அந்த வருடம் பத்தாவது தேர்வு எழுத வேண்டியவர்கள் எங்கள் தெரு மாணவ மாணவிகளுடன், விடுதி மாணவர்களும் சேர்ந்து பதினாறு பேரு நாங்கள்.
பலர் டியூசன் வகுப்பிற்காக விளந்திடசமூத்திரம் செல்ல,
ரங்கநாத வாத்தியாரிடம் என்னை டியூசன் சேர்த்து விட்டார்கள் (இல்லை கோர்த்து விட்டார்கள்)எங்கள் வீட்டில்.
மெலிந்த தேகம்,அழுக்கு 8 முழ வேட்டி, முண்டா பனியன், சோடாபுட்டி மூக்கு கண்ணாடி, பூணூல் தோளில் இருந்து சறுக்கி கைகளில் விழவிழ எடுத்து போட்டுக் கொண்டே இருப்பார்.
பள்ளிக்கு வரும்போது பளிச்சென இருப்பார்,நெற்றியில் தீர்க்கமான திருமண்,டக்கின் பாண்ட் ஷர்ட், காலில் ஷூ, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் ரங்கநாதன் சார் எங்கள் தெருவில் வசிக்கும் ச.மு.இ பள்ளியின் கணக்கு வாத்யார்.
எனக்கு பத்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் சூசைராஜ்.(நான் மட்டும் வேற செக்சன்)
இருவர் நடத்துவதும் எளிமையாக இருக்கும்.. எனக்குத்தான் புரியலை,இல்லை..இல்லை. பிடிக்கலை(பயம்) வெறுப்பு கனிதம் மேல்.
எல்லோரும் டியூசன் போனதால் நானும் போனேன். அதற்காக நான் வகுப்பில் அனுபவித்த கஷ்டங்கள் அதிகம்.
“டேய் ரங்கநாதன் டியூசன்!
நீ செல்லுடா”என்பார் சூசைராஜ்.
என்ன சொல்றது ? பார்முலா சொல்லத் தெரியாமல் விழிப்பேன்,
பார்த்தீங்களா அவர் சொல்லித்தருவது அவ்வளவுதான் என என்னை வைத்து அவரது மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்.
இது ரெங்கநாதன் வாத்யாரின் காதிற்கும் போனதென மாலை நேர வகுப்பில் என் தலையில் குட்டு விழும்போது தெரிந்தது.
‘ஏதாவது பண்ணனும் அந்த சூசையை’என மனசில் தோணும், அந்த நேரத்திற்காக காத்திருந்தேன். கணக்கு வாத்யாரின் மூத்தப்பெண்
ஏழாவது படித்தது.
ஏனோ அதற்கு என்னைப் பிடிக்கும். டியூசன் முடிந்து இருவரும் சேர்ந்து விளையாடுவோம், மற்றவர்கள் எல்லாம் வீடு திரும்பினாலும் நான் மட்டும் விளையாடுவது கூட காரணமாக இருக்கலாம்.
அடிக்கடி வீட்டிற்குப்போக வர இருப்பதால் சின்னசின்ன கணக்காக போட்டுக்காண்பித்து வாத்தியார் என் மண்டையிலே ஏற்றிவிட்டார் கனிதத்தை.
“அய்ப்பு இப்போ நல்லா கணக்குப் போடுறாண்டி”என அவாத்து மாமியிடம் சொல்லும்போதே,
பக்கத்துத்தில் அமர்ந்தவன் கெளரிசங்கர் சொல்வான்
“நல்லா கணக்குப் பண்றான்னு சொல்லுங்க” என்பான் மெதுவாக..
காலாண்டுத்தேர்வு வந்தது, கணிதம் தேர்வில் கணிசமான 80 மார்க் எடுத்து வகுப்பிலே முதலாவது வந்திருந்தேன்.
சூசைக்கே வியப்பாக இருந்தது.
(எனக்குந்தான்) எங்கள் டியூசனில் அதுதான் கடைசி மார்க்.
கடந்த(2024)வருட ஆகஸ்ட் மாதத்தில்,ஒருநாள் அப்பாவை அழைத்துக் கொண்டு IOB சீர்காழி கிளைக்கு சென்று லைவ் சர்டிபிகேட் கொடுக்கச் சென்றிருந்தபோது,ரங்கநாத வாத்யாரும் அதற்காக வந்திருந்தார்.
“சார் எப்படியிருக்கீங்க என்று காலைத்தொட்டு வணங்கினேன்.
அவருக்கு முதலில் என்னைத் தெரியவில்லை,அப்பாவை அடையாளம் கண்டு என்னைப் புரிந்து கொண்டார், ‘அய்ப்பூ எப்டியிருக்கே’என்றார்.
என்ன செய்கிறாய் ? கேட்டார்.
நிதி நிறுவனம் ஒன்றை மயிலாடுதுறையில் வைத்து நடத்துகிறேன் என்றேன்.
அந்த சோடப்பெட்டி கண்ணாடிக்குள் விழித்தன அவரது இரு விழிகள்.
மெளனமான அந்த நொடிகளில் என்ன நினைத்திருப்பார்…
(கணக்கே தெரியாதவன்,நிதி நிறுவனமா ?) என்றுதானிருக்கும்.
சந்தோஷம்,நல்லாயிரு! என்றவர் எப்படியும் 80வயதை நெருங்கியிருப்பார். இதை எழுதும்போது உயிருடன்தான் இருந்தார். ஜனவரியில் 2025 ஆண்டில் இறந்துவிட்டார் எனச் செய்தி அறிந்து வருத்த மடைந்தேன்.
ஆசிரிய மாணவத் தொடர்பு குறைந்த நாட்கள்தான் என்றாலும்,அதனை மறக்க முடியாதபடி மாற்றுவது ஆசிரியர்களின் உழைப்புதான் என்பதில் சந்தேமில்லை!
தொடரும்..