அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு
இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், கவிஞர் மீரா, கவிஞர் முருகு சுந்தரம், கவிஞர் நா. காமராசன், கவிஞர் முருக சரவணன், கவிஞர் புலமைப்பித்தன், ‘பாரதி காவலர்’ இராம்மூர்த்தி, ‘பாரதி அடிப்பொடி’ மணி, பேராசிரியர் சு. பாலச்சந்திரன், ஒய்.எம்.சி.ஏ. பக்தவத்சலம், பெ.நா. அப்புசாமி என்ற பல பழுத்த தமிழறிஞர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சென்றதைக் கண்டு மகிழ்ந்தேன்.
‘கவியருவி’ ஈரோடு தமிழன்பனின் ஒல்லி உடலும், ஒளி உமிழ் சொற்களும் எங்களால் மறக்க முடியாது. என் அண்ணனையும் என்னையும் தூக்கிச்சுமந்த அந்த தோள்களும் ஜெர்ரி, ககாரின் என்று எங்களை அழைப்பதையும் நாங்கள் மறக்கவே முடியாது. தொலைக்காட்சியில் அவர் செய்திகள் படிப்பதைக்கேட்ட பிறகு தான் தமிழுக்கு அமுது என்று பேர் என்று நான் நினைப்பது உண்டு.
பெசன்ட்ரோடு இல்லத்தில் இருந்த பொழுது என்னுடைய தந்தையாரும் தாயாரும் அலுவல் பணியாக காலை முதல் மாலை வரை பணியாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் எங்கள் மூவரையும் காவல் தெய்வம் போல இருந்து அரவணைத்தவர் திரு.நாராயணன் என்பவர் ஆவார். அவரை நாங்கள் ‘சின்னண்ணா’ என்று தான் எப்பொழுதும் அழைத்துப் பழகியிருக்கிறோம். அவர்தான் எங்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். அவர் காரைக்குடியில் இருந்து வந்தவர்.
திருத்தணிகையிலுள்ள சரஸ்வதி மில்லின் உரிமையாளர் திரு. நாராயணன் செட்டியாரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த திரு சுப்பையாவும், திரு.அழகப்பனும் எங்கள் அப்பா அங்கு செல்லும் போதெல்லாம் உடனிருந்து கவனித்தவர்கள். அவர்களிடம் எந்தையார் ஓர் இளைஞரை சென்னைக்கு எனக்கு உதவியாளராக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே தங்கள் தம்பி நாராயணனை பெசன்ட் ரோடு இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
அவர் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களைக் கண்ணும் கருத்துமாக எங்களுடைய படிப்பு, உணவு, நாங்கள் எப்படி எல்லாம் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களைச் செதுக்கிச் செதுக்கி வளர்த்தவர். கண் இமை இரண்டும் காப்பது போல் எங்கள் குடும்பத்தை வண்ணமுறக் காத்தவர். எங்கள் பெற்றோர்கள், “ஒரு நாளும் அவர் வாய் முணுத்துக் கண்டதே இல்லை” என்பார்கள்.
அவர் எங்களுக்கு வாத்தியாராகவும், வளர்ப்புத் தாயாகவும் எல்லா வகையிலும் எங்களைப் பார்த்து, நாங்கள் ஒரு குறையுமின்றி, நாங்கள் எந்த வேளையில் சாப்பிட வேண்டும், பால் எந்த வேளையில் அருந்த வேண்டும், மோர் எந்த வேளையில் அருந்த வேண்டும் என்று நயந்து சொல்வார். என்னுடைய தந்தையார் அடிக்கடி அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியராய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் இங்கு இவனைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று பாரதியின் வரிகளை அடிக்கடி சொல்லி மகிழ்வார்.
அவருடைய கண்ணிலேயே நல்ல குணம் இருப்பதைப் பார்த்துத்தான் எங்கள் இல்லத்தில் இருந்து, வளர்ந்து அவர் அடுத்த நிலையாக அருட்செல்வரின் தனிச்செயலாளர் பண்புத்திலகம் இரவியின் பரிந்துரையால் சின்னண்ணா-நாராயணன் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆணிவேராக திரு.இரவி திகழ்வதை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசியும். அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா அவருடைய கண்ணுக்கும், அவருடைய சொல்லுக்கும் ஏற்ற ஒரு நல்ல சேவகனாய், தொண்டராய் அவரிடம் பல ஆண்டுகள் பணியாற்றி இன்றும் குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கும் வேண்டப்பட்டவராக மிக நயமாகப் பணியாற்றுகின்ற பண்பாளராய் மிளிர்கிறார்.
பல ஆண்டுகள் கழிந்தாலும் இன்றைக்கும் நாங்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் சின்னண்ணா… சின்னண்ணா… என்றுதான் அழைத்து மகிழ்கிறோம். பெசன்ட் ரோடு இல்லத்திலிருந்து புறப்பட்டு 1973-களில் அண்ணா நகருக்கு மாறிவிட்டோம். ஆனாலும் பெசன்ட் ரோடு எங்களுக்கு என்றைக்கும் நீண்ட உறவாகவே இருந்ததற்கு காரணம் நாங்கள் அந்த பெசன்ட் ரோடில் இருந்து வெளியேறிய பிறகு எங்களுடைய பெரியம்மா அவர்கள் குடும்பம் அங்கேயேதான் பல ஆண்டுகள் இருந்தார்கள். வள்ளியம்மாள் பள்ளியில் இருக்கும் பொழுதே என்னுடைய பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இனிமுதல் இவர்கள் மூவரும் ஆடவர் பள்ளியில்தான் பயில வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து சென்னையிலேயே எண்பதுகளில் மிகச் சிறப்பாக இருந்த சென்னை கிறித்துவ மேனிலை ஆடவர் பள்ளியில் எங்கள் மூவரையும் எங்களுடைய பெற்றோர்கள் இணைத்தார்கள். வள்ளியம்மாள் பள்ளியிலிருந்து அண்ணனை சென்னை கிறித்துவக் பள்ளிக்கு மாற்றும் பொழுது, மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்கு பல நாட்கள் செலவானது என்பார்கள்.
நான் ஐந்தாவது படித்தவுடன் என்னுடைய தேர்ச்சி சான்றிதழுடன் என்னுடைய மாற்றுச்சான்றிதழ் அனுப்பி விட்டதைக் கண்டு எங்கள் அம்மா மிகவும் வியந்து பெருமிதம் அடைந்தார்கள். எந்த விதமான முயற்சியும் இன்றி என்னை சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது பள்ளி முதல்வர் திரு.கிளமென்ட் பீலிக்ஸ் எங்கள் அம்மாவிடம் சொன்னார்களாம், “மூன்று பிள்ளைகளையும் நீங்கள் சேர்க்கலாம். ஒருவர் சேர்ந்தால் அடுத்தவர் தானாகவே சேர்க்கப்படுவார்” என்று சொல்லி நாங்கள் மூவரும் அப்பள்ளியிலேயே பயின்றோம். பள்ளியின் விளையாட்டுத் திடல் F1, F2, F3, F4 என்று நான்கு நிலைகளாகவும் பள்ளியே மொத்தம் 100 ஏக்கருக்கு மேல் விரிந்து இருப்பதைக் காணும் பொழுது பிரமிப்பாக இருக்கும்.
பெரிய வகுப்பறைகளையும், கவினார்ந்த கட்டிடங்களையும் கண்ட பொழுது இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பள்ளியான ETON என்ற பள்ளிதான் நினைவு வரும். பள்ளியில் எந்தப் படிப்பிற்கும் குறைவில்லை. எந்தப் படிப்பையும் படிக்கலாம். ஓவியம் கற்றுத் தரப்படும். மரத்தச்சு வேலைகளையும் நாங்கள் பயின்றோம். மிக அற்புதமான ஒரு இசைக்குழு (band) இருந்தது. எல்லாவிதமான மேற்கத்திய இசைக் கருவிகளைக் கற்றுத் தெளிவதற்கும் அங்கு ஓர் ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்பில் நாங்கள் சேரும் பொழுதே மொத்தமாக 72 மாணவர்கள் பயின்றோம்.
ஆறாவது வகுப்பு பயிலும்போதே முதன்முறையாக சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்கு 20 ரூபாய் செலவில் சென்று வந்ததை நான் இன்றும் நினைந்து மகிழ்கின்றேன். மிகத் திறமையான மாணவர்கள் எங்கள் மத்தியில் படித்தார்கள். இன்றைக்கு அவர்கள் எல்லாம் தலைசிறந்த மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அமெரிக்காவிலும், துபாயிலும், லண்டனிலும், சென்னையில் மிகப்பெரிய நிறுவனங்களிலும் மிகப்பெரிய பதவிகளிலும் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன். ஆசிரியர்களாக திரு.லோகநாதன், மணிவாசகம், தமிழாசிரியர் ஜெயராமன், தமிழாசிரியர் சம்பத், மோசஸ் கணபதி, திரு. லட்சுமி நாராயணன், திரு. கட்டார் சிங், சுந்தர் சிங் என்று ஆசிரியப் பெருமக்கள் பட்டியலே நீளும். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது டேராடூனில் ராஷ்ட்ரிய மிலிட்டரி சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று நான் நேர்காணலில் வெற்றி வாய்ப்பு இழந்தேன்.
ராணுவப்படை, கப்பற்படை, விமானப்படை என மூன்று பிரிவுகள் இருந்தன. நான் 7ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை அந்தக் கப்பல் குழுவில் இடம் பெற்று செவ்வாயும், வியாழனும் பள்ளி வகுப்புக்கள் முடிந்த பிறகு அணிவகுப்புகளில் எல்லாம் கலந்து கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன். சென்னைத் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைப் பார்க்கும் வாய்ப்பும், பாய்மரப்படகு ஓட்டுவதற்கான வாய்ப்பும் தரப்பட்டது.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் அப்பொழுதே நான் கலந்து கொண்டு திருக்குறள் செல்வன் என்ற வெற்றிச் சான்றிதழையும் பெற்று மகிழ்ந்தேன். பாரதியினுடைய நூற்றாண்டு விழா நடைபெற்ற பொழுது முதன்முறையாக அனைத்து பள்ளிப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டியிலும் நான் கலந்து கொண்டேன். பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் பேருந்தில் சென்று நெடுக நடந்து எல்லோரிடமும் பண்பாகவும் பரிவாகவும் நடந்து பல நண்பர்களைப் பெற்றேன். இன்றும் நண்பர்கள் அனைவரும் தொடர்பிலேயே உள்ளோம். குறிப்பாக என்னுடைய இனிய நண்பராக திரு. சாய்சேஷன் எந்தவொரு ஐயத்திற்கும் அமுதசுரபி போலத் தீர்வுகளை வழங்கி வருவதுடன், என்னுடைய முனைவர் ஆய்வு நூலை நேர்த்தியாக மெருகேற்றியுள்ளார்.
அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையும் தமிழில் ஆழ்ந்த செழுமையும் வாய்த்தவர் ஆவார். ஒருமுறை என் மகள் ஆதிரையைக் கண்டதும் அவர் கேட்ட கேள்வியொன்று எவ்வளவு அழகான கவிதை நடையில் அமைந்துள்ளதென்று பாருங்கள். நான் அருளுடன் பள்ளிக்குச் சென்றேன், ஆத்திசுடி கற்றுக் கொண்டேன். எழுதியது யார்? என்றேன். ஔவையார் என்றார்கள். அவ்வை யார்? என்றேன்.
பாட்டி என்றார் தமிழ் ஆசிரியர். இன்று அருள் இல்லத்திற்கு சென்றேன் ஆதிரை சொல்கிறாள் அவ்வை தாத்தா என்று காலம் மாறிவிட்டது. பெரும் பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்தின் மகன் சேந்தன் அமுதனும் என்னுடன் பயின்றவர் ஆவார். மதிய உணவு வேளைக்குப் பிறகு எங்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ‘மேரி ஐஸ்கிரீம்’ வண்டியில் வரும் பலவண்ண ஐஸ்கிரீம்களையும் மாங்காய் கீற்றுகளையும் தவறாமல் உண்பது எங்கள் வாடிக்கையாகும்.
——————————————————————————————–
அயற்மொழிச் சொற்களின் அணிவகுப்பு I. அணிகலன்:
1 அட்டிகை கன்னடம் 2 கொலுசு தெலுங்கு 3 ஜிமிக்கி இந்தி 4 தோடு இந்தி 5 நத்து இந்தி 6 பேசரி இந்தி 7 ராக்கடி இந்தி 8 லோலாக்கு இந்தி 9 தாயத்து அரபு 10 நகாசு அரபு 11 பாட்லா மராட்டியம் 12 பாசிபந்து பாரசீகம் 13 புல்லாக்கு துருக்கி 14 மெடல் ஆங்கிலம்
II. ஆடை உடை:-
1 உருமால் பாரசீகம் 2 குடித்துணி பாரசீகம் 3 குல்லாய் பாரசீகம் 4 சரிகை பாரசீகம் 5 சகலாத்து பாரசீகம் 6 சால்வை பாரசீகம் 7 தாவணசி பாரசீகம் 8 மல் பாரசீகம் 9 லுங்கி பாரசீகம் 10 கதர் இந்தி 11 டோரியா இந்தி 12 துப்பட்டி இந்தி 13 தோத்தி இந்தி 14 தொப்பி இந்தி 15 பாகை இந்தி 16 புட்டா இந்தி 17 நாடா இந்தி 18 முண்டாசு இந்தி 19 லங்கோடு இந்தி 20 ஜோடு இந்தி 21 கமிசு அரபு 22 சிராய் அரபு 23 நிசார் அரபு 24 மகமல் அரபு 25 ஜிப்பா அரபு 26 பனியன் அரபு 27 சொக்காய் தெலுங்கு 28 ஜாக்கட்டு ஆங்கிலம் 29 டிராயர் ஆங்கிலம் 30 பாடி ஆங்கிலம் 31 சூட்டு ஆங்கிலம் 32 ஷர்ட் ஆங்கிலம் 33 கோர்ட்டு ஆங்கிலம் 34 காலர் ஆங்கிலம் 35 டை ஆங்கிலம் 36 பாக்கெட் ஆங்கிலம் 37 பித்தான் ஆங்கிலம் 38 பிளானல் ஆங்கிலம் 39 பெல்டு ஆங்கிலம் 40 பூட்சு ஆங்கிலம் 41 சப்பாத்து போர்த்து 42 துவாலை போர்த்து 43 சாரி சமஸ்கிருதம் 44 நோரியல் மலையாளம் 45 அல்வா அரபு 46 ஜிலேபி அரபு 47 மசாலா அரபு 48 முரப்பா அரபு 49 மைசூர்பாகு அரபு 50 கிச்சடி இந்தி 51 கீர் இந்தி 52 கேசரி இந்தி 53 கோவா இந்தி 54 கொத்சு இந்தி 55 லட் இந்தி 56 பக்கோடா இந்தி 57 பஜ்ஜி இந்தி 58 பூரி இந்தி 59 பேணி இந்தி 60 பேடா இந்தி 61 மிட்டாய் இந்தி 62 ரவை இந்தி 63 ரொட்டி இந்தி 64 சப்பாத்தி பாரசீகம் 65 பர்பி பாரசீகம் 66 பாதாம் பாரசீகம் 67 பூந்தி பாரசீகம் 68 புலாவ் பாரசீகம் 69 மைதா பாரசீகம் 70 சாம்பார் மராட்டியம் 71 சேமியா மராட்டியம் 72 கோசுமரி மராட்டியம் 73 டாங்கர் மராட்டியம் 74 பட்டாணி மராட்டியம் 75 பாத்து மராட்டியம் 76 தோசை போர்த்து 77 கருவாடு போர்த்து 78 ஐஸ்கிரீம் ஆங்கிலம் 79 கேக்கு ஆங்கிலம் 80 சாக்லட்டு ஆங்கிலம் 81 பப்பிரமெண்டு ஆங்கிலம் 82 பிஸ்கொத்து ஆங்கிலம் 83 டோஸ்ட்டு ஆங்கிலம் 84 அன்னாசி போர்த்து 85 பரங்கி (ப்பழம்) போர்த்து 86 பப்பளிமாசு மலேயம் 87 மங்குஸ்தான் மலேயம் 88 ஆரஞ்சு ஆங்கிலம் 89 ஆப்பிள் ஆங்கிலம் 90 சப்போட்டா ஆங்கிலம் 91 தம்பட்டம் ஆங்கிலம் 92 பேரிக்காய் ஆங்கிலம் 93 ஒயின் ஆங்கிலம் 94 ஓவல் ஆங்கிலம் 95 கலர் ஆங்கிலம் 96 காபி ஆங்கிலம் 97 கொக்கோ ஆங்கிலம் 98 சாலட் ஆங்கிலம் 99 சோடா ஆங்கிலம் 100 பிராந்தி ஆங்கிலம் 101 லெமனேட்டு ஆங்கிலம் 102 ஆல்பக்கடா பாரசீகம் 103 எலுமிச்சை அரபு 104 சர்பத்து அரபு 105 கொய்யா பிரேசில் 106 சாயா சீனம்
III. கட்டடப்பொருள்:-
1 ஆர்ச்சு ஆங்கிலம் 2 கர்டர் ஆங்கிலம் 3 காம்பரா ஆங்கிலம் 4 காம்பவுண்டு ஆங்கிலம் 5 கேட்டு ஆங்கிலம் 6 செட்டு ஆங்கிலம் 7 பங்களா ஆங்கிலம் 8 தார்சா ஆங்கிலம் 9 கோரி பாரசீகம் 10 ஜன்னல் போர்த்து 11 வராந்தா போர்த்து 12 குசினி போர்த்து 13 கிராதி போர்த்து 14 கக்கூசு டச்சு 15 காடிகானா இந்தி 16 பாலம் இந்தி 17 மால் அரபு
IV. அறையுறை:-
1 அலமாரி போர்த்து 2 மேசை போர்த்து 3 ஈசிசேர் ஆங்கிலம் 4 சோபா ஆங்கிலம் 5 டீப்பாய் ஆங்கிலம் 6 பீரோ ஆங்கிலம் 7 பெஞ்சு ஆங்கிலம் 8 குரிச்சி அரபு 9 பங்கா இந்தி V. பயன்பொருள்:- 1 குண்டாக் மராட்டியம் 2 கெண்டி மராட்டியம் 3 கூஜா அரபு 4 கோப்பை ஆங்கிலம் 5 தம்ளர் ஆங்கிலம் 6 கெட்டில் ஆங்கிலம் 7 பீங்கான் சீனம் 8 லோட்டா சீனம் 9 அண்டா இந்தி 10 வாளி இந்தி 11 தேக்சா இந்தி
VI. கூலங்கள்:-
1 அரிக்கன் ஆங்கிலம் 2 ஆரொட்டி ஆங்கிலம் 3 ஆக்கர் ஆங்கிலம் 4 இசுக்போல் ஆங்கிலம் 5 இஞ்சின் ஆங்கிலம் 6 ஊக்கு ஆங்கிலம் 7 சிமிட்டி ஆங்கிலம் 8 சிலேட்டு ஆங்கிலம் 9 பம்பு ஆங்கிலம் 10 பாட்டில் ஆங்கிலம் 11 பல்பு ஆங்கிலம் 12 பிக்காசு ஆங்கிலம் 13 புனல் ஆங்கிலம் 14 மிஷின் ஆங்கிலம் 15 மில் ஆங்கிலம் 16 மீட்டர் ஆங்கிலம் 17 நட்டு ஆங்கிலம் 18 லஸ்தர் ஆங்கிலம் 19 லாந்தர் ஆங்கிலம் 20 ராட்டு ஆங்கிலம் 21 வாட்சு ஆங்கிலம் 22 ஜாக்கி ஆங்கிலம் 23 கப்பி அரபு 24 கித்தான் அரபு 25 கீல் (கீர்) அரபு 26 கோலி பாரசீகம் 27 படுதா பாரசீகம் 28 குப்பி இந்தி 29 கொப்பரை இந்தி 30 ஜமுக்காளம் இந்தி 31 டப்பா இந்தி 32 டப்பி இந்தி 33 சாக்கு டச்சு 34 சாவி போர்த்துக்கீசியம் 35 சாடி போர்த்துக்கீசியம் 36 பீப்பாய் போர்த்துக்கீசியம் வளரும்…
– முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.