Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15

Written by Dr. Avvai N Arul

செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..!

=================================================

கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்) இயம் (வாத் தியம்) இயவன் (வாத்தியகாரன்) இளிந்த நாக்கடித்தல் (ஆராயாது வாக்களித்தல்) உகப்பு உறாவரை அல்லது முற்றுட்டு (சர்வமானியம்) அறம் (தருமம்) ஆடிடம் (விளையாடுமிடம்) ஆரோசை (ஆரோ கணம்) அமரோசை (அவரோகணம்) ஆளுங்கணம் (ஆளொட்டி அல்லது ஆளொதுங்கி) காவற்கூடு (ஆளோடி குளத்தின் மதிலுள் புறமாக மக்கள் நடப்பதற்குக் காட்டிய வழி) ஒம்படுத்தல் அல்லது ஒம்படை (மக்களைக் காத்தல்) ஊட்டகர், ஊட்டுநர் (போஷகர்) ஊட்டுப்புரை (அன்னசத்திரம்) ஊமையாமொழி (அஜபா மந்திரம்) ஐயம் அல்லது இரப்பு (பிச்சை) ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்) ஒப்புரவு (உபகாரம்) தெரிப்பு (தெரிந்தெடுக்கை) வலிவு மெலிவு ஒகநன் (கடலாளி) ஓமாலிகை (நறுமணச் சரக்கு) ஒலக்கம் (அரசு வீற்றிருக்கை) கண்ணெச்சில் (கண் திருஷ்டி) கரிசு (பாவம்) குடவோலை (குடும்பு) கூலம் (தானியம்) கூற்றம் (தாலுகா) கூற்றுவன் (எமன்) கையடை (பாதுகாக்கும்படி ஒப்புவித்த பொருள்) நீர்ச்சீலை (பீனம், கோவணம்) கதியெழுகை (தேசாந்திரம்) பண்டுவம், பரிகாரம் (சிகிச்சை) பலகணி (சன்னல்) பாடுகிடத்தல் (வரங்கிடத்தல்) பிறங்கடை (வாரிசு) புரவுவரி (வருவாய்) புலம்பன் (ஆன்மா) பொதுநாயகம் பொருநன் (போர்வீரன்) மதங்கம் (மிருதங்கம்) மதவலி (பயில்வான்) கையறம் (சரமகவி) கலக்கரணை (செளகரியம்) சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு) சால்வு (திருப்தி) தக்கை முறுக்கி (ஸ்குரூ) தவப்பழி (உண்ணாவிரதம்) தார்ச்சீலை (இலங்கோடு) திணைக்களம் (துறை) மெய்ப்பாடு (பாவம்) வலவன் (சாரதி) வழக்காரம் (பிராது வழுவாய்) மருப்பு (தந்தம்) மறம் (வீரம்) மழவன் அல்லது மறவன் (வீரன்) மன்பதை (சமுதாயம்) மீகாமன், மீகான் (மாலுமி) வாய் வாளாமை (மெளனம்) விறல் (சத்துவம்) விசி (பலகை)

மேற்காட்டிய பொதுச்சொற்கள் போன்றே, சாத்தன், கொற்றன், ஆதன், பூதன், கீரன், பேகன், பாரி, காரி, நள்ளி, குமணன், வெளியன், தித்தன், நம்பி, கம்பன், கூத்தன், கண்ணன், முருகன், புகழேந்தி, அடி யார்க்கு நல்லான், நச்சினார்க்கினியன், பரிமேலழகன், தோலாவழக்கன் முதலிய எண்ணிறந்த மக்கட் பெயர்களும், கயற்கண்ணி (மீனாட்சி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி), திருமகள் (இலட்சுமி) முதலிய தெய்வப் பெயர்களும் பொருநை (தாம்பிர பரணி), தில்லை (சிதம்பரம்), மறைக்காடு (வேதாரணியம்), பழமலை அல்லது முதுகுன்றம் (விருத்தாசலம்) மயிலாடுதுறை (மாயவரம்) குரங்காடுதுறை (கவித்தலம்) முதலிய பல இடப்பெயர்களும் வழக்கற்றன. விடாப்பிடி (வைராக்கியம்) தடுமம் அல்லது நீர்க்கோவை (ஜலதோஷம்), ஊக்கம் (உற்சாகம்), திருவிழா (உற்சவம்) விழிப்பு (ஜாக்கிரதை முதலிய பல சொற்கள் வழக்கு வீழும் நிலையில் உள்ளன.

கனவு, தூக்கம், பயிற்சி, வெள்ளி முதலிய தென்சொற்களிருப் பவும், சொப்பனம், நித்திரை, அப்பியாசம், நட்சத்திரம் முதலிய வடசொற்கள் வீணே உலவி வருகின்றன. எழுநாட்பெயர்களுள், அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இருநாட் பெயர்கள் வழக்கு வீழ்ந்து போயின. இரங்கும் நிலையில், ‘அளியன் அளியள்’ ‘அளிது அளிய’ என்றும் சொல் வழக்கு வீழ்ந்து, பாவம் என்னும் சொல்லோ வேரூன்றிக் கொடிவீசலாயிற்று.

இந்த நிலையிலும் தமிழிற்போதிய சொற்களில்லை என்று கூறுதலும் வழக்கற்ற சொற்களைப் புகுத்தக்கூடாதென்று தடை செய்தலும் சிலர்பால் உண்டு. ஆட்சியும் மாட்சியும் நீங்கி நெடுங்காலம் கழிந்த பின்னும், இக்காலக் கருத்துக்கேற்ற சொற்களும் சொற்கருவிகளும் தமிழில் எஞ்சியுள்ளன. பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்தமைக்குக் காரணம், அயலாரால் புகுத்தப்பெற்ற சொற்களின் விளைவாகும். எனினும், அவற்றுக்கு மாறாகப் பழஞ் சொற்களைப் பெய்தல் தமிழர் கடனாகும்.

புதிய அணுகுமுறை

இன வளர்ச்சி, மொழி வளர்ச்சியின் அடிப்படை இன வளர்ச்சிக்கு எதிரான மொழிக் கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அதனால் இன வளர்ச்சியும் கெடும்; மொழி வளர்ச்சியும் தடைப்படும். நமது சமுதாயத்தின் தனி வளர்ச்சிக்கோ, நாம் தலைமை பெறுவதற்கோ, மாறான நம்பிக்கைக்கோ நமது நோக்கம் ஆட்பட்டுவிடலாகாது.

பழைமை, பழம் பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித் தன்மை, தூய்மை போன்றன நாம் தலை நிமிரப் பயன்படலாம். அவை நாம் தடம் புரளவும் காரணமாகாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கையோ, ஒரு தத்துவமோ, மரபோ மக்கள் வாழ்வியற் கலைகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறதா என்ற வினாவை ஒவ்வொரு நிலையிலும் நாம் எழுப்ப வேண்டும். ‘துணை’ என்ற நிலை மாறிச் சுமை என்ற நிலைமைக்கு ஒரு மரபோ அணுகு முறையோ வந்து சேர்ந்தால், எவ்விலை கொடுத்தும் அதைத் தாங்கும் மனநிலை நமக்கு அமையக் கூடாது.

தமிழ் விண்ணிலிருந்து வந்தது அன்று விண்ணவர் தந்ததுமன்று. மனித சமுதாயம் தமக்குத்தாமே பெருகப் பெருக தட்டுத்தடுமாறி, அரிய முயற்சியின் பெரியதாக மொழியை உருவாக்கிக் கொண்டது. மனிதன் படைத்த எதுவும் குறையுடையது; வளர்ச்சிக்கு வழி கோலுவது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், மொழியைப் பொறுத்தவரை முன்னரே அமைந்ததாக முடிந்ததாக எண்ணவோ நம்பவோ இடமில்லை.

தமிழும் உலகிலுள்ள மற்ற மொழிகளைப் போன்றதே ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினரின், மொழி வளர்ச்சியும், அவர்கள் தம் மொழியில் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும். பயன் தரும் நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்ற நோக்கோடும் மற்ற மொழியினர் பெற்ற அழுத்தங்கள் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படா என்னும் மனநிலையோடும்; காதும், கருத்தும் கண்ணும் மூடிய நிலையில் நடக்க முடியாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து இயன்ற வழியில் தேவையான மாற்றங்களோடு அவற்றைப் பயன்கொண்டு அதன்வழி நாம் நலம் பெறவேண்டும் என்ற பணிவுடைமை நமக்கு எந்நாளும் வேண்டும்.

ஆங்கில மொழி 50 சதம் இலத்தீனிலிருந்தும் 25 சதம் கிரேக்கத்திடமிருந்தும் கடன் பெற்று வளர்ந்தது என்பர். சீன மொழியோ பிறசொற்களை ஏற்பதில்லை. பிறநாட்டு இடப்பெயர்கள் இயற்பெயர்களாகக் கூடத் தம்மொழிக்கேற்பவோ மொழி பெயர்த்தோ சொல்கின்றனர். வடமொழியாரோடும் ஊர்ப் பெயர்கள் இயற்பெயர்களை மொழி பெயர்த்து மாற்றுவதை நாம் அறிவோம். தமிழரிடத்திருந்த அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழர் அறிந்த முன்னமே தாம் அறிந்தன போலவும், வட மொழியிலிருந்தே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும், வட மொழியிலிருந்தே தமிழிற்கு அவை வந்தன போலவும் ஆரியர் காட்டினர் என்று வீ.கோ. சூரிய நாராயண சாத்திரியார் தமிழ்மொழி வரலாற்றில் எழுதினார்.

அறிஞர் வ.சுப. மாணிக்கம் இது தொடர்பாகத் ‘தமிழ் ஒரு முதுமொழி. அதனை அது வளர்ந்து வந்த இயற்கைப்படி வளர்க்க வேண்டும். தமிழ்ஞாலத் தொன்மொழியாதலானும், பல மொழிகள் ஞாலத்திடை தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வளர்ந்து இலக்கண இலக்கியங்கண்ட செம்மொழியாதலானும், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகவு போல் உடன் பயில்மொழியாதுமின்றித் தனித்து ஓடியாடி உரம்பட்ட செல்வ மொழியாதலானும் அதனைத் தன்னிச்சைப்படி வளர்ப்பதுவே நெறி.

ஆங்கிலம் இந்தி முதலான பன்மொழிகள் ஏராளமான மொழிகள் வழங்கிய உலகக் காலத்துப் பிறந்தன. கலப்பிற் பிறந்தன; கலப்பிலே வளர்ந்தன. கலப்பிலே வளரும் பெற்றியன. ஆதலின் அன்ன மொழிகளை அசை பிறந்த சூழற்படி வளர்ப்பதுவே நெறி. இவை மொழியியற்கையாதலின், பெருமை சிறுமை என்ற ஏத்துக்கும் ஏச்சுக்கும் இடம் யாண்டுண்டு? என வினவுவது குறிக்கத் தக்கது.

எட்டிப் பறித்த பூக்களில், எழிலார்ந்த நன்மலர்கள் விடுபட்டவே என நண்பர்கள் சுட்டிக்காட்டிய தனித்தமிழ் தானை மறவர்களை நாடு எப்போதும் மறப்பதில்லை.  பாவாணர், மூதறிஞர் வ.சுப.மா., பாவலரேறு, முன்னாள் அமைச்சர் அறிஞர் தமிழ்க்குடிமகன், கழகப் புலவர் இராமநாத அடிகள், இளவழகனார், அண்ணல் கங்கோ, கோவை இளஞ்சேரன், அறிஞர் அருளி, இளங்குமரனார், மதிவாணன், ஈமுசு, வளனரசு என்ற பட்டியல் குறிக்கத்தக்கது.

அறிஞர் தமிழ்க்குடிமகன், அமைச்சராகவும் திகழ்ந்த நிலையில், தனித்தமிழுக்கென அரும்பணியாற்றினார். அரசு ஆணைகளிலும், அறிவிப்புகளிலும், வணிகக் கடைப் பெயர்களிலும் தனித்தமிழ் மணங்கமழச் செய்தார்.

 நூற்றாண்டு கண்ட சைவ சிந்த்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார், வெளியிட்ட அனைத்து நூல்களும், தனித்தமிழ்ச்சாறு ததும்பும் கனிச்சுளைகளாகும். சுழன்றும் சுப்பையா பின்னது பதிப்புலகம் என்று பாவாணர் பாராட்டினார்.

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment