Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38

Written by Dr. Avvai N Arul

“தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!”

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும் அவருடைய மருகன், மகள் சாகிதாவும் பெருந்துணையாய் இருந்தனர்.

அவ்வேளையில் நாங்கள் மூன்று சகோதரர்களும் எங்கள் பெரியம்மா (அம்மாவின் தமக்கையார்) திருமதி பரமேசுவரி அம்மையாரின் அரவணைப்பில், நாங்கள் முதன்முதலாகத் தங்கியிருந்த அதே பெசன்டு ரோடு இல்லத்தில் அவர்கள் குடும்பத்துடன் தங்கிப் பயின்றோம். நாள் தவறாமல் குறைந்தது 8 கடிதங்கள் எங்கள் அனைவருக்குமாக அம்மா எழுதியெழுதித் தொடர்ந்து அனுப்பியவண்ணம் இருப்பார்கள். அதற்கும் மேலாக ஒலியிழையில் குரல்பதிவாகப் பல தகவல்களையும், நல்லுரைகளையும் எங்களுக்கு அனுப்பினார்கள்.

எண்ணெய் வளம் கொழிக்கும் இலிபியாவில் மருத்துவப்பணி போற்றத் தகுந்த பணியாகும். அந்நாட்டுக் குடிமக்கள் இவர்களை இரண்டாம் தெய்வமாகவும் போற்றினார்களாம். பெருமழையென்றாலும், பெரும்புயலென்றாலும் மருத்துவர்களுடைய போக்குவரவு வசதியைக் கண்ணும் கருத்துமாகக் காத்து நாள் தவறாமல் மருத்துவமனை வருவதற்கு வழிசெய்து அம்மாவைப் போன்ற மருத்துவர்களுக்கு அரணாக இருந்தார்கள். அங்கிருந்தபோது அம்மா ஒரு பெரிய கனவு கண்டார். ஓரிரு ஆண்டுகளில், எங்கள் மூவரையும் எகிப்திலேயோ, உரோமாபுரியிலேயோ உள்ள உயர்ந்த பள்ளியில் படிக்கவைக்க விழைந்தார்கள்.

அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர்களான திரு. மொகிதீன் குடும்பத்தினரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள். அம்மாவுடைய ஏக்கமெல்லாம் சென்னையிலிருந்து எங்கள் பதில் கடிதங்கள் வந்து சேருவது என்பது, இருபதிலிருந்து முப்பது நாள்களாகும். அவ்வேளைகளில் இந்தியாவுக்குச் செல்கிற மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாகவும் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் யாதும் அறியாத இளங்கன்றுகளாக இருக்கிறோமே என்ற ஏக்கம்தான் அவர்களைக் கவலைகொள்ள வைத்தது.

அவ்வேளைகளில் என் பெரியப்பா பொதுப்பணித் துறைப் பொறிஞர் சுந்தரமூர்த்தி, அவர்களுடைய மகள்கள் திருமதி சுதா நலங்கிள்ளி, (பாஸ்டன் பள்ளியில் ஆங்கில ஆசிரியர்) திருமதி உஷா மதனகோபாலன் (காயிதே மில்லத் அரசுக் கல்லூரி இளம் அறிவியல் கணிதப் பட்ட வகுப்பில் மூன்றாமாண்டு மாணவி) கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடங்களைக் கண்ணும் கருத்துமாய் எங்களைப் படிக்க வைத்ததும், எங்களின் நலங்களைக் கண்காணித்ததும் இலிபியாவிலுள்ள அம்மாவைப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

பெரியம்மா பரமேசுவரிக்குப் புற்றுநோய் வளர்ந்த நிலையில் அல்லலுற்றிருந்த நிலையில் எங்கள் அம்மாவால் இலிபியாவில் இருப்புக்கொள்ள முடியாமல் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பான அயற்பணியை விட்டு, ஆறே திங்களில் பதவியிலிருந்து விலகி, சென்னைக்கு 1980 சனவரியில் திரும்பி வந்தார்கள். அம்மா வந்து ஒரே திங்களில் எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு எங்கள் பெரியம்மா மறைந்து விட்டார்கள்.

அவ்வேளையில் எங்கள் அப்பாவுக்குச் சென்னையில் வீட்டுப் பணியாளாக முருகேசன் என்ற நல்லிளைஞர் இருந்தார். நாங்கள் வாரஇறுதியில் அண்ணாநகருக்குச் சென்றபோதெல்லாம், எங்களுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அவர் மாறியது அண்ணா நகரிலுள்ள பலரை வியப்பில் ஆழ்த்தியது. அவர் எப்பொழுதும், வேட்டி அணிந்துகொண்டு வேகப்பந்து வீசுவதைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும்.

அதே வேகப்பந்துக்கு நிகராக மட்டை வீச்சிலும் சிறந்த வீரராகவும் மிளிர்ந்தார். என்னுடைய அண்ணன் கண்ணன் Gaylord Cricket Club, Kingston Cricket Club என்று இரண்டு குழுக்களை அண்ணா நகரில் நடத்திய பெருமைக்குரியவர் ஆவார். அந்நாளைய இ.ஆ.ப. அதிகாரிகளுடைய மகன்கள், இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரன் போன்ற பலர் இந்த அணியில் வந்து விளையாடியவர்கள் ஆவார்கள். மேலும் அந்த அணியில் இடம்பெற்ற நண்பர்களின் பெயர்ப்பட்டியல் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

(எங்கள் இல்லத்திலிருந்து, கண்ணன், அருள், பரதன், முரளி, முருகேசன்; எதிர்வீட்டிலிருந்து இராமதாஸ், அர்ஷத்; பக்கத்து வீடுகளிலிருந்து இராம்கி, மாதவன்; பின்வீட்டிலிருந்து இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால், பாலு, இரமேஷ்; கிரிக்கெட் நடுவராக இலட்சுமி, அரவிந்து, இரவிசங்கர், இரகு, விஜய், சூரஜ், சேகர், சதீஷ், சிவக்குமார், பிரதீப், ஜான், விஜயதாஸ், விஜயகுமார், சாய்ராம், சூர்யா, இராம்மோகன், சாய் மற்றும் சத்யா) அவ்வப்போது என் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வகுப்பில் மாணவர்களாகிய பாடநூலின் பக்கங்களை விரித்து மடித்து அப்பக்கங்களிலுள்ள ஓரிலக்க எண்களைக் கூட்டிப் புக் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாகும்.

மேற்குறித்த நண்பர்களின் உதவியால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள காலிமனைகளைக் கிரிக்கெட் மைதானமாக மாற்றியமைத்து அங்கு மண்டிக்கிடந்த முட்புதர்களையெல்லாம் அகற்றிச் சீர்செய்து காரை உருளைக் குப்பைத் தொட்டிகளை வைத்துப் பந்து வீசும் தளப்பரப்பைச் செம்மைப்படுத்தியதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொலைக்காட்சியில் கண்ட என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி இம்ரான்கானின் வேகப்பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டியதும் என் நினைவில் இன்னும் பசுமையாகவுள்ளது.

பதிற்றுப்பத்து:-
சாரல்: 4-தூறல்: 2

செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடுகிறார். வாழியாதனின் போர்க்களம், புலால்நாற்றம் வீசுகிறது. காயம்பட்ட களிறுகளும் போர்மறவரும் புண்பட்டிருந்தமையால், அந்நாற்றம் பெருகியது. வள்ளல் பாரியின் நெருங்கிய அறிவார்ந்த நண்பர் கபிலர். ஆதனைக் காணச்சென்ற கபிலர், பாரியின் பெருமையைப் பாடுகிறார். ‘புலாஅம் பாசறை’ என்னும் முதற்பாடல்:
‘பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை தூக்கும் நாடுகெழு பெருவிரல்,
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்,
பாவையன்ன நல்லோள் கணவன்,
பொன்னி னன்ன பூவின் சிறியிலைப்
புண்கால், உன்னத்துப் பகைவன் எங்கோ!
புலர்ந்த சாந்தின் புலரா வீகை,
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்கவென,
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
ஈத்த திரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே- ஒள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
நிலவி னன்ன வெள்வேள் பாடினி
முழவில் போக்கிற வெண்கை
விழவின அன்னநின் கலிமகி ழானே!

பூசியுலர்ந்த சந்தனத்தைத் தன் அகன்ற மார்பிலுடையவன் வள்ளல் பாரி. அவன் மரத்தில் பழுத்த பலாப்பழத்தின் பிளவிலிருந்து ஒழுகும் தேனை, வாடைக்காற்று மெல்லத்தூவும் நாட்டினை உடையவன் அவன். ஓவியப் பாவையின் கணவன். உன்னமரத்திற்குப் பகைவன். அவனுடைய முழவுமண் காய, இரவலர் துன்பமடைய, மீண்டுவாரா விண்ணுலகத்திற்குச் சென்றுவிட்டான்.

அதனால் நீ எம்மைப் பாதுகாக்க வேண்டி, இரந்து செல்ல நான் இங்கு வரவில்லை. எதையும் மிகையாகக் கூறமாட்டேன். மெய்யொன்றையே பேசுவேன். நீயும் பெருங்கொடையாளனென்று உனது புகழை உலகமக்கள் பேசுவதை அறிந்து, உன்னைக் காண வந்தேன். நிலவொளி போல் ஒளிவீசும் உனது படைக்கலனாகிய வேலினைப் பாடும் விறலி, முழவிசைக்குப் பொருந்தத் தன்கையால் தாளம்போடும் விழாவைப்போல், ஆரவாரம் மிகுந்த உனது இன்பக் களியாட்டத்தின்போது உன்னைக் காணவந்தேன் என்கிறார் கபிலர். தமது பெருமிதத்தையும் நிலைநாட்டுகிறார்.
பரிபாடல் அறிமுகம்:
பரிபாடல், பரிபாட்டெனவும் வழங்கப்படும். பரிதல்-பற்றுதல். திருமாமலைப் பற்றுதலும், செவ்வேளைப் பற்றுதலுமாகிய நிலைகளில், பாடல்கள் அமைந்துள்ளன. பரிபாடலின் அடிச்சிறுமை 25, அடிப்பெருமை 400 என்பது தொல்காப்பியம் (1418). இதுவரை கிடைத்துள்ள பாடல்கள் 22. திருமால் குறித்து 6, செவ்வேள் குறித்து 8, வையை குறித்து 8.
சாரல்: 5-தூறல்: 1
ஒவ்வொன்றும் நெடிய பாடல்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பெற்ற இரண்டு பாடல்களின் சிலவரிகளை மட்டுமே காணலாம். முதலில் மூன்றாவது பாடலின் பகுதி. திருமால் குறித்தது. கடுவன் இளவெயினனார் பாடியது. மொத்தமுள்ள 94 அடிகளில், 63 முதல் 72 முடியவுள்ள 10 அடிகள்.
‘தீயினுள் தெறல்நீ! பூவினுள் நாற்றம்நீ!
கல்லினுள் மணியும்நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்புநீ! மறத்தினுள் மைந்துநீ!
வேதத்து மறைநீ! பூதத்து முதலும்நீ!
வெஞ்சுடர் ஒளியும்நீ! திங்களுள் அளியும்நீ!
அனைத்தும்நீ! அனைத்தினுள் பொருளும்நீ! ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே! உண்மையும்
மறவியல் சிறப்பின் மாயமார் அனையை;
முதன்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலின்
மறவாப் பிறப்பிலை; பிறப்பித்தோ ரிலையே!

படைப்புக் கடவுளாகிய மாலவன், தீயின் பெருவெப்பமாக விளங்குகிறான்; பூவின் நறுமணமாக விளங்குகிறான்; கல்லின் மாணிக்க மணியாக விளங்குகிறான்; சொல்லில் வாய்மை உடையவனாக விளங்குகிறான்; அறத்தில் பெரும்பற்று உடையவனாக விளங்குகிறான்; மறத்தில் பெருவலிமை படைத்தவனாக விளங்குகிறான்; வேதத்துக்கு நாயகனாக விளங்குகிறான்; பஞ்சபூதங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான்; வெஞ்சுடரின் பேரொளியாக விளங்குகிறான்; திங்களின் தண்ணளி கொண்டவனாக விளங்குகிறான்; அனைத்துமாக விளங்குகிறான்; அனைத்தினுள் இயங்குபவனாக விளங்குகிறான்; ஆதலினால், அவனுக்கு உறைவிடமும் இல்லை; அவன் உறைவதும் இல்லை; உண்மையாகவும், விடுவலாச் சிறப்பின் வியப்புக்குரியவனாகவும் விளங்குகிறான்; எல்லாமாகவும் விளங்குகிறான்; முதல், இடை, கடைமுறைகளின் பிறப்பிலியாகவும், பிறப்பித்தோர் இலனாகவும் விளங்குகிறான். இப்படி ஒரு ஈடில்லாத வாழ்த்து அமைய முடியாது.
சாரல்: 5-தூறல்: 2
அடுத்ததாகப் பதினான்காவது பாடலின் பகுதி. செவ்வேளாகிய முருகவேளைப் பற்றியது. அவனிடம் பற்று மிகக்கொண்ட கேசவனார் என்னும் புலவர் பாடியது. மொத்தமுள்ள 32 அடிகளில், 18 முதல் 32 அடிகள் முடியப் பதினைந்து அடிகள்.
‘சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே!
கறையில் கார்மழை பொங்கி யன்ன,
நறையின் நறும்புகை நனியமர்ந் தோயே!
அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி,
நறுமலர் வள்ளி பூநயந் தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை யுட்கிச்
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே!
இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து,
ஒருபெயர், அந்தணர் அறனமர்ந் தோயே!
அன்னை யாகலின், அமர்ந்துயாம் நின்னைத்
துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்
இன்னு மின்னுமவை யாகுக
கொன்முதிர் மரபின்நின் புகழினும் பலவே!

தேவருக்குத் தொல்லை கொடுத்துவந்த சூரபத்மனை அழித்த – ஒளிவீசும் வேலாயுதம் தாங்கிய செவ்வேளே! கருக்கொண்ட மேகம், கனமழை பெய்வது போன்ற தூபத்தின் மணப்புகையில் இனிதமர்ந்தவனே! ஆறுமுகங்களுடன், பன்னிரண்டு தோள்களால் வெற்றிவீரனாக விளங்குபவனே! மணமிகு மலராகிய வள்ளியம்மையெனும் பூவை விரும்பியவனே! நட்புக்கொண்டு, சுற்றத்தார் சூழ்ந்திருக்க, உன்னை உயர்த்திப்பாடும் பாட்டினைச் செவிமடுத்துச் சுவைத்து மகிழ்பவனே! நீ தோன்றியபோதே தேவேந்திரன் உள்ளிட்ட தேவரெலாம் மகிழ்ந்தனரே! அசுரரெலாம் அஞ்சிய சீரூடையவனே! இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து ஒருபெயராம் அறவோராகிய அந்தணர்தம் அறத்தில் விளங்குபவனே! தண்ணளி பொழியும் தாய் போன்றவனாகையால், உள்ளம் ஒருமுகப்பட்டு, ஊனை நெருங்கி நெருங்கி வழிபடுகின்றோம். அந்தத் தன்மையானது, மேன்மேலும் அவ்வாறே தொடர்வதாகட்டும். கணிக்கவியலாத பழமரபின் வழிபட்ட உன் பெருத்த புகழைக்காட்டிலும் அவை பல்கிப் பெருகட்டும்! என்று, கேசவனார் உள்ளம் உருகிப் போற்றுகிறார்.
வளரும்…

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment