Tamil Language

கடிதம் -அருள்

Written by Dr. Avvai N Arul

அன்பு அருள்

நலம், நலம் காண ஆவல். எனது மைத்துனர் டாக்டர் அவ்வை நடராஜன், அவரது கல்விப்பணியில், அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் யாராலோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு வரவேற்பு உரை நகல் ஒன்று என்னிடம் உள்ளது.

அதன் நகல் ஒன்று தங்கள் தகவலுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.என்னுடைய வணக்கங்களை டாக்டர் அவ்வை அவர்களுக்கு தெரிவியுங்கள்.

தங்கள் அன்புடன்,
என். வி. நரசிம்மன்.

என் மாமா நரசிம்மன் அவர்கள் அனுப்பியதை   வெளியிடுவதில் மகிழ்கிறேன்..

தாமரைத்திரு முனைவர் ஒளவை நடராசன்

டாக்டர் ஒளவை நடராசன் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமிழ் முழக்கம் செய்து வருபவர் அறிஞர் பெருந்தகை ஒளவை .

தஞ்சை சரபோஜி கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்து மாணாக்கர் மனங்களைக் கவர்ந்தவர்.தில்லி வானொலி நிலையத்தில் தமிழ்ப்பிரிவில் பணியாற்றிப் பேரும் புகழும் பெற்ற பெருமைக்குரியவர்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்.படிக்கின்ற காலத்தில் நூற்றுக்கணக்கான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பேசிப் பரிசுகளும், பட்டங்களும் வென்றவர்.

இனிய செந்தமிழுக்குச் சொந்தக்காரர்.அரிய கருத்துக்களையும் எளிய வகையில் குழந்தைகளும் – மகளிரும், மாணாக்கரும் , அனைவரும் உணர்ந்து கொள்ளுமாறு கூறும் ஆற்றல் மிக்கவர்.

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையில் பல்லாண்டுகள் பணியாற்றிய செயல் வித்தகர்.தலைமைச் செயலகத்தில் இவருக்கென்றே தமிழ் மொழிப் பண்பாட்டுத் துறையினை உருவாக்கி அரசு செயலாளராக ஆக்கியவர் அந்நாளைய முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

அறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தமிழகத் தலைவர்களிடமும் நெருங்கிப் பழகியப் பண்பாளர்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன், புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்கள் போற்றும் வகையில் அரசு செயலாளராகப் பணிப்புரிந்த ஒரே தமிழறிஞர்.

நிறைவாகத் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றார்.இலக்கிய இலக்கணத் துறையிலும், வரலாற்றுக் கல்வெட்டுத் துறையிலும் ,ஆன்மீகத் துறையிலும் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்.

சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் பற்றியும் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் ஆகிய கவிஞர்கள் பற்றியும் இவர் ஆற்றிய உரைகளை கேட்ட தமிழகம், உரையாற்றுவதில் மன்னராக விளங்கியதால் ” நாவேந்தர் ” என்னும் பட்டம் அளித்துப் பாராட்டியது.

கோவையரசர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் தலைமையில் இராமலிங்கர் பணிமன்றச் செயலாளராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து ஆண்டுதோறும் இராமலிங்கர்- காந்தியடிகள் ஆகியோருக்கு விழாக்களை எடுத்து, எப்பொருள் பற்றியும் தமிழிலும் – ஆங்கிலத்திலும் கேட்போர் கவரும் வண்ணம் சொற்பொழிவாற்றும் சிறப்பு மிக்கவர்.

தேனினும் இனிய தேர்ந்தெடுத்த தமிழ் சொற்களை மாலையாகத் தொடுத்து பேசும் ஆற்றல் இவருக்கு இருப்பது போல் வேறு எவருக்கும் இல்லை.

ஒளவையின் சொற்பொழிவு ஒலிக்காத பள்ளி இல்லை . பல்கலைக்கழகங்கள் இல்லை எனலாம்.

பேரறிஞர் அண்ணா ,
கம்பர் விருந்து,
சங்ககால பெண்பாற் புலவர்கள் ,
திருக்கோவையார் திறன்

முதலான நூல்கள் இவர் பெருமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் .

ஒளவை அவர்களின் துணைவியார் டாக்டர் திருமதி தாரா நடராசன் அவர் சிறந்த குழந்தை நல மருத்துவர், சிறந்த சொற்பொழிவாளர், பழகுதற்கு இனியவர், பண்பின் ஊற்று ,மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வராக (டீன்) நற்பணி ஆற்றியவர்.

ஒளவை பெற்ற பெருமிதப் புகழில் இவருக்கும் பங்குண்டு எனில் அது மிகையாகாது.ஒளவை உலகம் சுற்றிய தமிழறிஞர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ,மோரீசு மற்றும் இலங்கை முதலான பல நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

இவர் தந்த வானொலிப் பேச்சுகளும், தொலைக்காட்சி உரைகளும் எத்தனையோ கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளன.

தமிழ்ச் சொல்வேந்தர்,
தகைசால் தமிழர் .

இன்று நம்மிடையே சொற்பொழிவாற்ற வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.

நம் தமிழ்மொழி செம்மொழி ஆன பிறகு அமைக்கப்பட்ட ஐம்பெருங்குழுவில் உறுப்பினராக இருந்து அரிய பல ஆலோசனைகளை வழங்கினார்.

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment