Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25

Written by Dr. Avvai N Arul

இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில்
பங்குகொண்ட வரலாறு


பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் என் தம்பி பரதனிடம், “உன் அண்ணன் அருளுக்கு சுத்தமாகக் கணக்கு வரவில்லை. நீயாவது உன் பெற்றோரிடம் சொல்லி இக்குறையைக் களைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தம்பி என்னிடம் சிரித்துக் கொண்டு, “நான் சொல்லியா தெரியப் போவது. பெற்றோர்கள் அறியாததா இது!” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
துணிந்து நானும் வாராத கணக்குப் பாடத்தை உடும்புப் பிடிபோல் பிடித்துக் கொண்டு ஆறாவது முதல் பத்தாவது வகுப்பு வரை, சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்தவ ஆடவர் மேனிலைப் பள்ளியில் பயின்றேன். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பையும் மேலும் துணிந்து கணக்கை முதன்மைப் பாடமாக எடுத்துக் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை (M3) வகுப்பில் பயின்றேன். Algebra, Trigonometry, Calculus, Integral Calculus போன்ற கணக்குப் பாடச் சுழலில் திக்குமுக்காடி எழ முடியாமல் தத்தளித்தேன். இன்றுவரை பல இரவுகளில் இக்கணக்குப் பாடங்கள் என் கனவில் வந்து உறுத்தும்.
1985-ஆம் ஆண்டு, சனவரி, பிப்ரவரி திங்களில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், என்னைப் பல வழிகளில், கணக்கைப் புரிய வைக்க வேண்டுமென்று அரும்பாடு பட்ட என் பள்ளியின் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தரராசன் என்னிடம், தனி நேர்வாகக் கேட்ட ஒரு வினாவிற்குப் பதில் அன்றைக்குத் தெரியவில்லை. ஆனால், முப்பதாண்டுகள் கழித்து, மீண்டும் மீண்டும் என்னை அக்கேள்வி நினைக்கத் தூண்டியது என்றால், என் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தர ராசனின் சிறப்பை என்னென்று சொல்வேன்! என்னுடைய இலக்கியப் படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் திரு. சௌந்தர ராசன்தான் மூல விதையாவார். என்றும் என் பணிவான வணக்கம் அவருக்கு உரித்தாகுக. அவ்வினா என்னவென்றால், “அருள்! பொதுத் தேர்வு முடிந்த பிறகு நீ என்ன படிக்கப் போகிறாய்? நீ என்ன இளங்கலை தமிழிலக்கியம் சேரப் போகிறாயா?” என்பதுதான்.
பொதுத்தேர்வு முடிவுகள் வந்து வெற்றிபெற்று பச்சையப்பன் கல்லூரியில் இளம் அறிவியல் வேதியியல் பயில அனுமதிக் கடிதமும், மயிலையிலுள்ள விவேகானந்தர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திற்கு அனுமதிக் கடிதமும், தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் புலத்திற்கு வைப்புத் தொகையுடன் சிறப்புக் கட்டணம் கட்ட வேண்டிய கடித அனுமதியும் கிடைத்தது. கணிதம் மற்றும் அறிவியல் சுழலில் அகப்பட வேண்டாம் என்றெண்ணி, பொறியியல் கல்லூரியையும், பச்சையப்பன் கல்லூரியையும் நானாகவே தவிர்த்து விட்டேன்.
என் தாயார், மருத்துவமாமணி தாரா நடராசனும், என் அக்கா திருமதி சுதா நலங்கிள்ளியும், பலமுறை வேண்டிவேண்டி என்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலம் பயிலுமாறு நெறிப்படுத்தினார்கள். உயர்கல்வி, நல்லொழுக்கம், அறச்சிந்தனை, ஈகையுணர்வு விவேகானந்தர் கல்லூரியில் கிடைக்கும் என்று உறுதி கூறினார்கள். ஆயிரம் முறை கேட்டுக் கேட்டும் இளங்கன்று பயமறியாது என்ற துடுக்கு நெஞ்சத்துடன் யாவரும் திடுக்கிடும் வண்ணம், அந்த அனுமதிக் கடிதத்தையும் புறந்தள்ளினேன்.
எங்கும் அனுமதி கிடைக்காமல், சூலைத் திங்களும் சென்று கொண்டிருக்கிறது. அச்சூழலில் எந்தையாரின் ஆணைக்கிணங்க, அவரின் நேர்முக உதவியாளர் முனைவர் கண்ணன் (பதிப்பாசிரியர், சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்) மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் விண்ணப்பம் வாங்கி, நிறைவு செய்து ஒரே நாளில் என்னை அக்கல்லூரியில் சேர்த்து விட்டார்.
மிகவியப்பான செய்தியென்னவென்றால், நான் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, செட்டிநாட்டரசர் வள்ளல் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் எந்தையார் மீது தனிப்பரிவு கொண்டு, எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு சேர்வதற்கு அனுமதிக் கடிதம் வழங்கினார். அதையும் ஏற்காமல் தமிழிலக்கியத்தையே பயின்றேன்.
*
இந்துஸ்தானி மொழிச்சொற்கள் பங்குகொண்ட வரலாறு
1) ஆஸாமி – ஆள்
2) கித்தான் – சாக்கு
3) ஜதை – இணை
4) ஜாகீர் – மானியம்
5) ஜாகீர்தார் – ஊழிய மானியம் பெற்றவர்
6) ஜிம்கானா – விளையாட்டிடம்
7) ஜோடி – இணை
டப்பா, டப்பி – கொள்கலன்
9) டேரா – கூடாரம்
10) டோபிகானா – வெளுப்பகம்
11) தம் – மூச்சு
12) நாசூக் – நாகரிகமாக
13) நாடா – பட்டை
14) பக்கா – முற்றிலுமாக
15) பரவாநகி – சுமார், பரவாயில்லை
16) முஸாபரி பங்களா – பயணர் விடுதி
17) மேஸ்திரி – மேற்பார்வையாளர்
18) ரசீது – பற்றுச்சீட்டு
19) ரொக்கம் – மொத்தப்பணம்
20) லஸ்கர் – உழையர், சிற்றேவலர்
21) லேவாதேவி – கடன் வரவு செலவு
தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் தங்களது ஆட்சியின்போது பயன்படுத்திய ஆட்சிச் சொற்களும் நூற்றுக்கணக்கில் அடங்காதன. சான்றாக,
1) ஹாஜர் – வருகை
2) ஹாஜர்பட்டி – வருகைப் பதிவேடு
3) இன்குலாப் – புரட்சி
4) கமால் – ஊர்ப்பணியாளர்
5) ராஜிநாமா – பதவி விலகல், எழுத்தாலான ஒத்திசைவு
6) இலாகா – துறை
7) இஜாஸ்து – அனுமதி, விடைபெறல்
இஸ்தியார் – அறிக்கை, அரசுப்பொது அறிவிப்பு விளம்பரம்
9) ஹுக்கும் – அனுமதி ஆணை
10) கச்சேரி – அரசு அலுவலகம் (வருவாய்த்துறை, நீதித்துறை அலுவலகம்)
11) கபூலி – ஏற்பு, இசைவு, ஒப்புதல் வாக்குமூலம்
12) கபூலியாட்டு – எதிர்த்தரப்பு ஒப்பந்தம்
13) காய்டா – ஆணை விதி
14) காயம் – நிலையான, நிரந்தரம்
15) கார்வார் – மேலாண்மை
16) காலி – ஒழிவு, வெறுமை
17) கானுன் – சட்டம் விதி
18) சாப்பா – முத்திரை
19) சம்சாயி – கடன்
20) சர்க்கார் – அரசு
21) வடிரா – குறிப்பு, நிபந்தனை, குறிப்புரை
22) ஜரூர் – காலந்தவறாமை
23) ரஜா – விடுப்பு
24) ரத்து – நீக்கம்
25) ருக்கா – குறிப்பாணை
26) ரோஜ்கார் – பணி, வேலை வாய்ப்பு
27) வாபஸ் – திரும்பப் பெறல்
28) சாப்பு – படி, பார்த்து எழுது
29) ஹத்து பந்தி – நான்கெல்லை குறித்தல்
பதவிப்பெயர்கள்
1) அஞ்சனதார், தொகாக்காரன் – மதிப்பீட்டாளர்
2) அமல்தார் – வருவாய் அலுவலர்
3) அமீனர் – உரிமையியல் நடுவர் மன்றக் கீழ்
நிலைப் பணியாளர் படைத்தலைவன்
4) அமீர் – படைத்தலைவன்
5) அர்க்கார் – கண்காணிப்பாளர்
6) அசமகர்ணம் – கிராம கர்ணம்
7) கஜான்ஜி – கருவூல அலுவலர்
காலிபா – அரசன், சுல்தான்
9) கார்கூன் – இயக்குநர், மேலாளர், வருவாய் ஆய்வாளர்
10) கார்வாரி – மேலாளர், முகவரி, கண்காணிப்பாளர்
11) கணக்க – கிராம அல்லது மாவட்ட அலுவலர்
12) குமாஸ்தா – எழுத்தர்
13) குல்லா சேவகன் – காவலர்
14) குலாப்தலையாட்டு டரப்தாரி – அலுவலக உதவியாளர்
15) கொத்தவால் – காவல்துறை ஆணையாளர்
16) சமாத்துர் – கோட்ட வருவாய் அலுவலர்
17) சர்தார் – உயர் அதிகாரி
18) ஷராப்பு – கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர், காசுக்கடை
19) ஜலான் – காவலர்
20) சவுக்கிதார் – சுங்கத்துறை அலுவலர்
21) சிப்பந்திபாகந்தாஸ் – ஆயுதப்படைக் காவலர்
22) சிப்பாய் – படைவீரர்
23) சிரஸ்ததார் – அலுவலக மேலாளர், நடுவர் மன்ற மேலாளர்
24) சுபேதார் – ஆளுநர்
25) சொக்கன் – உடனாள்
26) கோக்கீரா – பணிப்பையன்
27) டபேதார்.தரோகா – தலைமை அலுவலக உதவியாளர்
28) ட்ப்தார். பந்து, தஸ்தார்தர் – பதிவறை எழுத்தர், ஆவண எழுத்தர்
29) தபால்காரன் – அஞ்சல் ஆண்
30) தாசில்தார் – வட்ட ஆட்சியர்
31) திவான் – பிரதம அமைச்சர், மாநிலத்தின் முதன்மை அலுவலர்
32) துபாசி – விளக்கிப் பொருள் கூறுவோர், மொழி பெயர்ப்பாளர்
33) நவசினதா – கணக்கர்
34) நவாப் – முகலவாள ஆளுநர்
35) நிஜாம் – அரசன்
**
இந்தி மொழிச் சொற்கள் பங்குகொண்ட வரலாறு
இந்திய அரசில் அரசு மொழிகளாகப் பதினெட்டு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்தி நடுவணரசை நடத்தும் மொழியாக விளங்குகிறது. இந்தி ஒன்றே இந்நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமென்னும் கருத்து அடிக்கடித் தோன்றுவதும், பிறமொழி பேசும் மாநிலங்களில் புகுத்தப் படுவதும், பிற மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு நிலைக்கேற்ப இக்கருத்துத் திரும்பப் பெறப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆட்சிமொழி எனும் உயர்நிலை பெற்ற இம்மொழி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் ஊடாட்டம் நிகழ்த்துகிறது. ஆட்சிமொழி என்பதால், நடுவணரசின் மாநில அலுவலகங்கள் முதலாகத் தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு வழிகளில் இந்தி மக்களிடையே பரவுகின்றது. தமிழகத்தில் இந்திமொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் வழியாகவும் இந்தி தமிழில் கலக்கிறது.
1

ஆகாஷ்வாணி

வானொலி
2

தூர்தர்ஷன்

தொலைக்காட்சி
3

சமாச்சார்

சமாச்சாரம்
4

உத்யோக்

உத்தியோகம்
5

தோத்தி

வேட்டி
6

ஷர்வானி

ஒருவகை உடை
7

அதிகார்

அதிகாரி
8

முக்ய

முக்கிய
9

மண்டல்

மண்டலம்
10

நிரூப்

நிரூபணம்
11

படா

பெரிய
12

சோட்டா

சிறிய
13

சோர்

திருடன்
14

அச்சா

நன்று
15

பகுத் அச்சா

மிக நன்று
16

ஜாவ்

போ
17

ஜிந்தாபாத்

வாழ்க, வெல்க
18

ஜெய்ஹிந்த்

இந்தியா வெல்க
19

பாரத்

பாரதம்
20

தர்ணா

மறியல்
21

தர்ம்

தருமம்
22

உதார்

உதாரணம்
23

அபராத்

குற்றம்
24

மஸ்தூர்

தொழிலாளர்
25

கட்டுமஸ்து

கட்டுடல்
26

வஸ்து

பொருள்
27

நமஸ்தே

வணக்கம்
28

உத்தர்

வடக்கு
29

சொஜ்ஜி

சிற்றுண்டிவகை
30

சோக்ரா

ஏவல் செய்பவன்
31

தட்டுவாணி

நாட்டுக் குதிரை
32

தம்படி

காசு
33

தம்புரு

நரம்பு வாத்தியம்
34

துப்பட்டா

துணிவகை
35

தூட்டி

ஆடை
36

மிட்டாதார்

பணக்கார்ர்
37

பந்த்

கடையடைப்பு
38

மந்திரி

அமைச்சர்
39

தோசா

தோசை
40

சுந்தர்

அழகு
41

தோஸ்த்

நண்பன்
42

பச்சா

மகன்
43

மோடா

கூடை இருக்கை
44

நாம்

பெயர்
45

பகவான்

கடவுள்
46

சோடனை

ஒப்பனை
47

சோதா

சோம்பேறி
48

சோபதி

தோழன்
49

சொக்கிதார்

சுற்றுக்காவலன்
50

சௌடோல்

யானை
51

டக்கர்

தக்கணம்
52

டப்பா

தகட்டுப்பெட்டி
53

டபாய்

ஏமாற்று
54

டீக்கு

சரி
55

டேரா

தங்குதல்
56

டோசர்

மோதுகை
57

சட்னி

உணவு வகை
58

டோபி

சலவையாள்
59

டோலி

தூக்குப்படுக்கை
60

முண்டாசு

தலைப்பாகை
61

மோட்டா

கடினமான
62

ரொட்டி

உணவுவகை
63

லேவாதேவி

கொடுக்கல் வாங்கல்
64

ஜகா

பின்வாங்குதல்
65

ஜதை

இரண்டு
இவ்வாறு அன்றாட வழக்கில் மக்கள் பயன்படுத்தும் இந்திச் சொற்கள் பல உள்ளன. நடுவணரசின் ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் இந்தி ஒரு மொழிப்பாடமாகவே கற்பிக்கப் படுகிறது. தமிழகத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையான அளவில் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆட்சிமொழி எனும் செல்வாக்கும், மக்கள் தொடர்புக் கருவிகளில் வழங்கப்படும் மொழியாக உள்ள வாய்ப்பும் இந்தி தமிழில் கலக்கக் காரணங்களாக அமைகின்றன. “நடுவணரசு இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதாலும், நம் பள்ளிச் சிறுவர்கள் தொடக்க வகுப்பகளிலே இதனைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுவதாலும், காலப் போக்கில் மேலும் இந்திச் சொற்கள் தமிழில் வந்து சேரலாம்” எனக் கருதுகின்றார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இந்திமொழியினாலேயும் தமிழ்மொழி உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மையெனத் தோன்றுகிறது என்பது இந்திமொழிக் கலப்பைப் பற்றிப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கொண்டிருந்த கருத்தாகும்.
வளரும்…

முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment