‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’
முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.
எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை என்ற பாடம் படித்தபோது எந்தையாரிடம் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துச் செல்லுமாறு பலநேரம் கேட்டேன் என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பில் ‘பதினேழாம் நாள்’ நாடகம் படித்து மகிழ்ந்தேன். அந்நாடகத்தை எழுதியவர் என் மாமா பேராசிரியர் இரா.குமரவேலன். அந்நாடகத்தை எங்கள் அண்ணாநகர் இல்லத்தில் திறந்தவெளி மாடத்தில் அரங்கேற்றினோம். அதில் நான் துரியோதனனாகவும், அண்ணன் கண்ணன் கிருஷ்ணராகவும், தம்பி பரதன் புரோகிதராகவும், அண்ணன் முரளி சல்லியனாகவும், நண்பர்கள் இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால் ஏனைய மகாபாரதப் பாத்திரங்களாக நடித்தனர். கதாபாத்திரங்கள் ஒப்பனைகள் அனைத்தையும் நாங்களே மிக நேர்த்தியாகச் செய்ததெல்லாம் நினைத்து மகிழ்கிறேன். நிறைவாக, நாடகத்தைப் பாராட்டிப் பேசும்போது, எந்தையார் ‘துரியோதனனாகவே அருள் மாறிவிட்டான்’என்று பாராட்டியதையும் நினைத்து மகிழ்கிறேன்.
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு மாநிலக்கல்லூரியில் பயின்றபோதே தமிழ்த்துறை மாணவர்களுக்கு தமிழ்ச்சங்க விழாவில் மிகப் புதுமையாக ‘அணுக்கதிர்ப் பிளவும் – கசிவும்’ என்ற தலைப்பில் ‘மருத்துவ மாமேதை’ செ.நெ. தெய்வநாயகம் தலைமையில் ‘மருத்துவத் திலகம்’ அமலோற்பவநாதன் , ‘மருத்துவச் சுடர்’ சுதா சேஷைய்யன் போன்றோரை மாநிலக் கல்லூரியில் அழைத்து தமிழிலேயே உரையாற்றியதை அப்பொழுதே இதழ்கள் பாராட்டின.
மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்த என் நண்பர் சிவக்குமார் வழிகாட்டுதலில், ‘லியோ கிளப்’பில் உறுப்பினராக நான் சேர்ந்தேன். அங்கு நாங்கள் அரிமா சங்கத்தின்கீழ் இடையறாது சமூகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அச்சூழலில், திங்கள்தோறும் வெளியிடப்படும் ‘லியோ லிங்க்’ என்ற தனியிதழின் ஆசிரியப் பொறுப்பும் எனக்குக் கிடைக்கப்பெற்றது. வாரந்தவறாமல், கூட்டங்களில் ஆங்கிலத்திலேயே பேசுவதும், இதழ்களில் ஆங்கிலக் கட்டுரைகளை வரைவதும் இளங்கலை வகுப்பிலேயே ஒரு பயிற்சியாக மாறிவிட்டது.
பல பெருந் தலைவர்களையும், நடிகர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் இயல்பாகக் கிடைக்கப் பெற்றது. கல்லூரிப் பருவத்திலேயே அரிய வாய்ப்பாக பொதுமக்கள் உறவும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் மலர்ந்தது. லியோ கிளப் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்த திருமதி சாவித்திரி இராகவேந்திரா என் ஆங்கில உரையைக் கேட்டுப் பாராட்டி எழுத்தாளர் சிவசங்கரியிடம் பரிந்துரைத்து அவர்கள் தலைமையில் எழுத்தாளர் மாலனுடன் நானும் என் நண்பர்கள் கணபதி சுப்பிரமணியம், அண்ணாமலையுடன் தில்லிக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. அப்பயணத்தில் எழுத்தாளர் சிவசங்கரி மூலமாக பாரதப் பிரதமர் திரு. இராஜீவ் காந்தியை மிக அருகில் சென்று சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது.
லியோ கிளப் வாயிலாக கல்லூரிகளில், பொதுவிடங்களில் குருதிக்கொடை முகாம்கள் நடத்தி கலைஞானி கமலஹாசன் தலைமையில் பேசும் வாய்ப்புக்கள் அமைந்தன. லியோ கிளப்பின் நல்லுறவால் கிடைக்கப்பெற்ற தோழி வித்யா மூலம், பம்பாய் விளம்பர நிறுவனமான கிளியா விளம்பர நிறுவனத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளராக முதுகலை முடித்தவுடனே ஒருசேரப் பணியும் கிடைத்தது. அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சீரோடு சீருந்தில் சென்றுவரும் வசதியுடன், முதுநிலை ஆய்வையும், தில்லி முனைவர் பட்ட ஆய்வையும் முடித்து அதே நிறுவனத்தில் 1997 வரை நிறுவன மேலாளராகப் பணியாற்றி பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்கு முதலீட்டு விளம்பரவாணராக மிளிர்ந்து இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வானூர்தியில் எளிதாக சென்று வரும் பாங்கும் வளர்ந்தது.
