’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.
இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.
பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் தீர்த்தவாரி போது ’கூடியிருந்து குளிர்ந்தேலோர்’ என்பது போல பெருமாளின் தீர்த்த பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும்.
பெருமாளின் அவதார காலத்தில் ஸ்ரீராமாவதாரத்தில், சக்கரவர்த்தி திருமகனை சிலர் தான் பார்த்து அனுபவித்தார்கள். உதாரணம் ஸ்ரீஹனுமான், விபீஷணாழ்வார், ஏன் சூர்ப்பணகை கூடப் அதில் சேர்த்துக்கொள்ளலாம் ! ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.
ஆனால் அர்ச்சாவதாரத்தில் இந்தப் பிரச்சனையே இல்லை தெருக்கோடியில் இருக்கும் பாலாஜியையோ, அல்லது மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பிடித்து பெரிய பெருமாளை நினைத்தால் சேவித்துவிட்டு வந்துவிடலாம்.
அவதாரம் என்பது ‘தீர்த்தம் பிரசாதம் போல’ சிலருக்குக் கிடைக்கும் சிலருக்குக் கிடைக்காமலே போகலாம். அச்சாவதாரம் தீர்த்தவாரி போலே. இதைத் தான் பெரியவாச்சான் பிள்ளை ’அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே’ என்று குறிப்பிடுகிறார்.
டாக்கூர் துவாரகாவில் கோயில் வெளியே சின்ன சின்ன ஸ்வீட் டப்பா விற்பார்கள், பக்தர்கள் சேவிக்கும் போது அதை இருந்த இடத்திலிருந்து பெருமாளுக்கு கண்டருள செய்யலாம். .நீங்களும் அப்படி செய்யலாம். பாவம் தான் முக்கியம், பிரசாதம் முக்கியமில்லை.
அடுத்த முறை உங்களுக்குத் தீர்த்த பிரசாதம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள், பெரியவாச்சான் பிள்ளை காலத்திலேயே சிலருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது. ஒன்றும் செய்ய வேண்டாம் பெரியவாச்சான் பிள்ளையை நினைத்துக்கொள்ளுங்கள் அதுவே பெரிய பிரசாதம் !
பிகு: தீர்த்தம் கிடைத்தாலும் நினைத்துக்கொள்ளுங்கள்
சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி
Leave a Comment
You must be logged in to post a comment.