Personal Blogging

“முடிவுகளில் கவனம் தேவை”

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

About the author

Palakarai Sakthivel

Leave a Comment