Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42

Written by Dr. Avvai N Arul

” சான்றோர் சான்றோர் பால ராப ” !


நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.
தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும் .
கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகத் திகழ்ந்த திரு.ஆனந்தன் அண்ணாநகர் இல்லத்திற்குச் சென்று பயின்றதையும் நான் நினைவு கூர்கிறேன்.
அதேபோல், வேதியியல் பாடத்தை அண்ணாநகர் மேற்கில் திரு புஜங்கா ராவிடமும், திரு வடிவேலுவிடமும் ,பார்வைத் திறனற்ற சக்கரபாணி நாயுடுவிடம் பயின்றதையும், விலங்கியல் பாடத்திற்கு அம்மாவின் நண்பர் டாக்டர் நர்மதாவின் கணவரான விலங்கியல் பேராசிரியர் இராமசாமி , இந்திக்கு திரு. நாராயணனிடமும், வடமொழிக்கு அவரின் தந்தையார் கேசவ ஐயங்கார் , தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றை முதுநிலைப் பேராசிரியர் இரங்கநாதனிடம் பயின்றதையும் நினைவுகூர்கிறேன்.
தமிழையும் , கணக்கையும் வீட்டிலேயே வந்து கற்றுத் தந்த திரு குணசேகரன், மொழிபெயர்ப்புத் துறையில் மொழிபெயர்ப்பு அலுவலரான அகமத்துல்லாவிடமும் திரு .பாபுவிடமும் , முதுபெரும் தமிழறிஞரும் – நெடிய தோற்றமும் – வேட்டியும் தோளில் துண்டுமாகப் புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சியிலிருந்து வாரம் மும்முறை அண்ணாநகர் இல்லத்திலேயே உடன் தங்கியிருந்து செவ்வனே தமிழிலக்கியத்தையும், இலக்கணப் பாடங்களையும் கற்றுத் தந்த உத்தியும்….
அவரிடம் ஒருமுறை, “ தந்தையாரைப் போலத் தமிழறிவு பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? ” என்று கேட்ட போது, “அப்பா திரட்டிய நூல்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலேயே நீ தமிழறிஞர் ஆகிவிடுவாய் ” என்றார். மேலும் நீதிநெறிப் பாடல்களைச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டுமென்றார் .காரணம், அப்பா திரட்டியது அரை இலட்சம் நூல்களுக்கும் மேல் என்பதால் அவர் அவ்வாறு சொன்னார்.
அகர முதலித்துறை முன்னாள் இயக்குநர் முனைவர் மதிவாணன் திருமகனார் பேராசிரியர் அன்பரசனிடம் அறிவியல் பாடங்களையும் கற்றேன் .
மாநிலக் கல்லூரியில் இருந்த பொழுது நண்பர் இரவிசங்கர் வாயிலாக சைதையில் தமிழாசிரியர் தேவராசனிடமும் பயின்றதும் , வகுப்புத்தோழர் ஆண்டவரும் நானும் என் மாமா முனைவர் குமரவேலிடம் பயின்றதும் , அமைந்தகரையில் தொல்காப்பிய வகுப்பு பேராசிரியர் இராமசுப்பிரமணியிடமும் ,
கல்லூரிப் பேச்சுப் போட்டிகளுக்காக என்னை ஊக்கப்படுத்திப் பல கருத்துக்களை பேசுவதற்க்கு எழுதித்தந்து கம்பராமாயணம் – பெரியபுராணம் தொடர்களை உச்சரிக்கக் கற்றுத்தந்தும் பேசும்பொழுது தொடக்கமாக பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனல் வரிகளை பேசுவதற்கு ஏற்ற வரிகளை அறிமுகம் செய்த பேராசிரியர் அரசேந்திரன் ஆகியோரின் பயிற்றுமுறைகள் மறக்கவொண்ணாப் பயிற்சிக் களங்களாகும் .
கோவையிலிருந்து கல்வியாளர் செந்தில் ஆறுமுகம் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்குகிற நேரங்களிலெல்லாம் எங்கள் மூவருக்கும் வாழ்வின் விழுமியங்களை மறவாமல் கற்றுத் தருவார்.
கருநாடக வாய்ப்பாட்டுப் பயிற்சியும், வயலின் கருவியை மீட்டுவதற்கும், புல்லாங்குழல் ஊதுவதற்கும் ,ஆர்மோனியம் இசைப்பதற்கும் வள்ளியம்மாள் பள்ளியின் இசையாசிரியர் திருமதி கமலாவிடம் பயின்றோம்
( எங்களை எல்லாம் விஞ்சி என் அண்ணன் கண்ணன் சிறந்த கருநாடக இசைப் பாடகராக மிளிர்ந்து 1977 ஆம் ஆண்டிலேயே புதிய ஆவடி சாலையில் – பச்சையப்பர் கல்லூரி எதிரில் உள்ள பிரசன்ன வெங்கடேசுவர சோமஸ்கந்த திருக்கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் பெரும் பாடகராகப் போற்றப்பட்டார் .
அப்போது அவர் பாடிய பாடல் கூட ” எனக்கென்ன மனக்கவலை , என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை ” என்பதாகும் .திருமதி கமலா அண்ணன் கண்ணனை ” கன்னம் கன்னம் ” என்று சொல்லித்தான் பெருமைப்படுத்துவார் .)
. அதேபோல வாகனம் ஓட்டுவதற்காகத் தலைமைச் செயலக ஓட்டுநர்களான திரு. தனராஜ், ( என்னுடைய பதினொன்று – பனிரெண்டாம் வகுப்புக்களின் அறிவியல் பாடங்களின் விளக்கப் படங்களை நுட்பமாக வரைந்து தருபவராவார் .அவருடைய மிதிவண்டியை கண்ணுங்கருத்துமாகப் பேணியதை இன்றுவரை நான் மறவேன் .)
திரு. வெங்கடேசன், திரு.பரஞ்சோதியிடம் பல காலநிலைகளில் கற்றதும்,
அதேபோல அப்பாவின் நேர்முக உதவியாளராக இருந்த திரு ஜகன்னாதன் அவர்களும், என்னுடைய நண்பர்களான இரவிசங்கர், இராம்மோகன் போன்றோரும் உடற்பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஊக்கமளித்ததும் மறக்கவியலாது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றுகொண்டிருந்த வேளையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இந்திரா காந்தியும் இந்திய தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பங்கு கொள்ளச் சென்றேன்.
அங்குப் பேசிய பல நண்பர்களும், காங்கிரசு கொள்கையைச் சார்ந்து பேசியதனால், மாறுபட்ட சிந்தனையாக இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு வரலாற்று நோக்கில் நான் பேசிவிட்டு இந்திரா காந்தியைப் பற்றி அதிகம பேசாமல் அவர்கள் நேருவின் திருமகள் என்றும், அவர்கள் வளர்ந்த சூழல், சிறந்த நிலை என்று பாராட்டி அமர்ந்தேன்.
அன்று வேறு சில நண்பர்கள் இந்திராகாந்தி அம்மையாரை வசைபாடிப் பேசினார்கள்.
அன்று மாலையே அந்நாளைய காவல்துறை அதிகாரி திரு. இராதாகிருஷ்ணன் (கிராக்கி ) என்ற புனைபெயரில் எழுதிய எழுத்துச்செம்மல் பெருந்தகை எந்தையாரைத் தொலைபேசியில் அழைத்து அன்று மதியம் நடந்த பேச்சுப்போட்டியில் பேசிய நண்பர்கள் பற்றிச் சொல்ல தங்கள் மகனும் கலந்து கொண்டதாகச் சொல்லி அதற்கு உடனே எந்தையார் அருளுக்கு அதிகம் பேசிப் பழக்கமில்லை ,
இப்பொழுது தான் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறான்.
தவறாக அவன் ஒருநாளும் பேசமாட்டான். அன்னை இந்திரா காந்தியைச் சுட்டவர்களை விட்டு விட்டது சரியா என்று வினா எழுப்பியிருப்பான்.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தோசை சுடுவதைப் பற்றித்தானே. தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நகைச்சுவையாக கேட்க காவல்துறைத் தலைவரே சிரித்தாராம் .
நாவன்மையும் – சொல்வன்மையும் ஒன்றுதான் . ஒருவர் பேசிப் பலர் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள் ?
எதிரே அமர்ந்திருப்பவர்கள் பேசத்தெரியாதவர்கள் என்றா நினைப்பது ?
அதனால்தான் ஒருவர் பேசும்போது கீழே உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பார்கள்.சொல்வன்மை தான் திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு பெயராகும் .ஆக்கமும் , கெடுதலும் அதனால் வரும் .
வேட்ப மொழிதல்,திறனறிந்து சொல்லுக ,வெல்லும் சொல்லாகப் பேசுக , நிரந்தினது சொல்லுக ,சில சொல்லல் தேறுக,கற்றதை உணர்த்த விளக்கிப்பேசுவது

என்றெல்லாம் அழமாகக் கூறுவதை இளைஞர்கள் தெரிந்து பேசவேண்டுமென்று நான் பெரியப்பா என்று பரிவுடன் அழைக்கும் திருக்குறளார் கூறியதைப் பிறகு தான் உணர முடிந்தது .

புறநானூறு…
சாரல்: 8 – தூறல்: 3
மூன்றாவதாகவும் கபிலர் பாடிய பாட்டே மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. அவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனே. முன்பாடலைப் போலவே, பாடாண்திணை மற்றும் இயன்மொழித் துறைப் பாடல்.
124ஆம் பாடல்.
நாளன்று போகி, புள்ளிடை தட்ப,
பதனன்று புக்கு, திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குந ரல்லர்-நெறிகொளப்
பாடாண் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே ! ’

‘ குறிஞ்சிக்கோமான் மலையமான் திருமுடிக்காரி. ஆரவாரத்துடன் இழியும் பேரருவிப் பெருமலைக்கு உரியவனும், பெருமிதப் பண்பாளனுமாகிய அவனைப் பாடியோர், அவனைக் காண நாளில்லாத நாளிலும் போகலம்; வழியில் பறவைச்சகுனம் தடைசெய்யலாம்; பக்குவம் இல்லாத நிலையிலும் சென்று காணலாம்; பேசத் தெரியாமலும் பேசலாம்; எப்படிப்பட்ட எதிர்வினைகளாயினும், வேண்டிச்சென்ற பொருள்களைப் பெறாமல், இரவலர் வறிதே திரும்புபவரல்லர் ’ காரியின் பெருமையை அருமையாகக் காட்டுகிறார் .

சாரல்: 8-தூறல்: 4
நான்காவதாக மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. பொதுவியல் திணைப்பாடல். பிற திணைகளில் கூறப்படாச் செய்திகளையும், அவற்றுக்குப் பொதுவாக உள்ள செய்திகளையும் தெரிவிப்பது பொதுவியல். பொருண்மொழிக் காஞ்சித் துறை. வாழ்வின் உன்னத நிலை குறித்தும், நிலையற்ற தன்மை குறித்தும் எடுத்து மொழிவது. 189 ஆம் பாடல்.
தெண்கடல் வாளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேமெனினே தப்புந பலவே !’

தெளிந்த கடலால் சூழப்பட்ட உலகத்தைப் பொதுவின்றித் தனியொருவராக வெண்கொற்றக் குடையின்கீழ் ஆண்ட அரசருக்கும், நள்ளிரவிலும் நண்பகலிலும் உறங்காதவனாகிய வேடனுக்கும் – காக்கும் வேந்தன் தொடங்கி விலங்கின் உயிரை நீக்கும் வேடன் வரை அனைவரும் நிகரே !
உண்ணும் உணவின் அளவு நாழியரசிதான்; அதாவது முகத்தலளவையாகிற காற்படி; உடுப்பவை இரண்டுதாம்; அதாவது கீழாடையும் மேலாடையும். பிற அனைத்துமே, இருவர்க்கும் நிகரானவையே. எனவே, செல்வம் பெற்றதன் பயன், இல்லையென்பார்க்கு ஈதலும், ஈதலால் இசைபட வாழ்தலுமே. மாறாகத் தாமே நுகர்வதாயின், அச்செல்வம் அவரிடமிருந்து தப்பிச்செல்லப் பலவழிகள் உள.
சாரல்: 8 – தூறல்: 5
ஐந்தாவதாகப் பிசிராந்தையார் பாடியது. முன்பாடலைப் போலவே, பொதுவியல் திணை; பொருண் மொழிக் காஞ்சித்துறை. ‘ கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை, கேட்குங்காலம் பலவாலோ ? நரை நமக்கு இல்லையாலோ ? ’ என்ற சான்றோர்க்கு அவர் மொழிந்தது ’.
‘யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர ஏன்ளிளையரும்; வேந்தனும்,
அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே ! ’

புலவர் ஆந்தையார், ‘ பிசிர் ’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். எனவே, ‘ பிசிராந்தையார் ’ என அழைக்கப் பெற்றார். அவரோ, அகவை நிரம்பியவர் – முதுமை கனிந்தவர் . அவரைக் கண்டோரெல்லாம், ‘ இவ்வளவு முதுமையிலும், உமக்கு நரை தோன்றவில்லையே ! யாது காரணம் ? ” என வினவினர். அவர் கூறிய விடைதான் பாடல்.
‘ என்னுடைய மனைவி,மாண்புடையவள்; மக்களும் அவரைப் போலவே, அறிவிலும் பண்பிலும் நிறைந்தனர்; என்னின் இளைஞரும், என் எண்ணப் படியே கடமைகளைச் செய்பவர்; நாடாளும் மன்னனும், அல்லவற்றைச் செய்யாமல் நல்லவற்றையே செய்பவன்; குடிமக்களைக் கண்போல் காப்பவன்;
அனைத்துக்கும் மேலாகயான் வாழும் ஊரில், கல்வி கேள்விகளில் சிறந்து,பாடறிந்தொழுகும் பண்புடைய சான்றோர் பெருமக்கள் வாழ்கின்றனர்.
எனவே, எனக்குக் கவலையின்மையால், நரை தோன்றவில்லை ’ என்றார்.இப்படி ஓர் அரிய பாடல் நம் நினைவில் நிலைப்பாதாகும் .
சாரல்: 8- தூறல்: 6
ஆறாவதாகப் பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணைவிளக்கம் முன் பாடலில். கையறுநிலை என்பது, இறந்தாரை எண்ணிச் செய்வதறியாது இரங்குதலாகும். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமலே அன்பு வயப்பட்டனர். இருவர் தம் நட்பும், உயர்நட்பின் உன்னத அடையாளம்.
218ஆம் பாடல்.
பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்குங் காலை,
ஒருவழித் தோன்றியாங் குளன்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப;
சாலார் சாலார் பாலரா குபவே ! ’

பொன்னும் பவளமும் முத்தும் பெருமலையில் விளைத்த அழகிய இரத்தினக்கல்லும், ஒன்றுக்கொன்று தோன்றுமிடங்களால் இடைவெளியிட்ட சேய்மையவாகினும், மாலையாகத் தொடுக்கப்பட்டு, அரிய விலைப்பொருளான அணிகலனாக அமைக்கும்போது, ஒன்றுசேர்ந்து விளங்குவதுபோல், எந்நாளும் சான்றோர் பெருமக்கள், சான்றோர் பெருமக்களையே சார்வர்; சால்பில்லாதவர் , சால்பிலாதவரிடையே சார்வர்.
சாரல்: 8 – தூறல்: 7
ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில்
242ஆம் பாடல்.
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி யணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’

இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்; பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா ? அதுதான் முல்லைமலர். ஏன் ? என்னவாயிற்று ? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான் ,
இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன் ? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார்.படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .
சாரல்: 8 – தூறல்: 8
எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்றுனடை நல்கல் வேற்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !’

நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்;
ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் ஆண் யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டுவருவதுமான , மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணிப் பெருமையடைலாம் .
வளரும்…

முனைவர் ஔவை ந. அருள்,
தொடர்புக்கு
dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment