Tamil Language

அருளின் குரல் வரிகள்-03

Written by Dr. Avvai N Arul

பாரதியின் குயில் பாட்டு

==========================

பெருமக்களே,

குயில்பாட்டின் இரண்டாம் இயல்  தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ்  தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது.  இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள். 

சாசன வரிகள், இளையோரின்  இதய கீதம்.

உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப் பாரதியார் சொல்லும்போதே அவருக்கு திருவள்ளுவருடைய இன்பத்துப்பால்தான் நினைவில் நின்றது. அமுதம்போல் இருந்த அந்தப் பெண்ணை நான் தொட்டபொழுதே எனக்கு இன்னுயிற் மலர்ந்தது என்ற குறட்பாக்களை எண்ணிக் கொண்டுதான்

‘வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிலை சாதல்

அதற்கன்னள் நீங்குமிடத்து’,

‘உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்’

இந்தப் பாடல் வரிகளே வந்திருக்கும் என்று நாம் எண்ணத் தோன்றுகிற அளவுக்கு வரலாற்று வரிகளைப் பாடிச் சிறப்பித்த கலைமாமணி சூர்யபிரகாஷை என்னென்று புகழ்வது!?

என்னென்று புகழ்வது!?

பாரதியார் தன்னுடைய குயில்பாட்டு 2ஆம் அத்தியாயத்தை ‘குயிலின் பாட்டு’ என்று இசைப்பாடலாக வடிக்கிறார்.  ‘காதல் போயின் சாதல்’ என்று பல்லவியாகத் தொடங்குகிறார்.  அதனை அடி நாதமாகக் கொண்டு குயில் கூவுவது போல் அடுக்கடுக்காகக் காதல் எத்தகையது என்றும், அது அழிந்து போனால் உயிரும் அங்கே உடலை விட்டு நீங்கிவிடும் எனத் தொடங்குகிறார்.

ஒளி போனால் இருள் போகும் என்று நேரடியாகச் சொன்னவர், இன்பம் இல்லையேல் துன்பம் வரும் என நேரடியாகக் கூறாமல், நம்மைச் சற்றுச் சிந்திக்க வைக்கிறார். இன்பத்திற்கோல் எல்லைகாணின் துன்பம் என ஒரு கருத்தினை வலியுறுத்துகிறார்.  இன்பமும் துன்பமும், கடலும் நிலவும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுள்ளதுபோல், கடலின் கரையில் நீள் உலகம் நிற்பது போலவும் இன்பத்தின் எல்லையாகத் துன்பமும் துன்பத்தின் எல்லையில் இன்பமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு எல்லையாக உள்ளன என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

அதையேதான் இன்பத்திற்கோர் எல்லை காணின் துன்பம்தான் முடிவு என எழுதுகிறார்.  இன்பத்தையும் அளவிற்கு மீறி எல்லைக்குச் சென்றால் துன்பம் வந்து சேரும் என எடுத்துரைக்கிறார்.  அடுத்த அடியில், பாரதியார் குயிலுக்குத் தெரிந்த இன்ப உணர்வு நாதத்தில்தானே உள்ளது என்று ‘நாதத்தில் ஓர் நலிவு உண்டாயின் சேதமாகிவிடும்’ எனக் கூறுகிறார்.

சுரம் பாடுகையில், ஒரு ஒலிக்குறிப்பு மாறினாலும், அந்த இராகம் அழிந்துவிடும் என்று இசையறிஞர்கள் கூறுவர்.  அதை ஓர் ஆணித்தரமான கருத்தாகவும் கொள்வர்.  சங்கராபரணம் கொஞ்சம் தடம் மாறினால் கல்யாணி இராகமாகிவிடும் என்பர்.  குயில் அவ்வாறு கூறுவது மிகப் பொருத்தம் தானே?.  இராகம் குறிப்பிடும்போது தாளம் தானாகவே வரும்.  சுதி மாதா என்றால், இலயம் பிதா என்று சொல்வர்.  எனவேதான் ‘தாளத்திற்கு ஓர் தடையுண்டாயின் கூலமாகிவிடும்’ எனத் தவறிய தாளம் குப்பையாகிவிடுகிறது என எடுத்துக் காட்டுகிறார். 

தப்புத்தாளங்கள் வெறும் ஒலிக்கூட்டங்கள்.  அவை வெறும் சத்தங்கள்.  இனிமைய இழந்த இரைச்சல்கள்.  குப்பையாகிப் போன கூச்சல்கள்.  கரையிழந்து போன கதறல்கள்.  தாளமிட்டு நளினமான ஒலியில் நர்த்தனமாகி வருகின்ற தாளங்கள்தான் நாதத்தின் உயிர் என்பது குயில் கூறும் இசை இலக்கணமாகும் என்று பாரதியா இப்பாடலில் கூறுகிறார்.

இசையும் தாளமும் சேர்ந்ததுதான் பண்ணாகும்.  குயிலின் குரல் பண்ணாகி, பாரெங்கும் காற்றில் பரவி, சோலையனைத்தையும் இசை மழையில் நனைக்கிறது.  அதே பண்ணிற்குப் பழுது ஏற்பட்டுவிட்டால் அது மண்ணாகிவிடும்.  ‘காதல் போயின் சாதல் என்பதும் அதுவேதான்.’  கண்ணைக் காக்கும் இரண்டு இமைகள் போலவே காதலைக் காத்திடுவோம்.  உயிர்த்தீயில் வளர் ஜோதி இந்தக் காதல்.  அது நெஞ்சுக்கு இனிய அமுதாகும்.  துயர் நீங்கி உள்ளம் சுடர் விடச் செய்யும். 

 காதல் ஒளியாகவும், பண்ணாகவும், தாளமாகவும், நாதமாகவும் உலகில் உலவும் உயிர்ப்பொருள்.  இவை இல்லையேல் மரணமே கிட்டும் எனத் தன் மகன் நெகிழ்ந்து குயிலின் பாட்டு மூலம் பாரதியார் அன்பின் மகத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறார்.

குயில் மேலும் கூவுகிறது;  காதல் புகழ் தரும்;  உறுதி தரும்;  உணர்வு தரும் எனக் காதல் குறித்து எடுத்துரைக்கிறது.  புகழில் இழுக்கு நேர்கையில், இகழ்ச்சி அடைவதற்கு வாய்ப்புண்டு.  ‘புகழுக்கு ஓர் புரையுண்டையின் இகழே இகழே இகழே’ எனப் புகழ்கிறது அந்தக் குயில்.  புரை என்பது புண்ணாவதைக் குறிக்கும்.  காதல் புகழடைவதற்குத் தியாகம் தேவை.  தியாகமும், சமர்ப்பணமும் விட்டுக்கொடுத்தலும் புரிதலும் ஒன்று சேர்ந்து காதலைப் புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்லும்.  காதலில் உறுதி சேர்ந்தால்தான் உண்மையான வெற்றியும் கீர்த்தியும் வெல்ல முடியும்.

‘ஒன்றா உலகத்து உயர்ந்த புகழினைப் பெறுவதற்கு உண்மையும், அறமும் உறுதுணையாதல் வேண்டும்.  அவற்றிலிருந்து பாதை விலகும்போது இகழ்ச்சிக்கு வழி வகுத்துத் தீமையும், கேடும் சூழ்ந்துகொள்ளும்’ என்று குயில் பாடுகிறது.

காதல் பாதையில் புகழுடனும், உறுதியுடனும் செல்கையில் உள்ளம் நிலை குலைந்தாலோ, பலவீனமடைந்தாலோ அதுவே இறுதிக்கும், இயலாமைக்கும் அழைத்துச் சென்றுவிடும்.  திண்ணிய நெஞ்சமும், திடமான எண்ணமும்தான் உறுதியை உள்ளத்தில் உட்கார வைக்கும்.  அவை உடையாமல் பார்த்துக்கொள்ளும் மனப் பக்குவமே மாண்பையும், மன மகிழ்ச்சியையும் அளிக்கும். 

காதல், வாழ்வின் புகழும், உறுதியும் கூடலுக்கு வழி வகுக்கும்.  கூடிக் குடும்பமாக இருந்து குதூகலமாக வாழ்வது இயற்கை தரும் வரப்பிரசாதமாகும்.  குமரியும், குமரனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அன்பும், கருணையும் ஒளிமயமாய் இணைந்து இருக்கையில் இன்பமும், இசையுமாய் வாழலாம்.  கூடலில் பிரிவினை ஏற்பட்டால், குமரன் வெளிச்செல்வான் என்றால் வாழ்வெனும் பயிர் வாடிவிடும்.  வாழ்வில் கலையிழந்து வலுவின்றி, வருந்த நேரிடும் என்று குயில் நடக்கப்போவதை இங்குக் குறிப்பாகப் பாடுகிறது. 

வாழ்வின் இசை, குழலின் நாதமாய் இருக்கையில், புல்லாங்குழலில் கீறல் விழுந்தால், இசை அழிந்துவிடும்.  விழலுக்கு இரைத்த நீராகும்.  குழலில் நுழைந்து செல்லும் காற்று, வெறும் காற்றாகவே செல்லும்.  பிரிவும், கீறலும் வாழ்வைப் பாதித்துவிடாமல் பாதுகாக்கக் காதல் வாழ்க்கையில் ஒற்றுமை அவசியம்.  பின் நடக்கப்போகும் சோகத்திற்குக் குயில் முன்னதாகவே படிப்பவருக்கு எடுத்துக்காட்டித் தம் இரண்டாவது அத்தியாயத்தைத் திகில் கருவை உள்ளடக்கி முடிக்கிறார் பாரதியார். 

Love! Love! Love!

When  love is lost, when love is lost,

Death!  Death!  Death!

Grace!  O, gracious light!

If the light of grace, O, be effaced

This night, O, endless night!

Joy!  Joy!  Joy!

If bound of Joy were to be found,

This grief, O, endless grief

Music!  Music!  Music!

If music fails, O, music fails,

This waste, O, endless waste!

Measure, O, musical measure!

If there be blemished in the measure

This rubbish beyond measure!

Melody!  Melody!  Melody!

If blemish creeps in melody,

This dust, O, useless dust!

Fame! Fame!  Fame!

If blame attaches to one’s fame,

This shame, O, endless shame!

Strength of will, O, will,

From strength of will, if there be spill,

This death, O, certain death

Sweet, O, lovers meet

But after the meet for lovers to park,

This pain, O, endless pain!

Flute!  Flute!  Flute!

A rift in the flute, O rift in the flute,

Turns it a reed-a useless reed.

முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment