‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’
ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
‘கிளியா’ விளம்பர நிறுவனத்தினுடைய பெருமிதத்தால் நான் திங்களுக்கு இரண்டு முறை தில்லி செல்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்படித் தில்லி செல்கிறபோதுதான் என் மனதில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் அரும்பியது. திரும்பிச் சென்னைக்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், துறைத்தலைவர், டாக்டர் சி.பா. அவர்களிடம் தில்லியில் போய் ஆய்வு செய்யலாம் என்பதைச் சொன்னேன்.
அவர் அதை விரும்பவில்லை என்றாலும், நீ விரும்பினால் சென்று வா என்று தான் ஊக்கமளித்தார். பேராசிரியர் சி.பா., நான் தில்லி சென்றால் தமிழ்நாட்டில் புகழ்பெறுவது அரிது என்றும் கருதினார். அப்போது, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொன் சௌரிராசன் எந்தையாரிடம் அருளைத் தில்லிப் பல்கலைக்கழகத்துக்குப் போய் ஆய்வு செய்யச் சொல்லுங்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் கனிவானவர்; பண்பானவர்; இந்தி தெரிந்தவர். அவரிடம் ஆய்வு செய்யட்டும். நான் கடிதம் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று சொன்னதை வாய்ப்பாக எடுத்துத் , தில்லிப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தேன்.
தமிழிலக்கியம் பயின்றாலும், ஒப்பிலக்கிய நெறிப்பாட்டில் வளரவேண்டும் என்ற விழைவால், தில்லிக்குச்சென்று ஆய்வுசெய்ய நீ முனைய வேண்டும் என்ற எந்தையாரின் அறிவுரைக்கிணங்கத் தில்லியிலுள்ள சிறந்த பல்கலைக்கழகமான தில்லி பல்கலைக்கழகத்தில், நான் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தேன்.
அங்கிருக்கும் ‘Modern Indian Languages and Literary Studies’ என்ற துறையில் முனைவர் பி.பாலசுப்பிரமணியத்திடம் (தோற்றம்:10.07.1933- மறைவு: 07.07.2007) ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். வாராது வந்த மாமணிபோலப் பேராசிரியர் என்மீது தனிப்பரிவு காட்டித் தில்லியில் அவர் தங்கியிருந்த ‘கரோல் பாக்’ வளமனையிலேயே எனக்கும் மாடிப்படிக்கருகிலுள்ள அறை ஒதுக்கி, தில்லியில் பயில்வதற்கு வழிசெய்த பெருந்தகை அவராவார்.
அவர் அப்பல்கலைக்கழகத்திலேயே 1965 முதல் 1997 வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழிபெயர்ப்புக் கலையில் வல்லமை பெற்ற அவர், தெலுங்கில் இயற்றப்பட்ட கதைகளைத் தமிழிலும், எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற புதினத்தைச் சாகித்திய அகாடெமிக்காக ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தவர் ஆவார். அறிவியல் நுணுக்கம் வாய்ந்தவர். ‘கலைக்கதிர்’ இதழில் பணியாற்றிய பாங்கும், அவரே தானாக ‘அணுக்கதிர்’ என்ற தனியிதழை நடத்திய பெருமிதமும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எவருக்கும் அஞ்சாத துணிவும் வாய்ந்த என் பேராசிரியர் தில்லியின் கடுங்குளிரிலும் வாட்டும் வெயிலிலும் பல கருத்துகளை என்னிடம் தன் இல்லத்திலும், தில்லிப் பல்கலைக்கழகத் துறையிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தில்லிப் பூங்காக்களிலும் என்னிடம் பேசியதை நினைந்து நினைந்து நெகிழ்கிறேன்.
பேராசிரியருடைய துணைவியார் திருமதி சுகந்தா எனக்கு இன்னொரு தாயாக இருந்து அன்பும் பரிவும் ஊட்டி வளர்த்தார்கள். இன்றைக்கு இருவரும் இல்லையென்றாலும், அவர்களுடைய மக்கட்செல்வங்களில் ஒருவரான திருமதி பானுபூஷண்ராஜ் சென்னையில் மருத்துவராகவும், மற்றொருவரான திரு. இரமேஷ்குமார் தில்லியில் இதழாளராகவும் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி வருகிறார்கள். முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பான ‘Study on Translations and Adaptations of Shakespeare’s plays in Tamil’ என்பதை ஆங்கிலத்திலேயே மூன்றாண்டுகள் ஆய்ந்து தோய்ந்து பலபேரறிஞர்களையும், பேராசிரியர்களையும், சந்தித்துப் பல செய்திகளை அறிந்து இந்தியாவிலுள்ள தலைசிறந்த நூலகங்கள் (தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை) எல்லாம் நேராகச் சென்று, பல தகவல்களைத் திரட்டி ஆய்வினை நிறைவு செய்தேன்.
இருமொழிப் பெரும் பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களின் மொழியாக்கம் பற்றிய நூல் எனக்கு மூலவழிகாட்டியாக அமைந்தது. இன்றும் அவர் பரிவில் இருந்து வருகிறேன். நான் ஆய்வு மேற்கொண்ட துறையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நான் என் ஆய்வுச்சுருக்கப் பதிப்பை முழுமையாக வெளியிடும் முன், அங்குள்ள பிற இந்தியமொழிப் பேராசிரியர்கள் மத்தியில், என் ஆய்வின் சிறப்புக் கூறுகளைப் பற்றி ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும். அங்குள்ள வங்கமொழி, அசாமிய மொழிப் பேராசிரியர்கள் தங்கள் கருத்தை முன்மொழிவார்கள். அக்கூட்டத்தில்தான் நான் முதன்முதலாக ஞானபீட இலக்கிய விருது பெற்ற பத்மஸ்ரீ இந்திரா கோஸ்வாமி அவர்களைச் சந்தித்து அவர்களும் என் தலைப்பை வாழ்த்தியது நினைவிருக்கிறது.
என்னுடைய தந்தையார் சொல்வார்கள், நாம் தமிழர் என்பதில் எவ்வளவு பெருமிதம் கொள்கிறோமோ அதே போல இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டைப் பற்றி எண்ணிப்பார்க்கின்ற வகையில் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு நூறு வரிகளாவது தெளிவான குறிப்புக்களை எழுதவேண்டும் என்று வற்புறுத்துவார்கள். நம்மிடையே பலர் அசாம் செல்ல வாய்ப்பில்லை. பல்வேறு மாநிலங்களுக்குப் பலர் சென்றிருக்க மாட்டார்கள்.
அதிகமாகத் தெரிந்தவர்கள் கொச்சி, மைசூரு, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தில்லி என்றுதான் குறிப்பிடுவார்கள். இமாசலப்பிரதேசத்தில், சிம்லாவில் ‘Indian Institute of Advanced Studies’ என்னும் பெரிய ஆய்வு நிறுவனம் இருப்பதும், அங்கே அறிஞர்கள் போய் நூலாராய்ச்சி செய்து வருவதும் உண்டு. மெல்லிய குளிர் காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் அழகிய மாளிகையை நாம் இப்போது நினைத்தாலும் நமக்கு மனம் பெரிய ஊக்கத்தைத் தரும். எனக்குத் தெரிந்து தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலிருந்து பட்டிமண்டபத் திலகம் பேராசிரியர் இராசகோபாலன் அந்த ஆய்வு நிறுவனத்துக்குப்போய் மூன்று மாதங்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையிலேதான் நான் கல்லூரி மாணவனாக இருந்த பொழுதே என்னுடைய நண்பனின் உதவியால் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியதால் தில்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களுக்குப் போய்ச்சென்று நான் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை வந்த போது அந்த மாநகரங்களையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருந்ததால் நான் தனியாகப் பேராசிரியர் இராசகோபாலனிடம் தில்லியிலிருந்து சிம்லாவுக்குச் சென்று, அவருடன் மூன்று நாள்கள் தங்கியிருந்து அந்நிறுவனத்தின் நூலகத்தைக் கண்டு வியந்தேன்.
தில்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையின் பேராசிரியர்களாக முனைவர் ஆறுமுகம், கலைச்செம்மல் முனைவர் சாலை இளந்திரையன், இந்திரா பார்த்தசாரதி, முனைவர் இரவீந்திரன், முனைவர் மாரியப்பன் போன்றோர் பணியாற்றினார்கள். இப்பொழுது இத்துறையைச் சீரும் சிறப்புமாகத் தலைமையேற்று நடத்தி வருபவர் முனைவர் கோவிந்தசாமி இராஜகோபால் ஆவார். அவருக்குத் தக்கதுணையாகப் பேராசிரியர் பிரேமானந்தன், பேராசிரியர் உமாதேவி போன்றோர் திகழ்கின்றனர். 1922 – இல் தொடங்கப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் 15 முதல் 20 நூலகங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு சாரநாதன், திருமதி இராஜலட்சுமி இணையரின் மகன் திரு நரசிம்மன் என்கிற கண்ணனுடன் அவர் வாழ்ந்து வருகின்ற ஆழ்வார் திருநகரில் அவருடன் பத்தாம் வகுப்பு இணைந்து படித்தேன். கண்ணன் படித்தது ஆவிச்சி பள்ளியில், நான் படித்த்தோ சென்னை கிறித்தவப் பள்ளியில். அவருடைய தமக்கையார் திருமதி சித்ரா நாராயணன் புகழ்பெற்ற பட்டமன்றப் பேச்சாளர், கவிஞர். அவருடைய வழிகாட்டுதலில் கண்ணனும் நானும் கணக்குப் பாடத்திற்காக அவர் சென்று வந்த கணக்காசிரியரிடம் தனிப்பயிற்சிக்குச் சென்று வந்தேன்.
நான் முன்னரே சொன்னதுபோல கணக்குப் பாடம் படிப்பதற்காகப் பல திசைகள் சென்றேன். வென்றேனா என்பதுதான் எனக்குள் அவ்வப்போது இன்றுவரை எழுந்துவரும் வினாவாகும். கண்ணன் பழகுதற்கு இனிமையானவர். கணக்குப்பாடம் வருகிறதோ இல்லையோ அவர் என்னைத் தன் அன்பால் மெருகேற்றினார். அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், கலைஞானி கமலஹாசனைப் பார்ப்பதைப் போலவே இருக்கும். அந்தத் தொடர்பு மீண்டும் நான் தில்லியில் முனைவர் பட்டம் பயிலும்போது அரும்பியது.
அவர் அப்பொழுதே தில்லித் தலைமைச் செயலகத்தில் உள்துறையில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தவர். முனைவர் வகுப்பிற்கு எனக்கு வகுப்பு மாணவர்களே இல்லை. ஓராசிரியர் பள்ளியில் பயில்வதுபோல முனைவர் பாலசுப்பிரமணியனிடம் தில்லிப் பல்கலைக்கழகத்தில் மிராண்டா இல்லத்தில் பயின்றேன். அவ்வப்பொழுது தில்லியைச் சுற்றிக் காட்டுவதையும், தென்னிந்திய உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதையும் கண்ணனின் இயல்பான நற்பண்புகளாகும் .
இந்நிலையில், அறிஞர் தெ.பொ.மீ. குறிப்பிடுவதும் சிந்தனைக்குரியது. “தமிழன் சில நூற்றாண்டுகள் தூங்கிக் கிடந்தான். ஆங்கிலேயன் இவனைத் தூங்கவும் வைத்தான். இப்போதுதான் தமிழன் விழித்தெழுகின்றான். ‘ஆமையும் முயலும் ஓடிய கதை’யாய்த் தோன்றுகின்றது. ஆங்கிலேயன் அனைவரையும் தள்ளி முன்னேறி ஓடியுள்ளான். அவன் ஓடிய வழியில் அவன் அடிச்சுவட்டினைப் பின்பற்றித்தானே நாம் ஓட வேண்டும்? விரைவாக ஓடி வெற்றிபெறவும் வேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதுபோலத் தமிழிலும் எல்லாக் கருத்துகளும் அழகழகாக, இனிமையாகஎல்லோருக்கும் எளிதில் எட்டும்படி குவித்துக்குவித்து வைக்க வேண்டும்.
அதுவரையில் ஆங்கிலத்தையோ பிறமொழிகளையோ நாம் புறக்கணித்துப் பயனில்லை. தமிழ்மொழி பேராற்றல் படைத்தது. கும்பகருணன் பேராற்றல் படைத்தவன். ஆனால், தூங்கித் தூங்கி ஒன்றுக்கும் உதவாமற் போனான். நாமும் தூங்கக்கூடாது. எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்; விழித்தெழுந்து விரைவாக ஒடித் தொடர வேண்டும். தூங்கினால் ஆமை விழித்தோடினால் முயல், இல்லை, தூங்கினால் பிணம் ஓடினால் பணம், பணம் எங்கும் பாயும். தமிழ் இப்போது விரைந்தோடுகிறது. அதற்கென்ன ஓட்டம்? செலாவணி? தமிழ்மொழி, உண்மையில் முதல் மொழியாக அமையவேண்டும். அப்போது எல்லாம் தமிழாகிவிடும் எங்கும் தமிழாகிவிடும்.” வளர்ச்சியும் விரைவும் இருதடங்களாகக் கொண்டு அயல்மொழிகளையும் அரவணைத்துத் தமிழின் செம்மையைக் காப்பது அரிய பணியாகும்.
மொழி என்பது இனத்தையும் பண்பாட்டையும் குறிப்பதாகக் கருதப்படுவதும், நமது நாட்டில் மொழிவழி மாநிலப் பிரிவுகள் அமைந்திருப்பதால் தேசியம், சார் தேசியம், மாநிலப்பற்று முதலிய கோட்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மொழி வளர்ச்சி ஒரு நாட்டின் ஒருமையையும், பொதுக் கொள்கையையும் சார்ந்தே அமையும் என்று எதிர் நாளியல் அறிஞர்கள் கருதுகின்றனர். நிறைவாக மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் குறிப்பிட்ட நிலையே தமிழ் மக்களின் உயிர்ப் பண்பாகும்.
கருத்தைப் புலப்படுத்தும் ஒரு கருவியே மொழி என்பது தொடக்கக் கருத்து. இறைவன் நீங்கலாக உலகத்து எப்பொருளும் கருவிகளே. இறைவனைக் கூட நிமித்த காரணன் என்பர். உடம்பும் ஐம்பொறிகளும், ஊர்திகளும் தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் ஒழுங்குக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது. உடல் மாயும் கருவிதானே என்று பேசுவது அறியாமையன்றோ? மொழி என்பது மனிதவுடைமை. பண்டு இன்று நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை, அதனாற்றான் ‘வாழிய செந்தமிழ்’ என்றார் பாரதியார். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசனார்.
வளரும்…
முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
Leave a Comment
You must be logged in to post a comment.