அதென்னவோ
அந்த நாள் முதல் இன்று வரை
சலூன் கடைகள்தான் நமக்கு
தகவல் மையங்கள்,
செய்தி கூடங்கள் எல்லாம்.
வீட்டு வாசலுக்கே தினசரி பத்திரிக்கை
ஆண்டாண்டு காலமாக
வந்தாலும் கூட
முடிதிருத்தும் நிலையங்களுக்குப்
போனால் , அங்கே காத்திருக்கும்
தருணங்களில் ஓரிரு பக்கங்களாக செய்திதாள்களை
புரட்டுவது தனிசுகமே.
—
சமீபத்திய ஊரடங்கில்
வேர் விட்டு விழுது பரப்பிய
தாடி, மீசை, தலைமுடி எல்லாம்
சீரமைத்திட
தம்பி கண்ணனின் கடைக்குச் சென்றேன் –
அவர்தான் நமது ஆஸ்தான டிசைனர்.
” ராஜாண்ணே
இந்த முறை மீசையை கொஞ்சம்
இறக்கி விடுவோமா ?
போதும் அண்ணே
ரொம்ப வேணாம்
ஒரு போலிஸ் கட்டிங் செய்துடுவோம்
சரியா ” ?
இப்படி பேசிக்கொண்டே
கடைக்காரர் – எனது தலையை
தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த வேளையில்…
ஒரு அம்மா , அவரது இளம்பெண்
ஒரு இருபது வயதினை ஒத்த
இளைஞன் மூவரும்
சலூன் கடைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் பேச்சின் மூலமாக
தாயும், அவரின் பிள்ளைகளான
அக்காவும் தம்பியும் என்று
தெரிய வந்தது.
பொதுவாகவே கிராமத்து
சலூன் கடைகளில் பெரிதும்
ஆண்களே அதிகம் புழங்கும்
இடங்களான அவற்றில்,
இளம்பெண் வந்து அமர்வதை
நான் இதுவரை பார்த்தில்லை
– என்பதால் சற்று ஆர்வம் மேலிட
கடைக்காரரிடம் வம்படியாக
பேசும் அந்த பெண்ணின் துணிச்சலை
வேடிக்கை பார்க்கிறேன்.
” இதோ பாரு கண்ணா
பார்த்து ஒழுங்கா முடிவெட்டு
பராக்கு பார்த்துகிட்டே
முடிவெட்டாத அவனுக்கு
, எல்லாம் எனக்குத் தெரியும்
நீ சும்மா இரு
என்ன தெரியும் உனக்கு ?
போன தடவை
நல்லாவே நீ
முடிவெட்டிவிடல அவனுக்கு…
ஆங், உன் தம்பி என்ன கலெக்டர்
வேலையா பார்க்குறான்
மாடு மேய்க்கிறவனுக்கு இது போதும்
மாடு மேய்க்கிறது கேவலமா ?
உனக்கு என்ன அதெல்லாம்
சும்மாவா முடி வெட்டுற
காசு வாங்குற இல்ல ?
ஆமாங் , நீங்க அப்படியே காசு
கொடுத்துட்டாலும்
ஏன் ஓசியிலா செய்ற நீ,
சரி சரி என்கிட்ட பேசாத வேலைய
பாரு, ஒழுங்கா அவனுக்கு Haircut
பண்ணு,
ஆ சரி சரி,
இந்தா நீ போய்
அந்தாண்ட
உக்காரு போ “
—
கண்ணன் என்னிடம் திரும்பி
பார்த்துவிட்டு
அண்ணே அது அப்படிதான் வாயாடி !
திருப்பூர்ல வேலை
பாக்குது,
அவன் அதோட தம்பி “
என்று சொல்லிக்கொண்டே
வேலையை தொடர்ந்தார்.
சிறு வயதிலிருந்தே
எனது அக்காவின் வளர்ப்பான
எனக்கு ,
அவள் பாடம் சொல்லித் தந்து
படித்த எனக்கு ,
அவளிடம் இன்றுவரை கதை+கவிதை
பற்றி எல்லாம் விவாதிக்கும்
எனக்கு …
இந்த அக்கா + தம்பி
இருவரும் மனதில் நின்றுவிட்டதில்
ஒரு ஆச்சர்யமும் இல்லைதான்.
—
கதாநாயகிகளான
சித்தாரா, ரோஜா –
இவர்கள் எல்லாம்
அவர்களின் நண்பர்களான
கார்த்திக் , ஆனந்த்பாபு போன்ற
நாயகர்கள்
சலூன் நாற்காலியில்
முடிதிருத்திட அமர்ந்திருக்கும்போது
இந்த ஹீரோயின்கள்
அதே சலூன் கடை பெஞ்சில்
அமர்ந்து செய்தித்தாள்
வாசித்துக் காட்டி சிரித்துக்
கொண்டிருப்பது
போன்ற காட்சிகள் வரும்.
“இதெல்லாம் சினிமாவில்தான்
சாத்தியம், நிஜ வாழ்க்கையில்
நடக்குமா ? அதுவும் இந்த விக்ரமன்
அநியாயத்துக்கு கற்பனை செய்றாருபா ” என்று
கிண்டலடித்தவர்களில் நானும் ஒருவன்.
இன்று நேரிடையாக
அவர்கள் இருவரையும் இதுபோன்று
காட்சியில் பார்த்தவுடன்,
“லாலால்லா
லாலால்லா” தான்
வீடு திரும்பும் வரை.
// ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
சில ஞாபகம் கலந்திருக்கும் //
*போட்டோவில் காண்பது
எனது இளைய பிள்ளை குருகுகன்-
கண்ணன் சலூனில்.
Leave a Comment
You must be logged in to post a comment.