‘ வழக்குச் சொற்கள் முடிவதில்லை ’
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,
முனைவர் சி. பாலசுப்பிரமணியம் – சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் – அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் – இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி – தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் – இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் – பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர் திரு. கார்த்திகேயன் – இலக்கியப் படைப்பியலையும், ஆய்வு மாணவர் திருமதி நிர்மலா – மொழிபெயர்ப்பியலையும் கற்பிக்கும் பேராசிரியப் பெருந்தகையர்களாகத் திகழ்ந்தனர்.
என்னுடன் முதுகலை பயின்றவர்களில், மூர்த்தி குருநானக் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், சற்குருநாதன் அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகவும், ஜயச்சந்திரன் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், மகாதேவ ராவ் தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும், மணிமேகலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
எது கலையென்று தெரிவதற்குள்ளே முதுகலையில் முந்திக்கொண்டு பல்வேறு கல்லூரிப் பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் வீறுகொண்டு கலந்து அங்கிங்கெனாதபடி நான் சென்னையை வலம் வந்தேன்.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகம் செல்லத் திட்டமிட்டு, சிகாகோ இலினாய் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பெர்க்ளி பல்கலைக்கழகம், விசுகான்சின் ,மேடிசன் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பினேன். தொண்ணூறுகளில் இப்பல்கலைக்கழகங்களில், தெற்காசிய இலக்கியத் துறையொன்று அமைந்திருந்ததால், பேராசிரியர் ஏ.கே. இராமானுஜன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் நார்மன் கட்லர் இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து கடிதம் எழுதி தமிழிலக்கியத்தை ஆய்வாக அங்குவந்து பயில்வதற்கு முனைந்தேன். இம்முயற்சிகளுக்கெல்லாம் என்னுடைய மாமா மருத்துவர் இளமதியும், முனைவர் வானவன் ஏகாம்பரமும் உறுதுணையாக இருந்தனர். அப்பொழுதே சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு நான் செல்ல திரு.வி.ஜே.பாபு மிகவும் உதவியாக இருந்தார்.
சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுப. தின்னப்பன் மகன் அருண் வீரப்பன் , திருமதி பனையப்பன், திரு. பேரம்பலம், திரு. பார்த்திபன் சண்முகம் போன்றோர் துணை நின்றனர். என்னுடைய அமெரிக்கா ஆய்வு முயற்சி அன்றைய சூழலால் நான் செல்வதற்கு இயலாமல் நின்றது . என் அன்னையாரும் அமெரிக்காவிற்குச் சில ஆண்டுகள் கழித்துச் செல்லலாம் என்று தேற்றினார்கள். அதேபோல உன்னை அந்த நாடே அழைக்கும் ஒருநாள் வராமலா போய் விடும் என்று ஆற்றுப்படுத்தினார்கள். அம்மாவின் வாக்கின்படி, சென்ற ஆண்டு சூலை – பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் அரசின் சார்பில் கலந்து கொள்வதற்காக அதே சிகாகோவிற்குச் செல்ல நேர்ந்தது. அம்மாவும் நானும் மகிழ்ந்தோம்.
பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒரு புறத்திலும், இவற்றை நீக்க வேண்டியதில்லை என்று கருத்து மறுபுறத்திலுமாகத் தமிழின் மொழிக்கொள்கை இருவேறு இயல்பாக உருப்பெற்றது.
இந்நிலையில் ஒருசாரார் புதிய அறிவுத்துறைப் பொருண்மைகளைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதலில் எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது என்றனர். வேறொரு சாரார் தமிழ்ச் சொற்களைத்தான் எங்கும் நாம் வழங்குதல் வேண்டும் என்றனர். இப்போக்கினைப் பற்றி, “இது முடிந்து விடவில்லை. இந்நிலை என்றேனும் முடிந்துவிடப் போவதும் இல்லை, இது புதிதாக உண்டான ஒரு விவாதமும் அன்று. தமிழ் மொழியில் தொடக்க நிலையிலிருந்தே எப்பொழுதும் இது உள்ளதுதான். ஆனால் முன்பெல்லாம் கட்சிப் பிரதிகட்சிகள் இல்லை. வாதப் பிரதிவாதங்களும் இல்லை.
