Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11

Written by Dr. Avvai N Arul

தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது .

வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு மாற்றியதையும் , அறிஞர் கணபதி சிற்பியிடம் கேட்டும் – கண்டும் வியந்திருக்கிறேன் .ஒரு மாநாடு என்றால் இருக்கைகளின் அமைப்பையும் ,எவர் அடுத்து எவர் எந்த மரபில் அமர்வர் என்றெல்லாம் வரைந்து காட்டியதையும் குறிப்பிட வேண்டும் .

பொறியியல் போலவே அறிவியல் புதுமைகளை எப்போதும் போற்றினார்.இணைய மாநாடு முதன்முதலாக நடத்திய பெருமையும் பின்னர் தமிழ் இணையக் கல்விக்கழகத்தை உருவாக்கிய பெருமையும் முத்தமிழ்க்கலைஞரையே சாரும் . அறிவியல் நெறியிலேயே பண்பாட்டு மணங்கமழக் கலைச் சொற்களையும் படைத்துத்தந்தார் .துயர்துடைப்பு ,பேரிடர் தணிப்பு ,வேலையின்மை ,கணினி ,மாற்றுத்திறனாளர் ,வாரியம் ,குழாம் ,ஆயம் என்று ஒரு பட்டியலே நீளும் .

பயபக்தியுடன் இச்சட்டத்தை நாம் நிறைவேற்றிக் கொள்கிறோம் என்ற அரசமைப்பின் முதல் முதலான மொழிபெயர்ப்பைப் படித்து எனக்குப் பயமும் இல்லை – பக்தியும் இல்லை , பற்றுறுதியுடன் என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார் .இறையாண்மையைப் பற்றிப் பேசிய போது ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் உடனிருந்தார் .இறைமாட்சி என்ற திருக்குறள் சொல்லாட்சியைக் கூறினோம் .

தனி முதன்மை ,முழு முதன்மை என்ற சொற்களையும் அவ்வப்போது எழுதிப் பாருங்கள் .பழக்கத்தில் தான் சொற்கள் படியும் என்றார் .இப்படிச் சொற்களில் நுணுக்கம் காண்பதில் வல்லவராக இருந்தார் .ஓங்கி வளரும் தமிழ் மொழியில் இந்நாளில் விரைந்து முதலிடம் பெறும் அறிவியற்கல்வி என்பது ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை அடக்கியதாகும் .மேலை நாடுகளில் வளம் பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை , தமிழ்ச்சூழலில் முழுமையாக நிறைவேற்றும் ஆக்கப்பணிகள் நடந்து வருகின்றன .

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியற் புலமே உருவாக்கப்பட்டு மொழிபெயர்ப்பு நூல்கள் நூற்றுக்கணக்கில் வந்துள்ளன .அறிவியற் கலைக்களஞ்சியமே ஏறத்தாழ இருபது தொகுதிகள் வந்துள்ளன . அறிவியல்தொழில் நுட்பங்களைத் தமிழில் கற்கும் போது வேறுபட்ட புரிதல் ஏற்படுகிறது, புதுமையான சிந்தனைக்கு வழி செய்கிறது. புதிய வளர்நிலை அடுக்குகளில் , மாறுபட்ட சூழலில் பொருண்மைகளை ஆராய வழி செய்கின்றது.

தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமுதாயம் , பொருளியல் , அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கும் அறிவியல் தமிழ் வழி வகுக்கும் .இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா நிலைகளிலும் உள்ளது. நாம் இன்னும் முழு நிறைவு காண முயன்று வருகிறோம் .அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் ஆங்கிலத்தைப் போலத் தமிழில் இல்லையென்றே கருதலாம் .இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுவது போலப் பிற துறைகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை.நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முதன்மை தரப்படவில்லை. இதைப்பற்றி அறிவியல் நம்பி தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் பின்வருமாறு குறித்திருந்தார் .

“ வால்மீகியின் பேரிதிகாசத்தைத் தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தார் கம்பர் . ஆனால் சாணக்கியனின் அர்த்த சாத்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான நூலையோ, அவர் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தின் ஒப்பற்ற அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் பல்வேறு வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அலுவலர் சுங்கம் பெறுகின்ற தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை.”இதைப் பற்றி அறிஞர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் .

“இன்றைய தமிழ் வெளிப்பாட்டின் இன்றியமையாத அங்கமாகவுள்ள தொழில் நுட்பச் சொற்கள் பற்றிய ஒரு வரலாற்றினை எழுத முடியாதுள்ளமையை நாம் அறிவோம். தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றை நிறைவாகச் சுட்டுவதாகவே அமைய முடியாது ” . இந்தக் கருத்துக்களை எல்லாம் மனத்துள் அடக்கி நம் சிந்தனையைத் தூண்டுகிற வகையில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய உரையை நினைவூட்டுகிறோம் : ”அறிவியல் தமிழ் வளர்க !அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த நல்ல மாலை நேரத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியிலே பங்கு பெற்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

அறிவியல் துறையில் தமிழ் வளரவேண்டும் இங்குக் கணிப்பொறி அறிவியல் தொழில் நுட்பத்தைத் தொடங்கி வைக்கவும், மைய நூலகத்திற்குக் கால்கோள் நாட்டவும், அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்காக அண்ணா பல்கலைக் கழகத்தினுடைய விருதுகளை பாராட்டுக்களை வழங்கவும் எனக்கு வாய்ப்புத் தந்த அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், துணைவேந்தர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . கடந்த சற்றொப்பப் பத்தாண்டுகளில் மிகவேகமாக விரைவோடு நேர்த்தியாக இந்தப் பல்கலைக் கழகம் வளர்ந்திருக்கிறது. இத்தகைய அரிய வளர்ச்சிக்குக் காரண கர்த்தாவாகத் துணைவேந்தர் வா செ குழந்தைசாமி அவர்கள் திகழ்கிறார் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் ” விஞ்ஞானச் சுடர் ” என்ற இதழ் ஒன்றினை நடத்தி வருகின்ற அம்மையார் இராஜம்மாள் தேவதாசு அவர்களுக்கும், ” மக்கள் விஞ்ஞானம் ” என்ற தலைப்பில் நூல்கள் பலவற்றை எழுதி அதன் வாயிலாக விஞ்ஞானக் கருத்துகளைப் பரப்புவதற்கு முனைந்த நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது.இவைபோன்ற முயற்சிகள் தொடரவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்காகத்தான் என்பதை அனைவரும் அறிவீர்கள். துணைவேந்தர் அவர்கள் தம்முடைய வரவேற்புரையில் என்னையும் கல்வி அமைச்சரையும் பலபடப் புகழ்ந்து நாங்கள் இந்தப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும், அத்தகைய புகழுக்கு உரியவர்கள் என்று குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக 1984 – ஆம் ஆண்டிலேயே அவர் என்னைப் பாராட்டி எழுதிய அந்த வாசகங்களை இங்கே படித்துக் காட்டி அதை மெய்ப்பித்தார். இவ்வளவு சாட்சியங்கள் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால், அவரை நாங்கள் உணர்ந்தவர்கள். அதைப்போல அவரும் எங்களை உணர்ந்தவர். அந்த முறையிலே தான் இன்று இந்தப் பொறுப்பை நானும் நம்முடைய பேராசிரியரும் ஏற்றிருக்கிறோம் என்றாலும், ஏற்றிராத நேரத்திலும் நம்முடைய குழந்தைசாமி அவர்களின் அரும்பெரும் திறமையையும் அவருடைய ஆர்வப் பெருக்கினால் அண்ணா பல்கலைக்கழகம் எல்லாத் தடைகளையும் மீறி நடந்து வருகின்ற அந்தப் பாங்கினையும் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்திருக்கின்றோம்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாத்திரம் அல்ல. அறிவியல் தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறவர். பல்கலைக்கழகத்தின் பணிகளுள் ஒன்று என்று அதைக் கருதி அல்ல. அவர் இந்தப் பல்கலைக் கழகத்தில் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வளர்கின்ற தமிழ் எப்படி வளர வேண்டும். எப்படி வலிமையோடு வளர வேண்டும். எப்படிப் பரவலாக – விரிவாக வளர வேண்டும் என்பதிலே ஆழ்ந்த அக்கறையுள்ளவர். தமிழகத்திலே – தமிழ் மேதைகளிடத்திலே கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டாலும் கூடத் தான் எடுத்துக் கொண்டுள்ள அந்த எண்ணத்திற்கு வலிவு சேர்ப்பதிலும், அது சரியானது தான் என்பதைச் சாதிப்பதிலும் மற்றவர்களை அவருடைய கருத்திற்கு ஈரப்பதிலும் அவர் நீண்ட காலமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் எழுதுகிற நூல்கள் அனைத்தும் இந்தப் பதின்மூன்றாண்டுகளில் பல தடவை எனக்கு வந்ததுண்டு. அதைப்போல நான் எழுதுகிற நூலையும் அவருக்கு அனுப்பி வைப்பதுண்டு.எனவே நீங்கள் யாரும், இன்றைக்கு தான் இந்த நேரத்திலேதான் நாங்கள் இங்கே ஒரே மேடையில் பேசுகிறோம். அழைக்கப்பட்டிருக்கிறோம் – ஒருவரை ஒருவர் பாராட்டுகிறோம். ஒருவருடைய முயற்சியை இன்னொருவர் பாராட்டுவதன் மூலம் அது அவர்களுக்குக் கிடைக்கின்ற பெருமையாகும். அதனைப் புகழாகக் கருதாமல் அவர்களால் சமுதாயத்திற்கு நாட்டிற்கு – களத்திற்கு – மொழிக்குக் கிடைக்கக்கூடிய ஆதாயம் என்ற அந்த அடிப்படையில்தான் இத்தகைய புகழுரைகள் கடந்த காலத்திலும் இன்றைக்கும் சரி இங்கே எடுத்தாளப் பட்டிருக்கின்றன.

