காலமும் கருத்தும்
தொடர்ச்சி …
இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ?
அல்லது பிற்காலத்திலா என்றால், பிற்காலத்திலே தான் என்று நாமும் எண்ண வேண்டி வரும்.
ஏனென்றால், பல தெய்வங்களை, காளியை, மாரியை, கண்ணனை, பிரமனை, சிவனை, சக்தியை இப்படித் தெய்வங்களைப் பலவாறாகப் பிரித்துப் பாடியுள்ளார்.
இவையெல்லாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றுப் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் முதலிலே வைக்கப்பட்டு, முதலிலே எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டு, உருவாக்கிய தொகுப்பு நூல்கள் ஒரு குழப்பத்தை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.
நாம் எண்ணினால் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிக் கூட அப்படிப்பட்ட ஒரு குழப்ப நிலையை உருவாக்க முடியும்.
ஏனென்றால் பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் .
அந்தப் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல்கள் மிக வேகமானவை. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை வலுவாக்கி, கூராக்கி, ஈட்டி முனைகளாக மக்களுக்குத் தரக் கூடியவை அவரின் பாடல்கள்.ஆனால், அந்தப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடக்க காலத்தில் கதர்ப் பாட்டுகளைப் பாடியிருக்கிறார்.
‘சுப்பிரமணிய துதியமுது’ என்கின்ற பாடல் தொகுப்புப் புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் யாராவது வேண்டுமென்றே பாரதிதாசன் பாடிய பாடல்களையெல்லாம் மேற்பகுதியிலே வைத்து, அவர் முதலிலே பாடிய சுப்பிரமணிய துதியமுதைப் பிற்பகுதியிலே வைத்துப் பாரதிதாசன் முதலிலே எவ்வளவு முற்போக்கு வாதியாக இருந்தார்.
அதற்குப் பிறகு எந்த அளவிற்குச் சமுதாயத்தோடு சேர்ந்து போகின்ற ஒரு கவிஞராக மாறினார் என்று சொல்லக் கூடும்.
அதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் தொடக்க காலத்தில் சில கருத்துகள் – சமுதாயத்திற்கு ஒட்டிப் போகக் கூடிய கருத்துகள் அவருடைய பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும் கூட அடுத்தடுத்து சமுதாயத்தில் புரட்சியை – மாறுதலை ஏற்படுத்தக் கூடிய பல கருத்துகளை அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
அந்தக் கருத்துகளின் அடிப்படையில் தான் ஆயிரம் தெய்வங்கள் தேவையில்லை.
அறிவு ஒன்றே தெய்வம் !
உண்மை ஒன்றே தெய்வம் !
மனச்சாட்சி ஒன்றே தெய்வம் !
என்ற அந்த நிலைக்குச் சமுதாயம் வரவேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.
நான் பாரதியார் கவிதையை முழுமையாகப் படித்தவன் என்றாலும் கூட, ஓர் உண்மையை ஒப்புக் கொள்வேன்.
பாரதிதாசன் பாடல்களை மனப்பாடம் செய்ததைப்போலப் பாரதியின் பாடல்களை மனப்பாடம் செய்தவன் இல்லை .
காரணம் பெரியாரோடு, அண்ணாவோடு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு இரண்டறக் கலந்து பழகியுள்ளேன்.
அந்தக் கொள்கைகளை நாட்டில் எடுத்துச் சொல்வதற்கு அந்தக் கவிதைகளை நான் பயன்படுத்திய காரணத்தால் பாரதிதாசன் கவிதைகள் நினைவுக்கு வருகின்ற அளவிற்குப் பாரதியார் கவிதைகள் நினைவுக்கு வருவதில்லை.
இருந்தாலும் சமுதாய எழுச்சிக்காக, நாட்டின் விடுதலைக்காகப் பாரதியார் பாடிய பாடல் வரிகளை எங்கள் நெஞ்சங்களிலே நாங்கள் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு பாடலைப் பார்த்தேன்.
அந்தப் பாடலின் சில வரிகளை நான் படிக்கும்போது இங்கே மாணவர்கள் இருந்தால், அவர்களுக்குக் கூடப் பரவாயில்லை .
பாரதியாரே நம்முடைய செயலை ஆதரிக்கிறாரே என்று எண்ணத்தோன்றும். அந்தப் பாடலில்
;
“பிள்ளைப் பிராயத்திலே அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன். அங்குப்
பள்ளிப் படிப்பினிலே – மதி
பற்றிடவில்லை !….
என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார்.
வெள்ளை மனத்தைப் பறிகொடுத்தேனம்மா !
என்கிறார் பாரதியார் .
எந்தப் பெண்ணிடத்திலே பாரதியார் மனத்தைப் பறிகொடுத்தார் தெரியுமா ?
வெள்ளை மலரில் வீற்றிருக்கின்ற கலைமகள் அறிவு ! அந்த அறிவுக்கு ! கல்வியைத் தருகின்ற – அறிவைத் தருகின்ற அந்தத் திருமகள் இடத்திலேதான் மனத்தைப் பறிகொடுக்க வேண்டுமேயல்லாமல் தெரு மக்களிடத்திலே அல்ல என்பதற்குப் பாரதியாரின் பாட்டுச் சான்றாக விளங்குகின்றது.
மற்றொரு பாட்டு, நாட்டு நிலையை விளக்குகின்ற பாட்டு! நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்குகின்ற பாட்டு.
அன்றைக்கே தீர்க்க தரிசனமாக எதிர்வரும் காலத்தைக் காணும் இயல்பில் பாரதியார் எழுதிய பாட்டு.
பாரதியார் அன்றைக்குப் பாடிய அந்தப் பாடலுக்குத் தலைப்பே ‘மாயையைப் பழித்தல்’ என்பது.
உண்மையறிந்தவர் உன்னைக் கணிப்பரோ ?
மாயையே – மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!
மாயையே
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே –
நீ
சித்தந் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ? – மாயையே ?
என்னைக் கெடுப்பதற் கெண்ண முற்றாய்
கெட்ட மாயையே – நான்
உன்னைக் கெடுப்பதுறுதியென்
றேயுணர் – மாயையே !
சாகத்துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே! – இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரையென்
செய்வாய் – மாயையே
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப த
மாயையே….. |
என்று தொடர்கிறது அந்தப் பாடல்.
தெளிவடைந்தவர்களுக்கு முன்னால் எந்த மாயையும் நிற்காது என்று 1989 வருவதை அறிந்து அன்றே பாரதியார் பாடியிருக்கிறார் ,
“மாயையைப் பழித்தல்” என்ற தலைப்பில். – பாரதியின் கனவுகளில் மிக முக்கியமானதாகப் பெண்களின் அடிமைத்தனம் ஒழிக்கப்படவேண்டும், அகற்றப்பட வேண்டும்.
பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
அந்தக் கருத்தை இந்த அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டது.
பாரதியாரின் கருத்தும், அந்தக் கருத்தின் அடிப்படையிலே 1929ஆம் ஆண்டிலேயே நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார், சௌந்தர பாண்டியனார், சுப்பராயன், பி.டி. இராசன் இவர்களெல்லாம் எடுத்து வைத்த பெண் உரிமைக்கான கருத்தும், தொடர்ந்து அண்ணா அவர்களாலும் எடுத்து வைக்கப்பட்ட அந்தக் கருத்துகள், நிலையாக இந்த அரசை நடத்துகின்றவர்களின் நெஞ்சிலே பதிந்திருக்கின்ற காரணத்தினாலேதான் பொறுப் பெற்றவுடன், மகளிர் முன்னேற்றத்திற்காக அவர்களின் உரிமைக்காகப் பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்ணுரிமைக்காகப் பாரதியின் புதுமை வாதம்
பாரதியார் பெண்ணிற்காக வாதாடியதே ஒரு புதுமை.
பாரதி எழுதியதில் மகத்தான பெருமை பெற்ற ஒரு காவியம் கவிதை நடைக் காவியம், இன்றைக்கும் கவிதைநடை நாடகங்களாக நடத்தப்படுகின்ற காவியம் பாஞ்சாலி சபதம்.
பாஞ்சாலி இடம் பெற்றுள்ள பாரதக் கதையை நானோ, பேராசிரியரோ மற்றவர்களோ ஏற்றுக் கொள்கிறோமா என்பது வேறு .
ஆனால், அதில் வருகின்ற கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், கதைப் போக்கு கதைப் பின்னல் இவற்றை நாங்கள் நிராகரிப்பவர்கள் இல்லை .
பாஞ்சாலி சபதம் என்கின்ற தலைப்பில் கவிச்சக்கரவர்த்தி பாரதியால் இயற்றப்படுகிறது.
அங்கே பெண்ணுரிமைக்காக அந்த இடத்திலும் பாரதியார் எப்படி வாதாடுகிறார் என்பதும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ‘
சூதாட்ட மண்டபத்தில் தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் இவர்கள் அத்தனைபேரும் தங்களுடைய மாட மாளிகையை – கூட கோபுரங்களை வைத்து இழந்த பிறகு தங்களையே வைத்து இழந்தனர்.
அனைவரும் தோற்றுவிட்ட பிறகு கடைசியாகப் பாஞ்சாலியையும் வைத்து சூதாட்டத்தை நடத்தி அதிலே வெற்றி பெற்று அனைத்தையும் மீட்கலாம் என்ற எண்ணத்தோடு பாஞ்சாலியையும் வைத்துச் சூதாடுகிறார்கள்.
அதிலும் தோற்றுப்போனவுடன் பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வருமாறு துரியோதனன் ஆணையிடுகிறான்.
ஆணையிடப் பட்டதும் பாஞ்சாலி அதை மறுத்து வாதிடும்போது சொல்கிறாள்,
நாயகர்தான் தம்மைத் தோற்றபின் – என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை – புலைத் தாயத்திலே விலைப்பட்டபின் – என்ன சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்?
அவர் தாயத்திலே விலைப்பட்டவர் – புவி தாங்குந் துருபதன் கன்னிநான் –நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் – பின்பு
தாரமுடைமை அவர்க்குண்டோ ?
இப்படி, இதுவரையில் யாரும் எழுப்பாத ஒரு வாதத்தைப் பாரதி பாஞ்சாலி வாயிலாக எழுப்புகிறார்.
தருமன் தன்னை வைத்துத் தோற்றுவிட்டான், பீமனும் தன்னை வைத்துத் தோற்றுவிட்டான்.
அருச்சுனன், நகுலன், சகாதேவன் அத்தனை பேரும் தங்களை வைத்துத் தோற்றுவிட்டார்கள்.
எனவே ஐந்து கணவன்களுமே தங்களை வைத்துத் தோற்று அடிமையான பிறகு என்னிடத்தில் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
என்னை வைத்துத் தோற்க! அவர்கள் யார்?
அவர்களே தோற்றுவிட்ட பிறகு என்னை வைத்து எப்படித் தோற்கமுடியும்?
என்ற ஒரு வாதத்தைப் பெண்ணுரிமையினுடைய பெருங்குரலாக அன்றைக்கே பாஞ்சாலி சபதத்தின் மூலம் பாரதியார் எழுதிக் காட்டுகிறார்.
இவ்வாறெல்லாம் பெண்களின் விடுதலைக்காக, சமுதாய விடுதலைக்காக, ஏழை, எளிய மக்களுடைய நல்வாழ்விற்காகச் சமுதாயத்திலே சோவியத்து நாட்டில் ஏற்பட்டது போன்ற ஒரு புரட்சி ஏற்பட்டாலாவது மக்கள் அனைவரும் பசித்திருக்காத ஒரு நிலை உருவாக வேண்டும் என்பதற்காகப் பாரதியார் அன்று பாடினார் .
அதற்குப் பிறகு இடைக்காலத்திலே யாரும் பாரதியாரைப் போலப் புரட்சிகரமாகப் பாடவில்லை என்றாலுங்கூட, தொடர்ந்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பரம்பரையினர், அந்தக் கருத்துகளை இந் நாட்டிலே இன்றைக்கு எடுத்து வைக்கின்ற நிலையை நாம் காண்கிறோம்.
கவிஞர் பாடிவிட்டுப் போகலாம். ஆனால், அதைச் செயற்படுத்த வேண்டியது இளைய தலைமுறையின் பெரும் கடமை.
அந்தக் கடமையை நிறைவேற்ற இளைஞர்கள், மாணவர்கள் முன் வந்தாக வேண்டும். பல்கலைக் கழகங்கள், நூற்றுக்கணக்கில் உருவாகி, கல்லூரிகள் ஆயிரக்கணக்கில் அமைந்து, ஆசிரியர்கள் இத்தனை பேர், மாணவர்கள் இத்தனை ஆயிரம்பேர், என்கின்ற புள்ளி விவரங்களைக் காட்டினால் மாத்திரம் போதாது.
சமுதாயம் நல்ல முறையில் விழிப்புற்று உலகத்தில் இருக்கின்ற மற்ற நாடுகளொடு போட்டி போடுகின்ற நாடாக, நம்முடைய நாடு எதிர்காலத்திலே அமைய வேண்டுமானால் அதை அமைக்கின்ற ஆற்றல் இளைஞர்கள் – மாணவர்கள் கையில் இருக்கிறது.
எனவே, அந்த மாணவச் செல்வங்கள், இதுபோன்ற பல்கலைக் கழகங்களை, கல்லூரிகளைப் பள்ளிகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்ற விதத்தில் ஆசிரியப் பெருமக்களும், அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
அத்தகைய ஒரு நிலை நம் நாட்டில் உருவானால்தான் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒளிமயமான எதிர்கால இளைஞர்களைத்தான் பாரதியார் இங்குச் சிலை வடிவில் நின்று
“ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா ! வா !
என்று அழைப்பார்.
இல்லையேல்
” கிலிபிடித்த நெஞ்சினாய் போ ! போ ! போ !
என்று விரட்டுவார்.
வா !வா ! என்ற அழைப்பை ஏற்கும் வண்ணம் வாலிபர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் .
இந்நாளில் நம்மிடையே வாழும் அறிஞர் சிலரின் எழுத்துத் தொகுப்புக்கள் வந்துள்ளன .
இது பற்றிப் பதிப்பாளர் தம் கருத்தை புலப்படுத்தியதை கண்டிருக்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் தம் உரையில் கூறிய முடிபுக்கு இந்தக் கருத்தும் அரண் செய்கின்றது .
மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இத்தொகுப்பு வெளி வருகிறது.
ஆய்வுக்களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது.
இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன.
செம்பதிப்புக்கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன; வகைமைப் படுத்தப் பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி – நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் முயற்சியாகும்.
ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரிசீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைமைப் படுத்தி நூலாக்கியுள்ளது வளர் தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும்.
இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் தாம் எழுதத் தொடங்கிய நாள் தொட்டே சீர்திருத்தச் சிந்தனையை எந்த மாற்றமும் எப்போதும் பெற்றதில்லை .
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
Leave a Comment
You must be logged in to post a comment.