Tamil Language

தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

Written by Dr. Avvai N Arul

மூதறிஞர் இளங்குமரனார்
( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் .

முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் .அறிஞர் உலகம் உச்சி மேற்கொண்டு மெச்சினர் .

தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளைத் தொகுத்தவர்.

திருக்குறள் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட 4621 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைத் தமிழில் நடத்துவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர்.திருக்குறளை வாழ்வியக்கமாக நடத்தியதோடு தமிழ்ச் செல்வங்களைத் தொகை தொகையாக வெளியிடச் செய்தார் .

ஈராண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் முதுமுனைவர் இளங்குமரனார் உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – பத்துத் தொகுதிகளைத் ,தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் பெருந்தகை கோ இளவழகனாரின் அரும்பெரும் முயற்சியால் வெளியிட்டோம் .

மதுரையில் நான் கல்லூரி மாணவனாயிருந்த போது திருநகரிலிருந்து நாள் தவறாமல் வந்து பேராசிரியர் இலக்குவனாரின் நெஞ்சங் கவர்ந்த நிறை புலவராகத் தனித்தமிழ் உணர்வு ததும்ப அரும்பணிகள் ஆற்றினார்.

தேடித் தேடித் தமிழ்ச் சொற்களின் நுணுக்கம் கண்ட நுழைபுலம் வாய்ந்த முதுமுனைவரின் இழப்பு மனத்துக்குப் பெருங்கலக்கம் தருகிறது.இளங்குமரனார் அணியில் புலவர் பலர் அவர் தமிழ்ப்பணியைத் தொடர்வார்கள் என்றே ஆர்வம் கொண்டு துணிவோமாக ! .

பெரும்புலவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆய்வுலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் .

துயரத்தோடு
ஒளவை நடராசன்
25 7 2021

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment