வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு
…………………………………………………………..
இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.
ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது பல சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளும். பின்னது ஒரு சில சொற்களையே கடன் வாங்கும். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஒரு சில மட்டும் இருத்தற்கும், தமிழில் வட சொற்கள் பல புகுந்தமைக்கும் காரணம் இதுவே.
இவ்வாறு படிப்படியாக நிகழும் மொழிக்கலப்பு, எழுத்து மொழியில் இடம்பெற நீண்ட காலமாகும். பேச்சு மொழியிலோ விரைவில் இடம் பற்றி வழக்கில் இருக்கும்.
இவ்வாறு பேச்சுமொழி வழக்கில் இருக்கும்போதே, தாய்மொழியில் தோன்றிய சொல்லாக்கத்தின் எதிர்ப்பால் பிறமொழிகள் மறைந்தும் போகும்.
‘ஜனம்’ – மக்கள், ‘ராஜா’ – அரசன், ‘அபேட்சகர்’ – வேட்பாளர், ‘ஓட்டு’ – வாக்கு, ‘ஓட்டர்’ – வாக்காளர், ‘விருக்ஷம்’ – மரம், ‘கேசம்’ – முடி.
மேற்குறிப்பிட்ட சொற்களில் வடமொழிச் சொற்கள், பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்தியதாலும், புதிய சொல்லாக்கங்களாலும் வழக்கொழிந்து விட்டதை அறியலாம்.
மொழிக்கலப்பு நிகழும் போது மக்களின் நம்பிக்கையின் வழியாகச் சென்று கலக்கும் பிற மொழிச் சொற்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேரிடுகிறது. இதே போன்று வாணிக வழியில், அறிவியல் வழியில் நுழையும் சொற்களையும் அகற்றுவது ஒரு மொழிக்குக் கடினமாகும். மொழிக் கலப்பு நிகழ்ந்த தமிழ் மொழியிலும், இவ்வாறே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பிற மொழிச் சொற்கள் கலக்க நேர்ந்துள்ளது.
இவை எழுத்து வழக்கில் குறைவாக இருப்பினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பிறமொழிச் சொற்களை இவ்வியலில் ஆய்ந்தறியலாம்.
வடமொழி வழக்கு
வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செய்திகள் பலவற்றையும் தத்தம் தாய்மொழிகளில் எழுதிய சான்றோர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும், விரிவாகவும் குறிப்பிட வேண்டிய செய்திகள். இந்திய எல்லையில் அனைவருக்கும் பயன்படல் வேண்டுமென்ற கருத்தால் அவற்றை வடமொழியில் வரைந்தனர்.
மேலும் வானியல், சிற்பம் போன்றவற்றின் கலைச்சொற்கள் பலவும் வடமொழியிலேயே கொள்ளப்பட்டுத் தத்தம் மொழிகளுக்கு ஏற்பச் சில திரிபுகளுடன், இந்திய நாட்டில் பன்மொழி பேசும் பல்வேறு பகுதியினரின் தாய்மொழிகளிலும் ஏற்கப்பட்டன. இம்முறையில் வடமொழிச் சொற்கள் பல அப்படியேயும், சிறிது திரிந்தும், தமிழிலும் வழங்கப்பட்டன.
இன்று வழங்கும் விண்மீன்களின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும், வடமொழியிலிருந்து தமிழொலிக்கேற்பச் சிறிது திரித்தும், திரிக்காமலும் கொள்ளப்பட்டன.
இற்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் திகழும் தொல்காப்பியத்திலும், மாதப் பெயர்களும் விண்மீன்பெயர்களும் ஏற்கப்பட்டன என்று கருதுவாரும் உளர்.
சொல்லமைப்பிலும், சொற்றொடர் அமைவிலும் வடமொழியைப் பின்பற்றிய முறைகளும் உண்டென்றும் சிலர் எழுதினர். இவ்வாறு தொன்று தொட்டே வடமொழி தமிழின் மீது வல்லாண்மை செலுத்திக் கலப்பு நிகழ்த்தும் மொழியாக இருந்து வந்துள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றிருந்த போதிலும், வடமொழியின் வரவுக்கு வழிவகுத்தனர். வட மொழியின் வழியாகப் புகுத்தப்பட்ட சமயம், சோதிடம் போன்ற நம்பிக்கைகள் மன்னர்களுக்கு மகிழ்வூட்டும் கலைகளாக இருந்தன.
இத்துறைகளில் வல்ல பல வடமொழியாளர்களைத் தமிழ் மன்னர்கள் காத்து, அவர்கள் மொழி தமிழகத்தில் பரவிடவும் வழி வகுத்தனர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் நிகழ்ந்த தமிழ்க் காப்புப் போராட்டம் வடமொழிக்கலப்பைத் தடுக்க முயன்றது. இருப்பினும் மணிப்பிரவாள உருவில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.
இந்நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்மொழி, இனம், பண்பாடு, கலை ஆகியவை பிறமொழித் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனப் பொங்கி எழுந்தது’.
இதன் விளைவாக மேலும் பிறமொழிக் கலப்பு நிலை தடுக்கப்பட்டது. இருப்பினும், அன்றாட வழக்கில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கடவுள் நம்பிக்கை வழிவந்தவையாகவும், சோதிடக்கலை வழிவந்தனவாகவும் இருந்தமையால், அவற்றை எளிதில் நீக்க இயலாத நிலை உள்ளது.
இவற்றை நல்லன எனக்கருதி மக்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக உள்ளது. மக்கள் ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தைப் பேராசிரியர் இரா. இராகவையங்கார் ‘தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினும் மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அடுத்துப் பயின்ற திசைத் தொடர்பு மட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட்டிற்குப் பெரிதும் ஏற்றது பற்றியும், எம்மொழியிலும் அதன் கண்ணுள்ள நல்லனவற்றையும் கொள்ளும் சிறந்த பெருநோக்கமும் ஆகுமென்று துணிவது தகும்’ எனக் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம்.
கடவுள், கோயில் தொடர்பாக இன்றும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வடமொழிச் சொற்களைக் காண்போம்.
‘பிரகாரம்’, ‘பார்வதி’, ‘பூஜை’, ‘தீபாராதனை’, ‘புனஸ்காரம்’, ‘அங்கப் பிரதட்சணம்’, ‘புஷ்பம்’, ‘எதேஷ்டம்’, ‘உற்சவம்’, ‘மூலவர்’, ‘பிரபை’, ‘ஞானம்’, ‘நைவேத்தியம்’, ‘பிரசாதம்’, ‘ஈசுவரன்’, ‘பிரதிஷ்டை’, ‘பிரம்மா’, ‘பஞ்சலோகம்’, ‘விஷ்ணு’, ‘விக்ரகம்’, ‘லக்ஷ்மி’, ‘ஆத்மா’, ‘சரஸ்வதி’, ‘விபூதி’, ‘குங்குமம்’, ‘திதி’, ‘கலசம்’, ‘மகோத்ஸவம்’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கும்பாபிஷேகம்’, ‘சுபம்’, ‘விரதம்’, ‘கும்பம்’, ‘நவக்கிரகம்’, ‘பிரதிமை’, ‘சனீஸ்வரன்’, ‘சாஷ்டாங்கம்’, ‘தீர்த்தம்’, ‘நவலோகம்’, ‘ஜலம்’, ‘அலங்காரம்’, ‘அஷ்டம்’, ‘அர்த்தஜாம பூஜை’, ‘தூபம்’, ‘அந்திம பூஜை’, ‘தூப தீபம்’, ‘தீட்சிதர்’, ‘அர்ச்சகர்’, ‘பாகவதர்’, ‘அர்ச்சனை’, ‘தேவன்’, ‘அஷ்டமி’, ‘நவமி’ என மிகப்பல வடமொழிச் சொற்கள் இன்றும் அன்றாட வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை மக்களின் இறை நம்பிக்கையைக் கால்கோளாகக் கொண்டு புகுத்தப்பட்டமையால், இன்னும் நீங்கா நிலையில் உள்ளன. சோதிடம் என்பது காலக்கணக்காகக் கருதப்பட்டாலும், இதனால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் மிகப்பலவாகும்.
‘ஜோசியம்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘ராகு’, ‘புத்தி’, ‘ஓரை’, ‘சகுனம்’, ‘சுக்கிரன்’, ‘அமாவாசை’, ‘கிருத்திகை’, ‘ஜென்மநட்சத்திரம்’, ‘பூராடம்’, ‘விருச்சிகம்’, ‘யோகம்’, ‘அபிஷேகம்’, ‘கஷ்டகாலம்’, ‘நட்சத்திரம்’, ‘திசை’, ‘லக்னம்’, ‘நிமித்தம்’, ‘திவசம்’, ‘பாட்டிமை’, ‘பஞ்சாங்கம்’, ‘போகம்’, ‘மகம்’, ‘தனுசு’, ‘சித்தம்’, ‘துலாம்’, ‘பஞ்சமிதிதி’, ‘ஜாதகம்’, ‘கிரகணம்’, ‘கேது’, ‘பலன்’, ‘விவாஹம்’, ‘ராசி’, ‘கேட்டை’, ‘அனுகூலம்’, ‘ஆயில்யம்’, ‘உத்திராடம்’, ‘மீனம்’, ‘துவாதசி’ இவ்வாறு சோதிடத் துறையால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் பலவாகும்.
இவையனைத்தும் மக்களின் சோதிட ஆர்வத்தைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் நுழைந்தவை.
திருமணத் தொடர்பாக வடசொற்கள் வருமாறு:-
‘கரணம்’, ‘சேவித்தல்’, ‘கங்கணம்’, ‘ஓமம்’, ‘அட்சதை’, ‘அருந்ததி’, ‘ஜானவாசம்’, ‘ஆசீர்வாதம்’, ‘மாங்கல்யம்’, ‘பிரகாரம்’, ‘விவாக சுபமுகூர்த்தம்’.
தமிழ் ஆண்டுகள் என்று பெருவழக்காகச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகளும், ஆண்டில் பன்னிரு மாதங்களும் வடமொழிச் சொற்களே. கிழமைகளாக வழங்கப்படுபவற்றுள்ளும் பெரும்பான்மையின வடமொழிச் சொற்களே.
அன்றாட வாழ்வில் இவற்றை வழங்காமல் நீக்குவது எளிதானதல்ல. நம்பிக்கை வழியாக மட்டுமின்றி, வடமொழியாளர் தொடர்பால் புகுந்த ஏராளமான சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கலப்பு இருந்து வருவதால், வடமொழிக் கலப்புக் குறைகிறது. ஆங்கிலத்தின் வரவால் வடமொழி மறைவதில் தமிழுக்குப் பயன் விளையாது.
பிறமொழிகள் இரண்டும் கலப்பு நிகழ்த்தும் நிலையில்தான் தமிழின் அன்றாட வழக்கு இயங்கி வருகிறது என்பதைக் கருத வேண்டும்.
‘அக்ரகாரம்’, ‘அகடவிகடம்’, ‘அகந்தை’, ‘அகிம்ஸை’, ‘அங்கஹீனம்’, ‘அங்கீகாரம்’, ‘அசந்தர்ப்பம்’, ‘அசாதாரணம்’, ‘அசுரன்’, ‘அசெளக்கியம்’, ‘அட்டகாசம்’, ‘அத்தியாவசியம்’, ‘அதிசயம்’, ‘அதிபர்’, ‘அதோகதி’, ‘அந்திமம்’, ‘நாமம்’, ‘அநியாயம்’, ‘அப்பிராணி’, ‘அபத்தம்’, ‘அபிப்பிராயம்’, ‘அம்சம்’, ‘அமங்கலம்’, ‘அயோக்கியன்’, ‘அரிதாரம்’, ‘அவகாசம்’, ‘அவதாரம்’, ‘அவஸ்தை’, ‘அக்ரமம்’, ‘அகதி’, ‘அகஸ்மாத்து’, ‘அகிலம்’, ‘சேஷ்டை’, ‘அசடு’, ‘அனந்தகோடி’, ‘அசிங்கம்’, ‘அசுத்தம்’, ‘நமஸ்காரம்’, ‘அத்தாட்சி’, ‘தர்மம்’, ‘அதிபதி’, ‘அதிர்ஷ்டம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்நியன்’, ‘அநாமதேயன்’, ‘அநீதி’, ‘அபகரித்தல்’, ‘அபயம்’, ‘அபாண்டம்’, ‘அபிவிருத்தி’, ‘அம்பிகை’, ‘அமிர்தம்’, ‘அர்த்தபுஷ்டி’, ‘அலங்காரம்’, ‘அவசரம்’, ‘அவதானம்’, ‘அக்கினி’, ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அகாலம்’, ‘அகோரம்’, ‘வஸ்திரம்’, ‘சந்தர்ப்பம்’, ‘அசம்பாவிதம்’, ‘அஜீரணம்’, ‘செளக்கியம்’, ‘அட்சதை’, ‘அத்தியாயம்’, ‘அதர்மம்’, ‘சதிபதி’, ‘அதிருப்தி’, ‘அந்தஸ்து’, ‘அநாதை’, ‘அபிஷ்டு’, ‘அப்பாவி’, ‘அபசாரம்’, ‘அபராதம்’, ‘அபாயம்’, ‘அபூர்வம்’, ‘அம்புஜம்’, ‘அமோகம்’, ‘அர்த்தம்’, ‘அலட்சியம்’, ‘அவசியம்’, ‘அவலட்சணம்’ எனப்பல வடமொழிச் சொற்கள் அன்றாட வழக்கில் மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வருதலை அறியலாம்.
எனவே, தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களில் வடமொழியே முதன்முதலில் மிகுதியான சொற்களைக் கலந்தது . வடமொழியோடு நெருங்கிய தொடர்புடையன பிராகிருத மொழிகளாகும்.
தமிழும்,பிராகிருதமும் என்ற கட்டுரையில் ‘அக்கி’, ‘அத்தம்’, ‘இசை’, ‘உவச்சன்’, ‘ஊராண்மை’, ‘ஐயர்’, ‘ஓமாலிகை’, ‘கப்பம்’, ‘கண்ணன்’, ‘கலுழன்’, ‘காமம்’, ‘கோட்டி’, ‘சதுக்கம்’, ‘சிட்டன்’, ‘சுண்ணம்’, ‘தக்கினம்’, ‘தம்பலம்’, ‘தயிர்’, ‘தலைவர்’, ‘தானம்’, ‘திட்டி’, ‘துவை’, ‘தூசு’, ‘தொடி’, ‘நேயம்’, ‘படிமை’, ‘பள்ளி’, ‘பளிங்கு’, ‘பாயிரம்’, ‘பிசைமட்டம்’, ‘மயானம்’, ‘முத்து’, ‘மையம்’, ‘வயிரம்’, ‘விஞ்சை’ முதலிய சொற்களைப் பேராசிரியர் வையாபுரியார் பிராகிருதம் எனப் பட்டியலிட்டுள்ளார்.
வைதிக சமயத்தால் வடசொற்களும், சமண சமயத்தால் பிராகிருதச் சொற்களும், பெளத்த சமயத்தால் பாலி மொழிச் சொற்களும் பல கலந்தன என்றும் கூறினார்.
-முனைவர் .ஒளவை ந. அருள்.
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.