“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்”
பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.
கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம் மகள்) திருமண வரவேற்பிற்காக வேலூர் காட்பாடிக்கு அருகிலுள்ள ‘திருமணி’ கிராமத்திற்குச் செல்லும் இனிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன்.
என் சின்னத் தாத்தா தான் திருமணிக்குக் கணக்குப்பிள்ளை. ஊர்க்கணக்கு வேலை தலைமுறை தலைமுறையாக வந்தது. எங்கள் பெரிய தாத்தா மயிலாசலம் பிள்ளை (உரைவேந்தரின் அண்ணன்) ஆலைக்கிராமம், ஒளவையார் குப்பம் கணக்குப்பிள்ளையாவார். ‘
எதுவும் இல்லையென்றால் கணக்கு இசும்பு இவனுக்குக் கிடைக்கும்’ என்று பாட்டி சொல்வார்கள்.
‘இசும்பு’ என்பது தலைமுறையாகத் தொடர்ந்து வரும் ஈர்ப்பு.
ஏரி, கரை, வயல், வாய்க்கால், குளம், கபிலம், ஏற்றம், தென்னந்தோப்பு, பனைமரக்குலை, புளியந்தோப்பு, காளை, காராம்பசு, கன்று, ஆடு, ஊர் ஓரத்தில் இருந்த ஊது உலை, வீதியில் நெசவாளர் நூல் கட்டியிருப்பது, தெருக்கூத்து இவைகளையெல்லாம் மெல்ல மெல்ல நினைவில் படர்கின்றன.
திருமணியில் பஜனைக்கோயில் தெருவில் உள்ள பெரிய வீடுதான் என் சின்னத்தாத்தா இல்லமாகும். அங்கிருந்து மணமக்கள் திரௌபதியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு, திருமணச் சடங்குகளில் ஈடுபடுவது கண்டு மகிழ்ந்தேன்.
அவர்களின் திருமணம் அன்று காலை அண்ணா நகர் இல்லத்திற்கு அருகிலுள்ள திரு.வி.க. பூங்காவிற்கு எதிரில் புல்லாரெட்டி நிழற்சாலையில் உள்ள ‘ஜோதி வித்யாலயா’ பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.
அச்சாலையில்தான் எங்கள் தாயாரின் மருத்துவச் சிற்றில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருமணி கிராமத்தில் நான்கைந்து நாள்கள் தங்கி அண்ணன் இளங்கோவின் அன்பு அரவணைப்பில் கிணற்றில் நீச்சலடித்துத் திளைத்தேன். அக்கிணறு ஆழமாகவும் அகலமாகவும் இருந்ததை என் கண்கள் இன்றும் மறக்கவில்லை. என்னுடைய நீச்சுப் பயில் திறனுக்கு இக்கிணற்றுக் குளியல் அடித்தளமாகும்.
அண்ணன் இளங்கோ, வீட்டுத் திண்ணையில் அமர்ந்த வண்ணம், ‘ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா… வா….’ என்ற புரட்சித் தலைவரின் பாடலை நயமாகப் பாடி மகிழ்வித்ததையும் மறவேன்.
வழக்கறிஞர் செல்வத்தரசின் மூத்த அண்ணன் தான் திரு இராஜா என்பவராவார். அவரும் எந்தையாரும் இணைபிரியா நண்பர்களாகப் பள்ளி நாள்களில் மகிழ்ந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். இராஜாவும் எந்தையாரை அண்ணன் என்றே அழைத்து உருகுவார்.
எந்தையார், எங்கள் மூவரையும் அம்மாவுடன் அழைத்துக் கொண்டு வடலூருக்குச் செல்லும் வழக்கமுண்டு.
வடலூரிலுள்ள மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்று மகிழ்ந்து விளையாடுகிற நினைவலைகள் நீளமானவையாகும்.
தவத்திரு ஊரனடிகளாரின் அன்பும் பண்பும் எங்களை எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அவர் காலை உணவாக இட்டலியையும் மிளகாய்ப் பொடியினையும் சேர்த்துப் பிசைந்து உண்ணும் பழக்கம் இன்றைக்கும் அவர் கூறி மகிழ்வார்.
அப்பழக்கம் என்னையும் தென்னாப்பிரிக்காவிலுள்ள என் தம்பி பரதனையும் இன்றும் விட்டு நீங்கவில்லை.
அது தலைமுறை தலைமுறையாக வளரும் என்றே எண்ணுகிறேன்.
தமிழக அரசு முதன்முதலாக அருட்பிரகாச வள்ளலார் விருது என்று அறிவித்தவுடன் அவ்விருதுக்கு தகுதிவாய்ந்து அணிசெய்யும் பெருமை அடிகளாரைத்தான் சாரும் என்று நினைத்தேன்.
01.02.2021-அன்று அவ்விருது தவத்திரு ஊரனடிகளாருக்கே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
1967-ஆம் ஆண்டில், திருச்சியில் தவத்திரு ஊரனடிகளார் துறவு வாழ்வை மேற்கொண்ட பொழுது சன்மார்க்க உலகின் வேர் ஊரனடிகள் பற்றிய குறிப்பைத் தன்னுடைய எழுபதாம் அகவை மலரில் அடிகளார் பொறித்துள்ளார்.
சமயபுரம் ஊரன் அடிகள் 23.5.1967-ம் நாளில் சத்திய தருமச்சாலை நூற்றாண்டு விழாவின்போது அருட்திரு. சன்மார்க்க தேசிகன் என்னும் திருப்பெயர் பூண்டு துறவு பூண்ட பெருநிலையைப் போற்றி எந்தையார் எழுதிய பொருளுரை:-
‘கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாங் கண்டேன்
அடர்கடந்த திருவமுதுண் டருளொளியால் அனைத்தும்
அறிந்து தெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்குஞ் சித்தியெலாம் என் வசமோங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவனருட் செயலே’
அருட்பிரகாச வள்ளற்பெருமான் அருளிய அமுதப் பாக்களின் அலங்கலாகத் திகழும் ஞானப் பெருநூலாகிய திருவருட்பா நூற்றாண்டு விழாவும், மேலையிலே, இம்மையிலே, ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம் ஒரு பகலில் தரும் சத்திய தருமச் சாலை நூற்றாண்டு விழாவும் ஆகிய இருபெரு நூற்றாண்டு விழாக்களும் இணைந்து கொண்டாடப்பெறும் இவ்வினிய பொழுதில், தாங்கள் வள்ளற் பெருமானை வணங்கி வழிபட்டதோடன்றி அவற்கே ஆட்படும் வகையில் “உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார்” என்னும் செம்மொழிக்கேற்பத் துறவு பூண்டதை அறிந்து நாங்கள் வியந்து போற்றுகின்றோம்.
உரை, செயல், சிந்தை என்ற மூன்றையும் ஒரு நெறிக்கே வைத்து அருட்பா அடியாரான புதுமையைத் தமிழகம் பல்லாண்டுகள் கழித்து இன்றே கண்டு மகிழ்கின்றது.
“கடைவிரித்தேன், கொள்வாரில்லை” எனப் பெருமான் கவன்றுரைத்த காலம் கழிந்து திருவருட்பாத் திருநெறியைப் போற்றி மகிழும் ஆர்வம் இன்று மக்களிடையே அரும்பி வருகின்றது.
காலமுண்டாகவே, இக்காதல் அவர்பால் நிலைநிற்குமாறு செய்யும் கடன் நமது அருங்கடனாகும்.
இந்நிலையில் தாங்கள் மேற்கொண்டுள்ள துறவுநெறி வாயிலாக சிறப்பாகச் செந்தமிழ்நாடு முழுதும், பொதுவாக உலக முழுவதுமாக விரிவுரைத் தொண்டுகளும், விளக்கவுரை நூல்களும் ஆக்கிச் சன்மார்க்கப் பெருநெறியை உலக முழுவதும் தழையுமாறு செய்தல் வேண்டும்.
அப்பெரும்பணியாற்ற வள்ளற்பெருமான் அருளால், நீடிய வாழ்வும் நிறை நலமும் பெற்று உயர்ந்தோங்குமாறு இறைஞ்சுகின்றோம்.
‘தன்னைவிடத் தலைமையொரு தகவினுமிங் கியலாத்
தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
பொன்னடியென் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
இருவருமொன் றாகியிங்கே இருக்கின்றோம் இதுதான்
நின்னருளே அறிந்ததெனிற் செயுஞ்செய்கை அனைத்தும்
நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே’
என் பாட்டனார் உரைவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டதை நான் நினைவுகூர்கிறேன்.
இரண்டாம் வகுப்பு பயிலும்போது, என்னுடைய சித்தப்பா ‘சமயப் பொழிவாளர்’ திருநாவுக்கரசு – ‘அறுசுவை அரசி’ முத்துலட்சுமி (23.08.1974) திருமணம் நுங்கம்பாக்கதிலுள்ள அகத்தீசுவரர் திருக்கோயிலில் நடைபெற்றது.
பிறகு விருந்து என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் (லோகாம்பாள் பாட்டியின் தம்பி) இல்லத்தில் நடைபெற்றது.
நான் ஆறாம் வகுப்பு பயிலும்போது, மருத்துவ மாமணி மெய்கண்டான் – ‘இசையரசி’ சீதை (ஔவை டி.கே. முத்துசாமி திருமகள்) இராயப்பேட்டையில் ஹேமமாலினி திருமண மண்டபத்தில் (26.10.1978) நடைபெற்றது.
ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் நடத்தி வைத்தார். மாலை வரவேற்பில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.வி. இரமணன் இன்னிசை மழையில் நனைந்தோம்.
நினைவில் வாழும் மருத்துவத் திலகம் நெடுமாறன் – ‘மருத்துவச்சுடர்’ கலாவதி திருமணம் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் (03.03.1980) சீரும் சிறப்புமாக நடைபெற்றதும் பசுமையாக நினைவில் உள்ளது.
அவ்வண்ணமே சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும்பொழுது என் வகுப்புத் தோழன் தீபக்கும் நானும் விடுமுறை விண்ணப்பம் வழங்கியபோது, என் வகுப்பாசிரியர் ‘என்ன இருவரும் ஒரே திருமணத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் இருவரும் உறவினர்களா?’ என்று உசாவினார்.
நான் உடனே ‘என் சின்னத்தாத்தா ஏகாம்பரம் அவர்களின் இரண்டாம் மகன் அமெரிக்கா வாழ் ‘அறிவியல் வாணர்’ வானவன் திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றேன்.
உடனே தீபக் (மருத்துவர் சினேகலதா மகன்), ‘எங்கள் பக்கத்து வீட்டு அக்கா ஆனந்தி திருமணத்திற்குச் செல்கிறேன்’ என்றார்.
சிரித்துக் கொண்டே ஆசிரியர், ‘நம் பள்ளிக்கு அருகிலுள்ள ‘குசலாம்பாள்’ திருமண மண்டபத்திற்குத்தான் வருகிறீர்களா’ என்று திருமண அழைப்பிதழைப் பார்த்துச் சொன்னார்.
என் மாமா வானவன் இல்லத் திருமணம் இனிதாக (03.09.1981) நடைபெற்றது.
பனிரெண்டாம் வகுப்பு பயிலும்போது, எங்கள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பால் ஆங்கிலத்துறை நல்லாசிரியர் சுதா திருமணத்தில் நாங்கள் ஓடியாடி அனைத்துப் பணிகளையும் செய்தது மறக்கவொண்ணா நிகழ்வாகும்.அண்ணா நகரிலுள்ள பெரியார் திருமணக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற திருமணம் ஆகும்.
தவத்திரு. அழகர் அடிகளாரின் பெயரன் மீஞ்சூர் மருத்துவர் சண்முகம் – குமுதவல்லி திருமகன் மருத்துவர் நலங்கிள்ளியை என் அக்கா இனிதே கரம் பிடித்தார் (08.06.1984).
குடும்பத்தினர் அனைவரும் குலவிளக்குகளாகச் சுடர்விட்டு அங்குமிங்குமாக அமெரிக்கா, இலண்டன், ஆசுதிரேலியா, நியூசிலாந்து, துபாய், சென்னை, மதுரை, கோவை என வளமாக வாழ்ந்து வருகின்றனர்.
பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை
உ.குன்றுதோறாடல்
‘மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்,
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும்பல் லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகரில் சேவலம்
கொடியன், நெடியன், தொடையணி தோளன்,
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு,
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்,
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்,
முழுவுறழ் தடக்கையி னியல் வேந்தி,
மென்றோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து,
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே!’
மயிலைப் போன்ற மென்னடை மகளிரொடு செம்மையானவன், சிவந்த ஆடையை உடுத்தியவன், அசோகின் இளந்தளிரைச் செருகிக்கொண்ட காதினன், கச்சையணிந்தவன், கழலணிந்தவன், வெட்சிமாலையணிந்தவன், காதில் குழல் செருகியவன், ஆரவாரத்தன், சிறிய பல வாத்தியங்களைக் கொண்டவன், மயிலூர்தியன், குற்றமற்ற அழகிய சேவற்கொடியன், நெடியன், தோள்வளை புனைந்த தோளினன், நரம்பு எழுப்புகின்ற இனிய குரலொடு சிறு புள்ளிகளையுடைய தண்ணிய சாயல் கொண்டு, அரையில் பிணித்த, நிலத்தையளக்கும் ஆடையணிந்தவன். உரிமை மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டு, குன்றுதோறும் ஆடல் நிகழ்த்துவதும் அவனுடைய நிலைத்த பண்பே!
ஊ.பழமுதிர்சோலை
‘அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோர் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!
மாலை மார்ப! நூலறி புலவ!
செருவி லொருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்த ரேறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
இந்தத் துதித்தொடர்களை விடியலில் என் தாத்தா (உரைவேந்தர் ஔவை துரைசாமி) இசையுடன் பாடுவார்.
கார்த்திகை மகளிராம் அறுவர் பெற்ற அருஞ் செல்வனே! பெருமலை நாயகியாம் மலைமகள் மகனே! ஆலமர் கடவுளின் அரும்புதல்வனே! பகைவர்க்குக் கூற்றுவனாக உள்ளவனே! வெற்றிச்செல்வியாம் துர்க்கையின் சிறுவனே! அணிகலச் சிறப்புடைய காளியின் குழந்தையே! தேவாசுரப் போரில் தேவர்படைக்குத் தலைவனே! மணமிகுந்த மாலையணிந்த மார்பனே! நூலறிவுமிக்க நுண்ணிய புலவனே! போர்புரிவதில் ஒப்பற்றவனே! போர்க்களத்துப் பெருவீரங் கொண்ட இளைஞனே! அறவோராகிய அந்தணர்தம் செல்வமே! நூலறிந்த புலவர்தம் சொல்மலையே! தெய்வயானை கணவனே! வள்ளியம்மை மணாளனே! ஆற்றல்மிக்க இளஞ்சிங்கமே! கையில் வேலாயுதத்தைத் தாங்கிய பெருங்குணச் செல்வனே! கிரௌஞ்சமலையை குறுகு பெயர்க்குன்றம் அழித்த குறைவிலா வீரத்து, விண்ணளாவிய நெடுமலைக் குறிஞ்சியின் கோமானே! பலரும் பாராட்டிப் புகழ்கின்ற நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெரும் தொழில் மரபின் பெரும்பெயர் கொண்ட முருக வேளே! பழமுதிர் சோலை மலைகிழவோனே!
வளரும்…
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
Leave a Comment
You must be logged in to post a comment.