Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

Written by Dr. Avvai N Arul

நெஞ்சை வெல்லும் நேர்மைசீர்

திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் , புரட்சிக்கவிஞர் புனைந்த இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம் ,கல் சுமந்த கசடர் ,வில்லவன் கோதை வீரம் என்றெல்லாம் பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழ்க் கலைஞரும் புதுமையாகப் படைத்தனர் .முத்தமிழறிஞருக்குச் சிலப்பதிகாரப் பற்று எல்லையில்லாதது .

சித்திரச்சிலம்பின் முத்திரை வரிகளை வாய்திறந்தால் கடல் மடை போல் சொல்வார் .பூம்புகார் என்ற சொல் அவருக்குத் தேனாய் இனித்தது .பூம்புகாரை மீளப் படைத்ததும் பொற்பு மிகுந்த அற்புதம் வழியும் சிற்பங்களை அங்கே அமைத்ததும் நாடறிந்தவை .கலைஞரின் பூம்புகார் நாடகம் ஒப்பற்றது .தமிழ் மரபு ,மானம்,இனம் ,எழுச்சி ,பழமைப்பாடு ,பண்பாடு முதலிய கூறுகள் காவியத்தில் -கதைகளில் – கவிதைகளில் – கட்டுரைகளில் – மடல்களில் – தலையங்கங்களில் – மேடையுரைகளில் – நாடகத்தில் – திரைப்படத்தில் தங்கு தடையின்றிப் பொங்கி வழிந்தன .

இராமாயணம், 64 வகையாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஒவ்வொரு சமுதாயத்தின் கற்பனைக்கேற்ப, அந்தந்த இனக் குழுவின் பண்பாட்டுச் சூழலுக்கேற்ப, மனத்திற்குள் ஊறிக் கிடந்து, காலம் கடந்து, நினைவில் எஞ்சிய அலைவுகளிலிருந்து, புதிது புதிதாய் அவை கதைகளாக்கப்பட்டிருக்கின்றன.

கதையாசிரியரின் மாற்றங்களைக்கொண்ட கதை; கற்பனையில் முகிழ்த்தது உண்மையே எனக் கொண்டாலும், அந்தக் கற்பனை எதைச் சொல்லப் பயன்படுகிறது ? யார் பக்கம் நின்று சொல்கிறது அதை இப்பொழுது மாற்றிச் சொல்வதற்கான தேவை என்ன ? எந்தப் புறச்சூழல், அறிஞர்களை இந்த வழியில் சிந்திக்க வைத்திருக்கிறது என்பது பயில்வோருக்கு அறிவூட்டம் அளிப்பதாகும் என்று காட்சி ஊடகக் கலைமாமணியாக விளங்கும் பேராசிரியர் முனைவர் இராமசாமி இன்றைய கணையாழியில் எழுதியதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன் .

முத்தமிழ்க்கலைஞரின் பூம்புகார் நாடகப் படைப்பை மூதறிஞர் வ சுப மாணிக்கம் எழுத்தெண்ணிப்படித்து மூழ்கினார் .அந்தப் பேரறிவின் விளக்கமாக தெளிவுப் பளிங்காக எழுதிய திறனுரையை கலைஞர் அவர்களே கட்டுரையைப் படித்துப் பாராட்டியதை நான் செவிகுளிரக் கேட்டிருக்கிறேன் .மூதறிஞருக்குப் பொய் சொல்லா மாணிக்கம் என்றே ஒரு புகழுரை உண்டு .இந்தத் திறனுரையில் ஒரு தொடரிலும் மிகு சொல்லோ – குறை சொல்லோ இல்லை .

ஆழ்ந்த புலமையின் அருங்கலைப் பேழையில் உதிர்ந்த முத்துக்கள் .இருவகைச் சிலப்பதிகாரம்‘ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் ஆரம் படைத்த தமிழ்நாடு ‘ என்றார் பாரதியார். இச்சிலப்பதிகாரம் இளங்கோ அடிகளால் 1800 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டது என நாம் அறிவோம். நாம் வாழும் இந்நாளில் 1968 இல் இன்னொரு புதிய சிலப்பதிகாரம் தோன்றியிருக்கின்றது.

இதனை நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்று ஓர் நேர்மை படைத்த தமிழ்நாடு’ என்று பாராட்டுவோம். இப்புதிய சிலம்பைப் படைத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி.கலைஞர் 1953 இல் திருச்சிராப்பள்ளிச் சிறையகத்துக் கடுங்காவலோடு வதிந்த காலை, அஃதாவது தம் 29 ஆவது வயதில் இளங்கோவின் சிலப்பதிகாரத்தைக் கலையார்வத்தோடு திறனாய்ந்தார். உரைகளோடும் வரலாற்றோடும் வைத்து நிகழ்ச்சிகளை அலசிப் பார்த்தார். 15 ஆண்டுப் பார்வையின் விளைவே கலைஞரின் உரை நடைச் சிலப்பதிகாரம்.

பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஞான்று இப்படைப்பு வெளியாயிற்று.முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரையின் முன்னுரைப் பதிகத்தைப் பெற்ற சிறப்புடையது இச்சிலப்பதிகாரம்,‘சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை என் தம்பி கருணாநிதி தனது வளமிகு செழுந்தமிழ்ச் சொல் திறத்தால் நாடகமாகத் தருவது பொருத்தமானதே’ எனவும் ‘இந் நாடக நூலை வெளிக்கொணர்வதன் மூலம் தம்பி கருணாதிதி தமிழ் இலக்கியத்திற்கு நற்பணி ஆற்றியுள்ளார்’ எனவும் அறிஞர் அண்ணா முன்னுரையில் தம்பியுறவு சொல்லிப் பாராட்டுவர்.

இவ்வுறவுணர்ச்சி இந்நாடகத்தை எழுதும் போது கலைஞர்க்கும் உண்டு. இளங்கோ செங்குட்டுவனை ‘அண்ணா, அண்ணா‘ என்று சொல்லும்போதெல்லாம், கலைஞர் தம் அண்ணாவையே காண்கின்றார். செங்குட்டுவனின் தேவியை அண்ணி என்று சுட்டும்போதெல்லாம் இராணி அண்ணியைக் காண்கின்றார் என்ற பாசம் நமக்குப் புலனாகின்றது.

கலைஞரின் பற்றுகலைஞரின் சிலப்பதிகாரப்பற்றும் பூம்புகார்ப் பற்றும் நற்றமிழ் நாடு அறிந்தவை. அத்தோன்றலிடம் காணப்படும் தமிழூற்றம், தமிழாழம், தமிழ்மறம் எல்லாம் சிலப்பதிகாரச் செய்யில் விளைந்தவை.பதியெழு ‘வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலை இய என்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்”என இளங்கோவடிகள் புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் என்றும் நிலையான தலை நகர் எனவும், அதற்குக் காரணம் என்றும் உயர்ந்தோர் இருப்பது எனவும் பாடிச் சென்றுள்ளார்.

அங்ஙனம் பாடியது உண்மையே என்பார் போல் உயர்ந்த தமிழ் நெஞ்சம் வாய்ந்த நம் முதலமைச்சர் கருணாநிதி இன்று நம் கண்ணெதிரே பூம்புகார் நகரத்தைச் சிலப்பதிகாரக் குறிப்புக்களின்படி உருவாக்கி வருவதால் அறிந்து கொள்கின்றோம். அகக் கண்ணாற் கண்ட பூம்புகாரை முகக் கண்ணாலும் உலகத்தார் காண வேண்டும் என்று பெருந்திட்டம் கோலும் கலைஞரை நன்றியொடு வாழ்த்துகின்றோம்.

பூம்புகார் நகரத்துப் புகழும் பெயரும் யாராலும் மூழ்க அடிக்கப்பட முடியாதவை. சேர இளவல் செந்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் உள்ள வரையில் பூம்புகாரின் புகழும் மதுரையின் மாண்பும் வஞ்சியின் வீரமும் பொதுவாகத் தமிழகத்தின் சிறப்பும் தாழாது தாழாது’ என்பது கலைஞரின் உள்ளத்துணிவு. அள்ள அள்ளக். குறையாது கூடும் இத்துணிபுணர்ச்சியைக் கலைஞரின் எண்ணம் சொல் செயலெங்கும் முரணின்றிக் காண்கின்றோம்.

பாராட்டுஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் கலைஞர்க்கு அளித்த டாக்டர் பட்டத்தினைப் பாராட்டும் பொருட்டுச் சென்னைக் கலைவாணர் அரங்கில் 17–10-1971 இல் நிகழ்ந்த பெருங்கூட்டத்தில் யானும் கலந்து கொண்டேன். அஞ்ஞான்று கலைஞரின் சொற்றிறம், புலமை நுணுக்கம், கவிதைப் படைப்பு முதலான பெற்றிகளை எடுத்துச் சொல்லி வருகையில், அவர் எழுதிய சிலப்பதிகார நாடகம் தனித்து ஆராய்வதற்குரிய இலக்கியத் தகுதியுடையது என்று குறிப் பிட்டேன்.

நான்கு ஆண்டுக்கு முன் சுட்டிய குறிப்பினை இன்று ஒருவாறு விரித்துரைக்கும் வாய்ப்புப் பெற்றமைக்கு, மகிழ்கின்றேன். ஒருவாறு என்று ஒரு சொல் பெய்த தற்குக் காரணம் இந்நாடகத்தைப் பலவாறு ஆராயலாம் எனினும் இக்கட்டுரைக்கண் ஒரு கூறே இன்று என்னால் ஆராயப் படுவது என்று காட்டுதற்கு.கலைஞர் இன்று வாழும் ஆசிரியர், பலகலைகளையும் திறனாயவல்லவர், செல்வாக்கு மிக்க எதிரான ஒரு கிழமையிதழ் பாராட்டியது போலத் தமிழ்ப் புலமை சான்றவர், ‘ ஆற்றலொடு விளங்கும் முதலமைச்சர்.

அவர் எழுதிய ஒரு நாடக நூலைத் திறன் செய்வது அருமை கலந்த பெருமை யாகும். உண்மைத் திறனெறிகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பும் ஆகும்.இலக்கியப் பெருநோக்கில் இக்கட்டுரை வரையப்படுதலின், இதனைப் படிப்பவரும் இந்நோக்கோடு படிப்பாராக என்று கேட்டுக் கொள்கின்றேன். ‘பாம்பு அறியும் பாம்பின கால்’ என்றபடி இந்தக் கட்டுரை மாணவ உலகிற்கு ஒரு விருந்தாகும் என்று நம்புகின்றேன்.

இலக்கிய ஆராய்வு என்பது படைத்த புலவன் உள்ளத்தை உள்ளபடி எடுத்துக்காட்டுவது. அதுமட்டுமன்று. புலவன் உள்ளம் பொருந்திய உள்ளந்தானா ? என்று உள்ளத்தளத்தையும் அசைத்துப் பார்ப்பது. உள்ளபடி எடுத்துக் காட்டுவதால் எழுத்தாளனை மதிக்கின்றோம். உள்ளத்தை அசைத்துப் பார்ப்பதால் புலமையுரம் பெறுகின்றோம்.கலைஞரின் சிலப்பதிகாரம் உரைநடையில் யாத்த ஒரு நாடக நூல் : இந்நூலில்

1. கலைஞரின் தமிழ் நடையை ஆராயலாம்;

2. நாடகவுத்திகளை விரிவாக ஆராயலாம்;

3. பாத்திரப் பண்புகளை ஆராயலாம்;

4. இளங்கோ சிலப்பதிகாரத்துக்கும், கலைஞர் சிலப்பதிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பல முனைகளில் அலசலாம்.

எனது இக்கட்டுரை, இறுதியில் கூறிய ஒற்றுமை வேற்றுமைகளை வெளிக் காட்ட முற்படுகின்றது..

கலைஞரின் முன்னுரையில் ஒரு பகுதி’ மூலக்கதையின் ஆசிரியர் கொண்ட கருத்துக்கு மேலும் வலுவூட்டுவது போன்ற மாற்றங்களும் — அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்களின் பண்புகெடாமல் தரப் படுகின்ற உருவகமும்–மறுக்கத்தக்கன அல்ல.

காலத் திருகேற்ற சில மாற்றங்களைக் கதையின் நோக்கம் கெடாதவாறு அமைப்பதும் தவறல்ல. மூலக்கதை ஆசிரியர் விட்ட கருத்துக்களையோ, காட்டத் தவறிய பாகங்களையோ அடிப்படைக்குக் குந்தகமின்றிப் புகுத்த நடுவதும் குற்றமல்ல.இந்த நோக்கத்துடன் நான் சில மாறுதல்களைச் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியமாக்கும் இந்த முயற்சியில் கையாண்டிருக்கின்றேன்.

‘ சில மாறுதல்களையே செய்திருப்பதாகக் கூறும் கலைஞர் தம் முன்னுரை அடக்கமான முன்னுரை என்பது என் கருத்து. தொடக்கம், நடு, இறுதி என்ற நூலமைப்பிலும் பாத்திர வடிப்பிலும் கதை நிகழ்ச்சியிலும் உணர்ச்சியிலும் கட்டு மானப் பொருளிலும் கதை நோக்கிலும் தொட்ட தொட்ட இடமெல்லாங் கலைஞர் சிலப்பதிகாரம் இளங்கோ சிலப்பதிகாரத்திலும் வேற்று வீற்றுப் பாங்கு உடையதாகவும் தனித்தன்மையாகவுமே நான் காண்கின்றேன்.

இளங்கோ காப்பியம் மூல நூலாகவும் கலைஞர் நாடகம் அதன் வழித்தட நூலாகவும் எனக்குத் தோன்ற வில்லை, இந் நாடக நூல் ஒரு மூல நன்னூலாகவே இலங்குகின்றது. இப் புதுக்கோட்பாட்டை நிறுவுவதற்குச் சான்றுகள் நிரம்பவுள.நாடக நூலமைப்பு ‘இந்நூல் 38 காட்சிகள் கொண்டது. மேடையும் நடிப்பும் நோக்கிக் காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப் பட்டுள்ளன.

காட்சி சேரநாட்டுத் தலைநகரான வஞ்சி மூதூரில் தொடங்குகின்றது. அம்மூதூரிலே இறுதியில் முடிகின்றது. செங்குட்டுவனில் தொடங்கிச் சேரன் செங்குட்டுவன் வாழ்க என்றும் முடிகின்றது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோ துறவ இறுதிக் காதை இறுதியில் இடம் பெற்றிருப்ப, இந்நாடகத்தில் அது தொடக்க இடம் பெறுவதையும், செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவில் துறவுச் செயல் தோன்றுவதையும் காண்கின்றோம்.

கண்ணகியின் உரைசால் புகழுக்குச் செங்குட்டுவன் வடகற்சிலை எடுத்ததைக் காட்டிலும் – இளங்கோ தென்றமிழ்க் காப்பியம் படைத்தது பெருங் காரணம் ஆதலின் ஆசிரியன் சிறப்பினை ‘விழாவும் விளைவும் இளங்கோ துறவு’ என இரு காட்சிகளில் கலைஞர் வீறும் பெறப் பேசுகின்றார். இளங்கோ, இளங்கோ அடிகளாக மாறி நிற்கிறான்’ என்ற தொடராற்றல் கலைஞரின் தமிழாற்றலுக்கு ஒரு சான்று.காப்பியக் கடைசியில் ஒளிந்திருந்த இளங்கோவை ஒரு பாத்திரம் ஆக்கி நாடக நாயகனாக உயர்த்துவர் கலைஞர்.

சிலப்பதிகாரம் கண்ணகியின் மண மங்கலத்தில் தொடங்கி இளங்கோ துறவில் முடிந்திருப்ப, கலைஞரின் நாடகச் சிலம்போ இளங்கோ துறவில் தொடங்கிக் கண்ணகியின் கடவுள் மங்கலத்து முடிவதைப் பார்க்கின்றோம்.இளங்கோவின் காதைப் பெயர்கள் வேறு. கலைஞரின் காட்சிப் பெயர்கள் வேறு. அவர் தலைப்புக்களை இவர் யாதும் பின்பற்றாமையினாலே, கலைஞரின் சிலப்பதிகாரம் மூலத்தன்மையுடையது என்பது வெளிப்படை.

குன்றக் குறவர்கள் கண்ணகி கோவலனொடு வான் வழிச் சென்ற இறும்பூதான செய்தியைச் செங்குட்டுவனிடம் கூறும்போது உடனிருந்தவர்கள் யார் யார் என்று காண்பது சிலப்பதிகாரச் சிக்கல்களுள் ஒன்று. தண்டமிழ் ஆசான் சாத்தனார், இளங்கோவடிகள் இருவருமே அப்போது இருந்தனர் என்று கொள்வாரும் உண்டு. இளங்கோ அப்போது இருந்திலர் எனக்கொள்வாரும் உண்டு. இதனைச் சிலப்பதிகார மூலத்தோடும் உரைகளோடும் ஒட்டி ஆராய்ந்த கலைஞர் அதனைச் சிறிது வேறுபட நாடகப் பாங்கில் அமைத்துக் காட்டுவர்.

இளங்கோ மலைக்குறவர்களை எதிர்பாராது வழியிடைக் கண்டார் எனவும், அவர்களையும் அழைத்துக் கொண்டு மலைவளம் காண முன்னரே வந்திருந்த அண்ணன் செங்குட்டுவனையும், அண்ணி வேண்மாளையும், ஆசான் சாத்தனாரையும் சென்று பார்த்தார் எனவும் இந்நால்வர் முன்னிலையில் மலைக்குறவர்கள் தாம் கண்ட கண்ணகி நிகழ்ச்சியைச் சொல்லினர் எனவும் கலைஞர் நூல் தெளிவு செய்யும். இதனால் இளங்கோ வேண்மாள் உடனிருந்தருளி’ என்ற சிலம்பின் அடிக்குக் கலைஞர் துணிந்த உரைத்தெளிவு புலனாகும்.

சிலம்பின் தோற்றம் எனப் ‘பெயரிய ஐந்தாங்காட்சி சிலப்பதிகாரக் காப்பியம் எழுதத் தொடங்கியதைக் குறிக்கின்றது.இதனால் கலைஞரின் சிலப்பதிகாரம் இளங்கோவையும் அவரின் சிலப்பதிகாரத்தையும் உள்ளடக்கியது என்பது போதரும்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக ‘ என்ற பதிகத் தொடருக்கு இருபொருள் உரைப்பதை நாம் அறிவோம். எனினும் நாடகக் கலைஞர் நமக்கு ஒரு வழியே காட்டுகின்றார்.

‘முடியுடை மூவேந்தர்க்கும் இக்கதை உரிய தாகையால் இளங்கோவடிகள் இதனை எழுதுவதே பொருத்தமாகும்’ என்று சாத்தனார் தெளிவாகச் ‘சொன்னார் எனவும் இளங்கோ அதற்கு இலக்கியம் படைப்பான்’, ‘என்ன தம்பி சரிதானே’ என்று செங்குட்டுவன் இளங்கோ பக்கம் திரும்பிக் கேட்டான் எனவும் அண்ணன் சொல்லுக்கு ‘உடன்படுவாராகி சரி அண்ணா’ என்று இளங்கோ இசைந்தார் எனவும் இந்நாடகப் போக்கு அமைகின்றது.

காப்பியக் கதையும் நாடகக் கதையும்இளங்கோவடிகட்கும் கலைஞர்க்கும் தமிழுணர்வில் தமிழ் நாகரிகத்தில் தமிழ் கலைகளில் தமிழகப் பற்றில் தமிழின மேன்மையில் வேறுபாடில்லை எனினும் சமுதாயக் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை சமயக் கொள்கை என்றின்னவற்றில் அடிப்படையான வேறுபாடு மிக்குள.

அடிகள் சிலவற்றில் நம்பிக்கை கொண்டாரோ இல்லையோ, நிமித்தங்களையும், அப்பால் நிகழ்ச்சிகளையும், சமுதாயத்தில் பலர் கொண்ட கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் தம் காப்பியத்துக்குக் கட்டுமானப் பொருள்களாகத் தழுவிக் கொண்டுள்ளார் என்பது மறுக்க இயலா உண்மை.பெரியார் அண்ணா வழிவந்த கலைஞர் இவ்வகையில் இளங்கோ வழிப் புகார் என்பதும் வெளிப்படையான உண்மை. வேறுபட்ட இவ்வுண்மைகளின் விளைவு என்னாம்? இளங்கோ மேற்கொண்ட கட்டுமானப் பொருள்கள் கலைஞர் நாடகத்து வெட்டுமானப் பொருள்கள் ஆகிவிடும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதே.

மேலும் இவர் ஆளும் கட்டுப் பொருள்கள் புதியனவாக இருக்கும் என்பதனையும் நாம் . எதிர்பார்க்க வேண்டும். இதனால் கதைச் செலவிலும் பாத்திரப் பண்பிலும் பெருமாற்றங்கள் ஆசிரியர்தம் கொள்கைகட்கு ஏற்பப் புகுகின்றன. கொள்கை வேறாகும்போது செல்கையும் வேறாகத்தானே இருக்கும்?கலைஞர் தம் நாடக நூலில் மதிக்கு இடமுண்டேயன்றி விதிக்கும் நிமித்தத்துக்கும் இடமில்லை. ‘ ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரக் காப்பியத்து ஓர் உயிரான பரவலான கொள்கை.

கோவலன் மாதவியைப் பிரியுமிடத்தும், அவன் கண்ணகியொடு மதுரைக்குப் புறப் படுமிடத்தும், கல்லாக் களிமகன் அவனை வெட்டுமிடத்தும் இன்னும் பல இடங்களிலும் ஊழ்வினைப் பேச்சைப் பார்க்கின்றோம். ஊழ்வினையைச் சுட்டாத பாத்திரம் இல்லை என்னும் அளவிற்குச் சிலப்பதிகாரம் ஊழதிகாரமாக மாறி நிற்கின்றது. கலைஞர் நாடகத்தில் ஊழ் ஒளிந்த இடம் தெரியவில்லை.

இளங்கோவே நிமித்தத்தையும் ஊழையும் தந்தை சேரலாதன் முன் இகழ்வதாகக் கலைஞர் படைத்துக் காட்டுகின்றார், பொய்க்காது படைத்தவர்களுக்கு நிமித்திகர் வாக்குப் பொய்க்காது. இது உண்மைக்காது, அவர் ஆரூடம் கேட்டுக் கலங்காது’ எனவும் ‘விதிவிட்ட வழியில் நடப்போமென்று இருந்தால் வேதனைக் களமாகி விடும் தமிழ்நாடு’ எனவும் வரும் இளங்கோ பேச்சு உண்மையில் கலைஞரின் பேச்சு.கீரியைக் கொன்ற மனைவியை விட்டுச் சென்றான் அந்தணக் கணவன்.

கருமக் கழி பலமாகிய வடமொழி ஏட்டினைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கிக் கானஞ். சென்ற கணவனைக் கூட்டி வைத்தான் கோவலன் என்று சிலப்பதிகாரம் கூறும். கலைஞரின் கோவலனோ வினைவழிச் செல்லவும் இல்லை, பொருள் கொடுக்கவும் இல்லை, விளக்கஞ் சொல்லி அந்தணனைத் திருத்துகின்றான்.‘அந்தணரே ! பாம்பு குழந்தையைக் கடிக்கு மா கடிக்காதா என்று தெரியாமலே கீரி அதைக் கொன்று விட்டது. அதுபோலவே கீரி குழந்தையைக் கடித்ததா, கடிக்கவில்லையா என்று தெரியாமலே உமது மனைவி அதைக் கொன்றுவிட்டாள். அதனால் சரிக்குச் சரி’ ஆகிவிட்டது.

உமது மனைவியொடு வீட்டுக்குப் போவதே முறை’ என்பது மதி வழிப்பட்ட விளக்கம். கீரிக்கதையை சிலப்பதிகார மதுரைக் காண்டத்தில் மாடலன் கோவலனுக்கு முன் கண்ணகி கேட்கச் சொல்லுகின்றான்;கோவலன் இப்பிறப்பில் செய்தன வெல்லாம் நல்வினைகளே என்று காட்டுவதற்குச் சொல்லுகின்றான். கலைஞரின் நாடகத்தோ எனின் கீரி’ நிகழ்ச்சி புகார் நகரத்துக் கடற்கரையில் மாதவி கோவலன் அருகிருக்க நடப்பதாகக் காண்கின்றோம், பிரிந்த பார்ப் பனியை அவள் கணவனோடு சேர்த்துவைத்த கோவலனுக்குத் தான் விட்டுப் பிரிந்த கண்ணகியை நினைவூட்ட இக் கீரிக் கதை பயன்படுவதாகவும் காண்கின்றோம்

.அந்தணன் கானம் போனான் என்று இளங்கோ கூற, அவன் கடல் வழிப் போனான் என்று கலைஞர் கூறுவர். இந்த ஒரு சிறு கதை யளவில் இரண்டு அதிகாரத்துக்கும் இத்துணைவேறுபாடு இருக்குமெனின், அம்மம்ம, கண்ணகிப் பெருங்கதை யோட்டத்தில் எவ்வளவு எவ்வளவோ மாற்றம் இருக்கத் தானே செய்யும்? ஆதலின் விதிவழிச் சிலம்பும் மதிவழிச் சிலம்பும் தனிமூலங்கள் என்று கொள்வதே தெளிந்த, ஆராய்ச்சி நெறியாகும்.இளங்கோவின் சிலப்பதிகாரக்கதை மிகச் சுருக்கமானது;பாத்திரங்களின் பேச்சும் சுருக்கமானது.

முதற் காதையில் கண்ணகி கோவலன் மணவினை, இரண்டாம் காதையில் அவ்விருவர்தம் இன்ப இல்லறவுறவு, மூன்றாம் காதையில் 16 அடிகளில் மாதவி கோவலன் உறவு. புகார்க் காண்டம் 1500 அடிகள் கொண்டிருந்தாலும் கதையும் பேச்சும் எல்லாம் 200 அடியளவில் சுருக்கமாக முடிந்து விடுகின்றன. காப்பியச் சிலம்பு படைத்த இளங்கோவிற்கு வருணனை நாட்டமேயன்றிக் கதை நாட்டம் குறைவு.

நாடகச் சிலம்பு எழுதிய கலைஞர்க்குக் கதை நாட்டமும், பாத்திரங்களின் உரைநாட்டமும் மிகுதி. அது காப்பிய இயல்பு; இது நாடக இயல்பு.கலைஞர் சிலம்பில் கண்ணகி கோவலன் திருமணம் இடம் பெறவில்லை. வணிகத்தின் பொருட்டுக் கிரேக்க உரோமநாடு சென்று திரும்பிய கோவலனைக் கண்ணகி கடற்கரையில் வரவேற்கின்றாள். அலைகள் தழுவ இருவரும் தழுவி மகிழ்ப. கோவலனொடு ஒரு பெருஞ் செல்வன் 68 வயதுக் கிரேக்கக் கிழவனும் வருகிறான்.

அவன் கோவலனிடம் முத்தமிழில் இயலும் இசையும் கற்றவன். கூத்து மட்டும் தெரியாதவன். மாதவி நடனம் காணக் கோவலன், கண்ணகி, கிழவன் மூவரும் செல்கின்றனர். சோழவரசன் மாதவிக்குப் பரிசாக வழங்கிய 1008 கழஞ்சுப் பொன் மாலையை வாங்குகிறவன் மாதவிக்குக் காதலன் ஆகலாம் என்று கூனி அரசவையில் அறிவிக்கின்றாள்.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment