Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-24

பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள்

தமிழில் கலந்த வரலாறு என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக இப்பொருண்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும்.

தினச்செய்தி இதழில் நான் தொடர்ந்து வரைந்து வரும் தொடர் கட்டுரைகளையும், எந்தையார் எழுதிவரும் தொடர் கட்டுரைகளையும் மிக நுட்பமாக எண்ணுடனும், தேதியுடனும் ஒரே சுட்டியில் காத்து வரும் என் தோழி அமெரிக்காவைச் சார்ந்த ஜோதி எஸ். தேமொழியை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தேமொழி ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராக (Program Analyst) பணியாற்றியவர்.

தன்னார்வலராக முன்னர் ‘வல்லமை’ இதழின் துணை ஆசிரியராகவும், தற்பொழுது ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ பன்னாட்டு அமைப்பின் “மின்தமிழ்மேடை” காலாண்டு இதழின் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டு வருவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் நெறியாளராகவும் செயற்படுகிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக திண்ணை, வல்லமை, கீற்று, சிறகு போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளும்; ஆய்விதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருவதும், தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்த பழந்தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரையையோ, தொகுப்பையோ அவர்களின் ஒளிப்படத்தையோ, நான் வினவியவுடன் உடனுக்குடன் மின்னஞ்சலில் அனுப்புகிற தகைமையும், அவருடைய தலைமைக் குணத்திற்குப் புகழ்ச் சிறகுகளாகும். பாரசீக மொழி தில்லி சுல்தான்கள் காலம் முதல், முகலாயர்கள் காலம் வரை நாடெங்கும் பாரசீக மொழியே ஆட்சி மொழியாக இருந்தது.

நீதி நிருவாகத்திலும், ஆட்சியிலும் பாரசீக மொழியே இருந்தது. அரசுப் பணியில் இருந்த இந்துக்கள், இந்தி மொழியைப் பயன்படுத்தினர். இந்தியாவிலுள்ள பல அரசுகள் மாமன்னர் அக்பரின் ஆணையினால் அரசின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் பாரசீக மொழியிலேயே கணக்குகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆங்கிலம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து நிலையாக அமரும்வரை பாரசீக மொழிச் சொற்கள்தான் அரசு நிருவாகத்தில் கோலோச்சியது.

பாரசீகம் தமிழில் கலந்த பல பாரசீகச்சொற்கள் இன்றும் வழக்கிலுள்ளன. 1) அஜ்மாஷ் ஆய்வு செய்தல், பயிரடைப்பு

2) கம்மி – குறைவு

3) குமாஸ்தா -எழுத்தர்

4) கொத்தவால் – காவல்முறை அலுவலர் ஆணையாளர்

5) சராசரி – நிரல்

6) சிரஸ்தார் – அலுவலக மேலாளர்

7) தர்காஸ்து -தரிசு நிலம்

8)பந்தோபஸ்து – காப்புச் செய்தல்

9) பினாமி -இரவல் பெயர்

10) ரசீது – பற்றுச்சீட்டு

11) ஜமீன் – நிலம்

12) டபேதார் -அலுவலக உதவியாளர்

13) டவாலி -கச்சை

14) தஸ்தாவேஜி – ஆவணம்

15) பிராது -குற்ற முறையீடு, குறையீடு

16) காபந்து -அக்கறையுடன் கூடிய பாதுகாப்பு

17) சிப்பந்தி -பணியாளர்

18) யாதஸ்து -எழுத்தாலான குறிப்பாணை

19) ரோந்து -சுற்றிவரல்

20) காகிதம் -தாள்

21) சிப்பாய் -படைவீரன்

22) பஜார் – கடைத்தெரு

23) துப்பாக்கி – சுடும் கருவி

24) பாரா – காவல்

25) சந்தா – தவணைப்பணம்

26) நங்கூரம் -ஆதாரம், நிலைக்கச் செய்

27) அந்தஸ்து – நிலை பொருள்

28) சிபாரிசு -பரிந்துரை

29) சுமார் – பரவாயில்லை

30) தயார் – ஆயத்தம்

31) தராசு – துலாக்கோல்

32) ஜல்தி – விரைவு

33) சடுதி – விரைவு

34) செலான் -செலுத்துச்சீட்டு

35) பட்டா – நில உரிமை ஆவணம்

36) மிட்டா -நிலக்கிழார்

37) தண்டோரா – ஒலி எழுப்பி அறிவித்தல்

38) தமுக்கு -ஒலி எழுப்பி அறிவித்தல்

39) திவால் -முறிவு

40) பஞ்சாயத்து – ஊராட்சி

41) புகார் – முறையீடு

42) பட்டுவாடா – வழங்கல், ஊதியம் வழங்கல்

43) பேட்டி -நேர்காணல்

44) உண்டியல் – சிறு பணப்பெட்டி

45) வரா – குறிவு

46) லத்தி – தடி

47) வசூல் – தண்டல்

48) இஸ்திரி -பெட்டி போடல்

49) செலாவணி – நாணயம்

50) பட்டியல் -அட்டவணை

51) பாலம் -இணைப்பு மேடை

52) ஜோடனை – அலங்கரித்தல்

53) வாரித -மரபுரிமை

54) வாய்தா -தள்ளிப்போய்

55) ஒப்தி – கைப்பற்றல்

56) ஒவாமு – மறுமொழி

57) ஜமாபந்தி – வருவாய்த் தீர்வாயம்

58) ஜாமீன் – பிணையம்

59) ஜாஸ்தி – அதிகம்

60) மகஜர் – மனு, விண்ணப்பம்

61) அசல் – முதல்

62) அத்து – எல்லை

63) அமுல் – நடைமுறைப்படுத்தல்

64) அநாமத்து – ஒப்படைத்த பொருள்

65) அயன் -அதைரியம்

66) ஆசான் -ஆசிரியன்

67) ஆப்காரி -மது உற்பத்தி விற்பனை வரி

68) ஆஜர்பட்டி – வருகைப்பட்டி

69) ஆபத்து -இடர், பேரிடர்

70) இனாம்தார் – மானிய நிலத்துக்குரியவர்

71) இருகால் -செலுத்துகை

72) உசூர் – மாவட்டம்

73) கலால் -சாராயம்

74) கஜானா -கருவூலம்

75) காயம் -நிலையான

76) காஜி – நீதிபதி

77) கிஸ்தி -தீர்வை

78) குலாம் -அடிமை

79) கைது – சிறையீடு

80) சரகம் – வட்டாரம்

81) சரத்து -நிபந்தனை

82) சராப்பு -காசுக்கடைக் கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர்

83) ஜாப்தா – பட்டியல்

84) ஜாரி – சேர்ப்பித்தல்

85) ஜில்லா – மாவட்டம்

86) தனக்கை – கணக்குச் சரிபார்த்தல்

87) தர்ஜமா – மொழி பெயர்த்தல்

88) தாக்கீது – குறிப்பாணை

89) தபா – காலம்

90) திவான் – பிரதம அமைச்சர்

91) தோபா – கப்பம்

92) நமூனா – படிவம்

93) நகல் – படி

94) பசலி – வருவாய்த்துறை ஆண்டு வேளாண்மை ஆண்டு

95) மராமத்து – பழுதுபார்த்தல்

96) மஹால் – மாளிகை

97) ருஜி – மெய்ப்பித்தல்

98) மராத – நிலக்கிழார்

99) மகசூல் – விளைச்சல்

100) முகலம் – தந்தல்

101) முச்சலிகா – உடன்படிக்கை

102) ரயத்து – குடியானவன்

103) ரயத்துவாரி – நிலத்தீர்வை

104) ரொக்கம் – பணம்

105) லாயக்கு – தகுதி

106) அம்பாரம் – குவியல்

107) அலாதி – தனி

108) ஆப்காரி – மதுவரி

109) கரம் – சூடு, காரம்

110) சாவி – பதர்

111) சிப்பந்தி – பணியாள்

112) ஜமீன்தார் -நிலக்கிழார்

113) பிராது -குறையீடு

114) பூரா – முழுவதும்

115) மனு – விண்ணப்பம்

116) மனுதாரர் – விண்ணப்பதாரர்

117) ராஜனாமா – பணிவிலகல்

118) சிபாரிசு – பரிந்துரை பிற மொழிகள் தமிழகமும் இலங்கையும் கொண்டிருந்த தொடக்கக் கால உறவால் சிங்களச் சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளன.

முருங்கை, ஈழம் என்ற இலங்கைச் சொற்கள் பழைய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளன. தக்கோலி, அருமணவன், கிடாரவன் முதலிய தாய்லாந்துச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன. கிடங்கு, கிட்டங்கி என இன்றும் தமிழில் வழங்கப்படும் சொற்கள் மலாய்ச் சொல்லான ‘கடாங்’ என்பதிலிருந்து உருப்பெற்றுத் தமிழில் கலந்தவை. இம்மொழியிலிருந்து ‘சாம்பிராணி’ என்னும் சொல் தமிழில் வழங்கப்படுகிறது.

‘சொங்கு’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் ஜாவானியச் சொல்லிலிருந்து வந்ததாகும். படகு வகையைச் சேர்ந்த ‘சம்பான்’ என்ற சொல்லும் பெரிய மண்கலத்தைக் குறிக்கும். காங்கு என்ற சொல்லும், பீங்கான் என்ற சொல்லும் சீன மொழியிலிருந்து வந்தவையாகும். ‘ரோஜா’ என்னும் மலர்ச்சொல் இலத்தீன் மொழிக்குரியது எனக் கூறுகிறது அயற்சொல் அகராதி. ‘கொய்யா’ என்னும் தமிழ்ச்சொல் பிரேசில் நாட்டுக்குரியது. ‘கக்கூஸ்’, ‘துட்டு’ என்னும் சொற்கள் டச்சு மொழியில் இருந்து வந்து தமிழிற் கலந்தவை. கடுதாசி, கிராதி, கொரடா, கோப்பை, சங்கடம், சப்பாத்து, செருப்பு சாவி, திராவி, துவாலை, பாதிரி, மேசை, சன்னல் என்பவை தமிழில் வழங்கப்படும் போர்த்துகீசியச் சொற்களாகும்.

‘மிச்சம்’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் பாலி மொழியைச் சார்ந்தது. கபே, ரோந்து, லாந்தர் என்று தமிழில் வழங்கப்படும் சொற்கள் பிரெஞ்சு மொழியைச் சார்ந்தவை. ‘ரிக்ஷா’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் சப்பானிய மொழியைச் சார்ந்தது. மேற்குறித்த சிங்களம், மலாய், தாய், ஜாவானிய, சீன, லத்தீன், பிரேசில், டச்சு, போர்த்துகீயம், பாலி, பிரெஞ்சு போன்ற பிறமொழிக் கலப்புச் சொற்ககளிலிருந்து பெறப்படும் முடிவுகளாவன:-

1. ஆட்சிக் செல்வாக்கும், வாணிகத் தொடர்பும் மிகுதியாகப் பெற்றிருந்த வடமொழி, இந்தி, உருது போன்ற மொழிகள் தமிழில் மிகுதியாகக் கலந்துள்ளன.

2. மொழிக் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச்சொற்கள் மக்களின் கல்வி, நாகரிகம், இவற்றிற்கேற்ப வும், நகரம் கிராமம் என்ற பாகுபாட்டிற்கேற்பவும் வழக்கில் உள்ளவை களாக மாற்றம் பெற்றுள்ளன.

3. ஆட்சிச் செல்வாக்கு, வாணிகத் தொடர்பு, மக்களின் நம்பிக்கைகள் இவற்றைக் கால்கோள்களாகக் கொண்டு தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்கள் நீண்டகாலம் அன்றாட வழக்கில் இருந்து வருகின்றன.

4. நாளடைவில் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் இன்று வழக்கிழந்து மறைந்துள்ளன.

எடுத்துக்காட்டு – தும்மா (பிரெஞ்சு) – பாடை, திவரம் (மராத்தி) – நாடு. அபாண்டம், கச்சாயம், காகிதம், காசாண்டி, காமாண்டி, கில்லாடி, குண்டான், கெண்டி, கேசரி, மற்றும் கோகம்பரி போன்ற சொற்களும் தமிழில் கலந்த மராத்தி மொழிச் சொற்களேயாகும்.

மராத்திய மொழியைப் பற்றி இன்னொரு சிறப்புக்கூறு என்னவென்றால், அருட்தந்தை தாமஸ் ஸ்டீஃபன் 1615-ஆம் ஆண்டு, கொங்கணி மற்றும் போர்த்துக்கீசிய மொழிச் சொற்களைக் கொண்டு ‘கிறித்து புராணத்தை’ மராத்திய வரிவடிவத்தில் இயற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. கொங்கணி மொழிக்கு எழுத்து வரிவடிவம் என்று ஒன்றுமில்லாத சூழலில், மராத்தியம், கன்னடம், மலையாளம், தேவநாகரி மற்றும் உரோம வரிவடிவங்களை ஏற்றுக் கொள்கிறது.

பலர் தங்கள் தாய்மொழியின் புகழை எடுத்துரைப்பதை பல நிகழ்வுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். ஆங்கில மேனாட்டறிஞர்கள் புகழ்ந்துரைப்பதையும் கண்டு நாம் பெருமிதம் அடைந்திருக்கிறோம். ஆனால், மராத்திய மொழியைப் பற்றி அருட்தந்தை தாமஸ் ஸ்டீபன் 1580-ஆம் ஆண்டுகளில், சொன்ன வரிகள் பொன்வரிகளாக மிளிர்கின்றன.

“கற்களில் ஒளிரும் இரத்தினமாக இரத்தினங்களில் மின்னும் மாணிக்கமாக மலர்களில் மணம் கமழும் மல்லிகையாக நறுமணங்களில் மணக்கும் கஸ்தூரியாக பறவைகளில் ஆடும் கலாப மயிலாக விண்மீன்கள் மத்தியில் கண்ணைக் கவரும் நட்சத்திர ஒளிவெள்ளமாக மொழிக்குடும்பங்கள் மத்தியில் சிங்க நிகர் மராத்திய மொழி தகத்தகாயமாக ஒளிர்கிறது.”

Excellence of the Marati tongue Like a jewel among pebbles like a sapphire among jewels Like the jasmine among blossoms the musk among perfumes the peacock among birds the zodiac among the stars is Marati among languages.

5. தமிழில் உருவாகும் புதிய சொல்லாக்கங்களைப் பிறமொழிக் கலப்பால் வந்து வழங்கப்படும் சொற்களின் வழக்கை நீக்குகிறது. வளரும்… –

முனைவர் ஔவை ந. அருள்,

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment