பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் காட்சிகளை திரைப்படமாகப் பார்க்கும் போது கற்பனை செய்து பார்த்தவரின் அறிவுக்கு ஏற்ப அந்த திரைப்படம் ருசிக்கிறது. வார்த்தைகளின் ஜாலங்களில் மயங்குபவர்கள் எழுத்துருவில் உருவாகும் காட்சியை மனக்கண்ணில் காண்பது சற்றே குறைவு. ஆனால் வாசிக்கும் கதையில் ஊறிப்போய் அதில் எழுதியிருக்கும் இயற்கை வர்ணனைகளிலும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களில் லயித்து ஒரு பிம்பத்தை மனதுக்குள் கட்டமைத்து வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கற்பனா சக்திக்கு ஏற்ப அது திரையில் இடம்பெறாவிட்டால் ஏமாற்றமடைகிறார்கள்.
திஜாவின் கதைகள் நாகரீக மாசுபடாத காவிரி நதிதீரத்துக் கிராமங்களில் வசிப்பவர்களைப் பற்றியும் அவர்களுடைய காதல், பக்தி, மனமாசுகள், துக்கங்கள் மற்றும் சந்தோஷங்கள் பற்றியும் நம்மோடு நெருக்கமாகப் பேசுபவை. பெரும்பாலும் பிராமணசமூகத்தைச் சுற்றிப் பின்னப்படும் நாவல்கள். காவிரிக்கரைக்காரனான எனக்கு எங்களுக்குப் பக்கத்து ஊர்க்காரரான திஜாவின் மீது அலாதி பிரியம். அவரது எழுத்துகளில் ஸ்ருதியோடு கேட்கும் நாதலயம் இருப்பதாக எனக்குத் தோன்றும். அந்தணர்களின் குடும்பத்தில் புழங்கும் வார்த்தைகளினால் எழுதபட்ட கதைகள் என்பதால் நான் பழகிய சில சொந்தக்காரர்கள் மற்றும் ஸ்நேகிதர்களுடன் கதைமாந்தர்களை ஒப்புமைப்படுத்தி உறவாடமுடியும்.
காவிரிக்கரையில் வளர்ந்ததினால் அம்மகாநதியைப் பற்றிய அவரது அபார வர்ணனைகளினாலேயே அதில் மூழ்கி சுகித்திருக்கமுடிகிறது. நவரசத்தில் வசந்த் இயக்கியிருக்கும் “பாயஸம்” திஜாவின் பிரசித்தி பெற்ற சிறுகதை. அண்ணன் மகன் காசுபணம் சேர்த்து அந்தஸ்த்தில் பெரியாளாகிவிடுகிறான். அதைக் கண்டு பொறுமி வயிற்றெரிச்சல் படும் பொறாமைப்படும் கதாபாத்திரத்தில் திரு. டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். Ganesan Mahadevan Delhi Ganesh சிரிக்காமல் வருவது பெரிதல்ல ஆனால் உள்ளத்தினுள் பொங்கும் பொறாமையை அங்க அசைவுகள் மூலமாகவும் பேச்சின் தொணியிலும் கண்றாவியான செய்கைகளினாலும் காட்டுவது டெல்லி கணேஷ் போன்ற ஒரு தேர்ந்த நடிகரால் மட்டுமே முடிகிறது. ரோகிணியின் நடிப்பும் ஈடுஇணையில்லாதது.
திஜாவின் பெண் கதாபாத்திரங்கள் காத்திரமானவை. உள்ள உறுதியில் இருப்பவர்கள். குடும்பத்துக்கு வழிகாட்டுபவர்கள். கணவனுக்கு அடங்கி இருந்தாலும் எங்கே எகிறவேண்டும் எங்கே அடங்கவேண்டும் என்று தெரிந்தவர்கள். அதை மிகக்கச்சிதமாக செய்திருக்கிறார் ரோகிணி. அவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். டெல்லி கணேஷின் மகனாக கல்யாண வேலைகளில் ஓடியாடும் இளைஞர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இளம் வயதில் விதவையான அவரது தங்கையின் கதாபாத்திரம் செய்தவர் டெல்லி கணேஷை அருவருப்பாக பார்க்கும் ஒரு காட்சியில் சிக்ஸர் அடிக்கிறார்.
காத்தாடி ராமமூர்த்தி இரண்டே சீன்களில் வந்தாலும் அந்தக் காட்சிகளில் திரையை ஆக்கிரமிக்கிறார். Kathadi Ramamurthy இவர்களை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிறப்பாகத் தேர்வு செய்த வசந்த் இக்கதை நடக்கும் இடத்தை அதியற்புதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் வரும் அந்த கோயிலும் காவிரியும் குளமும் திஜாவின் எழுத்தை பிரம்மப் பிரயர்த்தனத்துடன் காட்சிப்படுத்தியிருப்பதற்காக அவருக்கு அவார்ட் கொடுக்கலாம். பின்னணி இசையாக ஆங்காங்கே ஒலிக்கும் வயலின் கல்யாணக் காட்சிகளை எடுத்துக்காட்டும்விதமாக இருக்கும் போதே கன்னூஞ்சலுக்கு வரும் பாடலும் அந்தக் காட்சிகளின் பின்புலத்தில் நிற்கும் மாமிகள் மற்றும் மாமாக்களின் நடவடிக்கைகள் கேண்டிட்டாக எடுக்கப்பட்டிருக்கும் விதமும் வசந்த்துக்கு பெரிய சபாஷ் போட வைக்கின்றன.
நீல அழுக்குச்சட்டை மாறன் போன்ற ரசனையற்றவர்கள் இலக்கிய ருசி தெரியாதத் தடித்த நாக்குடையவர்கள் பாயஸம் டிராமா போல இருப்பதாகவும் வசந்த் பெயரை மாற்றிக்கொண்டதைப் பற்றிக் கிண்டலடித்தும் விமர்சனம் செய்கிறார்கள். க.தெ.க.வா? கருணை, வீரம், ஹாஸ்யம் என்ற மூன்றும் வெகுசுமார். கதைக்களன் இன்னும் நன்றாக தேர்வு செய்திருக்கலாம். கார்த்திக் சுப்புராஜின் அமைதி பரவாயில்லை. நாய்க்குட்டியை தம்பி என்று ஒரு குட்டிப்பையன் அழைப்பது கதையைப் பற்றவைக்கிறது. ரௌத்திரம் அர்விந்த் சுவாமி இயக்கியிருக்கிறார். நன்றாகவே இருக்கிறது. அதன் களன் மனதைப் பிசைகிறது. ரௌத்திரம் சோகமாக இருக்கிறது. நவரசத்தில் இன்னும் சில ரசங்கள் மிச்சமிருக்கிறது.
அதில் எதுவும் கமெண்ட் செய்யும்படி இருந்தால் பின்னர் எழுதுகிறேன்.
பாயஸம் – தேவாமிர்தம்
Leave a Comment
You must be logged in to post a comment.