Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 45

Written by Dr. Avvai N Arul

“எண்ணிப் பார்த்து ஏற்றம் பெறுக”

என் வலது காலின் தசைப்பகுதியில் காயம்பட்ட ஒரு வடு நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக உள்ளது.அவ்வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு ஒரு நிகழ்வு நெஞ்சை நெருடும்.
நான் நான்காம் வகுப்புப் (1976) பயிலும்பொழுது, மாலைவேளைகளில், கிரிக்கெட் மட்டையும் ஓட்டமுமாக இருப்பது வழக்கம்.
விளையாட்டுத் திடலிலிருந்து அண்ணாநகர் இல்லத்திற்கு வேகமாக வந்து எங்கள் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டுவதுபோலப் பாய்ந்து தாவிக் குதிக்கும் முன், பாதி சுவருடன் நானும் தரையில் விழுந்தேன்.
விழுந்த வேகத்தில், எழமுடியாமல் தத்தளித்தேன். அப்பொழுது உதவிக் கரம் நீட்டி என்னை அண்ணாநகரிலுள்ள செல்வரங்கம் மருத்து மனைக்கு தன் சீருந்தில் தானே ஓட்டிக் கொண்டு அழைத்துச்சென்றவர் திருமதி இலட்சுமி நம்பியார், எங்கள் வீட்டின் எதிர்வீட்டு திரு. நம்பியாரின் துணைவியார் ஆவார்.
அவர்களுடைய மகன் இராமதாசு எங்கள் விளையாட்டுத் தோழராவார்.
என் பெற்றோர் இருவரும் அலுவலகத்திலிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் திரும்பிடாத நேரமது.
மருத்துவர் செல்வரங்கம் ‘இன்னும் ஒரு செங்கல் விழுந்திருந்தால் உனக்கு எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
திரு. நம்பியார் அந்நாளைய பெரிய விளம்பர நிறுவன நிருவாகியாவார். அவர் நடத்திய நிறுவனத்தின் பெயர், சாயா விளம்பர நிறுவனமாகும்.
நாங்கள் அண்ணா நகருக்கு வருவதற்கு முன்பே 1969-ஆம் ஆண்டிலேயே அவர்கள் குடியேறியவர்கள் ஆவார்கள். நாங்களெல்லாம் பெருமையாக அவர்கள் இல்லத்தை வெள்ளை மாளிகை என்றுதான் அப்போது சொல்லி மகிழ்வோம்.
இராமதாசு தன் பெற்றோர்களைவிட தன்னுடைய அம்மம்மா (ருக்மணியம்மா) மீது மிகுந்த மரியாதையும் பரிவும் கொண்டவராவார். அவ்வண்ணமே அவர்கள் மகள் சோபா என் அம்மாவிடம் தமிழ்ப் பாடங்களில் சந்தேகங்களைக் கேட்டுக் களைவார். எங்கள் வீட்டின் ஊஞ்சலிலும் மகிழ்ந்து ஆடிச் செல்வார்.
திரு. நம்பியார், எந்தையாரிடம் அவ்வப்போது நலம் பாராட்டும் நல்லறிஞர்.சுவாமி சின்மயானந்தரின் நன்னெறிகளின் வழிநடப்பவர். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் காவல்துறைத் தலைவராயிருந்த திரு.இலட்சுமி நாராயணனிடம் நட்பு பூண்டவர்.
பல ஆண்டுகளாகக் காலை வேளைகளில் மேற்கொள்ளும் நீண்ட நடைப்பயிற்சிக்குப் பெயர் பெற்றவராவார்.
ஏழாம் வகுப்பு பயிலும்பொழுது, தேசிய மாணவர் படையின், கப்பற் பிரிவில் நான் இணைந்து, வாரத்தில் செவ்வாய், வியாழன் மாலை 6 மணி வரை நடைபெறும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டேன்.
அணிவகுப்பு நடையில் குளறுபடி செய்ய நேர்ந்தால், பின் கழுத்துப் பக்கமாக வேகமாக அறைகின்ற ஆசிரியப் பெருமகனாகத் திரு.வேலாயுதம் அச்சமூட்டுவார். அவர் கரம்பட்டால் வலி பெருகும்.
பயிற்சி முடிந்த பிறகு, செவ்வாய்க் கிழமைகளில் வழங்கும் பன், எலுமிச்சைச்சாறு, வியாழக்கிழமைகளில் உப்புமா, வடை, சுடச்சுடத் தேநீர் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆனால், என் அண்ணன் கண்ணன் ஒருபோதும் உண்ணாமல் தவறாமல் தன்னுடைய உணவுப் பெட்டியில் எங்களுக்காகச் சிற்றுண்டியினை எடுத்து வருவது வாடிக்கையாகும். அதனாலோ என்னவோ, நான் தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன் என்றுகூட நினைப்பதுண்டு.
அண்ணன் என்னைவிட ஈராண்டு மூத்தவர். அவரும் தே.மா.படையில் கப்பற் பிரிவில் இருந்தபோது, 1982-83-ஆம் ஆண்டுகளில், தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அதற்குரிய தீவிர உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டதை வியந்து பார்த்தேன்.
பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள குசால்தாசு வள மாளிகையில் நடைபெறும் பயிற்சிகளைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண் தேவை.
தில்லி அணிவகுப்பிற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் என் அண்ணன், கிழக்குக் கப்பற் படைப்பிரிவில் (விசாகப்பட்டினம்) – ஐ.என்.எசு. விக்ராந்த் வானூர்தி தாங்கிப் போர்க் கப்பலிலும், ஆக்ராவிலுள்ள இந்திய விமானப்படை பாராசூட் வீரர் பயிற்சிப் பள்ளியிலும், தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பவியல் நிறுவனத்திலும், ஆவடியிலுள்ள டோனாகேலா முகாமிலும் பயிற்சிபெறும் வாய்ப்புப் பெற்றார்.
ஆனால், ஏதோ காரணத்தால் என் அண்ணனுக்குப் பதிலாக வேற்றொரு நபர் தில்லி அணிவகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது இன்றும் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. சில தருணங்களில், தகுதியை நிறுத்திப் பார்க்கும் எடைக்கல்லேகூட ஏமாற்றமளித்தது.
மாநிலக் கல்லூரியில் இரண்டாமாண்டு தமிழிலக்கியம் பயின்றபோது (1987) நண்பர் ஜோதி இராமலிங்கத்தின் வழிகாட்டுதலில் சென்னைத் தொலைக்காட்சியில் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அன்பரசு தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய உரைப் பகுதி:
“எதிர்பார்ப்பின் அரசாகவும், எந்த நிலையிலும் அன்பானவராகவும் தலைசிறந்த பண்பாளராகத் திகழும் தகுதியுடைய தலைவர் அவர்களே! நாநலம் நாடும் நண்பர்களே! தொலைக்காட்சி அன்பர்களே! வணக்கம்.
எதிர்பார்ப்புடன் வாழ்வது என்பது ஒன்றை ஆய்ந்து அதில் தோய்ந்துபோய்த் தொடரும் வாழ்வாகும்.
எதுவரினும் ஏற்பது என்பது சாய்ந்த பார்வையாகும், ஏன் ஒரு தேய்ந்த வாழ்வுக்கு வழிவகுக்கும். இளைஞர்கள் வளம்பெறக் களம் அமைப்பது எதிர்பார்த்த வாழ்வாகும். அதுவே சரிபார்த்த நெடுங்கணக்காகும்.
வாழ்க்கை என்பது வானவில் என்றும், வண்ணக்கலவை என்பதெல்லாம், பாடல்களின் பார்வைகளாகும்.
வாழ்க்கையென்பது இப்படி நடந்தால் அப்படி வளரும் என்று சீர் தூக்கிப் பார்க்கும் கணிதமாகும். இந்தக் கணக்கை எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். எது வரினும் ஏற்பவர்களுக்குப் பிணக்கு வர வைக்கும். இன்னும் பார்த்தால், வாழ்க்கையென்பதை ஏணியைப் போலப் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றவர்கள், வெற்றிபெறவேண்டும் என்ற நம்பிக்கைதான், அதிர்ச்சி தராத நங்கூரமாகும். அசையாமல் நிலைநிறுத்தும்.
இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ இடமில்லை! நடப்பதை நாளை யாரறிவார்? என்பவையெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சி நடுங்கிய வேதாந்திகள் வடித்து வைத்த வேதனை விருத்தங்கள்.
எதையும் கணக்கிட்டுப் பார்த்து இது எப்படி நடக்கும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதுதான் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும், பெருமை சேர்க்கும்.
எனவே, எதிர்பார்ப்புடன் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையாகும்.
இரும்பு கூடத் தோற்கும் உறுதியான வாழ்க்கையாகும்.
எது வந்தாலும் பரவாயில்லை என்பது கண்மூடித்தனமான முடிவல்லவா?
அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் என்பது திருக்குறள்.
இதற்குச் சான்றாக ஒன்று சொல்லலாம். மருத்துவமனை வாயிலில் சீருந்துகளும், பிற வண்டிகளும் மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைப் பலகை தொங்கும்.
ஏனெனில் ஓடிவரும் சிறார்களுக்கும், நலிந்து போன நோயாளிகளும் வருவதற்கு வசதி பயக்க இவ்வழியாகும்.
அதைப் பார்க்காமல் வேகமாக வருவேன், நடந்து வருபவர்கள் பார்த்து வரட்டும் என்ற முரட்டு உணர்வுடையோர் செயற்படின் அது நோய் வாழ்வாகும். வருபவர்களுக்கே நலம் பயக்க மெதுவாக வருவது அறிவு வாழ்வு.
முன்னே சொன்னது, எதுவரினும் ஏற்பேன் என்ற முரட்டு வாழ்வாகும். பின்னே வருவது முரட்டு வாழ்வை தெருட்டி வாழும் உன்னத வாழ்வாகும்.
எதையும் தாங்கலாம் என்பது ஒரு போக்கு, இதைத் தாங்கலாம், இதைத் தகர்க்கலாம் என்று வரையறுத்துக் கொள்வதுதான் வாலிபம்.
ஆக, எதுவரினும் ஏற்பது என்பது, எதையும் தாங்க முடியாமல் வாழ்வையும் ஓங்க முடியாமலும் வாழும் வாழ்வாகும்.
எதிர்பார்த்து விழித்துச் செயற்படும் வாழ்வில் சிலவற்றைத் தாங்கலாம், சில தாங்க முடியாது, ஒரு சில கருத்துகளைத் தாங்கலாம், ஒருசில கருத்துகளைத் தகர்க்கலாம் என்று வரையறுக்கும் உண்மை வாழ்வாகும்.
எதுவரினும் ஏற்பது, இப்படி வாழ வேண்டும் என்றில்லாமல் எப்படியும் வாழலாம் என்ற தப்பு நெறியாளர்களின் வாழ்வு ஒரு வலி வாழ்வாகும்.
இதை எப்படியும் அடைவேன், கொண்டதை வெல்வேன், கொள்கையில் வழுவேன் என்ற உயர் நெறியாளர்களின் வாழ்வு,
வலதுபுறம் விழுந்தால்தான் உண்ணுகின்ற தன்மையுடைய வரிப்புலி வாழ்வாகும்.
ஆக, நண்பர்களே!
எதிர்பார்ப்புடன் இந்தப் பெருமையுடன் நாம் நடத்தும் வரிப்புலி வாழ்வு மேன்மையானதா? எதுவரினும், எது கொடுப்பினும் யார் தடுப்பின்றி வாழும் எலி வாழ்வு உன்னதமானதா என்பதை நீங்கள் சீர்தூக்கி எண்ணிப் பார்ப்பீர்.

இந்த எண்ணம் பெற்றால் நாம் பகுத்தறிவில் புத்தறிவைக் காண்போம் என்பது மெய்யாகும்”.

புறநானூற்றுப் பொற்றுகள்:-
புறநானூற்றின் முதற் பதிப்பு 1894 ஆம் ஆண்டு வெளிவந்தது. டாக்டர் உ.வே.சா. புறநானூற்றுப் பதிப்பு தமிழகத்துக்கு வழங்கிய பெருங்கொடையாகும்.
புறநானூறு தமிழகத்தின் வரலாறும் வாழ்வியலும் காட்டும் பெரும்புதையலாகும்.
கடந்த 125 ஆண்டுகளில் ஏறத்தாழ 30 பதிப்புக்களை தமிழுலகம் கண்டுள்ளது.
அண்மையில் வெளியிட்ட அறிஞர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா புறநானூற்றை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்.
Ø கடவுள் வாழ்த்து
Ø சிற்றூர்களுக்கள் சிறுநடை
Ø வேந்தர்களின் வரிசை
Ø போர் விளைந்த காரணம், போருக்குப்பின் போருக்குமுன், வீரர் மறைவும் புலவர் நிலையும்
Ø போருக்குப் பின் பெண்களின் நிலை
Ø அரசுக்கு அறிவுரை
Ø முதிர்ந்த சிந்தனைகள்
பாடல்கள் சொற்பிரிப்போடு வனப்புற எளிய விளக்கம் எழுதி அறிஞர் பாப்பையா வழங்கும் பெறற்கரிய பெரும்பரிசு.
முதற்பதிப்பை வெளியிட்ட தமிழ்க்கடல் டாக்டர் உ.வே.சா. புறநானூறு முழுவதையும் பிழிந்த பொருள் முடிவுகளாக பின்வரும் 39 முடிவுகளை எழுதியுள்ளார்.
“முன்னாளிடையே இந்நாடாண்ட, காவலர் பல்லோர் பாவலர் பல்லோர், மாசரிதத்தை ஆசற விளக்கிச், சொற்சுவை பொருட்சுவை துவன்றி எஞ்ஞான்றும், ஒப்புமையில்லாத் திப்பிய நடையுடைத், திறப் பாடமைந்த இப் புறப்பாட்டுக்கள்,
Ø தெய்வ வணக்கம் செய்யும் என்பவும்,
Ø அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும்,
Ø பாவ வழியை நீ வல் நன்றென்பவும்,
Ø இம்மைப் பயனொடு மறுமைப் பயனைச்,
Ø செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும்,
Ø அந்தணரியல்பைத் தந்துரைப்பனவும்,
Ø அரச நீதியை உரைசெய்வனவும்,
Ø வணிக இயல்பைத் துணிவுறுப்பனவும்,
Ø வேளாண் மாக்களின் தாளாண்மையினை, இயம்புவனவும்
Ø வயம்புரி போர்க்கு முந்தும் அரசரை சந்து செய்வனவும்,
Ø ஒற்றுமைப் பயனைச் சொற்றிடுவனவும்,
Ø வீரச் சிறப்பை ஆரத்தெரிப்பவும்,
Ø இல்லறமாகிய நல்லறம் உரைப்பவும்,
Ø துறவறம் அதனைத் திறவிதிற் தெரிப்பவும் ,
Ø மிடித்துன்பத்தை எடுத்துரைப்பனவும்,
Ø வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும் என்னுமிவற்றைப் பன்னுவனவும்,
Ø அளியையும் ஒளியையும் தெளிவுறுப்பனவும்,
Ø தம்மைப் புரந்தோர் தாம் மாய்ந்திடவே, புலவர்கள் புலம்பி அலமரல் தெறிப்பவும்,
Ø நட்பின் பயனை நன்கு இயம்புனவும்,
Ø கல்விப் பயனைக் கட்டுரைப்பனவும்,
Ø நீர்நிலை பெருக்கென நிகழ்த்துவனவும்,
Ø மானந் தன்னைத் தான் நன்குரைப்பவும்,
Ø இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா என்றே இசைத்து நன்று ஏய்ப்பனவும்,
Ø அருளுடைமையினை மருளறத் தெரிப்பவும்
Ø தரமறிந்து ஒழுக என்று உரனுற விதிப்பவும்,
Ø அவாவின் கேடே தவாவின்று
Ø இனியவை கூறல் நனிநலன் என்பவும் ,
Ø உழவின் பெருமையை அழகுற உரைப்பனவும்,
Ø நன்றி அறிக என்று இசைப்பனவும்,
Ø கொடுங்கோன்மையினை விடுங்கோல் என்பவும்,
Ø தவத்தின் பெருமையைத் தவப்பகர்வனவும்,
Ø மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும்,
Ø கொலையெனும் பகையைத் தொலைமின் என்பவும்,
Ø நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த்தணந்து, தாழ்வொன்று இன்றி வாழ்மின் என்பவும்,
Ø சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும்,
Ø கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும்
Ø மக்கட் பேற்றின் மாண்புரைப்பனவும்,
Ø கணவனை இழந்த மணமலி கூந்தல் தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும்,
Ø கைம்மை விரத வெம்மை விரிப்பவும்,
இன்னும் பற்பல பன்னுவனவுமாய்ச், செப்புநர் எவர்க்கும் ஏய்ப்பிடை வைப்பாய், அரும் பெறல் மரபில் பெரும்பயன் தருமே” என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக்கூறுவதன்றி (39) இன்னபாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேன் அல்லேன்.
Ø போர் பற்றியன
Ø போரால் விளையும் புகழ் பற்றியன
Ø வறுமை
Ø வன்மை
Ø நட்பின் பயன்
Ø கல்வியின் சிறப்பு
Ø மானஉணர்வின் இன்றியமையாமை
Ø பழிக்கு அஞ்சுதல்
Ø இல்லறம்
Ø துறவறம்
Ø மக்கட்பேறு
Ø உழவின் உயர்வு
Ø கைம்மைக் கொடுமை
Ø கற்பின் திறம்
Ø நிலையாமை – ஆகியன புறத்தில் அடங்கும்.
கரந்தை முதல் வெட்சி வரை 11 திணைகளும் அரசியல் வாகை முதல் வேத்தியல் வரை 60 க்கு மேற்பட்ட துறைகளில் பாடல்கள் உள்ளன.
ஆற்றுப்படை, தூது, பரணி, பள்ளிஎழுச்சி, காஞ்சி போன்ற இலக்கிய வகைகள் மட்டுமல்லாமல் பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் என அனைத்தும் புறநானூற்றுக்கு கடன்பட்டிருப்பது கண்கூடு.
டாக்டர் ஜி.யூ.போப் 71 புறப்பாடல்களையும் 59 புறப்பொருள் வெண்பாமாலை பாடல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
வளரும்…

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment