செயலில் செம்மையை வளர்ப்போம் !
” கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு ! “
என்று மூதறிஞர் வ சுப மா மனமுருகிப்பாடிய வள்ளல் அழகப்பரால் தான் இன்று காரைக்குடி பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் அவரே வேர் என்றால் அது மிகையில்லை .
காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றியதோடு, ஒன்றிய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் இன்று மலர்ந்துள்ளது .
தமிழகத்தில் இளைஞர்கள் தொழிற்கல்வி பெறுவது 10 சதவீதத்துக்கும் குறைவென்றும் ,
கொரியாவில் 96 சதவீதம் ,
ஜப்பானில் 80 சதவீதம் ,
ஜெர்மனியில் 75 சதவீதம் ,
பிரிட்டனில் 68 சதவீதம் பேர் கற்கின்றனர் ,
இவை பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகளாகும் .50 விழுக்காடாவது இந்நாளில் நம் நாட்டில் முனையவேண்டும் .இன்றைய நற்ச்சூழலில் 100 க்கு 75 என்ற அளவையாவாது நாம் எட்டிப்பிடிக்க முயலலாம் என்று முன்னாள் துணைவேந்தர் இ பால குருசாமி ஒருமுறை குறிப்பிட்டுள்ளார் .
ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் தொடங்கியது .அந்நாளில் அது சமயத் தொடர்பான விழாவாகத்தான் தோற்றம் பெற்றது .
இன்றைய ஒலிம்பிக்கில் விரைவாக – உயரமாக – வலிமையாக என்ற மும்மொழிகள் ஒலிம்பிக்கின் குறிக்கோள் மொழியாகும் .இதனைச் சுட்டிக் காட்டிய அறிவியல் அறிஞர் இளங்கோ சுப்பிரமணியன் , இந்தக் குறிக்கோள் மொழியே .மொழி , இன ,சமய பண்பாடு ,மரபு அனைத்தையும் கடந்து ,அனைத்து நாடுகளும் ,மக்களும் ஒரு நிகராக ஒத்த உள்ளன்போடு பெருமிதமாக வாழ வகுத்துள்ளது .
இந்தக் குறிக்கோள் தொடரை நினைவூட்டும் வகையில் முப்பதாண்டுகளுக்கு முன் முத்தமிழறிஞர் கலைஞர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அறிவுக்கு விருந்தாகும் அதனைக் காணலாம் அழகப்பர் பல்கலைக்கழகத்திலே என்னை மிகவும் கவர்ந்த வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் தான் – செயலில் செம்மை என்ற வாசகம்.
இதை ஏற்கெனவே நம்முடைய முன்னோர்கள் “
செய்வன திருந்தச் செய் ” என்றார்கள்.
செய்வன திருந்தச் செய் என்பதைத்தான் செயலில் செம்மை என்று இங்கே சுருக்கி ஒரு வாசகமாக அமைத்திருக்கின்றார்கள்.செய்வன திருந்தச் செய் என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு.
செயலில் செம்மை என்றால் நாம் செய்கின்ற செயல் செம்மையாக இருக்க வேண்டும் என்று பொருள்.
செய்வன திருந்தச் செய் என்றால் நாம் செய்கின்ற காரியங்கள் திருத்தமாக இருக்க வேண்டுமென்று ஒரு பொருளும் உண்டு.
மற்றவர்கள் ‘திருந்துகின்ற அளவிற்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய் என்று இன்னொரு பொருளும் உண்டு.
எனவே செய்வன திருந்தச் செய் என்கின்ற அந்தச் சொற்றொடர்களுக்குள்ள இரண்டு பொருளும் இந்தச் செயலில் செம்மை என்கின்ற இந்த வாசகத்தில் அடங்குவதாகவே நான் கருதுகின்றேன்.
செயலில் செம்மை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு தேடி அலையாமல் நாம் காண வேண்டுமேயானால் இங்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த அலுவலகக் கட்டடம் தான் என்பதை நான் பெருமையொடு சொல்லிக் கொள்கிறேன்.
75 இலட்ச ரூபாய் செலவில் அது கட்டப்பட்டிருக்கின்றது. நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மையார் அவர்களைக் கேட்டேன்.75 இலட்சம் தானா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னார்கள்.எத்தனை சதுர அடி கீழ்த்தளம்; மேல்தளம் எத்தனை சதுர அடி என்றும் கேட்டேன்.
75 இலட்ச ரூபாய் என்று ‘சொன்னபோது வியப்புக்கு அளவில்லைதான் ஏனென்றால் இந்தக் கட்டடம் கவின்மிகு நிலையிலே எழுந்திருப்பது மாத்திரமல்ல சதையும் உள்ளடக்கி இருக்கின்ற ஒரு கட்டடம்.இந்தக் கட்டடம் தான் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்ற வகையிலே அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கட்டடம் வலிவாக அமைக்கப்பட்டிருக்கின்றது.திராவிடத்தின் கட்டடக் கலைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் கட்டடம் இது .
இது போன்ற கட்டடங்கள் இன்றைக்கு இத்தாலி நாட்டில் இடிந்து, பாழடைந்த கட்டடங்கள் இருந்த இடங்கள், எல்லாம் இன்றைக்குக் குட்டிச்சுவர்களாக இடிபாடுகளோடு காட்சியளித்தாலும்கூட அந்தக் கட்டிச் சுவர் நிழலிலேகூட பழங்காலத்திலே எவ்வளவு கலை வண்ணத்தோடு இந்தக் கட்டடங்களை அந்தச் சிற்பிகள் செய்து முடித்திருக்கிறார்கள்.கட்டி முடித்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு கண்டு நாம் பாராட்டலாம்.
ஒரு நாட்டினுடைய பழங்கால வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய பெருமை கட்டடங்களுக்கு உண்டு .
எனவே, அப்படிப்பட்ட அழியாப்புகழ் கொண்ட கட்டக்கலையை நீண்ட நாள்களாக வளர்த்து வருகின்ற திராவிட சமுதாயத்தில் தமிழினத்தில் இன்றைக்கு இந்தக் கட்டடம் ஒரு கலங்கரை விளக்கமாக நிமிர்ந்து நிற்கின்றது.நான் மீண்டும் ஒருமுறை இங்கு எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.இங்கு வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை எல்லாம் படித்துப் பார்த்தேன்.
செயல் விளக்க அறிக்கை இங்கே வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் இராஜா இராமண்ணா விழாப் பேருரை நிகழ்த்தியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் விழாப் பேருரை நிகழ்த்தியிருக்கின்றார்.
இரண்டு பேரும் இங்கே பட்டமளிப்புப் பேருரை நிகழ்த்தியதால் இன்றைக்கு மத்திய அமைச்சர்களாகவே பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.
இதை யாராவது படித்துப் பார்த்தால் அடுத்த ஆண்டு பட்டமளிப்பு விழாப் பேருரைக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நானாக வருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்றும் கூடச் சிலர் எண்ணுவார்கள்.
எனக்கு இப்படிப்பட்ட பழமைகளில் நம்பிக்கை இல்லை.
இங்கே பேசும் போதுகூடக் கலைஞருடைய கைராசி என்று சொன்னார்.
எனக்கு நம்பிக்கையில்லை.
மற்றவர்களோடு இராசியாக இருப்பதில் எனக்கு நம்பிக்கையே தவிர இராசியிலே இல்லை
எனென்றால் சில நேரங்களில் என்னை இது போன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைப்பதுண்டு.
அங்கே என்னுடைய கையைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதுமுண்டு .
மருத்துவமனையிலே கலைஞர் கை என்றால் நிறைய நோயாளிகள் வரவேண்டும் என்ற பொருளாகிவிடும்.
நான் ஒரு மருத்துவமனை விழாவில் சொன்னேன்.
நான் கைராசிக்காரர் என்று குறிப்பிட்டு . என்னுடைய கைராசி வருகிற நோயாளிகளுடைய நலிவு நீங்க வேண்டுமேயல்லாமல் அதிக நோயாளிகள் வரவேண்டும் என்றிருத்தல் ஆகாது என்று நான் அந்த விழாவிலே குறிப்பிட்டேன் .
கைராசி ,நட்சத்திரம் இவைகளிலே நம்பிக்கை வைப்பது ஏனென்றால் காரைக்குடியிலே நடைபெற்ற விழாக்களையெல்லாம் பட்டியலிட்டு இன்றைக்குக் காட்டினார்.
காலையிலே ஒரு சுயமரியாதை திருமண விழாவிலே கலந்து கொண்டேன்.அடுத்து ஓர் அறிவு நிலைய விழாவில் கலந்து கொள்கின்றேன்.பகுத்தறிவுத் துறையை அலட்சியப்படுத்தலாமா
இதற்கடுத்து மாலையிலே கவிதையின் ஊற்றாகத் திகழ்ந்த ‘என்னுடைய நண்பருடைய விழாவிலே கலந்து கொள்கின்றேன் ,
அதற்குப் பிறகு ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று எங்களுக்கு பேரறிஞர் அறிவித்தாரே அண்ணா , அதைச் செயற்படுத்துகின்ற அரசு விழாவிலே கலந்து கொள்கின்றேன்.
அதற்குப் பிறகு இவ்வளவையும் உணர்கின்ற வாய்ப்பினை எங்களுக்கு வழங்குகின்ற அந்த அண்ணாவின் சிலையினைத் திறந்து வைக்கின்ற விழாவிலே நான் பங்கு கொள்கின்றேன்.
‘காரைக்குடி என்பது அன்புக்குத் தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் இசையை அதன் பெருமையை அதனுடைய சுயமரியாதையை நிலைநாட்டுகின்ற முயற்சிக்கு இவற்றிற்கிடையே ஆன்மிகத் துறைக்கும் மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த இடம் என்பதை நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இந்தப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையிலே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கல்வித் துறைக்கான பயிற்சி உடற்கூறு துறைக்கான பயிற்சி இவை எல்லாம் அளிக்கப்படும் . என்றாலும்கூட இத்தனையும் – சில ஆராயச்சிகளின் அடிப்படைகளில் தான் இன்றைக்கு அமைக்கப்படுவதோடு பல்கலைக் கழகங்களோடு இணைந்து அமைக்கப்பட்டுள்ளது – இணைக்க உள்ள பல்வேறு கல்லூரிகளில் பல்வேறு துறைப்பாடங்களிருந்தும் கூட இருந்தாலும்கூட எல்லாத் துறையும் உள்ளடக்கிய ஒரு பாடம் அனைவருக்கும் இருந்தாக வேண்டும்.
அது பகுத்தறிவுத் துறை. அந்தப் பகுத்தறிவுத் துறை – இன்றைக்கும் கல்லூரிகளிலே பல்கலைக்கழகங்களிலே பயிலும் மாணவர்களால் அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.
அண்ணாவின் உரை
அண்ணா அவர்கள் அழகப்பர் கல்லூரியிலே வந்து பேசியதை இங்கே நம்முடைய நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே அண்ணா அவர்கள் முதல் முதலாகப் பேசினார்கள்.
பொது வாழ்க்கையிலே அரசியல் வாழ்க்கையிலே அண்ணா தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே அவரை அழைத்து அங்கிருந்த மாணவர்கள் உரையாற்றச் சொன்னார்கள்.
அவர் அன்றைக்கு ஆற்றிய உரை ஆற்றோரம் என்ற தலைப்பில் அமைந்த உரையாகும்.
அந்த உரையிலேதான் இந்தியாவினுடைய வரலாறு கங்கையாற்றின் கரையிலிருந்து தொடங்கக் கூடாது காவிரி ஆற்றின் கரையிலிருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு; அதற்கு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எடுத்துக் காட்டிய ஆதாரங்களை எல்லாம் அங்கே பட்டியல் இட்டுக் காண்பித்து வாதித்தார்கள்,
இளைஞர்கள் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற வேண்டும் .
அந்தப் பேருரையின் வாயிலாக, ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் அந்த அண்ணாமலை பல்கலைக் கழகம் அரசியல் தலைவர்கள் உருவாகவும் ,சமுதாய வித்தகர்கள் உருவாகவும் ,தமிழ் இலக்கியச் சிற்பிகள் உருவாகவும் காரணமாகத் தொட்டிலாக விளங்கிய ஓர் இடம் என்பதற்காகச் சொல்கிறேன்.
இதைப்போல இந்த அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து வருகின்ற மாணவர்கள் படித்தோம், பட்டம் பெற்றோம். பயின்றோம், வசதிகளைப் பார்ப்போம், பணம் சம்பாதிப்போம் என்ற அளவிலே இல்லாமல் சமுதாயத்தினுடைய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற சமுதாயத்தை உயர்த்த இன உணர்வோடு காரியங்களை நிகழ்த்த தங்களை உருவாக்கிக் கொள்ளும் வகையிலே தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள அறிவுரையை அல்ல வேண்டுகோளை இளம் மாணவ மணிகளுக்கு இந்த நேரத்திலே அவர் முன் சிந்திக்க வைக்கின்றேன்.
வசை பொழிந்தால் பணி செய்வேன்
அத்தகைய ஈடுபாடுகளால் எவ்வளவோ தொல்லைகள் வரக்கூடும்.அந்தத் தொல்லைகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டி இருக்கின்றோம்.நம்முடைய நண்பர் இராமநாராயணன் சொன்னார்.கலைஞர் ஒரு கிராமபோன் இசைத்தட்டு மாதிரி என்று சொன்னார்.ஊசி சுற்றிக கொண்டிருந்தால் எப்படி இசைத்தட்டு இசை தருகிறதோ அதைப் போல இசை வழங்கக்கூடிய கலைஞர் என்று சொன்னார்.
ஒன்று அவருக்கும் சொல்கின்றேன் உங்களுக்கும் சொல்கின்றேன்.ஊசி குத்தினால் தான் இசைத்தட்டு பாடும்.ஊசி சுற்றுவதைப் பொறுத்து அது பாடும் இல்லை.குத்தினால்தான் பாடும் அது போலவேதான் நானும் எதிர்ப்பு இருந்தால்தான் எங்களை இழித்துப் பேசினால்தான் என்னைப் பழித்துப் பேசினால்தான் என்னைத் தாக்கினால்தான், குறைவாக எளனமாக, ஏகடியமாக, என்மீது வசைமாரி பொழிந்தால்தான் நான் விடாமல் பணியாற்றிக் கொண்டு இருப்பேன்.
அழகப்பாவுக்கு அரசு துணைநிற்கும் அதைப்போல ஊசி ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் குத்திக் கொண்டேயிருந்தால் ஊசி குத்தினால்தான் இசை மலரும் என்பதைப்போல என்னுடைய பொது வாழ்க்கை தொடரும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்தப் பல்கலைக்கழகம் அழகப்பர் அவர்களுடைய தூய பெயரை அவருடைய அரிய கல்விப்பணியினை அவர் தமிழ் வளர்ப்பதற்காக ஆற்றிய அருஞ் செயலை இன்றைக்கு உலகத்திற்கே ஒளிவிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது .
வெளிநாடுகளிலே உள்ள பல்கலைக் கழகங்களோடு எல்லாம் தொடர்பு கொண்டு ஒரு நட்புறவோடு இந்தப் பல்கலைக் கழகம் இன்றைக்கு இயங்க முடிகின்றது.
இதற்கு மாநில அரசு என்றென்றும் துணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.நம்முடைய அம்மையார் அழகப்பர் அவர்களுடைய புதல்வியார் உமையாள் இராமநாதன் சொன்னார்கள்.
முதலமைச்சா கலைஞர் அவர்கள் நிரம்ப உதவியினை எங்களுக்குச் செய்ய வேண்டும்.அவர்களுடைய பெயரே கருணாநிதி, கருணையும் இருக்கின்றது நிதியும் இருக்கின்றது என்று சொன்னார்கள்.
அவர் கூறிய அந்த ஐந்து எழுத்துகளை அளந்து பார்த்தால் கருணை மூன்று எழுத்து,நிதி இரண்டு எழுத்து இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
நிதி குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருப்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
எனவே அதற்கு ஏற்றவாறு இந்த அரசினுடைய உதவிகள் இதுபோன்ற கல்விப் பணிக்கு அமையும் என்று எடுத்துரைத்து இந்த இனிய விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மகிழ்கிறேன்.
Leave a Comment
You must be logged in to post a comment.