அரங்கனின் முன்னே
கூரத்தாழ்வான்!
வா ஆழ்வானே!
தனியாக வந்திருக்கிறாய்?
என்ன வேண்டும் உமக்கு?
அரங்கனே!
என்ன கேட்டாலும் கொடுப்பாயா?
ஆழ்வானே!
நம் இராமானுஜன் மீது ஆணை!
எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்!
அரங்கனே!
எனக்கு இப்போதே
மோட்சம் வேண்டும்
வைஷ்ணவத்திற்காக
பொன்னைக் கொடுத்தவன்!
பொருளைக் கொடுத்தவன்!
உன்னைக் கொடுத்தவன்!
உன் கண்ணைக் கொடுத்தவன்!
எல்லாம் கொடுத்த உனக்கு
மோட்சம் தர மாட்டேனா?
அரங்கனே!
கொடுத்தவன்.. கொடுத்தவன்..
இப்படிப் பலமுறை
அடியேனைச் சொல்கிறாயே?
இத்தனையும் அடியேனுக்குக்
கொடுத்தவன் நீயன்றோ?
ஆழ்வானே!
இருந்தாலும் உன் மீது
சின்னதாய் ஒரு வருத்தமுண்டு!!
பெருமானே!
என்ன சொல்கிறாய்?
ஆழ்வானே!
அன்று சோழன் அழைத்தபோது
இராமானுஜன் எனச் சொல்லி
அவன் அரண்மனைக்கு
நீ போனது எனக்கு வருத்தமே!!
பெருமானே!
இராமானுஜனைக் காக்கவே
அந்த வேஷம் இட்டேன்!
அதில் தவறேதும் உண்டோ?
ஆழ்வானே!
தவறென்று சொல்லவில்லை!
அன்று சோழனின் ஊருக்கு
இராமானுஜன் சென்றிருந்தால்
நிலைமையே மாறியிருக்கும்!!
பெருமானே!
என்ன சொல்ல வருகிறீர்?
இராமானுஜன்
சோழன் கையில் அன்று
கிடைக்கப் பெற்றிருந்தால்
கொன்றே போட்டிருப்பான்!!
ஆழ்வானே!
அது உம் நினைப்பு!
இராமானுஜனைக் கொல்ல
இதற்கு முன்னம்
யாருமே முயற்சிக்கலையா?
ஆசானே கொல்ல நினைத்தான்!
அவன் இனமே விஷமிட்டு
அவனைக் கொல்ல நினைத்தது!
அதெல்லாம் தோல்வியில்
முடிந்ததை நீ அறியாயோ?
இராமானுஜனை காக்க
எனக்குத் தெரியாதா?
பெருமானே!
தவறு செய்தேனோ?
அப்படியில்லை
ஆழ்வானே!
சோழன் அன்று
இராமானுஜ தரிசனம்
பெற்றிருந்தான் என்றால்
தானே மாறியிருப்பான்!!
அரங்கனே!
தாங்கள் சொல்வது உண்மைதான்!
அன்று நாங்கள்
புறப்பட்ட அச்சமயம்
எம்மைத் தடுத்திருக்கலாமே?
ஆழ்வானே!
உம்மைத் தடுக்காததற்கும்
காரணங்கள் உண்டு!
ஆசாரிய பக்தி
எப்படி இருக்க வேண்டும்?
உம்மைக் காட்டினேன்!
ஆசாரியனாய் எப்படி
இருக்க வேண்டும்?
பெரிய நம்பியைக் காட்டினேன்!
வைணவத்தை எப்படிக்
காக்க வேண்டும்?
உங்கள் இருவரின்
தியாகங்களையே காட்டினேன்!
அரங்கனே!
சத்யம்..சத்யம்.. சத்யம்..
உன்னுடைய ஒவ்வாெரு
வார்த்தைகளும் சத்யம்!
எம்மை மன்னித்தருளும்!
ஆழ்வானே!
பெரிய வார்த்தை எதற்கு?
அனைத்திற்கும் நானே
காரணம் ஆவேன்!
அதுசரி மோட்சம் கேட்டாயே!
இராமானுஜனை இப்போது
விட்டுப் போக மனம் வந்ததா?
பெருமானே!
காரணம் அதுவல்ல!
அடியேன் முன் சென்று
ஆசாரியன் அங்கே வருகையில்
வரவேற்க வேண்டாமா?
அருமை! அருமை!
கொடுத்தேன் ஆழ்வானே!!
இன்னமும் உம்மிடம் பேச
நிறைய இருக்கிறது!
நாளை பரமபதத்தில்
பேச்சினைத் தொடருவோம்!!
அரங்கனை வணங்கி
அங்கிருந்து நகர்ந்தார்
கூரத்தாழ்வார்!!
தகவலானது இராமானுஜனின்
செவிகளை அடைய,
என்ன ஆழ்வானே!
என்ன காரியம் செய்தீர்?
அடியேனை இங்கே
தனியாக விட்டு விட்டு
உமக்கென்ன அவசரம்
பரமபதம் செல்வதற்கு?
காரணம் உண்டு
இராமானுஜனே!
தாங்கள் பரமபதம்
எழுந்தருளுகின்ற அச்சமயம்
உம்மை வரவேற்க
அடியேன் அங்கிருக்க வேண்டாமா?
அதனாலேயே அடியேன்
முந்திச் செல்கிறேன்!
அன்றைய தினமே
ஆழ்வானை தன் திருவடிகளில்
அழைத்துக் கொண்டான் அரங்கன்!
அவருக்கான இறுதிக் காரியங்களை
அந்தத் தள்ளாத வயதிலும்
தானே முன் நின்று
சிறப்பாக நடத்தினார் இராமானுஜர்!!
ஆழ்வான் பரமபதம் நோக்கிப்
பயணித்த சில மாதங்களில்
முதலியாண்டானும்
பரமபதம் பயணித்தார்!!
வில்லிதாசரின் இல்லம்!
பொன்னாச்சியின் மடியில்
வில்லிதாசன்!
இனியவளே!
எத்தனை இழப்புகள்!
வைணவத்தின் தரிசனத்திற்காய்
அன்று தானே விரும்பி
தன் கண்களை பிடுங்கி எறிந்த
நம் கூரத்தாழ்வார்,
இன்றும் தானே விரும்பி
அரங்கனிடம் வேண்டி
பரமபதம் போய்விட்டார்!
ஆழ்வானின் கையைப் பிடித்தபடி
ஆண்டானும் போய்விட்டார்!
தண்டும், பவித்ரமும்
தனக்கு முன்னே
தன்னை விட்டுப் போக,
தனிமையிலே ஆசாரியன்!!
உன் கண்களே
பெரிதென்று சொன்ன என்னிடம்,
அரங்கனின் கண்களே
பெரியது என்று சொல்லி,
நம்மை அவனுக்கு அடிமையாக்கி,
செல்லாக் காசாய் இருந்த நம்மை
வைணவத்தின் செல்வங்களாக்கி,
நமக்கு ஆசாரியன் செய்த
அத்தனை உபகாரங்கள்
கண் முன்னே வந்து போகின்றன!!
நான் என்ன ஆழ்வானா?
அரங்கனிடம் சென்று கேட்க!!
இங்கிருந்தே அடியேன்
ஆசார்யனிடம் யாசிக்கிறேன்!
எதிராஜரே!
எம்மையும் பரமபதம்
அனுப்பி வையும்!!
சேரன் மடத்தை நோக்கி
கைகளைக் கூப்பினார்!
இராமானுஜா! இராமானுஜா! என
உதடுகள் ஆசாரியனின்
நாமத்தினைச் சொல்லியபடி,
ஆசாரியனின்
திருவடி நிலைகளைத்
தம் முடியிலே
சிறிது நேரம் ஏந்தியபின்,
திருநாட்டுக்கு எழுந்தருளினார்
வில்லிதாசர்!!