பிறமொழிக் கலப்பினால் நமது மொழி பாழாய்விடும் அதைப் பாதுகாத்தற்குத் தமிழ்ப் பாதுகாப்புப் படை ஒன்றுவேண்டும் என்று படை திரட்டியதும் இல்லை. எனினும், உள்ளூர அடிப்படையில் இந்த விவாதம் அமைதியாய் நடந்து கொண்டுதான் இருந்தது. நமது தாய்மொழிக்கு மட்டும் இவ்விவாதம் தனி உரிமையுமில்லை; வழக்கிலுள்ள எல்லா மொழிகளிலும் இது காணப்படுவதே” என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
ஒருவர் வாணிகத் துறையில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவரிடம் விடுமுதல் அதிகமாயில்லை. தம்மிடமுள்ள கைப்பொருளுக்கு ஏற்றபடிச் சுருங்கிய அளவில் வணிகம் தொடங்குகிறார். இவரிடத்தில் ஐம்பது சரக்குகள்தாம் உள்ளன. இவரைச் சுற்றி வாழும் மக்களுக்குத் தேவையோ இருநூறு சரக்குகள். அச்சரக்கு அவரிடம் இல்லை. அதைக் காட்டிலும் தம்மிடமுள்ள வேறொரு சரக்கு அதிகம் பயனுடையது என்று சொல்லி இச்சரக்கை இவர் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவு அடையவில்லை.
இதைக் கண்டதும் அவர்கள் கேட்கும் சரக்கு இதுதான் என்று தம் கடையிலுள்ள பிறிதொரு சரக்கைக் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவடையாமல் , வாணிகர் மீது மிகுந்த வெறுப்புக் கொள்ளுகிறார்கள். இவர் கடையில் வாடிக்கை வைத்துக் கொள்ளாது வேறுகடைக்கு மக்கள் செல்கிறார்கள். வாணிகர் மற்ற கடைகளோடு சமமாகப் போட்டி போட்டு, மக்கள் வேண்டும் சரக்குகளையும் வாங்கிவைத்து அவர்களையும் நிறைவு பண்ணித் தருகிறார். இவ்வணிக நிகழ்ச்சி போன்றதே மொழி வரலாறும். சொற்களே சரக்குகள் மக்கள் தேவைதான் புதிய அறிவுத் துறைகள்.
ஆனால் வருங்காலத் தமிழைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. வாணிகர் தனது சரக்குகளைச் செய்தது போலத் தமிழ்மொழியும் உயிர் என்ற சொல்லை எவ்வளவு பயன்படுத்தக் கூடுமோ அவ்வளவும் செய்து விட்டது. ஆனால் நாழி முகவாது நானாழி. புதுச் சரக்குகளை வாங்கத்தான் செய்தார் வாணிகர். அது போல ஆன்மா என ஒன்று உண்டு என்று சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, சொல்லளவிலாவது அதனைக் கடன் வாங்க வேண்டியதுதான். கடன் வாங்கிய அச்சொல்லைத் தள்ளிவிட முடியாது என்றும் அவர் குறிப்பதும் சிந்தனைக்குரியது.
பிறமொழிச் சொற்களை முழுவதும் ஏற்பது, அறவே தள்ளி விடுவது என்ற நிலைகளை விடுத்து, இயன்றவரையில் தமிழாக்கம் செய்தும் தனித்தமிழில் எழுதியும் வரும் நிலை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பேரறிஞர் அண்ணா இம்முயற்சியில் தாம் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பதைக் குறிப்பிடும் போது, “தம்பி பலவற்றை நான் எழுதிய பிறகு அவற்றில் பிறமொழிச் சொற்களின் கலப்பையெண்ணி வருந்தியுள்ளேன். என்னால் இயன்றது அவ்வளவுதான். நீயாவது பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி எழுதவும் பேசவும் பழகு” எனக் கூறுவது இங்குக் கருதத்தக்கது.
உலக அறிவியல் வளர்ச்சியோடு ஒப்புநோக்கி பேரறிஞர் வா. செ. குழந்தைசாமி குறிப்பிடும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, மொழிக் கோட்பாட்டில் ஒரு புதிய அணுகுமுறையை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கிறது.
தூய்மை, தனித்தன்மை என்பது உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதிலும். அது எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் நமக்குத் தெளிவு வேண்டும். கன்னித் தன்மை தான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தன்மை வேறு தனித் தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான், ஒருவரது தனித்தன்மை தெரிகிறது.
தமிழ் விண்ணிலிருந்து பிறந்தது அன்று விண்ணவர் தந்ததும் அன்று மனித சமுதாயம் படைத்த மொழி; மனித சமுதாயம் வளர்த்த மொழி; மனிதன் படைத்த எதுவும் குறையுடையது. வளர்ச்சிக்கு வழியுடையது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், நம் மூதாதையர்கள், மொழியைப் பொறுத்தவரை முடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவோ, நம்பவோ இடமில்லை.
தமிழும் உலகிலுள்ள மற்றைய மொழிகளைப் போன்றதே. ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினர் தம் மொழி வளர்ச்சி, அதில் அவர்கள் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும் பயன் தரும்.
நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்பது போன்ற பார்வையோடும், மற்ற மொழியினர் அனுபவம் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படாது என்னும் மனநிலையோடும், காதும், கருத்தும் மூடிய நிலையில் இருந்து கொண்டு எழுதுவதும், பேசுவதும் தக்க பாதையாகாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆய்ந்து, அவற்றை இயன்ற வழியில், தேவையான மாற்றங்களோடு பயன்படுத்தி, அதன் வழி நாம் பயன் பெறவேண்டும் என்ற நோக்கம் நமக்கு வேண்டும்.
அருந்தமிழில் அயற் சொற்களை ஆய்வு செய்த வகையில், எதிர் கால நலன் கருதி நாம் ஏற்கத் தக்கதாக துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி கருத்து அமைகிறது. எனினும், அயல் மொழிச் சொற்கள் வழக்கில் வந்தமை கருதிப் பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் பலவாகப் பிறமொழிச் சொற்கள் அமையுமானால், அவர்களுக்கு என்ன விளங்கும்? கல்லூரியில் பாடநூல்கள் வேறு, பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு. பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி நாம் விளக்க வேண்டும்.
இங்கே மணிப்பிரவாள நடை பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர்கொள்ளாது மறைந்து விட்டது. உலகம் போகின்ற போக்கில், பொதுமக்கள் மக்களாட்சியில் சிறந்த இடம் பெற வேண்டுமானால், உலக அறிவை எல்லாம் ஒரு வகையாக அவர்கள் எளிமையாகப் பெற்றே தீரவேண்டும். கலைச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களாக அவர்கள் வாயிலும் காதிலும் இனிக்கின்ற காலம் அமையவேண்டும். முற்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதினாலன்றிச் சில கருத்துகளை விளக்கவே முடியாதென்று அறிஞர்கள் சிலர் கருதினார்கள்.
ஆனால் நாளடைவில் அந்த அறிவையெல்லாம் எளிய தமிழில் எழுதிக் காட்டக்கூடும் என்ற நிலை ஏற்பட்டபோது, மணிப்பிரவாள நடை தானாவே மறைந்து போனது. இலத்தீனில்தான் கருத்துகளைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டன் எழுதினார். இப்போதோ அந்த நிலைமாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் அமைந்து விட்டது. அந்த நிலை தமிழில் ஓராண்டில் ஈராண்டில் வாராது. எனினும், கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வளரும். அதுவரையிலும் ஆங்கிலத்தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டுதான் வரும்.
பாவேந்தர் பாரதிதாசன் பல புதிய சொல்லாக்கங்களை நமக்கு வழங்கிய போதிலும் அவரும், மியூசியம், தியேட்டர், இண்டியன், ரெயில், இந்தியன் பார்லிமெண்டரி, கவர்னர் ஜெனரல், கோர்ட், எலக்சன், கொம்முயூன், எலச்சியம், அத்மினிஸ்ராத்தேர், பிரெஞ்சு, சர்க்கார், போஸ்த், பிரிட்டிஸ், ஹைதராபாத், பிர்க்கா, தாலுக்கா, ஸ்தலஅதிகாரி, காண்டிராக்ட், பம் பாய், கிராணிக்கல், பிரிபிரஸ் ஜர்னல், நேஷனல் ஸ்டாண்டர்ட், ரிமாண்டு, கமிஷன், கார்ப்பரேஷன், மோட்டார், சோஷலிஸ்டுகள் போன்ற ஆங்கிலச் சொற்களைத் தம்முடைய படைப்புகளில் சேர்க்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கலாம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் மொழி என்னும் பொருளுடையதன்று.
ஆங்கில மொழி இன்றைய நிலைக்கு உலக வளர்ச்சியில் புதுமையின் வடிவமாக, புதுமையின் வாய்க் காலாக அமைகிறது. அதனைத் தமிழ்நிலத்தில் பாய்ச்சிக் கொள்வதில் கேடொன்றுமில்லை. பழையன இங்கு நிறைய உண்டு. எல்லாம் செழிப்பாக வளர்வதில் என்ன ஐயம்? எனப் பேராசிரியர் தெ. பொ. மீ. வினவுவது, வருங்காலம் நோக்கித் தமிழில் ஆங்கிலக் கலப்பு நிகழ்வதைத் தவிர்க்க இயலாது என்பதைத் தெளிவாக்குகிறது.
வளரும்…
முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.