ரத்தின மாலையில்
அஞ்சுகுடிக்கு ஓர் சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை, ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து!
எம்பெருமானுக்கு எங்கே ஏதாவது தீங்கு நேருமோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்கள் பிறந்த குடியில் ஆண்டாள் ஒருத்தியே மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் தன்மையை உடையவளாக இருந்தாள் ஆண்டாள்.
’ஞானம் கனிந்த நலம்’ என்று இராமானுச நூற்றந்தாதியில் வருவது போலப் பரமபக்தியானது அறிவுக்கு தகுதியில்லாத அந்த ஐந்து வயதிலேயே இயல்பாக வந்தது ஆண்டாளுக்கு.
’பழத்துக்குக் காரணம் புஷ்பம்’ என்று சொல்லுவது போலப் பிஞ்சாய் பழுத்து(ஞானம் கனிந்த நலம்) நமக்குத் திருப்பாவை என்ற உயர்ந்த (பழத்தை) விஷயத்தைக் கொடுத்தாள்.
இந்தப் பழத்தினால் சுவைத்தால் என்ன கிடைக்கும் ?
வேதப்பிரான் பட்டர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் – பாவம் செய்தால் அதற்குச் சில பிராயச்சித்தம் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால் சில பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிடையாது அதைத் தான் பாதகங்கள் என்று கூறுவார்கள். அதைத் தீர்க்கும் ஒரே மருந்து திருப்பாவை.
பரமனடி காட்டும் – பெருமாளை வேண்டி அவனிடம் சிலவற்றைக் கேட்டுப் பெறலாம். ஆனால் திருப்பாவை பாடினால் ‘பரமனடி காட்டும்’ அதாவது பெருமாளே கிடைப்பார்!
வேதமனைத்துக்கும் வித்தாகும் – ஒரு பனை மரத்தின் கீழே சின்னப் புல் அதன் மீது ஒரு பனித்துளி அந்தப் பனித்துளியின் மீது மொத்த பனை மரமும் பிரதிபளிக்க்கும். அதுபோலத் தான் திருப்பாவை.
வேதம் போன்ற உயந்த பனை மரத்தை மார்கழி பனித்துளியில் திருப்பாவை முப்பது பாசுரங்களும் வேதம் அனைத்தையும் சூத்திரம்போலக் காட்டிவிடும்.
The Svalbard Global Seed Vault (தி ஸ்வால்பார்ட் குளோபல் சீட் வால்ட்) நோர்வே தீவில் வட துருவத்துக்கு 1300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே பல விதைகளைப் பாதுகாக்கிறார்கள்.
நாளைக்கே பூமியில் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டால். மனித வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும். உணவுக்காக மக்கள் திண்டாடுவார்கள். அத்தகைய சூழலில் உதவியாக இருக்கக்கூடிய ஒரே இடம் ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட் தான். இந்தச் சேமிப்பு கிடங்கில் 300 வகையான தானியங்களின் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பேரழிவு ஏற்பட்டால் இங்கிருந்து விதைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விதை என்பது மிக முக்கியமான விஷயம்.
விதைகளைப் போல் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் திருப்பாவையை பாதுகாத்தால் போதும். வேதமே அழிந்தாலும் மீட்டெடுத்துவிடலாம். அதனால் தான் வேதப்பிரான் பட்டர் ”வேதமனைத்துக்கும் வித்தாகும்” என்கிறார்.
இப்போது மேலே உள்ள படத்தை மீண்டும் பாருங்கள் – இது மாதிரி எல்லா மாம்பழமும் இருப்பதில்லை. இந்தப் பழம் விஞ்சி நிற்கும் தன்மையுடன் இருக்கிறது. நன்றாகப் பார்த்தால் இன்னும் பழுக்கக் கூட இல்லை ’ஞானம் கனிந்த நலம்’ என்னும்படியாகப் பிஞ்சாய் பழுத்து, அதில் நான்கு இலைகள் நான்கு வேதங்களை குறிப்பது போல, வேதமனைத்துக்கும் வித்தாகும் இந்தப் பழமே ஆண்டாள்!
சுஜாதா தேசிகன்
3-8-2021
ஆடி18 ஆம் பெருக்கு
விரைவில் ‘தினம் ஒரு பசுரத்தில்’ நாச்சியார் திருமொழியை அனுபவிக்கலாம்.
Leave a Comment
You must be logged in to post a comment.