காலமும் கருத்தும்
சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் – நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் தலைமையைப் பொறுத்து தமது கோட்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்வதும் இயப்பு .
இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் வாழ்வு முழுவதும் எழுதிய கதை ,கட்டுரைத் தொகுதிகள் தொகையாக வெளியிடப்பெறுகின்றன .
தொடக்கத்திலிருந்து பார்த்தால் ஆசிரியர் ஆசிரியர் தம் மனங்களை எவ்வெக் காலங்களில் மாற்றிக் கொண்டனர் என்பதைக் காணலாம் .
இதனால் தான் முந்தைய பருவத்தில் நான் கூறிய சிந்தனைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டேன் என்று துணிவாக சிலர் குறிப்பிடுகிறார்கள் .
நான் பல காலங்களில் எனக்குப் பட்டதில் பலவற்றை மாற்றிக் கொண்டேன் அது எனக்கு ஒரு குறையாக இல்லை என்று மூதறிஞர் இராஜாஜி ஒருமுறை கூறினார் .
அறிவு வளர்ச்சி அல்லது நினைவு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தான் செம்மை அடையும் என்று எழுதியதோடு எந்தெந்த நாட்டினரின் அறிவாற்றல் ,எந்தெந்த வயதில் முழுமை அடைந்தது என்று ஒரு கணக்கும் காட்டினர் .
அறிஞர் பெட்ரண்டு ரசல் காலந்தோறும் எப்படி கருத்து வளர வளர மாற்றம் ஏற்படுகிறது என்று தம் வரலாற்றில் குறிப்பிட்டார் .
முத்தமிழறிஞர் கலைஞர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ,பாரதியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து ஆற்றிய இந்த உரை கவிஞர்கள் கால நிலையில் எப்படி மாறுகின்றனர் என்பதை ஆராய்ந்து பிறகு எப்படி ஒரு கோட்பாட்டில் நிலை நின்றனர் என்பதைத் தெளிவாக்க வேண்டும் .
பாரதியார் பல கடவுளரைப் பாடி ஒரு முடிவான கருத்தையும் , புரட்சிக் கவிஞர் தொடக்க காலத்தில் பக்திப்பாடல் பாடிய பிறகு பகுத்தறிவில் செழித்த நாத்திகராகவே வாழ்ந்தார் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது .
ஒரு சான்று காட்டுவதென்றால் அக்கினிக்குஞ்சு இந்தடிகளே அமைந்த ஒரு சிறு கவிதை தான் .இதற்குத் தத்துவம் ,வேத விளக்கம் ,விடுதலை உணர்ச்சி என்று பலர் கருத்துரைத்துள்ளனர் .
புரட்சிக்கவிஞர் தொடக்கத்தில் பாடிய பாடல்களைக் காட்டி தேசியவுணர்வு கொண்டிருந்தார் என்றும் சிலர் கருதினர்.
“ ஆயிரம் தெய்வங்கள் தேவையில்லை.
அறிவு ஒன்றே தெய்வம் !
உண்மை ஒன்றே தெய்வம் ! மனச்சாட்சி ஒன்றே தெய்வம் !
என்ற அந்த உயர் நிலைக்குச் சமுதாயம் வரவேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.”
– கலைஞர் ஒளிமயமான இளைய சமுதாயம்
பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாரதி சிலையைத் திறந்து வைத்துத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை :
மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள – பாரதியின் பெயர் கொண்ட இந்தக் கோவைப் பல்கலைக் கழகத்தில் பாரதியின் சிலையைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
நான் அவரை நீண்ட நாள்களாக அறிவேன். நானும், அவரும் 1948 ஆம் ஆண்டில் கொடுமுடியில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள்.
நானும் அவரும் என்று குறிப்பிடுவது நண்பர் மாரிமுத்துவை தான்.
அவர் பெயர் மாரிமுத்து என்று இருந்தாலும் கூட அன்று முதல் இன்றுவரை மாறாத முத்தாக இருந்து வருகிறார் என்பதை அவர் ஆற்றிய வரவேற்புரையிலேயே நானும், பேராசிரியரும் உணர்ந்து மகிழ்ந்தோம்.
அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ள இந்தப் பல்கலைக் கழகம், கோவை, பெரியார், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நாற்பது கல்லூரிகள் இணைந்துள்ள ஒரு பல்கலைக் கழகமாக விளங்குகிறது.
நம்முடைய நண்பர் சாதிக் இங்கே எடுத்துக் காட்டியதைப் போலத் தமிழகத்தில் ஒரு காலத்தில் ஒன்றிரண்டு பல்கலைக் கழகங்கள் என்றிருந்த நிலை மாறி இப்போது பல்கலைக் கழகங்கள் பல உருவாகியிருக்கின்றன.
பாரதியாருடைய திறன் அவருடைய உள்ள உறுதி, விடுதலைப் போராட்டத்தில் அவர் கொண்டிருந்த வேட்கை, அதற்குப் படைக்கலன்களைப் போல அவர் படைத்தளித்த கவிதைகள், அவற்றைப் பற்றியெல்லாம் எனக்கு முன்பு பேசிய நம்முடைய பேராசிரியர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், துணைவேந்தரும் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.
பாரதியாரைப் பற்றிப் பாரதியினுடைய நேர்வாரிசு என்ற வகையில் புகழப்பட்ட பாரதிதாசன் என்ன சொன்னார் என்பதைப் பாரதியின் சிலையைத் திறந்து வைக்கின்ற நேரத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும் என்று கருதுகிறேன்.
பாரதிதாசன் என்ற பெயரை அவர் பூண்டதற்குக் காரணமே – இயற்பெயர் கனகசுப்புரத்தினம் என்றிருந்தாலும்கூட, பாரதியொடு பழகிப் பாரதியின் கவிதை வரிகளால் ஈர்க்கப்பட்டுப் பாரதியின் உள்ளத்தில் இடம்பெற்று ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா ஏழுகடல் அவள் வண்ணமடா!
‘ என்று தான் எழுதிய முதல்பாட்டிற்குப் பாரதியின் பாராட்டைப் பெற்று, அந்தப் பாரதிக்குத் ‘தாசன்’ நான் என்று தன்னை உலகுக்கு உரைத்துக் காட்டிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியார் குறித்துக் கூறும்போது,
பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
அவன் ஒரு
செந்தமிழ்த் தேனீ!
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்
இந் நாட்டில்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கவிதைப் புதையல்
திறம் பாட வந்த மறவன்
புதிய
அறம் பாட வந்த அறிஞன்
நாட்டில்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்.
என்று அன்றைக்கே பாடிய கவிதை வரிகளைத்தான் இங்கே நான் நினைவூட்டுகின்றேன்.
பாரதியின் பாடல்கள் தொகுக்கப்பட்ட முறையிலிருந்து, தொடக்க காலத்தில் முற்போக்குக் கவிஞராக இருந்து, பிறகு பின்னோக்கி நடந்தாரா ?
அல்லது தொடக்க காலத்தில் சற்று சமுதாயத்தோடு ஒட்டிப்போகின்ற கவிஞராக இருந்து பிறகு சமுதாயப் புரட்சியை நடத்தினானா?
என்பது அந்தக் கவிதையின் தொகுப்பைக் கண்டு நாம் உறுதியாக ஒரு முடிவுக்கு வர இயலாது.
ஏனென்றால் அவ்வாறு அந்தக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அரசியல் நுணுக்க மேதை – முத்தமிழ் அறிஞர் கலைஞர் !
இந்நாள் ( 2.8.2021 ) ஒரு பொன்னாள்… சட்டமன்ற வரலாற்றில் இந்நாள் ஒரு நன்னாள் ஆகும்.
பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று ( 2.8.2021 ) சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சர் ஆகவும் 50 ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் அமர்ந்து அலங்கரித்த அத்தாணி மண்டபம் தான் இன்றைய சட்டப் பேரவை வளாகம் .
இந்த அரங்கத்தில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ படத் திறப்பு நிகழ்கிறது.
மாண்புமிகு முதலமைச்சரின் அன்பழைப்பை விரைந்து ஏற்று இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு மேதகு குடியரசுத் தலைவர் வந்திருப்பது பொன்னேட்டில் பொறிக்கத்தகுந்த வைர வரிகளாகும்.
புயலாக, தென்றலாக, பூமழையாகக் கலைஞர் ஆற்றிய உரைகள் அச்சு வடிவத்தில் எட்டுத்தொகையாக வெளிவந்துள்ளன.சலியாத உழைப்பின் திலகமாக நான் பாராட்டும் இளவல் சண்முகநாதன் அவர்களை நாடு நன்றியோடு என்றும் நினைவு கூரும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தன் நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார் .
எழுத்து பேச்சு எண்ணித் துணிந்த செயல், ஆர்வம் ,ஆட்சி நடத்திய பெருமிதம் கடமை உணர்ச்சியில் திளைத்த கண்ணியச் செயற்பாட்டுச் சிற்பம் ,வடிவம் …
கடும் கோபத்தையும் தவிர்த்துக் கொண்டு கண்டனக் கணைகளை எதிர்கொண்ட கட்டுப்பாட்டின் பீடும் பெருமையும் இந்த உரைகளில் ஒளி வீசுகின்றன.
எந்தக் கேள்விக்கும் அந்த கணமே மறு மொழி கூறிய மதி நுட்ப மாட்சியை கண்டு நாடே வியந்தது.
ஒரு நாளும் சட்டமன்றம் வர அவர் தவறியதில்லை.
எப்போது பேசினாலும் குறிப்பெடுத்து வைத்திருப்பார்.
மேடையில் பேசுவது வேறு ,சட்டமன்றத்தில் வாதாடுபவர்களை எதிர் கொள்ளும் நுணுக்கமான பேச்சு என்பது வேறு என்று எப்போதும் கூறுவார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவைப் பற்றி முதலமைச்சர் நிலையில் உருக்கமாகப் பேசிய உரையின் ஒரு பகுதி எவர் நினைவை விட்டும் நீங்காதவையாகும்….
சென்ற ஆண்டு இதே நாளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அடையாறு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிக்கப் பெற்று மருத்துவ நிபுணர்கள் அவர் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே இந்த மாமன்றத்தில் இந்த நேரத்திலே நாம் கூடியிருந்தோம்.
ஆனால் அந்த நம்பிக்கை வீணாகும் அளவுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்கள் ( 1969 )என்பதும் அவர்களுக்குப் பிறகு இந்த ஆட்சிப் பொறுப்பை மிகச் சாமனியர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பதையும் இந்தப் பேரவை அறியும்.
ஏறத்தாழ இந்த ஓராண்டுக் காலமாக இன்னும் நான்கைந்து நாள்கள் நிறைவேறினால் ஓராண்டு முடிந்து விடக் கூடிய இந்தக் காலத்தில் இந்த அரசு பல வெற்றிகரமான சாதனகளைச் செய்திருக்கிறது.
மக்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறது என்றால் ஏதோ முதலமைச்சராக இருக்கிற நானோ அல்லது அமைச்சரவையில் உள்ள நண்பர்களோ அல்லது ஆளுங்கட்சியில் இருக்கும் நாங்கள் மாத்திரம் தான் காரணம் என்று பெருமையடித்துக் கொள்ள விரும்பவில்லை….
எல்லாக் கட்சித் தலைவர்களின் நல்லெண்ணத்தோடு இந்த ஒராண்டுக் காலமாக அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்திலே ஒரு நல்ல அமைதியும் மற்ற மாநிலத்துக்காரர்கள் பார்த்து வியந்து பாராட்டத் தக்க ஒரு நிலைமையும் உருவாக்கியிருக்கிறோம் என்றால் அந்த வெற்றியில் எங்களுக்கு மாத்திரம் பங்கு இல்லை …
இந்த மாமன்றத்திலிருக்கின்ற அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை நான் இங்கே மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் உரையின் மீது விவாதத்தின் முடிவுரையிலே மட்டும் நான் பேசுகின்ற பேச்சு இது என்று கருத வேண்டாம்…
கடந்த 2,3 தினங்களுக்கு முன்பு வேறு சில மாநிலங்களிலே சுற்றுப் பிரயாணம் செய்த நேரத்திலே அங்கு மற்ற மாநிலங்கள் உள்ள அரசியல் மேதைகளெல்லாம் தமிழகத்திலுள்ள அமைதியும் தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சியையும் குறித்துப் பாராட்டுத் தெரிவித்து யாராவது பேசு வார்களையேனால் அதற்குப் பதில் அளிக்கும் நேரத்தில் இந்தப் பெருமைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரம் உரியது அல்ல…
இந்தப் பெருமைக்கு தமிழ் நாட்டிலே இருக்கி்ற எல்லாக் எதிர்க்கட்சிகளும் தருகின்ற ஒத்துழைப்பு தான் அந்த அமைதிக்குக் காரணம் இந்த பெருமைக்கு அவர்களும் காரணம் என்று மிகுந்த பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கற்றுத் தந்த அந்தப் பாடத்தின்படி என்று சொல்லி வந்திருக்கிறேன்.
அதைத் தான் இன்றைக்கும் சொல்கிறேன்.
இந்த உரையைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இன்றைய முதலமைச்சரின் நல்லுரையின் நாதம் ஒவ்வொரு எழுத்தொலியிலும் காதில் விழுந்தபடியிருக்கிறது .
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
Thamizhavvai@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.