எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம்
சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து மாணவர்கள் பேசிவருகிறார்கள்வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஆங்கிலச் சொற்கள் மிகப் பரவலாகப் பேசப் படுகிறது ஒரு எடுத்துக்காட்டு நாம் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்த்தேன் என்று கூறுவதைவிட டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்கிறோம் வங்கி காசோலையைக் கையொப்பம் விடுகிறேன் என்று சொல்ல மாட்டோம் cheque book sign என்றுதான் கூற முடிகிறது என் அம்மா கூட ஆங்கிலத்தில் pension வாங்க Bank இக் செல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள் தமிழில் இருந்த போதும் அன்றாட பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்கு குறிப்பிடதக்கது அலுவலகத்தை நாமே சில நேரத்தில் ஆங்கிலத்தில் office என்றுதான் குறிப்பிட வேண்டியது உள்ளது நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.
இல்லங்களில் வழங்கிவரும் ஆங்கிலச் சொற்கள் அளவற்றன. காலை முதல் இரவுவரை மொழியோடு உறவாடும் மக்கள் தம் கருத்துகளைப் பிறர் புரிந்துகொண்டால் போதுமென்ற நிலையில் மொழிச் சிந்தனைக்கு உரிய இடமளிக்காது விடுகின்றனர். இதன் விளைவாக இல்லங்களிலும் அன்றாட வழக்கில் ஆங்கிலம் அரசோச்சுகின்றது.
ஆங்கிலச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும் பயன் படுத்துவதில், கற்றார்க்கும், பாமரர்க்கும் வேறுபாடுண்டு. கற்றோர் பயன்படுத்தும்போது, தாய்மொழியில் அச்சொற்களுக்கு இணையான சொற்கள் இருப்பதை அறிந்தும், பிற மொழிச்சொற்களையே பயன்படுத்துவர். ஆனால் பாமரர்கள் தாய்மொழியில் மிகுந்த அறிவுடையவர்கள் அல்லர். மொழியைப் பற்றியும், அதன் பயன்பாட்டைப் பற்றியும் போதிய தெளிவற்றவர்கள். ஒருவன் தப்பித்தான், ஓடிவிட்டான் என்பதை, ‘ஜகா வாங்கினான்’ என்று கூறினாலே போதுமென்று எண்ணுபவர்கள். இவர்கள் வாழ்வில் மொழிச்செம்மைக்கு இடமில்லை. இதனால் பிறமொழிச் சொற்கள் இவர்களிடம் பெருமளவில் புழங்கத் தலைப்பட்டன என்றால், நகர மக்களின் தவறான சொற்புணர்ப்புச் செயன்மைகளே காரணம்.
தமிழில் அன்றாட வழக்கில் கலக்கும் ஆங்கிலச் சொற்களில் தொழில் நுட்பச் சொற்களும், வாணிகச் சொற்களும் மிகுந்த அளவில் இடம்பெறுகின்றன. ஆங்கிலத் தொழில் நுட்பங்களின் வரவாலும், வாணிகப் பொருள்களின் வரவாலும் இந்நிலை தோன்றுகிறது. கம் யூட்டர் என்னும் கணினி வரவாலும் இணைப்பாலும் குறைந்தது நூறு ஆங்கிலச் சொற்கள் நிலைபெறும். இக்காரணங்களையும் கடந்து தமிழ்ச்சொற்களை வாழ்விக்க வேண்டும். அதுவே மொழி உரிமை என்கிறார் மு.வ. மென்மை குறைந்த ஆடையாக இருந்தாலும் நம் நாட்டு ஆடையை உடுத்துவதே நாட்டுப்பற்று என்று அன்று உணர்ந்தோம். அதுபோலவே ஆங்கிலம் போல் திறம்பட எழுத முடியாவிட்டாலும், தமிழில் நடத்துவதே உரிமையுணர்ச்சிக்கு அடையாளம் என்று உணர வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
ஆங்கிலச் சொற்களின் பட்டியல், ஆங்கிலம் செல்வாக்கால் ஊடுருவிக் கொண்டிருப்பதை மெய்ப்பிக்கிறது எனினும், நமக்குரிய மொழிச் சிந்தனை சீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் உய்த்துணர வழிகாட்டுகிறது.
இன்றைய நிலையில், தமிழர் பிற மொழிகளைப் பழித்துப் பேசியும் வெறுத்துப் பேசியும் ஆறுதல் அடைவதில் பயனில்லை. பிறரை வெறுப்பதில் உள்ள ஆர்வத்தில் ஒரு பாதியாவது நம்மவரை விரும்புவதில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பிறமொழியைப் பழிப்பதில் உள்ள ஊக்கத்தில் கால்பங்காவது தம்மொழியைப் போற்றுவதில் உள்ளதா என்று கவனித்துக்கொள்ள வேண்டும்.
கடைத்தெரு முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழர்க்குத் தமிழ் மொழியில் பற்று உள்ளது என்பதற்குச் சான்றுகள் வேண்டும். “நான்கு பேர் கூடினால் தமிழ் பேசக் கூசுவது, தமிழில் கடிதம் எழுத நாணுவது தமிழைப் போதனை மொழியாகக் கொள்ளத் தயங்குவது ஆகிய இவற்றையே இன்று தமிழகம் காண்கிறது” என மு.வ. மொழியும் கருத்துகளின் வழி நமது மொழிச் சிந்தனையைச் செம்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது; மறக்கவும் இயலாது. மொழிக்கலப்பு, மொழித்துய்மை பற்றி நாவலர் ச. சோமசுந்தரப் பாரதியார் கூறியுள்ள கருத்துகளும் நமது மொழிச் சிந்தனைக்குப் புதிய வழித்தடம் அமைப்பனவாக உள்ளன. வழுமலிந்து முடிவு ஒவ்வாக் கீழ்மக்கள் கொச்சைக் குழறலை மொழிநலம் விரும்புவோர் நல்ல தமிழெனக் கொள்ள இசையார்.
மாரிக்காலத்து நீரில் கத்தும் தவளை போலச் சந்தையில் தெருவில் மக்கள் பேசும் சழக்குரை எல்லாம் தமிழெனக் கொண்டால், அழகிய எழுத்தும், ஐந்து இலக்கணமும் நிரம்பிப் பழுத்த செந்தமிழ் பாழாய்ப் போய்விடும். பல பத்திரிகை வித்தகர்கள், செலாவணி செய்யும் புதிய மொழிநடை கால்முடமும், உடல் நோயும் காட்டுகிறது. அது போதாமல் இலக்கணத்தை எரித்துவிட்டு ஊரார் பேசுகிறபடி எழுது வதே நல்ல தமிழ் என்று சிலர் கூசாமல் கூறவும் கேட்கிறோம். இவர்கள், ‘யார் பேசுகிறபடி எழுதவேண்டும் என விளக்குகிறார்கள் இல்லை. ஊர்தோறும் பேச்சு வேறுபடுகிறதே.
ஓர் ஊரிலும் வகுப்புவாரியாக, தொழில்வாரியாக, இனவாரியாக உருவழிந்து, பல்வகை மொழிகள் உலாவுகின்றனவே ஒலி உருவும், வரி வடிவும் அற வேறுபட்ட எழுத்து களின் இயைபும், பயனும் அறியாமல் எல்லாம் குழம்பிக் கதம்ப நடை தொடுப்பதைக் காணுகிறோம். வல்லின ற கரத்தையும் சிறப்பு ‘ழ’ கரத்தையும் நாடாமல் நாடு அகற்றி, ‘ர கர ‘ள கரங்கட்கே ஊராண்மை தருபவர் பலர் ஆவர். ‘நாகரிக உலகில் எந்த மொழி யிலும் வழுமலியப் பேசும் வகுப்பார் உண்டு.
ஆனால் அவர் பேச்சு எதுவும் எழுத்தாளர் கொள்ளமாட்டார். ‘வலைச்சியர் புலை மொழி’ (BILLINGS GATE) போன்ற கொச்சைமொழிகளை மேல்நாட்டார் இகழ்ந்து விலக்குவதை யாவரும் அறிவர். அம்மொழிமரபு அறிந்தோ அறியாமலோ கேட்போர் கேட்பதைக் கேட்டபடி கொள்வதே தமிழ் வளர்ப்பதாகும் எனத் துணியும் தமிழ்ப்புலமையை வியப்பதா நகைப்பதா என்பதைத் தமிழர்களே தேர்ந்து தெளியட்டும்.
ஆங்கிலம் முதலிய கலைச்செல்வம் நிறைந்த புதிய உயர் மொழி யிலுள்ள வளங்களையும் எழில்களையும் தமிழ்மகள் அடைந்து, புதிய பெருவாழ்வு பெற்று முன்னிலும் சிறந்தோங்கச் செய்வது நம் கடன். எனினும் அவ்வளங்களும் எழில்களும் நிரம்பத் ததும்பும் ஆங்கிலத்தைக்கூடக் கட்டாயப் பாடமாக வைத்திருப்பது தவறு.
இவ்வியலில் ஆங்கிலச்சொற்களின் பட்டியலிலிருந்து நாம் பின்வரும் கருத்துகளைப் பெறலாம்.
Ø ஆங்கிலச் சொற்கள், கல்வி, வாணிகம், தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் கலக்கின்றன.
Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும், மக்கள் வழக்கில் ஆங்கிலச் சொற்களே நிலவி வருகின்றன. (எ.டு. கல்லூரி – College, பேருந்து – Bus, நிறுத்தம் – Stop.
Ø ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்படாமையால், அவ்வாங்கிலச் சொற்கள் வழக்கில் நீண்ட காலம் வழங்கப்பட்டு வருகின்றன. Umpire, Elastic, Enamel, Wire.
Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு உருவாக்கப்படும் தமிழ்ச்சொற்கள் வழக்கில் வருவதற்குக் கடினமாக இருப்பதாலும், அவ்வாறு வழக்கில் வருவதற்கு நீண்ட காலமாவதாலும் ஆங்கிலச் சொற்களே நீடித்து வருகின்றன. (எ.டு. Inchtape – விரற்கிடைவார், Agency – முகவாண்மை, Ice – பனிகம், Ice cream – பனிப்பாகு)
இவ்வியலின் முடிப்பாகச் சில கருத்துகளைத் தெள்ளிதின் உணரலாம்.
Ø ஆங்கில மொழிக்கலப்பு என்பது, ஆங்கில மொழியின் செல்வாக்கால் மட்டுமன்றித் தமிழ் மக்களின் ஆங்கில மோகத்தாலும் நிகழ்கிறது.
Ø தமிழகக் கல்வி முறையில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பேரிடம், தமிழ்வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
Ø பிறமொழி எதிர்ப்பால் மட்டுமே தமிழின் வளர்ச்சி நிகழ்ந்து விடாது, பிறமொழியை எதிர்க்கும் நிலைகளிலும் களங்களிலும் தமிழை நிலைப்படுத்தி, வழக்கில் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Ø அறிவியல், தொழில் நுட்பங்கள் ஆங்கிலத்தின் வழியே நம் மொழிக்கு வரும்போது, அவற்றைத் தமிழ்ப்படுத்தி அறிமுகப் படுத்தவும், ஆளவும் முயல வேண்டும்.
Ø புதிய கலைச் சொல்லாக்கங்களும், மக்கள் சுணக்கமின்றி ஏற்கத் தக்க மொழிபெயர்ப்புகளும் பிறமொழிக் கலப்பைத் தடுக்க உதவி செய்வன. இம்முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
Ø மொழிக் கலப்பைத் தடுக்கத் தமிழில் தொன்மையில் வழங்கப்பட்டு, இன்று வழக்கிழந்து போயிருக்கும் அரிய சொற்களை மீண்டும் வழங்கத் தலைப்படல் வேண்டும்.
Ø உலக அறிவியல், பொருளாதார, வாணிக முன்னேற்றத்தில் நாமும் கலந்து பயன்பெறத் தக்க வகையில் தனித் தன்மையை இழக்காத பிறமொழியைப் பயன்கருதி மட்டும் ஏற்கும் நிலைக்கு நமது மொழிச் சிந்தனை செம்மை படுத்தப்படவேண்டும்.
முனைவர் ந.அருள்,
இயக்குநர்
மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு.
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.