Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 28

Written by Dr. Avvai N Arul

அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள்

என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன். அவர் மறையும்போது உனக்கு என்ன வயது என்று என்னிடம் என் அம்மா மீண்டும் கேட்டார்கள்.

எனக்கு மூன்று வயது என்றேன். மூன்று வயதில் நடைபெற்றது உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டு வியந்தார்கள். எங்கள் மூவரின் வளர்ச்சியில் நாள்தவறாமல் கண்ணூன்றிக் கண்டு நெகிழ்ந்த பெறற்கரியவர் என் அன்னையார். என் நினைவுகளின் நீளத்தை நான் எடை போட்டுப் பார்க்க விரும்பினேன். நான் சிறுவனாக இருந்தபோதே விருந்தினர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது என் அண்ணன் கண்ணனுக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள் என்று என் பெற்றோர்கள் சொல்வார்கள்.

ஆனால் ஒன்றைக்கூட அவன் எடுத்து உண்டதேயில்லை. வைத்த இடத்தில் அப்படியே இருக்கும் என்பார்கள். ஆனால், நான் இரண்டாம் மழலையாகப் பிறந்தபோது, அண்ணனுக்கும் எனக்கும் இரண்டாண்டுகள் இடைவெளி. நான் பிறந்து சில மாதங்கள் கழித்துத் தின்பண்டங்கள் அனைத்தையும் நான் ஆர்வமாக உண்பேன் என்று என் அண்ணன் கூறியதாக என் பெற்றோர்கள் மகிழ்ந்து வியப்பார்கள்.நான் வளர்ந்த பெசன்ட் ரோடு அழகான இடமாகும். அந்தக் காலத்தில் ‘கிருஷ்ணாயில்’ என்று வண்டியில் மண்ணெண்ணெய் விற்பார்கள்.

‘கெரோசின்’ எண்ணெயைத் தான் கிருஷ்ணாயில் என்று சொல்கிறார்கள் என்று ஒருமுறை அப்பா கூறினார். பெசன்ட் ரோட்டில் திரு. நாராயண பிள்ளை, கதையாசிரியர் பாலசுப்பிரமணியம், நகைச்சுவைத்திலகம் டி.எஸ். துரைராஜ், டி.என். சிவதாணு இல்லங்கள் இருந்தன. மேலும், பாலசுப்பிரமணிய பக்தஜனசபை என்ற மண்டபத்தில் பல்வேறு கூட்டங்களில் எங்கள் தந்தை உரையாற்றும்போது பார்வையாளராகக் கலந்து கொண்டதையும் நான் நினைந்து பார்க்கிறேன். எங்கள் பெசன்ட்ரோடு இல்லத்திற்கு வராத பெரியவர்கள் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைமுருகன், முத்தமிழ்க் காவலர், தவத்திரு ஊரனடிகள், புலவர் புலமைப் பித்தன், பல தலைசிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள் என்று பட்டியல் நீளும்.

அப்போது நான் பயன்படுத்திய கருப்பு நிறப் பையில், என் வியர்வை படர்ந்து என் கைகளில் கருப்பு நிறம் படிந்ததை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என் அம்மா என்மேல் தூசி படிய விடமாட்டார்கள். சின்ன அண்ணா என்னை அடிக்கடி துடைத்துவிடுவார். அம்மாவுக்கு சிறுகறை, தூசி எங்கும் பிடிக்காது. அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்போது, முதன்முறையாக நான் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’ என்ற வரிகளையே மீண்டும் மீண்டும் சொல்லி, அதற்கு மேல் பேச முடியாமல் திணறி நின்றேன்.

அப்பள்ளியில் ‘பீயுஷ்’ என்ற நண்பர் முத்து முத்தாக எழுதுவார். என்னுடன் இரண்டாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து படித்து வந்தவர் வெங்கடேஷ் பாபா, அரவிந்து என்பவராவர். இவர்கள் இருவரும் என்னுடன் பன்னிரண்டாவது வரை படித்து வந்தனர். என்னுடன் படித்த திரு. அரவிந்து (லால்குடி ஜெயராமன் மாணவர்) அற்புதமாக வயலின் வாசிப்பவராவார். இன்றைக்கு அவரும் அமெரிக்காவில் இருக்கிறார். நண்பர் வெங்கடேஷ் பாபா தனியார் விமான நிறுவனத்தில் பெரிய பதவியில் உள்ளார். இவரும் ஆங்கிலக் கருவியான ‘Band’ வாசிப்பதில் வல்லவராக பல இன்னிசை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.

அவர்களைப் போலவே என்னுடன் 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்ற ஸ்ரீராம் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வளர்ந்தவர். அவருடைய அண்ணன் இராமசாமி, தம்பிகள் இராமநாதன், சங்கர், தங்கைகள் சித்ரா, சுதா போன்றோர் எங்கள் குடும்பத்துடன் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்கள் படிப்பதற்காகவும், ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காகவுமே படித்து அமெரிக்காவில் குடியிருக்கப் போகிறார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களின் பெற்றோர் வளர்த்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இவர்கள் ஆறு பேரும் பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து, பின்னர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்து படித்து, இன்று அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள்.

இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அப்பா புகழ்பெற்ற ‘டன்லப்’ நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர். என்மீது அதிகம் பரிவுகாட்டி நீயொருவன்தான் உன் தந்தையைப் போலத் தமிழ்பேசி, தமிழிலக்கியம் பயின்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவே உன் அப்பாவைப் போல வருவாய்” என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுத்துவார். அவர் சொன்னது உண்மையாகவே மாறிவிட்டது. அவர் இன்று அமெரிக்காவில் தன் குடும்பத்தாருடன் பெருவாழ்வு வாழ்வதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். என்னுடன் 5-ஆம் வகுப்புவரை பயின்ற திரு. இராஜ்மோகன் வீட்டிலுள்ள Weston TV-யில் வரும் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வாரந்தோறும் சென்று வருவேன்.

இந்த பள்ளியின் சிறப்பு இன்றைக்கு எங்கும் சிறந்து இருப்பதால் என்னுடன் பயின்ற திருமதி அமுதா இன்றைக்கு வள்ளியம்மாள் பள்ளி மாணவ-மாணவியர்களையெல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்காக ஒருமுறை விருந்து நிகழ்ச்சி நடத்தி என்னை அழைத்ததையும் நான் நினைவுகூர்கிறேன். அண்மையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவிக்கும்போது, அப்பள்ளியின் முதல்வர் திருமதி பத்மினி அவர்களை நான் பார்த்து, நான் உங்கள் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் எனக்கு நான்கு வயது மூத்தவர்கள் என்று நினைவுப்படுத்தியதை அறிந்து அவர் வியந்தார்.

எப்படி என்னை நினைவிருக்கிறது என்றவுடன், என் வீட்டின் அடுத்த வீட்டில் Indian Fertilizers Limited- நிறுவனத்தில் பணியாற்றிய திரு. சீனிவாசன் அவர்களின் மகள் பிரேமா தங்கள் வகுப்புத்தோழி. அவர்களும், அவர் தம்பி ராம்கியும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் இன்னொரு அக்கா சுதா அக்காலத்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்றதும் நினைவு கூர்ந்து, இன்று பிரேமா மருத்துவராக அமெரிக்காவிலும், ராம்கி, சீனாவிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டேன். ஆக, வள்ளியம்மாள் பள்ளியில்தான் என்னுடைய தொடக்கக்கல்வி உரம் அமையத்தொடங்கியது என்று நான் நினைத்து மகிழ்கிறேன்.

———————————————————

தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களின் பொதுப் பட்டியல் தொ. எண் தமிழ் வடமொழி

1. இலக்கு லக்ஷ்ய 2. உலகம் லோக 3. கலை கலா 4. கோட்டம் கோஷ்ட 5. சாலை சாலா 6. தயிர் ததி 7. திறம் ஸ்திர 8. தூண், தூணம் ஸ்தாணு 9. படி பரதி 10. பதம் பத 11. பலம் பல 12. பாதை பாதா 13. மது, மட்டு மது 14. மயிர் ஸ்மஸ்ரு 15. மாகம் நாகம் 16. மாதம் மாஸம் 17. மீன் மீந 18. வட்டம் விருத்த 19. விதை பீஜ 20. விந்து பிந்து 21. குட்டம் குஷ்ட 22. மடி மிரு 23. சடலம் சரீரம் 24. தாமரை தாமரஸ 25. மானம் அனுமானம், உபமானம், சமானம், பிரமாணம் 26 கமுகு கரமுக 27. விதை வருஷ 28. வித்து விந்து 29. வேட்டி வேஷ்டி 30. சலம் ஜலம் 31. நாழி நாடி 32. ஆகாயம் ஆகாசம் 33. பூதி, பூழ்தி விபூதி 34. புடவி ப்ருத்வீ 35. மதங்கம் மிருதங் 36. பவளம் பிரவாளம் 37. மெது ம்ருது 38. செவியுறு ஸ்ரு தமிழில் கலந்துள்ள ஆங்கிச் சொற்களின் பொதுப் பட்டியல் அங்கிள், அட்வெர்டைசர், அட்டாக், அடிஷனல், அண்டர்கிரவுண்டு, அண்டர்வேர் அப்ளாஸ், அபார்ஷன், அம்ப்பயர், அயர்ன் பாக்ஸ், அர்ஜென்டு, அரேஞ்ச்மென்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், ஆக்டர், ஆக்ஷன், ஆட்டம்பாம், ஆட்டோகிராப், ஆட்டோமொபைல்ஸ், ஆஃப், ஆப்பரேஷன், ஆடியோசென்ட்டர், ஆம்லெட், ஆப்செட்பிரஸ், ஆர்ட்பிரிண்டர்ஸ், ஆல்ரைட், ஆர்ட்ஸ் காலேஜ், ஆஷ்டிரே, ஆன் பண்ணுதல், இங்க்பாட்டில், இன்சூரன்ஸ், இன்ச்டேப், இன்ஜெக்ஷன், இன்ஜினியர், இன்ஸ்டிடியூட், ஈவினிங், ஈஸி, உல்லன், எக்கோ, எக்ஸ்கியூஸ், எக்ஸ்பர்ட், எஞ்சின், எடிட்டர், எம்.எல்.ஏ., எம்பிராய்டரி, எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஜ், எம்போரியம், எம்.பி., எமெர்ஜென்சி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் – ட்ரெயின், எலாஸ்டிக், எலெக்ஷன், எவர்சில்வர், என்.ஜி.ஓ., என்.சி.சி, எனாமல், எஸ்டிமேட், எஸ்டேட், ஏர்கண்டிஷண்டு, ஏர்லைன், ஏரியா, ஏஜென்ட், ஐ.ஏ.எஸ்., ஐகோர்ட், ஐட்டம், ஐடியா, ஐரோடு, ஐ.ஜி, ஐஸ், ஐஸ்கிரீம், ஒய்ப், ஒயர், ஒரிஜினல், ஓ.கே, ஓல்டேஜ், ஓவர் ஆயிலிங், ஓவர்டேக், ஓவர்லுக், க்யூ, க்ராக், க்ராப், க்ராஸ், க்ரீம், கிரீஸ், க்ரைண்டர், க்லாஸ், க்ளிப், க்ளீன், க்ளைமாக்ஸ், கசின், கட்டிங்பிளேயர், கட்பீஸ், கண்டிஷன், கம் (பிசின்), கம்ப்ளெய்ண்ட், கம்பவுண்டர், கம்யூனிஸ்ட், கமெண்ட்டரி, கர்ச்சிப், கரண்ட், கலர், கலெக்டர், கவர்னர், கண்ட்ரோல், கன்ஸ்யூமர், கஸ்டம்ஸ், காட்டன், காம்பவுண்டு, கார், காலண்டர், காலிஃப்ளவர், கான்ட்ராக்டர், கான்வென்ட், காஸ்ட்லி, கிக், கிரிக்கெட், கிலோகிராம், கிலோமீட்டர், கீ, குருடாயில், குவார்ட்டர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், கூலிங்கிளாஸ், கேக், கேன்ட்டின், கேமிரா, கேரம்போர்டு, கேஸ், கைடு, கொக்கோ, சப்ளை, சம்திங், சர்க்கஸ், சர்ட், சர்வேயர், சலூன், சவுண்டு, சாக்லேட், சார், சாலரி, சான்ஸ், சிக்னல். சிகரெட், சிட்பண்ட், சில்க், சிலிண்டர், சீசன், சீல், சீன், சூட்கேஸ், சூப்பர் மார்க்கெட், செக், செட்டில்மெண்டு, செயின், செஸ்ட், செஸ், சைடு பிசினஸ், சோபா, ட்யூப்லைட், ட்ரம், ட்ரா, ட்ராபிக், ட்ராமா, ட்ரிம், ட்ரை, டம்ளர், டவல், டாக்ஸி, டாப், டாய்லெட், டார்ச், டயல், டான்ஸ் , டிப்ஸ், டிபன்பாக்ஸ், டிமாண்ட், டிலே, டெய்லர், டெய்லி, டென்னிஸ், டேபிள், டொனேஷன், டோக்கன், டெளட், திக், நம்பர், நர்ஸ், நர்ஸரி, நர்சிங் ஹோம், நார்மல், நியூஸ், நெக்லஸ், நெய்ல்பாலீஷ், ப்ரெசன்ட், ப்ரஷர் குக்கர், பிரெட், ப்ரேயர், ப்ரோக்கர், ப்ளக், ப்ளாட், ப்ளாக், ப்ளாஸ்டிக், ப்ளேடு, கஃப்ராடு, பட்டன், பர்ஸ், பவுஃபுல், பவுடர், பாண்டு, பாத்ரூம், பாய்லர், பார், பால்பென், பாலிடெக்னிக், பாலித்தீன், பாலிஷ், பிசி, பில், பிஸ்கட், பீட்ரூட், பீன்ஸ், பீஸ், பெயிண்ட், பென்ஷன், பேஷண்ட், பைப், போட்டோ, போலீஸ், போன், மக், மஃப்ளர், மாடல், மிக்சர், மிக்ஸி, மிஸ்டர், மூட், மெடிக்கல் ஷாப், மெயின்ரோடு, மெஸ், மேடம், மைக், மொசேயிக், யூ.கே.ஜி, யூஸ்லெஸ், ரசீது, ரப்பர், ரவுடி, ரவுண்டு, ரஷ், ராஸ்கல், ரிசப்ஷன், ரிசர்வேஷன், ரிப்பேர், ரியல் எஸ்டேட், ரிலீஸ், ரூம், ரெடி, ரெஸ்ட், ரேட், ரேஷன், ரைட், ரைஸ்மில், ரோஸ்மில்க், லக், லாட்ஜ், லாரி, லிட்டர், லிப்ஸ்டிக், லிஃப்ட், லிஸ்ட், லூப், லூஸ், லெட்டர், லேட், லைசென்ஸ், லோன், வயரிங், வாட்ச், வாலிபால், விக், விசா, விசில், விட்டமின், வில்லன், வீக், வெராந்தா, வெரிகுட், வேன், வேஸ்ட், ஜாம், ஜாலி, ஜீன்ஸ், ஜூஸ், ஜெயில், ஷட் அப், ஷட்டர், ஷாம்பு, ஷிப்ட், ஷூ, ஷோரூம், ஸ்கிரீன், ஸ்டவ், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்பீக்கர், ஸ்பீடு, ஸ்லிப்பர்ஸ், ஸ்லோ, ஸ்வெட்டர், ஸுப்பர், ஹலோ, ஹால்டிக்கட், ஜெயில்.
வளரும்…-


முனைவர் ஔவை ந. அருள்,

மொழிபெயர்ப்புத் துறை
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment