அலெக்சாந்தரின் நாடு மாசிடோன். துவக்கத்தில் மாசிடோனியர்களை கிரேக்கர்களாகவே அக்கால கிரேக்கர்கள் கருதவில்லை. கிரேக்கத்துக்கு வடக்கே இருந்த காட்டுமிராண்டிகளாக தான் கருதினார்கள். காரணம் மாசிடோனியர்களிடம் கலை, அறிவியல், தத்துவம், நகர நாகரிகம் எதுவும் இல்லை. அவர்கள் சும்மா ஆடு மேய்த்துக்கொண்டும், சண்டை, கலவரங்களில் ஈடுபடுக்கொண்டும் இருந்தார்கள்.
இந்த சூழலில் பிலிப் மாசிடோன் ஆட்சிக்கு வருகிறார். அவரது நோக்கம் கிரேக்கத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக்கி, பொது எதிரியான பாரசிகத்தை வீழ்த்தவேண்டும் என்பதுதான். பாரசிகம் அப்போது மிகப்பெரும் பேரரசு. எகிப்து, துருக்கியில் துவங்கி இரான், இராக், சிரியா,ஆப்கானிஸ்தான், வடக்கே கஜகஸ்தான் வரை பரவி இருந்த பேரரசு.
ஆனால் கிரேக்க நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் அவர்களை எளிதில் தோற்கடிக்க முடியும் என நம்பினார் பிலிப். ஆனால் பிற கிரேக்கர்கள் மாசிடோனியரை கிரேக்கராக ஒப்புக்கொள்ளவே தயாராக இல்லை.
இது ஒரு தலைமுறையில் முற்றுபெறும் கனவு அல்ல என பிலிப்புக்கு நன்றாக தெரியும். தான் அடித்தளத்தை இட்டால் தன் மகன் அதை சாத்தியமாக்குவான் என நம்பினார். அதேபோல தன் மகன் அலெக்சாந்தரிடம் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து பாரசிகத்தை பிடிக்கவேண்டும் என்ற கனவை தொடர்ந்து சொல்லி வந்தார்.
பிலிப் மன்னராக இருந்தும் போர்க்களத்தில் முன்வரிசையில் நின்று போரிடுபவர். போர் முறையே இல்லாமல் சும்மா சண்டைக்கோழிகளாக இருந்த மாசிடோனியர்களுக்கு கேடயம், ஈட்டியுடன் கவசம் அணிந்து வியூகம் அனிவகுத்து போரிட கற்றுக்கொடுத்தார். கிரேக்க நகரங்கள் மேல் போர் தொடுத்து அவற்றை தன் பேரரசில் சேர்த்தார். இந்த போர்களில் அவரது ஒரு கண் பறிபோனது. கழுத்தெலும்பு உடைந்தது. ஒரு கை துண்டானது. கால் நிரந்தரமாக ஊனமானது
ஆனால் இவை எவற்றை பற்றியும் அவர் கவலைப்படவே இல்லை. அலெக்சாந்தருக்கு சும்மா போர்க்கலைகளை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது என சொல்லி நேரடியாக அரிஸ்டாட்டிலையே வரவழைத்து அலெக்சாந்தரின் குருவாக இருக்க கோரினார்.
அரிஸ்டாட்டிலும் பயாலஜி, பாட்டனி, தத்துவம், போர்க்கலைகள், எதிக்ஸ், கணிதம்…உள்ளிட்டவற்றை அலெக்சாந்தருக்கு கற்றுக்கொடுத்தார்.
கிரேக்கத்தை ஒருங்கிணைத்து 10,000 பேர் கொண்ட படையை பாரசிகத்தை தாக்க முன் ஏற்பாடுகளை செய்ய இன்றைய துருக்கிக்கு அனுப்பிவிட்டு போருக்கு தலைமை தாங்க இருந்த நிலையில் பிலிப் கொல்லபட்டார்.
தந்தையின் கனவை நிறைவேற்ற அதன்பின் அலெக்சாந்தர் போர்க்கோலம் பூண்டு ஆசியாவுக்கு கிளம்பினான்.
ஆக பிலிப் எனும் மாவீரன் இல்லையெனில் அலெக்சாந்தர் இல்லை.
ஒரு ஆல்பாவால் தான் இன்னொரு ஆல்பாவை உருவாக்க முடியும்….. ராஜேந்திர சோழனை ராஜராஜ சோழன் உருவாக்கியதுபோல்
சாம்ராஜ்யங்கள் உருவாக்கபடும் விதமும் இதுதான். ஒரே தலைமுறையில் அவை உருவாக்கபடுவதில்லை.
Leave a Comment
You must be logged in to post a comment.