Personal Blogging

நாரதர் கதைகள்

”இறைவா, ‘ போதும் இந்த வேதனை என்னைக் காத்தருள மாட்டாயா… ?’ என்று கதறி அழும் நாரதர், ” சில க்ஷணங்களில் மாயை நடத்திய பெரும் விளையாட்டு – விளக்கும் எளிய கதை

பகவான் கிருஷ்ணருடன், நாரதர் இரதத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்தக் கேள்வி நாரத மகிரிஷியின் மனதில் உதித்தது, பகவானே….மாயை என்றால் என்ன? அதன் வலிமை என்ன எனக்கு உணர்த்த முடியுமா? பகவான் வேண்டாம் என மறுத்தும் அடம் பிடித்தார்.

உடனே இரதத்தை நிறுத்தச் சொன்ன பகவான், இரதத்திலிருந்த ஒரு குவளையை எடுத்து, ”நாரதா, எனக்குத் தண்ணீர் தாகமாக இருக்கிறது. அதோ, அந்த ஓடையிலிருந்து கொஞ்சம் நீர் கொண்டு வருகிறாயா.” என்றார்.

குவளையை வாங்கிக் கொண்டு நீர் அள்ளப் போனவர் அந்த ஓடையின் நீர் மிகவும் கலங்கலாக இருப்பதைப் பார்த்ததும் அருகிலிருக்கும் ஒரு குடிசையின் கதவைத் தட்டினார். கதவை ஒரு அழகிய பெண் திறந்தாள்.

அவள் அழகில் மயங்கிய நாரதருக்கு அவளுடனேயே வாழ வேண்டும் என்ற ஆசையும் வந்தது. அந்தப் பெண்ணிடம் தனது ஆசையை தெரிவித்தபோது அவள் தனது தந்தையின் சம்மதத்தைப் பெறச் சொன்னாள்.

அவளின் தந்தை, நாரதருக்கு ஒரு நிபந்தனையை விதித்தார். அது, திருமணத்திற்குப் பின்னர், அவர்களுடனேயே நாரதர் இருந்து விட வேண்டும் என்பதுதான். அந்தப் பெண் மீிது கொண்ட மோகத்தால் அதற்கு சம்மதித்த நாரதருக்கு திருமணம் இனிதே நடந்தது.

குடும்பத்துடன் மகிழ்வுடன் காலத்தைக் கழித்த நாரதருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. பயிரிடுதல், கால்நடைகளை பராமரித்தல் என குடும்பத்திற்காக உழைப்பதும் மகிழ்வாக ஓய்வு நேரத்தைக் குடும்பத்துடன் கழிப்பதாகவும் நாரதரின் வாழ்க்கைக் கடந்தது.

ஒரு மழைக் காலத்தில் பெரும் மழை கொட்டியது. அந்தப் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. நாரதர் தனது குடும்பத்துடன் குடிசையின் மேல் பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார். அங்கும் வெள்ளம் சூழ்ந்தது.

குழந்தைகள் இருவரையும் தனது தோள்களில் சுமந்து கொண்டார். பெருகிய வெள்ளம் அருகே இருந்த மனைவியை இழுத்துச் சென்றது. தனது மனைவி, தனது கண் முன்னே வெள்ள த்தில் அடித்துச் செல்வதைப் பார்த்து கதறி அழுதார்.

மேலும் சூழ்ந்த வெள்ளம் தன்னை மூழ்கடிக்க போவதையும், அதற்குப் பின் தன் குழந்தைகளையும் முழ்கடிக்கப் போவதையும் நினைத்து ”இறைவா, போதும் இந்த வேதனை என்னைக் காத்தருள மாட்டாயா… ?’ என்று கதறி அழும் போது,

”என்ன, நாரதா…இன்னுமா குவளையில் தண்ணீரை நிறைத்து கொண்டிருக்கிறாய். ?” என்ற கிருஷ்ண பகவானின் குரலைக் கேட்டு… விழிப்புக்கு வந்த நாரதர், ”பகவானே, இவ்வள வு காலமாகவா நான் உங்களை விட்டுப் பிரிந்திருந்தேன்…?” என்று கேட்க, ”என்ன நாரதா, கனவு ஏதும் கண்டாயா. ? தண்ணீர் கொண்டு வரச் சென்ற உன்னைக் காணாததால் இப்போதுதான் நான் தேரிலிருந்து இறங்கி உன்னை தேடி வருகிறேன்.” என்றார்.

திகைத்துப் போன நாரதர், ”பகவானே, உங்களது அருளால், இந்த சில க்ஷணங்களில் மாயை நடத்திய பெரும் விளையாட்ட்டால் பெரிதும் களைத்தும் போனேன். பாவம் மனிதர்கள். எத்தனையோ பிறவிகளாக மாயையில் உழலுகிறார்களே, அவர்களின் துன்பங்களை என்னவென்று சொல்வது பாவம் இவ்வுலக ஜீவன்கள்..” என்றார்.

அதற்கு பகவான் யார் என்னிடம் சரணாகதி அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையில் இருந்து எளிதில் விடுபட்டு என்னை அடைகிறார்கள்..

About the author

Palakarai Sakthivel

Leave a Comment