உடையவர் தினம் நீராடும்
தவராசன் படித்துறைக்கு
ஸ்ரீவைஷ்ணர்கள் தாம் சென்று,
திருமஞ்சனம் எடுத்து வந்து,
த்வயத்தை உச்சரித்தபடி,
வில்லியின் சரம தேகத்தை
நீராட்டிய பின்,
திருநாமம், திருசூர்ணம்,
அலங்காரம் எல்லாம் செய்து,
அரங்கன் அன்று சாற்றி
களைந்த மாலையை
தாசருக்கு அணிவித்து,
நூற்றந்தாதி வாசிக்கப்பட,
திவ்ய விமானத்திலே ஏற்றி
ஸ்ரீபாதம் தாங்கிகள் நகர,
கணவன் சென்ற திசையினை
கை கூப்பிய வண்ணம்
நின்ற பொன்னாச்சியும்,
அப்போதே உயிர் விட்டாள்!!
இருவரும் இறந்த செய்தி
ஆசாரியனை அடைய,
பராசர பட்டரை
அழைத்தார் இராமானுஜர்!!
அவனும் போனானா?
தண்டு போயிற்று!
பவித்ரம் போயிற்று!
என் தோளும் போயிற்றோ?
அவளும் உடன் போனாளா?
திவ்ய தம்பதியினர்
தாசனும் ஆச்சியுமே அன்றோ!
இத்தனையும் இழந்து
இன்னமும் நான்!!
இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய்?
திருவரங்கநாதனே!!
பராசரனே!
அந்தத் திவ்ய தம்பதியினருக்கு
இறுதிக் காரியங்களை
நீயே நடத்தி வை!!
மாறனேர்நம்பிக்கு
அன்று பெரியநம்பி!
வில்லிதாசருக்கோ இன்று
பராசர பட்டர்!
இதைத்தான்
ஆளவந்தார் விரும்பினார்!
இராமானுஜர் நடத்தினார்!!
தொடர்ந்த இழப்புகள்!
ஆழ்வானின் இறப்பு!
இராமானுஜனை பாடாய் படுத்தியது!
அதன் பின் சில வருடங்களே
தானும் திருநாட்டினை அலங்கரிக்க
அரங்கனிடம் விண்ணப்பித்தார்!!
அரங்கனே!
மனிதன் நூறாண்டுகள் வாழ்வான்!
இப்படித்தான் வேதமே சொல்கிறது!
இன்னமும் இருபது கூடுதலாய்!
நூற்றிருபது வருடங்கள்
இப்புவியில் வாழ்ந்து விட்டேன்!
நீ எனக்கிட்ட கட்டளையை
முடிந்தவரை நிறைவேற்றினேன்!
ஆனாலும் ஒரு வருத்தம்
எனக்குண்டு பெருமானே!
பஞ்சமர்களை அடியேன்
திருநாராயணபுரத்தில்
உன்னைத் தொழுவதற்காய்
உள்ளுக்குள்ளே அனுமதித்தேன்!
ஆனால் உன் கோயிலில்
என்னால் அக் காரியம் முடியலையே?
இங்கே முடியாது என நினைத்து
அங்கே அனுப்பினாயோ அரங்கனே?
ஆனால் நீ கண்டிப்பாய் அனுமதிப்பாய்!
உன் கோயிலின் உள் அமர்ந்தே
அடியேனும் அதனைக் காண்பேன்!
இப்போது இங்கிருந்து
பிரியவே விரும்புகிறேன்!
அடியேனுக்குப் பரமபதம் அருள்வாயா?
இராமானுஜா!
களைத்துப் போனாயா?
சலித்துப் போனாயா?
இல்லை பெருமானே!
இளைத்தே போனேன்!
அடியேனின் பலங்கள் எல்லாம்
பரமபதம் எய்தபின்
இளைத்துப் போனதே உண்மை!!
இருந்தாலும்
வைணவம் காக்க
ஒரு பெரும் படையை
நிர்மாணிக்கும் பணியில்
நிறைவடைந்ததாய் உணர்கிறேன்!
இனி வைகுண்டம் நோக்கி
பயணிக்கவே விரும்புகிறேன்!
மோட்சம் அளிப்பாயா? பெருமானே!
இராமானுஜா!
உனக்கு மட்டுமல்ல!
உம்மோடு தொடர்புடைய
எல்லாேருக்கும் நான்
மோட்சம் அளிக்கிறேன்!!
இந்தத் தகவல்கள்
அவரது தாசர்களை எட்டியது!
இராமானுஜனைப்
பிரிய மனமில்லாமல்
அனைவருமே துடித்தனர்!
உம்மைப் பிரிவதற்கு
அடியேனும் வருத்தப்படுகிறேன்!
திருநாராயணபுரத்திலே
செய்தது போல
என்னுடைய விக்ரகம் ஒன்றை
இப்போதே உருவாக்குகிறேன்!
அதனை என் நினைவாக
நீங்கள் வைத்துக் கொள்ளலாம்!
விக்ரகம் தயாரானது!
இராமானுஜனே தத்ரூபமாய்
இருப்பது போன்று
அவ் விக்ரகம் இருந்தது!
அந்த விக்ரகத்தினை
ஆரத் தழுவிக் கொண்டார்!
முதலியாண்டானின் மகனான
கந்தாடையாண்டானை அழைத்தார்!
கந்தாடையாண்டானே!
இந்த விக்ரகத்தினை
அடியேனின் அவதார ஸ்தலமாகிய
பெரும்புதூரிலே பிரதிஷ்டை
செய்யுங்கள்!
இது தான் உகந்த திருமேனி என
பெரும்புதூரில் நிலைக்கட்டும்!!
அந்த வருடம் தை மாதம்
புஷ்ய நட்சத்திரதன்று
ஸ்ரீபெரும்புதூரிலே
கந்தாடையாண்டானால்
தான் உகந்த திருமேனியானது
பிரதிஷ்டை செய்யப்பட்டது!!
தன்னுடைய
சக்திகள் அனைத்தையும்
விக்ரகத்தில் இறக்கிய இராமானுஜன்
நாளடைவில் தளர்ச்சி அடைந்தார்!!
தான் பிறந்த
அதே பிங்கள வருஷம்
மாசி மாதம்
சுக்லபட்ச தசமியில்
சனிக்கிழமை நண்பகலில்
ஈரறுபது வருடங்கள்
இப் புவியில் சுழன்ற மகான்,
த்வய மந்திரத்தைத் தன்
திருவாயில் உச்சரித்தபடி,
எம்பாரின் மடியினில்
தன் தலையினை வைத்து,
வடுகநம்பியின் மடியில்
தன் திருவடிகளை வைத்து
கண் வளரும் நேரம்,
திருவாதிரையில் உதித்த மகான்
திருவாதிரையிலேயே
திருநாட்டினையும் அலங்கரித்தார்!!
ஒரு பெரிய நிசப்தம்!
அனைவரின் கரங்களும்
வான் நோக்கிக் கூப்பியபடி!
அனைவரின் கண்களிலும் கண்ணீர்
அருவியாய் வடிந்தன!
அரங்கனும் எழுந்து உட்கார்ந்தான்!
வைணவம் செழிப்பதற்காய்
இந்தப் புவியையே
வலம் வந்த அம் மகான்
பரமபதம் எய்ததை
திருவரங்கம் வாசித்தது!!
ஒரு இறுதி யாத்திரைக்குத்
திருவரங்கமே தயாரானது!!
எம்பெருமானார் (82)
Leave a Comment
You must be logged in to post a comment.