இந்தியாவிலுள்ள பல நிறுவனங்களுக்கு நல்ல தமிழில் விளம்பரம் வரைவதை உறுதியாக்கம் செய்தேன் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியாகும்.
என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் பெரிய விளம்பரப் பதாகை அமைத்து – தமிழறிஞரின் தனிப்புகழை ஒளிரவைத்த சாதனை கிளியா விளம்பர நிறுவனத்தின் புகழொளியாகும். மேலும், கிளியா நிறுவனத்தின் நிறுவனர்களான திரு. சுனில் கௌதம், திரு. வேணுகோபால், திரு. தவல் தேசாய், முப்படைத் தளபதிகளைப்போல நிறுவனத்தை மும்மடங்கு வேகத்தில் நடத்தி வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். திரு. வேணுகோபாலின் மகள் பெயர் கிளியா.
இதற்கு பொருள் கேட்பதே பல நிறுவனத் தலைவர்களின் வாடிக்கையாகும். நான் சொல்லும் பதில், Clea என்ற பெயரை Clear என்று சொல்லி மகிழ்வேன். இம்மூவரும் என்மீது அன்பும் பரிவும் காட்டியதை நினைந்து மகிழ்கிறேன். அவ்வண்ணமே ஆறு திங்களுக்கு மேல், பம்பாயிலேயே நான் பணியாற்ற வாய்ப்பு நல்கியதையும் எனக்காகவே ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் தங்குவதற்கு வசதி செய்ததையெல்லாம் எண்ணிப் பெருமிதமடைகிறேன். வசந்தகால நிகழ்வுகளையெல்லாம் எண்ணும்பொழுது, என்னுடைய இனிய நண்பராக, குடும்ப உறவாக வடுவூரைச் சேர்ந்த திரு.இராதாகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தூணாகத் திகழ்ந்தார். அவருடைய விழியும் எண்ண வழியும், என்னை பல நேரங்களில் அங்கே ஆற்றுப்படுத்தின. அவர் சொறிந்த அன்பு தாயன்பைப் போன்றது. மராத்திய மண்ணில் மறத்தமிழராய் மிளிரும் அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும்; இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பது என் விழைவாகும்.
இதுகாறும் தமிழில் அயல்மொழிச் சொற்கள் புகுந்ததை ஆராய்ந்த நிலையில், கலப்பு நேர்வது இயல்பு என்றும், கலப்பாக வருவது வந்த மொழிக்கு வளர்ச்சியாகவும், சொந்த மொழிக்குத் தளர்ச்சியாகவும் அமையக் கூடாது என்ற கருத்து நாட்டவரால் உணரப்படுகிறது. ‘டிக்கெட்’ என்று பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச்சொல், ஐம்பதாண்டுகட்குப் பின்னர்ச் சில மாவட்டங்களில் ‘சீட்டு’ என்று கூறப்படுகிறது. ‘சீட்டு’ என்பதும் தமிழ்ச் சொல்லன்று, எனினும், ‘டிக்கெட்’ என்ற சொல் வழக்கொழிந்தது. ஞாயிறு, திங்கள் முதலியவை கிழமைகளாகக் கருதப்படும்போது நிலைபேறு பெற்றன. இச்சொற்களே சூரியன், சந்திரன் என்னும் விண்கோள்களைக் குறிப் பிடுகையில் வழக்கிற்கு வருவதில்லை. அயலவர் ஆட்சிக்கு ஆட்பட்டதால், ஆங்கிலச் சொற்களின் வரவு நேர்ந்தது.
சீனம், ஜப்பான் முதலிய நாடுகள் அயலவர்க்காட்படாதிருந்ததால், எதனையும் தத்தம் மொழியிலேயே வழங்க வேண்டுமென்ற நிலை உண்டாயிற்று. தமிழ் நாட்டிலும் ஆங்கிலச் சொற்கள் பாமரர் வழக்கில் இடம் பெறும்போது, அதனை அயல்மொழி என்று நாம் எவ்வாறு கருத முடியும் என்று வினவும் பேராசிரியர் தெ.பொ.மீ. ஆங்கிலத்தில் எல்லாக் கலைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலம் வாழ்கிறது என்கிறோம், எல்லாக் கலைகளும் அம்மொழியில் திளைத்துச் செருக்கிக் கூத்தாடுகின்றன. அம்மொழி கற்றார் அதன் வழியே எல்லாம் அறிதல் கூடும், இக்கலைகள் தோன்றிய நாள் முதல் ஆங்கில மொழி அவற்றைப் பேசி வருவதால், இங்கு ஒரு புதுமையும் இல்லை. ஆனால், தமிழோ? தமிழனைப் பாருங்கள். மிகமிகப் பின்தங்கி விட்டான். அவற்றைக் கற்ற தமிழரும் அவற்றை ஆங்கிலத்திலேயே கற்றனர்.
தமிழில் பேசச் சொல்லின்றித் தடுமாறுகின்றார். இது, கற்றோர்கள் நிலையே அன்றி மற்றோர்கள் நிலை அன்று. பணியாட்கள் தமிழில் அன்றி வேறு எதனில் பேச முடியும்? ஆங்கிலப் பெயர்களை அப்படியே தங்களால் முடிந்த அளவு ஒலித்த தமிழிலேயே பேசுகிறார்கள். இதனைப் பார்த்து மகிழப் பலருக்குக் கண் இல்லை; கேட்டுக் களிக்கக் காது இல்லை; இது தமிழ் இல்லை என்கின்றனர் தமிழ் அறிஞர்கள் . அவர்கள் விரும்பும் தமிழ் அன்று என்பது உண்மையாகலாம். இருந்தாலும் தமிழே, தமிழே, தமிழேயாம். என்று குறிப்பிடுவது ஆழ்ந்த மொழியியல் முடிவாகும்.
தொடக்கநிலையில் முதுநிலை ஆய்வாக அமைந்த என் முயற்சி, இளம் ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்வுக்கும் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம். அயல்மொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ள நிலைகளை,
தமிழ், தமிழரைப் பற்றிய பிறநாட்டறிஞர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலான பிறமொழிக் கலப்பாய்வு.
இலக்கியங்களில் காணும் பிறமொழிச் சொற்கள்.
அரசின் முற்கால ஆணைகளில், கோப்புகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.
கல்வெட்டுகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.
தமிழ் இதழ்கள், நாளேடுகளில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள்.
பழந்தமிழ் அகராதிகளில் அயல்மொழிச் சொற்கள்.
தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் அயல்மொழிச் சொற்கள்
மக்களிடமிருந்து நேரில் கண்டறியும் பிறமொழிச் சொற்கள். எனப் பலவகைளில் எதிர்காலத்தில் ஆராய நம்மைத் தூண்டும். இவை மட்டுமன்றி, அன்றாட வழக்கில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்களை மக்கள் ஈடுபடும் துறைகள் ஒவ்வொன்றிலும் தனித் தனியே கண்டறியவும், எந்தெந்த நிலைகளில் விரவுகின்றன என்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இடமுண்டு.
விவிலிய ஈபுரு மொழியில் 8000 சொற்களே இருந்தன. ஆனால் இன்றைய ஈபுருவில் பல இட்சக்கணக்கான சொற்களைக் கொண்டே 17 தொகுதிகள் கொண்ட பேரகராதி வெளியிடப்பட்டதை அறிஞர் மலையமான் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பெருமிதமும் ஊக்கமும் தமிழ் மக்களிடம் மலர வேண்டும்.
ஒரு நாட்டின் மொழிக் கொள்கையைச் சார்ந்தே அந்நாட்டு மொழி வளர்ச்சி அமையும். ஆட்சி, கல்வி, செய்தித் தொடர்பு, அறிவியல் தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் ஒரு மொழியைப் பயன்படுத்தும் முறையில் நாடு முழுவதற்கும் ஒருமைப்பாடு வேண்டும் என்று கருதினால் பன்மொழி வழங்கும் நாட்டில் மாநில மொழிகள் சில மாற்றங்களைப் பெறும். அவற்றின் வளர்ச்சி கூடத் தடைப்படலாம். ஒரு மொழியைத் திணித்தல் சிறுபான்மை மொழிகளைப் புறக்கணித்தல் போன்ற மொழிக் கொள்கைகள் மொழிகளின் உறவைச் சீர்குலைப்பதோடு, சமுதாய வளர்ச்சியையும் பின்னடையச் செய்யும் என்றும் மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
வளரும்…
முனைவர் ஒளவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
Leave a Comment
You must be logged in to post a comment.