இந்த அரசு எத்தனை கோடி ரூபாய் இந்தப் பல்கலைக் கழகத்திற்காகச் செலவிட்டிருக்கிறது என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னார். இங்கே இந்த மண்டபத்திற்கு வருவதற்கு முன்னே என்னையும் பேராசிரியர் அவர்களையும் அழைத்துச் சென்றார். பல்வேறு விஞ்ஞான சாதனைகளை எல்லாம் அவர் விளக்கிக் காட்டினார். அதற்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தின் வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பட விளக்கமாக எங்களுக்கு அளித்தபோதுகூட இந்தப் பல்கலைக் கழகத்திற்குக் கிடைத்துள்ள தொகையில் அரசு கொடுத்துள்ள தொகை குறைவானதுதான் என்பதைச் சொல்லாமல் புள்ளி விவரத்தோடு எங்களிடத்திலே காட்டியிருக்கின்றார்.இங்கே அவர் பேசும்போது சொன்னார். அது இந்தப் பல்கலைக் கழகத்திலே புதையல் மிகுதியாக இருக்கிறது என்று சொன்னார். புதையலாக இருந்தால் அது யாருக்கும் பயனில்லை என்பதை அவர்களும் அறிவார்கள், நானும் அறிவேன்; நீங்களும் அறிவீர்கள். அது புதையலாக அல்ல. தரப்படுகின்ற ஒவ்வொரு காசும் இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து பல விஞ்ஞானக் கருத்துகளை உருவாக்குவதற்கான உரமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதனை நான் அறிந்து மகிழ்கிறேன்.

சற்றொப்ப நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயில்கின்ற இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட ஐயாயிரம் பேர் இருக்கின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்தில் இதனுடைய பெருமை மற்ற பல்கலைக் கழகங்களோடு ஒப்பிடும்போது, அனைத்தையும் வெல்கின்ற அளவிற்கு இருக்கிறது. இதனை அறியும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இத்தகைய வெற்றிகளை இந்தப் பல்கலைக்கழகம் பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அதற்கு இந்த அரசு தன்னால் இயன்றவரை பக்கத்துணை புரியும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று விஞ்ஞான யுகத்தில் கணிப்பொறியின் வளர்ச்சி வளவு வேகமாக இருக்கிறது என்பதனை நம்முடைய பேராசிரியர் இங்கே எடுத்துக் காட்டினார்.

ஒரு நாடு பொருளாதாரத் துறையில் வேளாண்மைத் துறையில், அறிவியல் துறையில் மற்ற நாடுகளோடு போட்டி போடக் கூடிய அளவிற்கு வளர வேண்டும் அப்படி எதிர்பார்க்கின்ற நேரத்தில் ஆர்வம் மாத்திரம் அடித்தளமாக அமைய முடியாது. அதற்கான முயற்சிகளும் தேவை. அந்த முயற்சிகளைப் பேசி, எழுதி செயற்படுத்தியாக வேண்டும். அப்படிச் செயற்படுத்துவதற்கு இன்றைக்கு வளர்ந்துள்ள விஞ்ஞானத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும். அப்படிப் பயன் படுத்திக் கொள்ள இன்றைய இளைய தலைமுறை முன் வரவேண்டும்.ஏனென்றால் பழைய தலைமுறை இந்தப் பல்கலைக் கழகத்திற்கு யாருடைய பெயர் சூட்டப் பட்டிருக்கின்றதோ அந்தப் பெயருக்குச் சொந்தக்காரரான அண்ணா . அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல – எல்லாம் விதிப் பயன் – என்றெண்ணிக் காலம் கழித்த தலைமுறையாக இருந்து மறைகின்ற தலைமுறை மாறிவிடக்கூடாது, என்பார்.

புதிய தலைமுறைதான் விதி என்று சொன்னால் அதைக்கூட மதியால் மாற்றலாம் என்று அறை கூவல் விடுத்து இந்தச் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு இன்றைக்கு முனைந்துள்ள தலைமுறையாகவும் உள்ளது. அப்படிப்பட்ட தலைமுறை பெருகி வருகின்ற – வளர்ந்து வருகின்ற விஞ்ஞானத்தை நல்ல முறையிலே பயன்படுத்திக் கொண்டாக வேண்டும். அப்படிப் பயன்படுத்திக் கொள்வதற்கு அறிவியல் தமிழ் மிக மிக அவசியம்.அறிவியல் தமிழ் என்று சொல்லும்போது – அறிவியலிலே தமிழ் எதற்கு என்று கேட்பாரும் உண்டு, அறிவியலை நம்முடைய தாய்மொழியிலே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கின்ற உணர்வு மேலோங்கி நிற்கின்ற காலம் இந்தக் காலம். அதற்குத் துணையாக நம்முடைய தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டும்.

தமிழ்மொழி உலகத்திலே உள்ள எல்லா மொழிகளிலும் சிறந்த மொழி என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். நம்முடைய சங்கத் தமிழுக்கு ஈடாக – நம்முடைய இலக்கியங்களுக்கு ஈடாக – நம்முடைய காப்பியங்களுக்கு ஈடாக வேறு மொழிகளில் இல்லை என்றெல்லாம் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பெருமை கொள்கிறோம்.ஆனால், அந்த மகிழ்ச்சி அடைவதோடு – பெருமை பாராட்டுவதோடு தமிழுக்கு நாம் செலுத்துகின்ற கடமையை நிறுத்திவிடுகின்றோம்.

அந்தத் தமிழ் இன்றைக்கு வளர்ந்து வருகின்ற விஞ்ஞானத்தோடு இணைந்து வளர்ந்திட வேண்டும். அப்படி வளர்வதற்கு ஏற்றவகையில் நம்முடைய செயற்பாடுகள் அமைந்திட வேண்டும். அதற்குப் பல ஆய்வுகள் நடைபெற வேண்டும். அந்த ஆய்வுகள் மூலம் ஏற்படுகின்ற கருத்து மாற்றங்கள் பெருக வேண்டும். அந்தக் கருத்து மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்ற நல்ல விளைவுகள் வளரவேண்டும் – அந்த விளைவுகளால் உருவாகின்ற எதிர்கால அறிவியல் தமிழ் முன்னேற்றம் நிலைக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இன்றைக்கு இந்தப் பல்கலைக்கழகத்திலே – அதற்காகத் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெறுகின்ற முயற்சிகளை நாம் மகிழ்ந்து வரவேற்று உள்ளுணர்வை அறிவியல் உணர்வாக மாற்ற வேண்டும் .அறிவியல் தமிழ் ஆங்கிலச் சொற்களில் வேறு மொழிச் சொற்களில் இருக்கின்ற விஞ்ஞானச் செய்திகளை மொழி பெயர்க்க வேண்டும் அச் செயல் அளவோடு நின்றுவிடாமல் விஞ்ஞானத்திற்கு, அதனுடைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு தமிழில் புதிய சொற்களையும் நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.உதாரணமாக சைக்கிளை என்றால் அதற்குத் தமிழிலே ஈருருளி என்று தனித்தமிழிலே சொல்லி விடுகிறோம். இதற்கு முன்பு துவிச்சக்கர வண்டி என்றனர். அதைத் தமிழ் என்று கருதிக் கொண்டு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தோம். இரண்டுமே காரணப் பெயர்களாக அமைந்திருக்கிறதே யல்லாமல் அவை எளிதாக மற்றவர்கள் பின்பற்றுகின்ற பெயராக இல்லை அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் அப்படியே பிறமொழிச் சொற்களை – விஞ்ஞானச் சொற்களைத் தமிழிலே எடுத்தாள்வது தவறல்ல என் கருத்தும் சொல்லப்பட்டிருக்கின்றது. பிடிவாதமாக அதைத் தமிழிலே மொழி பெயர்த்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அந்தச் சொற்களை நாம் பயன்படுத்தி விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தோடு நாமும் போட்டியிட்டாக வேண்டும் . காலம் வளர கருத்து வளத்தோடு புதிய சொல் வளம் பெருகும் . அந்தக் கருத்தையும் நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மொழி பெயர்ப்பு என்ற பெயரால் சிலபணிகள் நடைபெறுகின்றன . அருமை நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நான் அதை அண்மையிலே படிக்க நேரிட்டது. அதிலே அவர் வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு தமிழ் நாளிதழில் ஒரு செய்தி வந்ததாம். அந்தச் செய்தி “ பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரயில் பாதையில் தூங்கிக் கொண்டிருந்த நூறு பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள் ” என்பது அச்செய்தியாம். ஆனால், விசாரித்துப் பார்த்ததில் அப்படி அந்த இடத்தில் ஒன்று நடைபெற்றதாகவே யாரும் சொல்லவில்லை.

பிறகு எப்படி அந்தச் செய்தி வந்தது என்று இதழாசிரியர்களைக் கேட்ட போது, ஆராய்ச்சி நடத்தி அந்தச் செய்தியைக் கண்டுபிடித்த போது அந்தச் செய்தி ஆங்கிலத்திலே முதலிலே வந்திருக்கின்றது. Hundred sleepers were washed out from the railway lineஎன்று செய்தி வந்திருந்ததாம். ஆக ” ஸ்லீப்பர்ஸ் ” என்பதற்குத் தூங்குபவர்கள் என்று கொஞ்சம் நேரடியாக மொழி பெயர்த்ததால் ஏற்பட்ட சங்கடம் செய்தியே சரியா ? தவறா ? என்று கண்டுபிடிக்க ஆசிரியர் குழுவே படாதபாடு படவேண்டியிருக்கின்றது.ஆக மொழி பெயர்ப்பு என்பது அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துத் தருவது என்பதல்ல. அதனுடைய நுணுக்கங்களை ஆராய்ந்து புதிய சொற்களைக் கண்டறிந்து அந்தப் புதிய சொற்களைத் தமிழுக்குத் தந்து அதன் மூலமாக அந்த மொழி பெயர்ப்பின் மூலமாக விஞ்ஞானத்தை நாம் வளர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.இன்றைக்கு ” கம்ப்யூட்டர் ” என்பதற்கு இதுவரை என்னென்ன சொற்களோ கூறமுயன்று , அவை எல்லாம் புறம் தள்ளப்பட்டு, “ கணிப்பொறி ” என்ற அளவிற்கு இப்போது அழகான தமிழ்ச் சொல் கிடைத்திருக்கின்றது. அதைப்போல அறிவியல் தமிழை வளர்க்கப் புதிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

காரணப் பெயர்களையே தான் கண்டுபிடிக்க வேண்டுமென்று அந்த ஆர்வம் நமக்கு வந்தாக வேண்டும். அந்த வகையிலே அறிவியல் தொழில்நுட்பப் பள்ளியை நான் தொடங்கி வைக்கும் போது அந்த நெறியான வழியில் நடைபோட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். மைய நூலகத்திற்கு இன்று கால்கோள் நாட்டப்படுகின்றது. எனக்குத் தரப்பட்ட குறிப்பில் வேறு சில பல்கலைக் கழகங்களை இங்கே எடுத்துக் காட்டி அங்கெல்லாம் இருக்கின்ற பல்கலைக் கழகங்களுடைய மய்ய நூலகங்களைவிடப் பரப்பளவிலே இது சற்றுக் குறைந்ததாக அமைகிறது என்பதும் ஒன்று. பரப்பளவைப் பொறுத்தது அல்ல, அதிலே இடம் பெறுகின்ற நூல்களைப் பொறுத்துதான் நூலகங்களின் பெருமை உயர இருக்கின்றது. அப்படிப்பட்ட நூல்கள் ஏராளமாக இடம் பெறும் என்றும் நான் நம்புகின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்.

வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்குமேயானால் நம்முடைய நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்களாக ‘மூடநம்பிக்கையிலேயிருந்து விடுதலை பெற்றவர்களாக வாழ முடியும்’ உயர்ந்த வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள முடியும் என்று அண்ணா அவர்கள் உறுதியாக நம்பினார்கள். எழுத்தாளர் மாநாட்டிலே அண்ணா அவர்கள் பேசியதை நான் நினைவுப் படுத்தினால் எத்தகைய நூலகங்கள் நமக்குத் தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எழுத்தாளர்கள் முதன் முதலாக அண்ணா அவர்களைத் துணிந்து அந்நாளில் அவர்களுடைய மாநாட்டிற்கு அழைத்தார்கள். அந்த மாநாட்டிலே அண்ணா பேசும்போது சொன்னார்கள். “ நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதவை எல்லாம். தெரிந்தவையாகத் தோன்றும்.

ஆனால், அவர்களுக்கு உணர்த்தப்பட்டவை எல்லாம் தெரியாதவையாக இருக்கும் என்று குறிப்பிட்டு வானொலியைக் கண்டுபிடித்தவன் யார் என்று கேட்டால் மார்க்கோனி என்று சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒன்றை – எமனுக்கு வாகனம் எது என்றால் உடனடியாக எருமை என்று சொல்வார்கள் . இப்படி ஒரு நாடு – இப்படி ஒரு சமுதாயம் வளரலாம் . இதை மாற்றியமைக்க வேண்டியது எழுத்தாளர்களுடைய கடமை என்று குறிப்பிட்டார்கள்.தகவல் எட்டும் முன்பே தீர்வு காணும் அரசு இது அப்படிப்பட்ட எழுத்துகள் நூல் வடிவங்களைப் பெற வேண்டும்.

இந்த நூல்கள் அறிவை வளர்க்கின்ற நூல்கள் விஞ்ஞானப் புதுமைகளைச் வழங்கும் நூல்கள் பழைமைகளுக்கு விடை கொடுத்து, அனுப்பிவிட்டுப் புதுமைக்கு வரவேற்பு அளிக்கின்ற நூல்கள் தேவை. அப்படிப்பட்ட நூல்கள் நிறைந்த இடமாக மைய நூலகம் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. குறைகள் எங்கள் செவிப்பறையைத் தொடுவதற்கு முன்பே தகவல்களுக்குத் தீர்வு காணுகின்ற அரசுதான் இன்றைக்கு நடைபெறுகின்ற தமிழக அரசு என்பதை எடுத்துச் சொல்லி அமைகிறேன் .

நன்றி : முரசொலி – 4.8.1989.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment