Personal Blogging

பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….


பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
இங்கு கோவிலின் வரலாறு காண்போம்,
ஒரு காலத்தில் தனது இலக்கிய புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகந்தை ஏற்பட்டது. அந்த அகந்தையில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.
அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வையார். நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்… எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், “சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ” என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா…” என்று கேட்டுக் கொண்டார்.
“சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன.
அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான்,
“என்ன பாட்டி… பழம் சுடுகிறதா?” என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, “குழந்தாய்… நீ யாரப்பா? ” என்று கேட்டார்.
மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
இந்த சோலையில் பழங்களை உதிர்த்து அருள் வழங்கியதால் இதற்குபழமுதிர்சோலைஎன்று அழைக்கப்படுகிறது .

About the author

Palakarai Sakthivel

Leave a Comment