Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14

Written by Dr. Avvai N Arul

தனித்தமிழியக்கம்..!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன.

பிறமொழிச் சொற்களுக்கு அதிலும் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாகும். பரவலாக ஆட்சியிலுள்ள, தேவையான பிறமொழிச் சொற்களைக்கூட விலக்க வேண்டுமென அவ்வியக்கத்தினர் கூறுவதைப் பலர் ஒப்புக் கொள்ளத் தயங்கலாம். ஆனால், பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத, தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர் என கருதினார் தெ.பொ.மீ. இந்த இயக்கம் பெரும் பாலும் தமிழில் மலிந்த வடசொற்களைக் களையும் நோக்கத்தில் தான் தோன்றியது.


புலவர்கள், கற்றறிந்தோர், அரசு கல்வி நிலையங்கள் ஆகிய நிலைகளில் தனித்தமிழ் உணர்வு பரவுதற்கு இவ்வியக்கம் வழி வகுத்தாலும், அன்றாட வாழ்வில் வளர்ந்த நாகரிகக் கூறுகளால், புதிய துறைகளால், வாணிகம், அறிவியல் வளர்ச்சியால், கல்விப் புதுமைகளால், வடமொழியையும் விஞ்சி ஆங்கிலச் சொற்கள் பரவலாக நுழையத் தொடங்கியதால், இவ்வியக்கம் வடமொழியைப் போல ஆங்கிலச் சொற்களையும்களையும் பெருஞ்சுமையை ஏற்க வேண்டியுள்ளது.
தனித்தமிழியக்கம் தோன்றிய வரலாறு சுவையுடையது. பரிதிமாற் கலைஞரே தனித்தமிழியக்கத்தின் வழிகாட்டி என்றுரைப்பின் பொருந்தும். தம் இயற்பெயராகிய சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். தனிப்பாசுரத்தொகை எனும் நூலின் உண்மைப் பதிப்பு எத்தகையது என்பதை உணர விரும்பித்தான் பரிதிமாற் கலைஞர் எனும் புனைபெயரை அமைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு பெயர் மாற்றம் தொடங்கியதாகப் பின்னர்ப் பலர் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைந்தது.
அளவிறந்த வடமொழிக் கலப்பினை அவர் வெறுத்து ஒதுக் கினார் என்பது உண்மை. அதே நிலையில் அவரது நூலின் தலைப்பு கள், நூலில் அவர் கையாண்ட பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருந்தன.
மனோன்மணியம் பற்றியும் முன்னர் இக்கருத்தைக் காட்டியுள் ளோம். தனித்தமிழ் உணர்ச்சி அவரிடம் அமைத்திருந்தது என்றாலும், நெடுங்காலமாக நிலைத்த வடமொழியின் பிடிப்பிலிருந்து அவரா லும் விடுபட முடியவில்லை என்றே யுரைக்கலாம். மறைமலையடி களார் மட்டுமே பின்னர்த் தனித்தமிழியக்கத்தைக் தோற்றுவித்து, அதனை ஒரு பேரியக்கமாகத் தாமே தலைமையேற்று நடத்தினார். அவர் அவ்வாறு செயற்படத் தூண்டுகோலாயமைந்தது பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் ஆர்வம் என்பதும் நினைக்கத்தக்கது.
‘இந்தச் சூரிய நாராயணருக்கு மட்டும் ஏன் இவ்வளவு தமிழ்ப் பற்று. அதிலும் தனித்தமிழ்ப் பற்று. நான் தனித்தமிழ் இயக் கம் காண்பதற்கு முன்பே அவர் தனித்தமிழ் உணர்ச்சி கொண்டு, தம் வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே’
என்று பரிதிமாற் கலைஞரைப் பற்றித் தம் வாழ்நாள் முழுவதும் மறைமலை அடிகள் பாராட்டிக் கொண்டிருந்தார் என்னும் கருத்து இதனை உறுதி செய்கிறது.
தனித்தமிழ் காக்கவும், வடமொழி நீக்கவும் தமிழகத்தில் தோன்றிய மூன்று வெவ்வேறு அமைவுகள் காரணங்களாயின.

சமயஞ்சார்ந்த தமிழுணர்ச்சி: இதற்குத் தலைமையேற்றவர் மறைமலை அடிகள்.

சமுதாய அடிப்படையில் உருவான மொழியுணர்ச்சி; தந்தை பெரியார் தலைமையேற்கத் தமிழர் திரண்டெழுந்த காலம்.

தேசிய எழுச்சி அடிப்படையில் பிறந்த மொழியுணர்ச்சி: இதில் பாரதியார், வ.உ. சிதம்பரனார், திரு.வி. கலியாணசுந்தரனார் போன்றோர் ஈடுபட்டனர். இம்மூன்று உணர்ச்சிகளும் ஒன்று பட்டு நிகழ்த்திய பெரும்போரில், தமிழ் வடமொழிக் கலப்பி லிருந்து காக்கப்பட்டது எனில், மிகையன்று. தமிழ் மொழியை இழந்தால் தமிழர் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றையும் இழந்து, வடமொழக்குத் தமிழர் அடிமையாவர் என்னும் கருத்து வலிமை பெற்றது. இது பற்றி மறைமலை அடிகளார் வரலாற்று நோக்கில் கண்டு எழுதினார்.


தமிழையும், தமிழரின் கலைகளையும் கலாச்சாரத்தையும் சீர்குலைப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்ச்சி சென்ற 500 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார் அடிகளார், தமிழ்த் தென்றல் திருவிகவும்.

நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. நாம் கண்டது தமிழ் கேட்டது தமிழ் உண்டது தமிழ் உயிர்த்தது தமிழ், உற்றது தமிழ் அத்தமிழ் அமிழ்தங் கொண்ட நாடு இந்நாடு. இதுபோது தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே! காரணமென்ன? உரிமையிழந்தோம்; தமிழை மறந்தோம்; மீண்டும் உரிமையுணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும். தமிழ்த்தாயிடம் செல்வோமாக! அவள்சேவையால் உரிமையுணர்வு பெறலாம்.


தமிழ் மக்களே சேவைக்கு எழுங்கள் எழுங்கள் என எழுச்சி உரையாற்றி, மொழித்தூய்மை காக்க தேசிய உணர்வுடன் முற்பட்டார்.
இத்தகு எழுச்சியால் தமிழ் வடமொழியின் நுழைவுப் பிடியி லிருந்து பெருமளவு நிலைபெற்றது. தந்தை பெரியார் இப்போக் கினை அரசியல் இயக்கமாக்கியதால், தமிழ் மக்கள் அனைவர் நெஞ் சங்களிலும் தமிழ் எழுச்சி பேரெழுச்சியாய் மலர்ந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழியக்கத்தின் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகளாயின. தமிழ்த்தென்றல், நவசக்தி, தேசபக்தன் என்று வெளியிட்டபோது, குடியரசு, விடுதலை அழகியத் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்திய தன்மான இயக்க ஏடுகள், பெரியார் பாசறையிலிருந்து வெளிவந்த படைக்கலன்களாகும்.


எனினும், பம்பாயில் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன் மொழிக் கவியரங்கில், புரட்சிக் கவிஞர் வழங்கிய ஒரு கவிதை யில் இந்தியப் பெருநாட்டை – ஒருமைப்பாட்டைக் கருதினாலும், ஓரினத்து மொழியைப் பல இனத்தும் பரப்பும் முயற்சியைக் கடிந்து கூறினார். ஓரினத்துக்குள்ள மொழியைப் பலவினத்துள்ளும் பரப்ப முயல்வதால், நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரியென்று கொள்வதற்கில்லை. அவ்வவ்வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து, செழுமையாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப் பும் ஒன்றினால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும் என்பது நோக்கமாகும். இப்படி இருவேறு கருத்துகள் இருந்தே வந்தன.

மொழிக்கலப்பால் சொற்கள் வழக்கிழத்தல்
பிறமொழிக்கலப்பு நேர்ந்ததாலும், கலந்த சொற்கள் நிலைத்த வழக்கிலிருப்பதாலும் தொன் மொழியின் சொற்கள் காலப்போக்கில் வழக்கிலிலிருந்தே மறைந்துவிடும். தூய தமிழைக் குழந்தைகளுக் கும் வலியுறுத்தும் நிலையைப் பாவேந்தர் பாடலில் காணலாம்.


காட்சி என்றெழுது தம்பி – சிலர்
காமாஷி என்பார் அது தப்பாம்!
காட்சி எனும் பெயர்தம்பி – கேள்
காணும் எனும் சொல்லின் விளைவாம்
அடிக்கடி உத்யோகம் என்பர் அதை
அலுவல் என்றுரைத்திடு தம்பி
படிப்பது வாசித்தல் இரண்டனில் – உன்
பழந்தமிழ் முன்னது தம்பி!

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்று பெயர்கள் இவ்வடிவம் பெற்றன.

முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment