“நம்பி வழங்கிய நன்கொடை”
சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக
காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம் பாடவேளை)
காலநிரல்வரிசையில் படைவீரரின் மிடுக்கோடு பயின்றோம். ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து 21 நாள்கள் கடைப்பிடித்தால் பழக்கம் வழக்கமாகிவிடும் என்பார்கள்.
ஏழாண்டுத் தொடர் பழக்கத்திற்குப் பிறகு, மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தமிழிலக்கியம் பயிலும்போது பல நிலைகளில் மருட்சியாக இருந்தது. அதனால் வளரிளமையில் சுணக்கம் ஏற்பட்டு வகுப்புகளுக்குத் தாமதமாக வருவதும் மாலையில் இல்லத்திற்கு விரைந்து செல்வதும் ஒரு மரபாக மாறத்தொடங்கியது. இந்த உரிமையைக் கண்டு என் அம்மா மிக வருத்தப்படத் தொடங்கினார்கள்.
இம்முறைமையை அப்பாவிடம் சுட்டிக் காட்டி, “அருளை மாலையில் நீங்கள் செல்லும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் பேசுகிற உரைகளையாவது கேட்டுத் தமிழ் படிப்பதற்கு மேலும் தூண்டுதலாக அவனுக்கு அமையும்” என்று வலியுறுத்தினார்கள்.
அக்கருத்தினை ஏற்றுக்கொண்டு, அவருடைய கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன்.
ஒருமுறை, இராயப்பேட்டையிலுள்ள காந்திய அறநிலையத்தில், ‘கலைக் காவலன் கோவலன்’ என்ற தலைப்பில் அப்பா மாலை 5 மணிக்குப் பேச வந்தார். எண்ணிப் பார்த்தால், அவரையும் சேர்த்து மொத்தம் 8 பேர்தான் இருந்தோம். எண்ணிக்கை பெரிதல்ல, வந்தவர்களின் எண்ணங்கள் காவிய மனமுடையன என்று சொல்லி அப்பா பேசிக் கொண்டிருந்தார். ‘விடுதல் அறியா விருப்பினன்’ என்ற தொடரை விளக்கிக் காட்டிப் பேசியது என் நினைவில் மின்னலிடுகிறது. அவருடைய நெருங்கிய நண்பர் நயவுரை நம்பி இடையில் வந்தமர்ந்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். உரை முடிந்தபிறகு அவரை வழியனுப்புவதற்கு அவர் வாகனம் வரை நான் சென்றேன்.
அவர் என்மீது அளப்பரிய அன்பு கொண்டவர். நான் பள்ளிகளில் படிக்கும் பொழுதே, சில வேளைகளில் வகுப்பாசிரியர்கள் மாணவர்களை நல்ல சமுதாயத் திட்டங்களுக்காக இருபது பேரிடமிருந்து நன்கொடை வாங்குவதற்கு விண்ணப்பப்படிவங்கள் அளிப்பது இயல்பாகும். நான் உரிமையாக எதிர்வீடு, பக்கத்துவீடு, அடுத்தவீடு, நண்பர்கள், உறவினர்கள் என்று அந்தப் படிவங்களை நிரப்பிப் பணம் வாங்குவேன்.
குறைந்தளவு பத்து ரூபாயிலிருந்து, அதிகபட்சம் ஐம்பது ரூபாய் வரைதான் கிடைக்கும். ஆனால், நயவுரை நம்பி மட்டும் ஐநூறு ரூபாய் வழங்குவார்.
அப்பொழுதே எங்கள் அம்மா அவரிடம் ‘இவ்வளவு பணமா?’ என்று கேட்கும்பொழுது, அவர் சிரித்துக் கொண்டு, “அக்கா, நம் அருள் வகுப்பில் முதலில் வரவில்லையென்றாலும் கவலையில்லை. நன்கொடையிலாவது முதல் மாணவனாக இருக்கட்டுமே” என்று அன்பு பாராட்டுவார்.
அவர் அன்றைக்கு சீருந்தில் ஏறும்போது என்னைப் பார்த்து, “என்ன அருள்? இவ்வளவு மணிநேரத்தை வீணடிக்கிறாயே! நீ என்னுடைய பொறியியல் கல்லூரியிலாவது சேர்ந்திருக்கலாம் அல்லவா? இப்போது வேண்டுமென்றாலும் என்னுடைய பாரத் பொறியியற் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன்.
எந்தத் துறை விருப்பமோ சொல். சேர்த்து விடுகிறேன்” என்று மிக அன்பாக வலியுறுத்தினார்.
“கோவலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதுவா பருவம்? இதுவா நேரம்?” என்று சொல்லிக் கொண்டே, “How many Man-hours are getting wasted!” என்று திடுக்கிடுமாறு சொல்லிச் சென்றார்.
பள்ளியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் வருகின்ற சுற்றறிக்கைகள் வாயிலாகவோ நண்பர்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய சூழல் ஏதும் இல்லாத காரணத்தால், இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாண்டுத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் தெரியாததாலும், உரிய நேரத்தில் தேர்வுக்கட்டணம் கட்டாத காரணத்தாலும் என்னால் தேர்வு எழுத இயலாமற் போயிற்று. அப்பாவும் அம்மாவும் சோர்ந்து போனார்கள்.
ஆண்டுத்தேர்வு நடந்தபொழுது (14.04.1986) மதுரையில் நடந்த உலகத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவிற்கு அப்பாவுடன் மதுரைக்குச் சென்று விட்டேன்.
அப்போது நண்பர்கள் அப்பாவிடம், என்னைப்பற்றி வினவியபோது சிரித்துக்கொண்டே சொன்னார், ‘அருள் சராசரி மாணவனை விடச் சரிந்து போனவன்’ என்று. கண்களில் நீர் முட்டியது.எப்படியாவது நிமிர வேண்டும் என்ற ஏக்கம் அலைமோதியது. என் தாய் பட்ட கவலை என்னை அழவைத்தது.
கல்லூரி நண்பர்கள் சிவகுமாரும், வா.மு.சே. ஆண்டவரும் என்னை ஒரு மாலை வேளையில், தாசப்பிரகாஷ் உணவகத்திற்கு எதிரிலுள்ள தருமபிரகாஷ் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில் தமிழறிஞர்கள் பலருடன் நாங்களும் போய் அக்கூட்டத்தில் அமர்ந்தோம். மேடையில் எழுத்துலக வேந்தர்களான, ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி ஆகியோர் இந்தி மொழிக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும்போதே தன்னுடைய மிடுக்கான குரலில் சற்றுத் தரக்குறைவாகப் பேச முற்பட்டபோது, பெருங்கவிக்கோ தன்னுடைய பெருமீசையை முறுக்கிக்கொண்டே ‘நெற்றிக்கண் திறக்கும் சிவனைப்’ போலச் சீறி நின்றி விழிகள் சிவக்க “நிறுத்து உன் பேச்சை” என்று முழங்கினார். உடனே அங்கிருந்த என் நண்பர்கள் நாற்காலிகளை எடுத்து மேசையை நோக்கி வீசத் தொடங்கினார்கள்.
உடனே என் நண்பர் சிவகுமார் ‘இந்தி ஒழிக’ என்று சொல்லி என்னையும் நாற்காலியை வீசச் சொன்னார். என்னைக் கவர்ந்த எழுத்துப் பெருமக்கள் இருவரையும் காலம் எப்படியாவது தானாக மாற்றும் என்று கருதிய நான், சில நேரங்களில் சில மனிதர்களை, குறிஞ்சி மலர்களையும் நெறிஞ்சி முட்களாக மாற்றியதைக் கண்டு அண்ணாந்து பார்த்தபடி நின்றேன்.
இளங்லையில் தமிழிலக்கியத்தைத் தவிர வாரத்தில் இரண்டு நாள்கள் பிறதுறை மாணவர்களுடன் இணைந்து ஆங்கில வகுப்புப் பாடங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்பொழுது, அறிமுகமான பாடம்தான் ஷேக்ஸ்பியரின் ‘வணிகபுரி வணிகர்’ (Merchant of Venice) நாடகம் ஆகும். அப்பாடத்தை மிக நளினமாக நடத்திய ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர் பெர்னாட்ஷாவை மறக்கவே முடியாது. அவர் ஷேக்ஸ்பியர் நடையைப் போலவே பேசிக் காட்டி எங்களையெல்லாம் வியப்படையச் செய்தார்.
அவ்வண்ணமே, பேராசிரியர்கள் சிதம்பரம் குமாரசாமி, துரைசாமி, சமய உலகில் புகழ்பெற்ற டாக்டர் பிரேமா பாண்டுரங்கன் ஆகியோர் மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்களாக மிளிர்ந்தனர். ஆங்கிலத் துறையின் துறைத் தலைவர் முனைவர் பீட்ரிக்ஸ் திசோசா அம்மையார் மிக அழகாக ஆங்கிலம் பேசுவதும், தலைமைக் குணத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்.
மாநிலக் கல்லூரியில் சேருவதற்கு முன்னரே என்னுடைய சிற்றப்பா டாக்டர் ஞானசம்பந்தன் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகத் திகழ்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அவர் பெருமைகளையெல்லாம் எங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர் மறைமலை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஒருமுறை அப்பாவும் சித்தப்பாவும் இணைந்து பட்டிமன்றம் பேசினார்கள். அப்போது, மாற்று அணியில் பேசிய சித்தப்பா, அப்பாவைப் பார்த்து, “உங்கள் பேச்சில் என்ன இருக்கிறது? Words words nothing but words” என்று கூறினார்.
சிரித்துக் கொண்டே என் தந்தையார் “நானும் சொல்லுகிறேன். உனக்கு நான் மொழி கற்றுக் கொடுத்தேன். என்மீது வசை பொழிகிறாய்” என்று Prospero, Caliban-ஐப் பார்த்துச் சொன்ன ஷேக்ஸ்பியர் நாடகத் தொடரைச் சொன்னார். வாகீசக் கலாநிதி கி.வா.ஜ. சொன்ன “இரண்டு லட்டுகள் மோதினால் பூந்தியாய்க் கொட்டும்.” என்ற தொடர்தான் என் நினைவுக்கு வந்தது.
புறநானூற்று புதையல்
புறநானூறு எட்டுத்தொகையுள் அமைந்த முழுப் புறப்பொருள் நூல்கள் இரண்டினுள் ஒன்றாகும். இந்நூலின் நானூறு பாடல்களில் இரண்டு முழுப்பாடல்கள் கிடைக்கவில்லை. சில பாடல்களில் சிற்சில அடிகள் சிதைந்துள்ளன.
கிடைக்கும் 398 பாடல்களைப் பாடிய புலவர்கள் நூற்றைம்பத் தெழுவராவர். இந்நூலைச் சுவடிகளிலிருந்து அச்சுப் பதிப்பாகத் தக்க ஆய்வுரையோடு தமிழ்க்கடல் உ.வே.சா. 1894-ஆம் ஆண்டில் முதற்கண் வெளியிட்டார்.
266 பாடல்கள் வரையிலான பழைய உரையையும், பிற பாடல்களுக்கான குறிப்புரையையும் சேர்த்து ஐயரவர்கள் இந்நூலை வெளியிட்டார்.
பிறகு 1947-ஆம் ஆண்டில், உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் நூல் முழுமைக்குமான தம் உரையுடன் இந்நூலை வெளியிட்டார்கள். சங்க இலக்கியங்களில் மிகுந்த படிப்புக்கும் பயிற்சிக்கும் உரியதாகத் திகழ்வது இப்புறநானூறேயாகும்.
இந்நூலின் பால் அறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கொண்ட ஆர்வம் பற்றிக் கூறுகையில் தமிழ்க்கடல் உ.வே.சா. எழுதிய குறிப்புரை பெருமையுடையது.
“காலஞ்சென்ற ஜி.யு.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்பு உண்டாவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
அவர் இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் இப்புத்தகத்தைப் பாராட்டி அடிக்கடி எனக்கு எழுதுவதுண்டு. இதிலுள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கின்றார்
ஒவ்வோர் ஆங்கில வருடப் பிறப்பன்றும் இந்நூற் செய்யுட்களுள் ஒன்றை மொழிபெயர்த்து எனக்குச் சில ஆண்டுகள் வரையில் அனுப்பி வைத்தார்”
அயல்நாட்டாரையும் ஈர்த்த செம்மொழிப் பனுவல் புறநானூறு என்பது இதனால் புலப்படும்.
தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று எண்ணுகின்றபோது தமிழர்தம் வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சாகத் திகழ்வது புறநானூறேயாகும்.
கூனரை நிமிர்த்துகின்ற வீரவுணர்வு செறிந்த புகழ்ப்பாக்களின் தோப்பாகப் புறநானூறு திகழ்கின்றது.
பாடிய புலவர்கள்
மொத்தப் புலவர்களின் எண்ணிக்கை 157. 157 பேரும் 386 பாடல்களைப் பாடியுள்ளனர்.12 பாடல்களைப் பாடினோர் பெயர் தெரியவில்லை .
பெண்பால் புலவர்கள் 15 பேர், ஆண்பால் புலவர்கள் 142 பேர். புறநானூற்றில் மட்டும் பாடல் பாடியவர்களாக அறியவரும் புலவர்கள் 76 பேர்.
அரசர்கள் பற்றியன 400 பாடல்களில் 138 பாடல்கள் 43 வேந்தர்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன.(பாண்டியர் – 37, சேரர் – 27, சோழர் – 74) 141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.
திணை, துறைகள் 400 பாடல்கள் 11 திணையிலும் 65 துறைகளிலும் பாடப்பட்டுள்ளன. (பாடாண் திணை பற்றி மட்டும் 139 பாடல்கள் உள்ளன. வாகை – 77, பொதுவியல் – 67), 19 பாடல்களுக்குத் திணையும், 13 பாடல்களுக்குத் துறையும், ஒரே ஒரு பாடலுக்குத் திணை, துறையும் குறிப்பிடப்படவில்லை.
‘மலர் என்றாலே குரவம், தளவும், குருந்தம், முல்லை என்கிற நான்கு மலர்தான்.
உணவு என்றாலே தினை, வரகு, அவரை, கொள் இவை நான்கே. குடி என்றாலே துடியன் முதல் நான்கே, அப்படிக் கடவுள் என்றாலே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனது நடுகல்லே’ என உறுதியிட்டுச் சொல்லும் மாங்குடி கிழாரின் குரல் நினைக்கத் தக்கது.
வளரும்…
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
Leave a Comment
You must be logged in to post a comment.