‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’
சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி இவரைத் ‘தமிழின் தங்கக் கப்பல்’ என்று அழைத்தது பொருத்தமான தொடராகும்.
தமிழர் மனங்களில் ஒரு தங்கக் கப்பல்
ஆரவாரிக்கும்
உப்புக் கடலுக்கு எதிரே
அமைதியான
அருந்தமிழ்க்கடல் பேராசிரியர்
வ. செயதேவன்…
கிழக்குச் சூரியன்
முகம் பார்த்துக் கொள்ளக்
கிடைத்த
மானுடக் கண்ணாடி
அதிர்ந்து நடக்காத
பூனையின்
மெத்தென்ற பாதங்களில்
உதித்துவரும்இவர் சொற்கள்;
ஆனால்
வாஞ்சை மட்டுமே இருக்கும்
வஞ்சகம் இருக்காது!
வளர்வது நம் கண்ணுக்குத்
தெரியாமல் வளர்ந்துவரும்
குழந்தைகள் போல
வளர்ந்துவரும் இவர் செயல்கள்!
உழுந்தளவு
செயலாற்றவே உலக அளவு
அலட்டிக்கொள்ளும்
மனிதர்களிடையே
உலகளவு செயல்கள் இவரிடம்
உழுந்தளவு அலட்டல்
இல்லை…..
உதாரண மனிதர் செயதேவன்!
சிவந்த
ரோஜா மொட்டாய் இருக்கும்
மெரினாக் கட்டடத்துள்
மலர்ந்த மானுட ரோஜா
செயதேவன்!
இயக்கமாக இருந்து
இயங்கிக் கொண்டிருக்கும்
செயதேவன் அறைக்குள்
போய்வந்த காற்றுக்குள்ளும்
கதவு திறக்கும்
காரியாலயங்கள்
ஈர நிலா ஒளிபட்டு
இரும்புகள்
உருகும் சாத்தியம்
எங்கும் இருக்காது எனினும்
செயதேவன்
அறைக்குள்ளும் துறைக்குள்ளும்
எப்படியோ சாத்தியம்
என்பதை
வரலாறு முரசறையும்!
தமிழர் மனங்களில்
ஒரு
தங்கக் கப்பல்…
செயதேவன்!
பயணப் பதிகம்
வளரக்
கோடி கோடி அலைகளில்
குவிக்கிறோம் வாழ்த்துகள்
எதையும் புதுவதாக அறிந்து ஒழுக நினைக்கும் வேட்கை மக்களினத்திற்கு அமைந்த மனவுணர்ச்சியாகும் அரசியல், வாணிகம், கலை, இலக்கியம், பண்பாடு, இணைந்து நாம் நடத்தும் வாழ்க்கையில் பெருகிவரும் உறவுகளின் பயனாகக் கொண்டும் கொடுத்தும் மக்கள் தங்கள் மொழிகளை வளர்க்கின்றனர். அறிவியல் துறைகளைப் பற்றிய விவரங்களும் செய்திகளும் பொதுமக்கட்குச் சென்று சேரவேண்டும் என்னும் கருத்து உலகமெல்லாம் வரவேற்கப்படுகின்றது. காலை முதல் மாலை வரை நம் வாழ்வில் அயல் நாட்டுப் பொருள்கள், சொற்கள், சிந்தனைகள் எவ்வாறேனும் கலந்து விடுகின்றன. இந்நிலையில் கற்றார்க்கு மட்டுமே ஒரு மொழி உரியதாக நிற்பதில்லை. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் வகையில் எல்லார்க்கும் இசைவதாய்க் கூட்டு முயற்சியிலேயே மொழி ஊட்டம் பெறுகிறது.
தமிழ்மொழியில் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட வழக்காறுகள் பிற்றை நாளில் மாறின. தொல்காப்பியர் காலத்தே ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் கூறப்பட்ட ஆண்பால் பெண்பால் இளமைப் பெயர்கள் இன்றைய வாழ்வில் நாம் காணுமாறு வழக்கில் பல இல்லை. ஏறு, ஒற்றை, ஒருத்தல், மோத்தை, தகர், கண்டி, மூடு, நாகு, அளகு, பிறவு போன்ற சொற்கள் இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு மரபுகள் தாமாகவே விலகும் போலும் புது வரவுகளை ஏற்றுக்கொள்ளவே வழுவமைதிகளும், மரூஉக்களும் ஒரு மொழியின்கண் அமைந்தன எனக் கூறுவாரும் உளர். இவ்வாறு காலந்தோறும் கடியப்படாத வகையில் பல்வேறு சொற்கள் மொழியில் கலந்து இடம் பெறும் சொற்குவியலைத் தொகுத்துக் கூறும் முன்னிலை ஆய்வாக நான் எழுதமுற்பட்ட ஆர்வத்தைக் கருத வேண்டுகின்றேன்.
வாணிகத்தின் பொருட்டும், அரசியல் உறவு காரணமாகவும், தொழில் நுணுக்கத் தொடர்பாலும் மக்கள் பலரோடு இணைந்து வாழ்ந்தனர்.
“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”
என்று சிலப்பதிகாரத்திலும்,
“மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடிக்
கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை?”
என்று மணிமேகலையிலும் நாம்காணும் போது, மாற்றங்கள் பலவற்றைக் காணும் இன்றைய நிலையை நாம் என்னென்று கூறுவது.
மொழிக்கலப்பு என்பது தமிழில் மட்டுமே நிகழ்ந்ததன்று. உலகின் செல்வாக்குள்ள மொழியாக அமைந்த ஆங்கிலம் பெருங்கலப்புக்கு உள்ளான மொழியே. இந்திய மொழிகளின் சொற்கள் பலவும் ஐரோப்பிய மத்திய ஆசிய மொழிகளின் வழியாக ஆங்கிலத்தில் பரவிக் கலந்தன என்று ஆப்சன் ஜாப்சன் தம்முடைய சொல்லகராதியின் முன்னுரையில் கூறியிருப்பது கருதத்தக்கது. வானத்தின் கீழே உலகத்தில் ஒவ்வொரு பகுதியினின்றும் பாயும் ஆறுகளனைத்தும் இணைந்து கலக்கும் கடலாகத் திகழும் ஆங்கிலமென்னும் நாகரிக மொழிக்கு நான் நன்றி பாராட்டும் அவாவினன் என்று எமர்சன் தமது தாய் மொழியைப் போற்றினார்.
மொழியைப் பற்றிய சிந்தனைகளையும் இனம், கலை, பண்பாடு நாகரிகம் பற்றிய தனிக்கருத்துகளையும் தெளிவாக அறியும் முயற்சிகள் மொழிவழி மாநிலப் பிரிவுகளுக்குப் பிறகு இந்திய நாட்டில் முன்னேற்றம் பெற்றன. மொழிக்கலப்பின் தேவையைத் தவிர்க்கவியலாது என ஒரு சாராரும், மொழிக்கலப்பால், மொழி கெடும் – தடுக்கப்பட வேண்டியது எனப் பிறிதொரு சாராரும் தத்தம் கருத்துகளை வலியுறுத்துகின்றனர். மொழியியல் நோக்கில் மொழிக்கலப்பிற்கான காரணங்களை அறிஞர் மு.வ. பின்வருமாறு குறித்தார்.
‘எபர்சன் கருத்துப்படிச் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும். முதலாவது தம்மிடம் இல்லாத புதிய பொருள்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் பிறமொழிப் பெயர்களைக் கடன் வாங்குதல். இரண்டாவது ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது, அதற்கு உரிய அம்மொழிச் சொற்களையும் கற்றுக் கையாளுதல். மூன்றாவது மொழி பெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாகத் தம் மொழிச் சொற்களைத் தேடிக் காணாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.
’ இவ்வாறு ஒரு மொழி கடன் வாங்கியதைப் பற்றி ஆராயும்போது, இன்ன அளவிற்குத் கடன் வாங்கியது என்றும் ஆராய்தல் வேண்டும். பெரும்பாலும் கடன்வாங்கப்படுபவை பொருள்களின் பெயர்களும் பண்பும் ஆகும். வினைச்சொற்கள் மிகக்குறைந்த அளவிலே கடன் வாங்கப்படுகின்றன. இடைச்சொற்கள் கடன் வாங்கப்படுதல் அரிது. துணைவினை முதலியவற்றைக் கடன் வாங்கல் இல்லை. வேற்றுமையுருபுகள், வினை விகுதிகள் முதலியவற்றைக் கடனாகப் பெறுதல் சிறிதும் இல்லை எனலாம். ஒரோவழி எண்ணுப் பெயர்களில் ஒரு சில கடன் வாங்கப்படுதல் உண்டு.
மொழியில் இயற்கை நிகழ்வாக இக்கலப்பு நேர்ந்து கொண்டிருக்க மொழித்துய்மைக்கு அரணாக நின்றோர் பிறமொழிச் சொற்களைச் சுட்டிக் காட்டியும் மொழித் தூய்மையை வலியுறுத்தினர். “வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா” என்று வினவினார் பாவேந்தர் பாரதிதாசன், வடவர் ஆதிக்க எதிர்ப்பு, ஆரிய வெறுப்பு, இந்தி மறுப்பு என்ற எண்ணங்களிலிருந்து விடுபடாமலேயே இந்திய நாட்டு ஒற்றுமைக்கு இசைவாகப் பல்வேறு மாநில மொழிச் சொற்கள் விரவுவதை மறுக்க இயலாதவராக,
“பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி
பிரிய நினைத்தவர் பிழையுணர்கின்றார்.
பெருநிலத்தில் ஒரே கொடி பறந்தது
நாவலந்தீவிலோ எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமயச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்.
ஒருவர்க்கு வந்தது அனைவர்க்குமென்ற
மனப்பாங்கு வளர்ந்தது. வேண்டிய மட்டும்
இமயம் மீட்கப்பட்டது ஈதோ பார்
சீனன் செந்நீர் கண்ணீராக
எங்கோ ஒட்டம் எடுக்கின்றானடி” என்றும் பாடினார்.
வடசொற்கள் எனக் கருத்தப்பட்டவை தமிழ்ச் சொற்களே என வாதிட்டுப் பல சொற்களைப் பலர் பட்டியலிட்டனர். சான்றாக கனம், தானம், இலக்கணம், நேயம், ஆசை, நாடகம், பூசை, தெய்வம், காவியம், காப்பியம், இமயம், வேதம், மானம், ஆதி பகவன், கங்கை, சலம், உவமை, அமிழ்து, ஆலயம், நாகரிகம், திராவிடம், முட்டி, ஆசாரம், அதி, ஆசிரியர், அடம், அரங்கு, முரலை, முரலி, மா, கண்ணியம், காயம், ஓம், சங்கம், பதி, பிலம், குலம், மனம், கன்னி, காலம், உலகம், ஆகுலம், சிவம், சட்ட செட்டி, முகம், காரணம், காரியம், கடிகை, கடிகாரம், கற்பனை, வடிவு, படிவு, தாரம், ஒரை, பரதர், பாரதம், பரதன், தாசர், வித்தகம், மளிகை, பூ (பூமி), குடம், வினயம், கவி, புருவம், வாரி, வாரிதி, தாமரை, பஞ்சம், பனாதி, வேந் தன், ஆய்தம், சங்கம், வரம், பகுதி, பிச்சை, தச்சன், பாக்கியம், கோட்டி, கருப்பம், கூகை, மனிதர், விருத்தம், தூது, சுவர்க்கம், தேவர், அவி, நாகம், பலி, துளசி, வாலி, தாமரை, இலட்சம், கோடி, மலம், ஆயுள், பசு, பதம், கவசம், குண்டம், சூது, விஞ்சை, சடை, மேதை, கம்பளம், அவிசு, அவை, சபை, மேழம், சாரீரம், வீணை, தூரம், கூட்டம், கோட்டம், கூகம், கவழன், இராகு, அகளம், அங்கம், தங்கி, அங்குடம், அங்குரம், அசடு, அடவி, அம்பரம், அம்பா, அமர், ஆகுலம், மங்கலம், மங்களம், ஒட்டகம், தூலம், இயேசு, பலபம், சுலபம், தாளம், மேளம் அருச்சனை, புதன், வியாழன், இலம்பாடி, இரகு, கோளம், காவிரி, ஏளனம், ஆலாபனம், சேது மூலம், வண்ணம், அலாதி, முந்திரி, தை, மது, சாரம், சுரம், பாலன், பாலியன், நீதி, சேட்டு, திருமதி, விகுதி, அச்சாரம், பெட்டி, காந்தி, ஒருவந்தம், புத்தகம், வேகம், திசை, திக்கு, சொத்து, வேகம், வேதனை, சொந்தம், படி, அனுப்பு, அனுபோகம், உத்தரவு, உத்தாரம், உச்சரி, கண்ணியம், கவனம், கண்டம், கொஞ்சம், பாடம், படம், இயேசு, கண்ணி, குமரி, கொட்டாரம், பந்து, சிப்பம், கன்னம், சக்கரம், அகராதி, தன்மை, கிண்கிணி, நுகர், தானம், சிரத்தை, கவனம், செந்திரை, தரை, மானம் என்ற பட்டியலைக் காணலாம்.
வளரும்…
முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.