Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26

Written by Dr. Avvai N Arul

செய்யுளில் வரும் இயற்சொற்கள்

இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’ மு.கங்காதரன், ‘பண்புச் செம்மல்’ ப. அன்பு, ‘பகுத்தறிவுச் செம்மல்’ இரா. இளவரசு, ‘அருங்கலைத் திலகம்’ மாணிக்கம், ‘கலைச்செம்மல்’ கு. தாமோதரன், ‘நற்றமிழ்ப் பேராசிரியர்’ இரா.கு.நாகு, ‘பேராசிரிய செம்மல்’ தி.வ. மெய்கண்டார் (இளந்தமிழர் இதழாசிரியர்), ‘தென்குமரி’ P. யோகீசுவரன் பிள்ளை, ‘ஒப்புரவாளர்’ பெ. ஊரப்பன், ‘ஆய்வுச் செம்மல்’ ம.செ. இரவிசிங், ‘அருட்பா பாவலர்’ சுப. பாலச்சந்திரன்) நான் பார்த்தபோதே தமிழ்த்தென்றலும், தடங்கடலில் புரண்டுவரும் வெற்றி அலைக்காற்றும் என்னை மகிழ்வித்தன.
எனக்குப் பசுமரத்தாணி போன்ற ஒரு நினைவு. எனக்கு முதல் வகுப்பாக மாபெரும் கூடத்தில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில், ‘பாடும் நிலாவே, தேன் கவிதை’ என்ற திரையிசை வரிகளை அறிமுகம் செய்த கவிவேந்தர் மேத்தா, ‘நீ எதற்குத் தமிழ் படிக்க வந்தாய்?’ என்று அவர் வினவியபோது, என் தந்தையார் இட்ட பணியை தொட்ட பணியைத் தொடர வந்துள்ளேன் என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்தினேன்.
நானும், என்னுடைய தோழன் ஆண்டவரும் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஆண்டவனும் அருளும், இந்த வகுப்பறையில் எப்போதும் நிறைந்துள்ளனர்’ என்று பேராசிரியர் மறைமலை அடிக்கடி கூறுவார்.
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. இராஜுவின் அரும்புதல்வர், நிழக்கிழாராக மிளிரும் திரு.இரவிசங்கர், திண்டிவனத்தில் பெருவணிகராகத் திகழும் முகமது இப்ராஹிம், புனேயில் உள்ள இராணுவ நெஞ்சக நோய் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் Lieutenant Colonel ஆகத் திகழும் கு. பர்ணபாஸ், இன்றைக்குத் தமிழ்த்துறையில் சீரும் சிறப்புமாக விளங்கும் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் முத்துராமலிங்க ஆண்டவர், புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழும் அப்துல் காதர், விழுப்புரத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையின் இணைப் பேராசிரியராகத் திகழும் முனைவர் ச. மகாவிஷ்ணு, திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகத் திகழும் செங்குட்டுவன், அரிய தமிழிலக்கிய நூல்களை வெளியிட்ட ‘பார்க்கர்’ பதிப்பகத்தின் உரிமையாளராக இருந்து, இப்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கருணாநிதி, இலங்கையில் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்று கவிஞராய்த் திகழும் பகீரதன், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பு.பிராங்க்ளின், சீனிவாசன் ஆகிய பதினோறு வகுப்புத் தோழர்களுடன் படித்து, அளவளாவி மகிழ்ந்த நாள்களை எண்ணிப்பார்த்துப் பெருமிதம் அடைகிறேன்.
மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே, அந்நாளைய சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், பட்டிமன்றத்தில் பங்குபெறும் ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் இதழின் பால்யு அவர்கள் என்னைப் பேட்டியெடுத்து வெளியிட்ட பெருமிதமும் அப்போதே என் நண்பர்கள் சொல்லிப் பாராட்டினார்கள்.
செல்லும் திசையெல்லாம், இன்றைக்கு நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் ஒரே வரி, ‘East or west, Presidency is the Best’ என்றே சொல்லிக் காட்டுவோம். எழிலார்ந்த கட்டடமும், பசுமையான சோலைகளும், வசந்த மண்டபத்தைப் போன்ற வகுப்பறைகளும், எங்கும் காணக் கிடைக்காத அறிவுக் கோயிலான நூலகமும், தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவுருவச் சிலையும், சலவைக்கற் சிலைகளும், மாநிலக் கல்லூரியின் மாட்சிமையைப் புலப்படுத்தும் நினைவகங்களாகும். இன்றைக்கு அரசு பெரும் பொறுப்புகளில் இருக்கும் தலைமை அதிகாரிகளும், பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களும் மாநிலக் கல்லூரியின் மாணவர்கள் என்று அவர்கள் எடுத்துரைப்பது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக உள்ளது.
இயற்சொற்கள்
இன்றளவும் வழங்கும் செய்யுளை மேனோக்காகக் காண்பவரும் அதன் இயற் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்.
உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே.
தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே.
தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ!
தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும்,
செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.
தொண்ணூற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை.
ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே.
எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே.துணியும் அணியுந்தமிழே, தொழும் கடவுளும் தமிழ் மயமே, வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ்மயமாகவே இருக்கின்றது.
தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு!
இது தொடர்பாகச் செந்தமிழ் வழக்கு என்னும் நூலில் புலவர் இளமுருகனார், “உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதிணைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும்”. பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர்.

அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “சொல்லெனப்படுஞ் சோதி தோன்றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்? ஆதிபகவனை அறிவதும் இல்லை! ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை! அவற்றை வலியுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை! தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை! பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை! அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக” என்றார்.
சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும். இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் – இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத்தன் பொருளை விளக்குந்தன்மையுடையது.

தமிழ் மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து. அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில் மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன.
உலகவழக்குச் சொற்களை புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி, மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக் கல்லாதாருங்கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கணநெறிக்கு ஏற்ப வழங்குவரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர்.

உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான், கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று, ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று, சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.
இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி. பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல்-பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு. பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின்,
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்டல் அரிது
” (குறள் – 227)
தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்ணும் இயல்புடைய வனைப்பசி என்னும் தீயநோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ! இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத்திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ் சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது, உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக்கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஒல்காப்புகழ் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார்.

இவ்வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.
வளரும்…

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment