Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27

Written by Dr. Avvai N Arul

நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும்

பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா, மகன் கோபி, அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்த காட்சியையும் மாட்சியையும் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன்.

வீட்டின் எதிர்ப்புறத்தில்தான், கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஏ.எல். சீனிவாசனின் இல்லம் இருந்தது. அந்நாளைய மவுண்ட் ரோட்டில், சஃபையர் திரையரங்கின் எதிர்ப்புறத்தில் விண்ணெட்டும் திரைப்படப் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அப்பதாகைகள் தயாரிக்கப்படும் மோகன் கலைக்கூடமும் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்தது. எங்கள் வீட்டின் இடப்புறத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ‘Friend’ இராமசாமியின் இல்லமும், நாடகப் பயிற்சிக் கூடமும் இருந்தது. அடுத்ததாக நடிகர் திலகத்தின் மகள் சாந்தியின் இல்லமும், நடிகர் திலகத்தின் அலுவலகமும் அமைந்திருந்தது. அவ்வண்ணமே புகழ்படைத்த மருத்துவர் தாராபாய் இல்லமும், தலைசிறந்த மனநல மருத்துவர் அருணகிரியின் இல்லமும், கவியரசி திருமதி சௌந்தரா கைலாசத்தின் தம்பி வழக்கறிஞர் சேதுரத்தினம் இல்லமும் அமைந்திருந்தது.

எங்கள் வீட்டின் பின்புறத்தில், பழம்பெரும் நடிகர் திரு. சகஸ்ரநாமம், பழம்பெரும் நடிகை திருமதி எம்.என்.இராஜம் இல்லங்களும் இருந்தன. எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடான மருத்துவர் ஸ்ரீதர் வீட்டின் நெல்லிக்காய் மரம் எங்கள் சமையலறையிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபடியால், கொத்துக்கொத்தாய் எங்களால் எளிதாகப் பறிக்க முடிந்தது. சில கல்தூரம் நடந்தால், பெரும்புகழ் படைத்த ஔவை டி.கே.எஸ். இல்லமும், அவர் வீட்டிற்கு எதிரில் சிலம்பொலி செல்லப்பனார் இல்லமும் இருந்தது.

அதற்கருகில், இசையாசிரியைகள் முத்து மீனாட்சி, லலிதா இல்லங்களும், மருத்துவர் சகுந்தலா இல்லமும் இருந்தது. வீட்டிலிருந்து இரண்டு கல் தூரம் நடந்தால் முதன்மைச் சாலை வரும். அச்சாலையில் ஈஸ்வரி தனியார் நூலகம் எங்கள் பெற்றோர்களுக்கு அறிவுக் கோயிலாக மிளிர்ந்தது. அதன் எதிரில் காஷ்மீர் சிற்றங்காடி, Snow White சலவையகம், Bison பெருங்கடை, சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஜனார்தனத்தின் தாயார் இல்லம் போன்றவை அமைந்திருக்கும். அங்கிருந்த நல்வழி மண்டபத்தில் எந்தையாரின் பல கூட்டங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். கோபாலபுர கனரா வங்கிக்கு எதிரில் உள்ள பழம்பெரும் கட்டடத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி.யும், யு.கே.ஜியும் பயின்றேன். பாடத்தைவிட அதிகமாக என் வகுப்புத் தோழி ஸ்ரீமதியைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுவேன் என்று என்னுடைய அம்மா சிரித்துக் கொண்டே சொல்லுவார்.

ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளை இல்லத்திற்கு அருகில் உள்ள நேஷனல் பள்ளியில் படித்தபொழுது, ஆசிரியை என்னை அடித்ததனால் சினமுற்று பள்ளி முதல்வரிடம், “குழந்தைகளை அடிக்கக் கூடாது. மீறி அடித்தால், மேதகு ஆளுநரிடம் புகார் தெரிவிப்பேன்”, என்று எழுபதுகளிலேயே பேசுகிற மனத்திறம் என் அம்மாவிடம் மட்டுமே இருந்தது என்று நான் பெருமையாகச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை அண்ணாநகரில் உள்ள புகழ்பெற்ற வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் பயின்றேன்.

என் அப்பாவின் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் இப்பள்ளியின் நிறுவனராவார். தொடக்கத்தில், அவர் வாழ்ந்த செனாய் நகர் இல்லத்தில் பயிலத் தொடங்கி சிந்தாமணி அங்காடிக்கு எதிரில் வானுயர்ந்த பள்ளியில் மாறிவந்து வகுப்புகள் தொடர்ந்தன. எங்கள் தலைமையாசிரியையாகத் திகழ்ந்த திருமதி செண்பகம், கனிவும், கண்டிப்புக்கும் உரிமையானவர். ஆசிரியப் பெருந்தகைகளான திருமதி இராஜலட்சுமி, திருமதி தங்கம், திருமதி லில்லி, திருமதி சாவித்ரி, திருமதி நவநீதம், திருமதி உமா, திருமதி தங்கமணி, திருமதி தில்லிகுமாரி, திருமதி சகுந்தலா, திருமதி செந்தாமரை ஆகிய பதின்மரும் நன்முறையில் வகுப்பெடுத்து எங்களை நல்வழிப் படுத்தினார்கள்.

நாள்தோறும் பள்ளி தொடங்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆங்கிலத்தில் ‘All things bright and beautiful’ என்ற பாடலும் பாடி வகுப்பகள் தொடங்கப்பெறும். அவ்வேளையில், வாரம் ஒருமுறை அந்நாளைய செய்திகளை ஆங்கிலத்தில் அவையில் பேசுமாறு அழைக்கப்படுவேன். வாரம் ஒருமுறை தையற்வகுப்பு நடைபெறும்போது, ஒருமுறைகூட என்னால் ஒரு கைக்குட்டை கூட செய்யமுடியாமல் தத்தளித்தேன்.


என் வகுப்பில் பயின்றோரான, ஸ்ரீராம், அரவிந்த், வெங்கடேஷ் பாபா, அமுதா இன்றும் தொடர்பிலுள்ளனர். உடன்பயின்ற மற்றவர்கள் சாரதா, இராதா, வித்யபிரியா, அனுசூயா, கீதா, தாமோதரன், சிவக்குமார், கல்பனா, சிவகாமி, வள்ளி, சொர்ணலதா, மாலா, பிரபா, மோகன்ராஜ், பீயூசு, பத்ரி நாராயணன், எம்.பி. லதா, பி.லதா, தீபா, மம்தா, மீரா, சுஜாதா, மதுசூதன், இராஜ்மோகன், தேன்மொழி, கணேஷ், கலையரசன், இராம்பிரபு, பிரமோது, தனசேகர், கணேஷ் நிரஞ்சன், என்.எஸ்.பாலாஜி, பாலாஜி, மாதவி, மகாலட்சுமி, அருணா, நஜிமுனிஷா ஆகிய 41 பேருடன் பயின்றேன்.

மூன்றாம் வகுப்பு பயிலும்போது, பள்ளியின் மாறுவேடப் போட்டியில் குறத்தியாகவே வேடமணிந்து நடித்தேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் உண்மையிலேயே பெண்ணாகவே நீ மாறிவிட்டாய் என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய வருத்தம் நான், “ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி”, என்று மூன்றுமுறை மட்டும் சொல்லி இறங்கி விட்டேன்.

நான்காம் வகுப்பின் மாறுவேடப் போட்டியில், நான் மருத்துவராகவும், என் தம்பி பரதன் நோயராகவும் நடித்து முதல் பரிசு பெற்று கூடுதலாக பணிநிரம்ப செய்யும் நிறுவனரையும், தலைமையாசிரியையும் நான் பரிசோதிக்க விரும்புகிறேன் என்று நான் அறிவித்தவுடன் அரங்கமே அதிர்ந்து சிரித்தது. ஐந்தாம் வகுப்பு மாறுவேடப் போட்டியில், நான் ஆரூடக் காரனாக புனைந்து நடித்து சில காலங்களில் இப்பள்ளி ஒரு பெரும் கல்லூரியாக மாறும் என்று சொல்லி வாழ்த்தினேன். அந்த வாழ்த்தொலிக்குப் பெரும் கரவொலி எழுந்தது. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி என்று வான்முட்ட இன்று பட்டொளி வீசிக் கொண்டிருப்பது பெருமையாகும்.
அன்றாட சொற்கள்
ஆங்கில மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அக்கூற்று நாம் சிந்திக்கத் தக்கதாகும்.
“The words with which we have to do, taking the most extensive view of the field, are in fact organic remains deposited under the various currents of external influence that have washed the shores of India during twenty centuries or more…


The trade and conquests of the Arabs both brought foreign words to India and picked up and carried westward, inform more or less corrupted, words of Indian Origin, some of which have in one way or other become part of the heritage of all succeeding foreigners in the East…

The conquests and long occupation of the Portuguese, who by the year 1540 had established themselves in all the chief ports of India and the East, have as might have been expected, bequeathed a large number of expressions to the European nations who have followed and in great part superseded them.”
தொ. எண். நாடுகளின் பெயர் இயற்பெயர் திசைச்சொல்
1 தென்பாண்டிநாடு எருமை, ஆ சோறு பெற்றம் சொன்றி
2 குட்டநாடு தாய், ஞாய் தள்ளை, ஞெள்ளை
3 குடநாடு தந்தை அச்சன்
4 கற்காநாடு வஞ்சர் கையர்
5 வேணாடு கோட்டம் கிழார்
6 பூழிநாடு நாய், சிறுகுளம் ஞமலி, பாழி
7 பன்றிநாடு செறு செய்
8 அருவாநாடு செறு, சிறுகுளம் செய், கேணி
9 அருவாவட தலைநாடு குறுணி, புளி குட்டை, எகினம்
10 சீதநாடு ஏடா,தோழன் தோழி , தம்மாயி எலுவன், இகுளை தந்துவை
11 மலைநாடு தோழி இகுனை
12 புனல்நாடு தாய் ஆய்
13 குடகம் பிள்ளை குடா
14 சிங்களம் ஐயோ அந்தோ
15 கருநடம் கைப்பற்ற விளித்தல் பனிக்க சிக்க கரைதல் குளிர
16 வடுகநாடு சொல் செப்பு
17 தெலுங்கநாடு பசு, எருது பாண்டில்
18 துளு மாமரம் கொக்கு
செய்யுள் வழக்குச் சொற்கள்
உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம்.

அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரிசொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல்.

இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார்.
வடசொல்
ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல்செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர்.


செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப் படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றி விடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ்வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,

என்றும்,
சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.
என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், “வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரிய வெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம்.

எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத் தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.


Report of the special Committee on Education 1943
“The problem of teaching Tamil also is primarily a problem of providing books. Those at present used in the schools are obtained from South India. Written to suit Indian students, they are not altogether suitable for Ceylon Students. Though the literary language is the same in India and in Ceylon, the Colloquial languages of the two countries differ widely.

Owing to the insularity of the country, the Tamil language of Ceylon has remained comparatively free from the influences of other languages, and struck out on a line different from the Tamil language of India. Through the influence of Indo Aryan language and of Arabic and Persian, the spoken Tamil of India contains many non-Tamil words and phrases which are unintelligible in Ceylon.

There is too a tendency in India to borrow Sanskrit words and phrases without changing them into the Tamil phonetic system. Moreover, the Indian text books use Sanskrit Characters for reproducing foreign words with non-Tamil sounds, a, practice which has never obtained in Ceylon.

Ceylon Tamil is to be maintained in its purity, therefore, the selection of Indian books to be used in our schools must be carefully made. The considerable differences between written and spoken Tamil require that considerable attention be paid to grammar.”
வளரும்…

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment