Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-12

Written by Dr. Avvai N Arul
மொழிக்கலப்பும் - நன்னூல் காட்டும் நெறிப்பாடும்..!

=================================================

நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன.

இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும்,

அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு;

யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம்

பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19)

அவற்றுள்,

ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து

இடையில் முன்றும், அவ்அம் முதலும்,

எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்;

மேல் ஒன்று ச, டவும்; இரண்டு ச, தவும்;

முன்றே அ, கவும்; ஐந்து இரு கவ்வும்;

ஆ, ஈறு ஐயும், ஈ, ஈறு இகரமும். (20)

ரவ்விற்கு அம் முதல் ஆம் முக் குறிலும்,

லவ்விற்கு இம் முதல் இரண்டும், யவ்விற்கு

இய்யும், மொழி முதல் ஆகி முன் வருமே. (21)

இணைந்து இயல்காலை ய, ர, லக்கு, இகரமும்,

மவ், வக்கு, உகரமும், நகரக்கு அகரமும்,

மிசை வரும்; ரவ் வழி உவ்வும் ஆம் பிற. (22)

ற, ன, ழ, எ, ஒவ்வும், உயிர்மெய்யும், உயிரளபு,

அல்லாச் சார்பும், தமிழ், பிற பொதுவே. (23)

நன்னூலார் இந் நூற்பாக்களில், வடமொழியாக்கம்’ நிகழும் நெறி முறைகளைச் சுட்டினார். தமிழுக்கு இலக்கணம் வகுத்த நன்னூலார், வடமொழியாக்கத்திற்குத் தனித் தலைப்பு வகுத்துக் கொண்டு இலக்கணம் வரைவது சிந்திப்பதற்குரியது. தமிழ்க் கலைகளோடன்றி வடவர் வடமொழிக் கலப்பு மிக்கோங்கி வடவர் கலைகளை அறிந்துகொள்வதற்குத் துணையாகத் தவிர்க்க வியலாத நிலையில், தமிழ் வழக்கில் வடசொற்களை இடம்பெறச் செய்யும் முறைகளை நன்னூ லார் காட்டியுள்ளார். நன்னூல் கூறும் விதிகளின்படி, வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும்போது, தமிழில் மொழிக்கு முதலில் வாராத ரகரம் வடசொல்லில் வந்திருந்தால், அதன் முன் அ இ உ என்பன வற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும்.

சான்று ரங்கம் – அரங்கம் ராமன் – இராமன்

ரோமம் – உ ரோமம்

மொழி முதலில் வாராத லகரம் வட சொல்லில் இருந்தால், அதன்முன் இ, உ என்பனவற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும்.

சான்று லேசு – இலேசு லோகம் – உலோகம்

வடசொல்லின் ஈகார இறுதி தமிழில் இகரமாக வேண்டும். ஆகார இறுதி ஐகாரமாக வேண்டும்.

சான்று கெளரீ – கெளரி ; சீதா – சீதை

வடசொல்லின் மொழி இடைச் சிறப்பு மெய், தமிழில் அவ்வவ் விடத்து முதல் மெய்யாக வேண்டும். ஜ என்பது ச ஆக வேண்டும் அல்லது யகரமாக வேண்டும்.

சான்று நிஜம் – நிசம் பங்கஜம் – பங்கயம்

வடசொல்லின் ஸ என்பது தமிழில் தகரமாக வேண்டும்.

சான்று மாஸம் – மாதம்

வடசொல்லின் ஷ என்பது தமிழில் டகரமாக வேண்டும்.

சான்று நஷ்டம் – நட்டம் வேஷம் – வேடம்

வடசொல்லின் முதலிலோ இடையிலோ வருகிற ‘ஹ’ என்பது தமிழில் மறைந்து விட வேண்டும்.

சான்று ஹரி – அரி: பிராஹ்மணர் – பிராமணர்

வடசொல்லின் க்ஷ என்பது தமிழில் க்ச அல்லது ட்ச ஆக வேண்டும்.

சான்று மீனாக்ஷி – மீனாட்சி பக்ஷம் – பக்கம்  பக்ஷி – பட்சி

தமிழில் மயங்கக்கூடாத இரண்டு மெய்கள் வடசொல்லில் மயங்கி வந்தால், அது தமிழாகும்போது ஓர் ஒற்றுடன் உகரம் அல்லது இகரம் சேர்க்க வேண்டும்.

சான்று பக்வம் – பக்குவம் பத்மம் – பதுமம்

ரத்னம் – இரத்தினம் சுக்லம் – சுக்கிலம்

அல்லது மயங்கக் கூடாத இரண்டு மெய்களும் ஓரினமாக்கப் படவேண்டும்.

சான்று சிம்ஹம் – சிம்மம் கன்யா – கன்னி

வடசொல் யகரத்துடன் தொடங்கினால், தமிழில் யகரத்தின் முன் இகரம் அல்லது உகரம் சேர்க்க வேண்டும்.

சான்று யமன் – இயமன் யுத்தம் – உயுத்தம்

அல்லது யகரம் எகரமாக வேண்டும். அல்லது யகரம் உகர மாக வேண்டும்.

சான்று யமன் – எமன் யுத்தம் – உத்தம்

யுக்தி – உத்தி

மேலே வடசொல்லுக்குக் கூறப்பட்ட விதிமுறைகள் பிறமொழிச் சொற்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

சான்று ரயில் – இரயில் வில் – உயில் பெஞ்ச் – பெஞ்சு

ஜேசு – இயேசு பஃராங் – பரங்கி லண்டன் – இலண்டன்

ஜனவரி – சனவரி

பிறமொழிக் கலப்பைப் பற்றிச் சிந்தித்து, நன்னூலார் அளித்த கருத்துகளை இலக்கண முறையாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய நிலையில் தமிழ்ப்புலவர் சிலர் யாப்பியலும் புத்தி லக்கண வரைவியலும் செய்துள்ளனர் அவ்வகையில் தமிழ் என்ற இலக்கண நூல் யாத்த திருவாரூர்ப் புலவர் சரவணத் தமிழன், அயல் மொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதுவதற்கான விதிகளை வரையறுத்துள்ளார்.

‘எழுத்தைக் குறிப்பினும் அயன்மொழிப் பெயர்ச்சொல் வழுத் தும் பொழுதில் வாய்ப்பு நோக்கியும் கூறிய மூவகை மாறியும் வருமே.” என்னும் நூற்பாவின் வழிப் பிறமொழிப் பெயர்களை எடுத்துக் கூறும் போதில், மூவிட விதி சற்றே மாறுபட வரலாம் என்பது கருத்து. சான்று கால்டுவெல், கேப்டன், பெர்னாட்சா, அலெக்சாண்டர், குப்தர், அப்துல், அப்துல் வகாப்பு, இட்லர், போப்பு).

தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பதைத் தற்சமம், தற்பவம், திரிபு என்று குறிப்பதுண்டு. யாதொரு மாறுபாடும் இன்றித் தமிழில் வழங்குவது தற்சமமாகும். நதி, ஜலம், பருவதம், தேசம் முத லியன சான்றுகளாகும். வடமொழிச் சொற்கள் நேர்வடிவில் அமை யாமல், பிராகிருதச் சொற்களாயிருந்து தமிழில் இடம் பெறுவதைத் தற்பவம் என்பர். தற்பவம் என்பது பின்வருமாறு அமையும்:

வடமொழி பிராகிருதம் தமிழ்

ஸ்திரி இத்தி த்தி (மறத்தி)

ராகு ராணி

ஆகு ஆனா ஆணை

முக்தா முத்தா முத்து

ஆர்ய அஜ்ஜ அய்யன்

ப்ரவாலி பவள பவளம்

வணிஜ வாணிய வாணியன்

கிருஷ்ண கண்ண கண்ணன்

சிரேஷ்டி செய்டி சேடசெட்டி

திரிபு இரு வகைப்படும்.

1. திரிவு விதிகளின்படி மாறுபட்டுத் தமிழில் வழங்கும் வட மொழிச் சொற்களாக உலகம், அரசன், அட்டமி, முத்தி, பக்கம், புரிதல், இராமன், அரங்கம், இலக்கணம், இலக்கியம், பகுதி முத லியவற்றைக் குறிக்கலாம்.

2. எவ்விதிக்கும் இசையாது உருக்குலைந்தவை என்ற நிலையில் அவிட்டம், திருவோணம், கேட்டை, ஆயில்யம், வைகாசி, மார்கழி, பங்குனி முதலியன என்பர்.

தமிழுள் வழங்கும் வடசொற்களுள் பல உபசருக்கங்கள் ஒட்டி வருவனவாகக் காணப்படுகின்றன. மதிநுட்பம் என்னும் குறளுரையில், ‘அதி என்பது ஓர் இடைச்சொல் என்று பரிமேலழகர் குறிப்பிட்டார். இவ்வாறு இடைச்சொற்கள் இருப்பதாகக் கொள்வாருண்டு. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.

பிர – பிரதானம், மிகுதி, எதிர்

பரா – பின், எதிர், அதிகம், முரிதல்

அப – எதிர், அப்பால், பிரிவு, தள்ளல்

சம் – சுகம், நன்மை, அழகு

அது – பின், கூட, வரிசை, ஒப்பு

நிர் – நிச்சயம், விலக்கு, வெளியாதல்

துர் – நிந்தை, துக்கம், விலக்கு

வி – விலக்கு, பிரிவு, விசேட நிச்சயம், அற்பம்

ஆ – அற்பம், எதிர், எல்லை, நிறைவு

நி – அதிகம், சமீபம், நிச்சயம், எதிர்

அபி – ஐயம், நிந்தை, பின்

அதி – அதிகம், கடத்தல், அதிசயம்

சு – மேன்மை, அதிகம், அதிசயம்

உத் – மேல், அதிகம், விகற்பம்

பிரதி – எதிர், விலக்கு, அளவு

இவ்வாறு நன்னூல், மொழிக்கலப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறையை வரையறுத்துக் கூறுகிறது. இவ்வரையறை இருந்தும் சொற்களின் பொருள் முழுமையும் அறியாது தமிழில் அச்சொற்களே திரிபடைந்தன.

சான்றாக, ‘நீர் என்ற இனிய தனித் தமிழ்ச்சொல்லை  நீர, நீரம், நீரஜா என்ற வடமொழிப் புணர்ப்பாக்கி மாற்றியதோடன்றி பிற்கால நூலாசிரியர் தமது நூல்களில் மேற்கோளாக நீர் என்ற சொல்லைச் சமக்கிருதமாகச் சுட்டியதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம். நீர், மீன் சொற்களை வடசொற்களாக நினைப்பதற்குத் துளியும் இடமில்லை. நீர் என்பது மென்மை, தண்மை, இயல்பு, நேர்மை என்றெல்லாம் பொருள்படுமாறு இலக்கியங்கள் காட்டியதை மொழிஞாயிறு பாவாணர் எடுத்துச் சொல்லிப் பெருமிதம் ஊட்டினார்.

மணிப்பிரவாளம்

பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடைப்போக்குத் தமிழகத்தில் தோன்றியது. மாலையில் மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுக்கப்பட்டதைப் போன்று, தமிழ்த் தொடர்களையும் வடமொழித் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கே இலக்கிய மணிப்பிரவாள நடையாகும்.

மணிமிடை பவளம் என்ற அகநானூற்றுத் தொடரைப் பின்னாளில் கலப்பு வடிவுக்கும் பெயராகக் காட்டினர். மாணவர்களுக்கு இனிமையாக இவ்விதிமுறையை ஊட்ட வேண்டும் என்று பேராசிரியர் தெய்வசுந்தரம் வலியுறுத்துவார். மெல்ல மெல்லப் பழக்கத்தில் இந்த விதிமுறை இலக்கியப் பயிற்சியால் பதிய வேண்டும்.

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment