புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித அளவில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை 100/=
“இதை வைத்துக்கொண்டு என்ன செய்வீங்க? வாட் இஸ் தி யூஸ் ?” என்றார் பக்கத்தில் இருந்தவர்
”அமெரிக்கா, பாரிஸ் போகும் அங்கே மொமொண்டோ என்று ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து எல்லோரிடமும் அந்தப் பொம்மையைப் பெருமையாக காண்பிக்கிறோம். இது துணி ஆனால் இதன் பின் கதை இருக்கிறது, ஜகந்நாத பெருமாள் கோயில் மீது ஒரு நாள் அதற்குச் சம்பந்தம் இருக்கிறது”
உடனே அவர் என்னிடம் பேச்சை நிறுத்துவிட்டு ஐந்து கொடிகளை வாங்கிக்கொண்டார்.
ஜகந்நாதரின் விமானக் கோபுரத்தின் உயரம் 214 அடி. அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு, அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் ஆற்றப்படுகிறது. கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாக செய்து வருகிறார்கள். சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்கள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள். என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சுஜாதா தேசிகன்
31-08-2021
ஸ்ரீஜெயந்தி
Leave a Comment
You must be logged in to post a comment.