Personal Blogging

எத்தனை பார்வைகள்..??


முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?
வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.
”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.
”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.
”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.
”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.
செயல் ஒன்று தான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.
ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.
இப்படித் தான் நமது செயல்களைப் பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.
அதனாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்..!

About the author

Palakarai Sakthivel

Leave a Comment