தமிழில் கடந்த திசைச் சொற்கள்..!
திசைச்சொற்கள்
ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசையினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று.
ஆரியச் சொற்களை எங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வடசொல்லாக்கி வழங்கினார்களோ, அங்ஙனமே திசைச்சொற்களையும் தமிழோசைக்கேற்பத் தமிழ் எழுத்துகளால் தமிழ் நடைப்படுத்தி வழங்குதல் வேண்டும். அங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வழங்கிய வழியே அவை திசைச்சொற்கள் எனப்பட்டன. ஆரிய மொழிக்குரிய எழுத்துகளை அப்படியே வழங்கத் தொடங்கினால், ஏனைய திசைச்சொற்களையும் அவ்வத் திசைமொழிக்குரிய எழுத்துகளால் கொள்ள வேண்டும்.
அங்ஙனம் வழங்குதல் தமிழ்மொழியின் ஒலியமைப்பையும் தூய்மையையும், இலக்கண வரம்பையும் சீர்குலைத்துவிடும். மதி நுட்பமும், மொழிப்பற்றும் மிகுந்த இலக்கணச் சான்றோர் ஆரியம் முதலாய எல்லாத் திசைமொழிச் சொற்களையும் தமிழ் நடைப்படுத்தி வழங்குமாறு ஆணையிட்டனர்.
நன்னூற்கு உரைகண்ட சங்கர நமச்சிவாயப்புலவர், ‘‘வடக்கும் ஒரு திசையன்றோ திசைச்சொல்லன்றி வடசொல்லென வேறு கூறுவதென்னையெனின், தமிழ் நாட்டிற்கு வடதிசைக்கட் பதினெண் மொழிகளுள் ஆரிய முதலிய பல மொழியுளவேனும் தென் தமிழ்க்கு எதிரியது கடவுட் சொல்லாகிய ஆரியமொன்றுமேயென்பது தோன்ற, அவற்றுள் தமிழ் நடைபெற்றதை வடசொல்லென்றும், ஏனைவற்றுள் தமிழ் நடைபெற்றதைத் திசைச்சொல்லென்றும் சான்றோரால் நியமிக்கப்பட்டன என்று உரை எழுதினார்.
இனி அக்காலத்திலே தமிழ்நிலத்தைச் சூழ்ந்த பதினேழ் நிலத்தையும், ‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுகு குடம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவி தாமிவையே’ என்னுஞ் செய்யுளாலறிக’’ என்று கூறினர்.
இந்த பதினேழு நாடுகளின் அமைப்பும் நெருக்கமும் இவையென்று நம்மால் விளக்கமாக அறிய முடியவில்லை. இக்காலத்திற் போர்த்துக்கேய நாடு, ஒல்லாந்த நாடு, ஆங்கிலேய நாடு, பிரெஞ்சு நாடு முதலிய நாடுகளுந் தமிழ் நாட்டுடனும் இலங்கையுடனுந் தொடர்பு கொண்டமை அறியப்படும். அந்நாடுகளுக்குள்ளே ஆங்கில நாட்டுக்குரிய ஆங்கிலம், இந்நாளில் உலகப் பொதுமொழியாக மதிக்கப்படுவதாலும், தமிழ் மொழியை வளப்படுத்தும் புத்தம்புதிய கலைகள் அம்மொழியினின்றும் பெயர்த்துக்கொணர வேண்டியிருத்தலினாலும், அம்மொழிச் சொற்கள் பலவாய்த் தமிழிலே புகுதற்கு வாய்ப்பு உண்டாகும்.
அதனை ஒரு காரணமாகக்கொண்டு புதிய கலைக்குரிய, சொற்களைத் தமிழிலே ஆக்கிக் கொள்ளாது விடுவதும், அக்கலைச் சொற்களைக் அப்படியே வழங்குவதும், தமிழ்மொழிக்குச் செய்யும் கேடாகும் என்பது இலக்கண முடிவாகும். ஆகவே, இன்றியமையாது வேண்டப்படும் சிற்சில இடங்களிலே மட்டும் ஆங்கிலம் முதலான வேறு மொழிச் சொற்களை ஓசையாலும் எழுத்தாலும் தமிழ்நடைப்படுத்தி வழங்கிவருதல் வேண்டும்.
வரம்பிட்டும் தடுக்க முயன்ற நிலையிலும் வடமொழிக் கொள்கைக்கு இலக்கணம் வரைவதற்காகவே கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமத்திரர் வீரசோழியம் எழுதினார். கி.பி 17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து எழுதியதோடு, உரையும் வரைந்தார். வடமொழி தமிழ்மொழி என்னும் இருமொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றே என இவர் கூறினார். இதே நூற்றாண்டில் பிரயோக விவேகம் என்னும் நூலைச் சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றி வடமொழிக்கு வாழ்வளித்தார். சோழர் காலத்தில் கல்வியென்றால் வடமொழிக் கல்வியே ஆகும். கல்லூரிகளில் வேதாந்தம் வியாகரணம், மீமாம்சம் போன்றவற்றைக் கற்பதுதான். தமிழ்க்கல்விக்கென ஒரு மானியம் தரப்பட்டதாக ஒரு கல்வெட்டும் இல்லை. கி.பி. 1640இல் நாயக்க மன்னராட்சியில் மதுரையில் மட்டும் பதினாயிரம் மாணவர் வட மொழிக் கல்வியைக் கற்றனர் என்ற குறிப்பும் உண்டு.
வடமொழியிலும், தமிழ்மொழியிலும் ஒரே வடிவமுடையனவாக வழங்கப்படும் சொற்கள், ஒலிவடிவில் ஒற்றுமைப்பட்டிருப்பினும், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன. நிகர்வடிவமுடைய வடமொழி தென் மொழிச் சொற்கள், முரணான பொருளில் வழங்குதலையும் பின்வரும் பட்டியலில் காணலாம்.
சமஸ்கிருதம் (வடசொல்) – தமிழ்
1. உத்தியோக – முயற்சி உத்தியோகம் – வேலை
2. உபந்யாச – நாவல், புதினம் உபந்நியாஸம் – அருள்நெறிச் சொற்பொழிவு
3. கல்யாண் – நல்ல, மங்கள கலியாணம் – திருமணம்
4. சரித்ர – ஒழுக்கம் சரித்திரம் – வரலாறு
5. சேஷ்ட்டா – முயற்சி, சேஷ்டை – கெட்ட நடவடிக்கை, குறும்பு –
6. பிரசங்கம் – முன்பின் சந்தர்ப்பம் பிரசங்கம் – சமயச் சொற்பொழிவு
7. பத்ர – மென்மையான பத்திரம் – சாக்கிரதை
8. ம்ருக – மான் மிருகம் – விலங்கு
9. விலாஸ் – சுகபோகமான விலாசம் – முகவரி
10. சங்கதி – தொடர்பு சங்கதி – செய்தி
11. சம்சார் – உலகம் சம்சாரம் – மனைவி
12. சமாதான் – ஐயங்களை விளக்குதல் சமாதானம் – ஒத்துப்போதல்
13. சாது – சந்நியாசி சாது – எளியவன், சரளமானவன்
14. அபராத் – குற்றம் அபராதம் – தண்டனை
15. ஆதர – மரியாதை ஆதரவு – துணை
16. பாச – பயிறு பாசம் – பற்று
17. பிரச்ன – கேள்வி பிரச்சினை – சிக்கலான செய்தி
18. ஆலய – இடம் ஆலயம் – கோயில்
19. காய – சரீரம் காயம் – புண்
20. நீர – தண்ணீர் நீர் – நீங்கள்
21. பத்ர – இலை, கடிதம் பத்திரம் – விலைச்சீட்டு
22. பிரமாத் – சோம்பேறித்தனம் பிரமாதம் – நன்றாக
23. யோஜனா – திட்டம் யோசனை – சிந்தனை
24. ரண – போர் ரணம் – காயம்
25. துவார் – வாயில் துவாரம் – சந்து
26. அன்னம் – சமைத்த சாதம் அன்னம் – அன்னப்பறவை
27. வயிராகி – பற்றற்றவன் வைராக்கியம் – மனஉறுதி
28. வைபவ – செழிப்பு வைபவம் – குடும்ப அலுவல்
29. சர – அம்பு சரம் – மாலை தொடுக்கும் நூல்
30. சாலா – கூடம் சாலை – பாதை
31. ஸ்ருங்கார் – இன்பச்சுவையுள்ள சிங்காரம் – அழகுபடுத்துதல்
32. சமய் – காலம் சமயம் – மதம்
33. சகாய – உதவி சகாயம் – மலிவான
34. சித்தி – ஆன்மிக வெற்றி சித்தி – தாயின் தங்கை
35. காதக் – கொல்பவன் காதகன் – பொறாமைக்காரன்
36. பசு – பிராணி பசு – பசுமாடு
37. மணி – இரத்தினம் மணி – காலம்
38. சமாச்சார் -உயர்ந்த ஒழுக்கம் சமாச்சாரம் – செய்தி
39. அகம் – ஆணவம் அகம் – உள்ளே (வீடு)
40. கேவல் – தனியே கேவலம் – இழிந்த
41. புருஷ் – ஆண்மகன் புருஷன் – கணவன்
42. விகட் – மிகக் கடுமையான விகடம் – நகைச்சுவை
43. அவதி – எல்லை அவதி – துன்பம்
44. விஜய் – வெற்றி விஜயம் – வருகை
45. விஷய – ஐம்பொறிகளால் நுகரும் பொருள்கள் விஷயம் – செய்தி
46. ஆலோசனா – திறனாய்வு ஆலோசனை – யோசனைகேட்பது
47. ஆஸா – நம்பிக்கை ஆசை – விருப்பம்
48. நிர்வாணம் – முத்தி, வீடுபேறு நிர்வாணம் – ஆடையற்ற நிலை
49. நாம் – பெயர் நாமம் – திரிபுண்டரம் அணிதல்
50. காலத்தைக் கழிப்பது காலட்சேபம் – சமயச்சொற்பொழிவு
51. கரி – யானை கரி – அடுப்புக்கரி
52 முத்ரா – நாணயம் முத்திரை – சின்னம்
53. மாத்ரா – அளவு மாத்திரை – மருந்து, மாத்திரை
54. காயம் – ஆகாசம்
55. பூதி, பூழ்தி விபூதி
56. புடவி – ப்ருத்வி
57. மதங்கம் – மிருதங்
58. பவளம் – பிரவாளம்
59. மெது – ம்ருது
60. செவியுறு ஸ்ரு
தமிழ் வடமொழி
1. அப்பம்
2. அரவம்
3. ஆயிரம்
4. உரு, உருவம்
5. கலுழன்
6. காலம்
7. சாமை
8. சொல்வம்
9. திடம்
10. தீவு
11. பக்கம்
12. படிமை
13. பரம்
14. பாகம்
15. மண்டலம்
16. மந்திரம்
17. மயில்
18. முகம்
19. மாயை
20. முத்து, முத்தம்
இவ்வாறு சொற்கள் சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன. உலகத் தொடர்பு பெருகும்போது, பல்வேறு மொழிச் சொற்கள் பல்கும்போது, தூய்மையும் தாய்மையும் அமைந்துவிடுகின்றன.
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
தொடர்புக்கு:dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.