மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் .
அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும் வணிகச் செம்மலுமாகத் திகழும் நண்பர் திரு .ஜெபராஜ் அவர்கள் நாள் தவறாமல் நினைவூட்டி ஊக்கம் தந்தார்கள் . ” நயவுரை நம்பி ” நாடாளுமன்றத் திலகம் ஜெகத்ரட்சகன் அவர்கள் தான் இதற்கெல்லாம் வேர் . தமிழ் தான் ஒரே ஆறுதல் , அரசுப்பணிக்கு எனக்கு வாய்ப்புத்தந்து என்னை வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்பதை பலமுறை எழுதிக்காட்டியிருக்கிறேன். அலைகள் ஓய்வதில்லை அந்த வகையில் நான் குறித்து வைத்திருந்த செய்திகளுக்கு வடிவூட்ட மூவரும் எனக்கு உறுதுணையாக உள்ளனர் .
எப்போதும் நான் எழுதிப் பழகியதில்லை , என் எழுத்தையே என்னால் சில நேரம் படிக்க முடிவதில்லை ,அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடைக்கும் துண்டுத் தாள்களிலும் ஒவ்வொரு நூலிலும் வேண்டிய பகுதியை நான் குறியிட்டிருந்ததை மீளப்படிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது . முடிந்த வரை என் மூச்சு இடம் கொடுக்கும் வரையில் எழுதுவேன்.
நான் வாயால் சொல்லிப் பிறர் எழுதியதுண்டு, ஆனால் என் விரல்கள் பல்லாயிரக் கணக்கான பக்கங்களை ஒய்வில்லாமல் எழுதும் உரம் வாய்ந்தவை என்று எழுதிய பொற்கரம் தமிழகத்தைக் காத்த கரம் – தமிழ் இனத்துக்குப் புகழ் சேர்த்த கரம் – முத்தமிழறிஞரின் கரம் அதை எண்ணி நெகிழ்கிறேன் .
நினைந்த வரை இந்தக் கட்டுரை அவர் நெடும்புகழுக்குக் கால் சிறு விரல் அணியாக அமையவேண்டும்.
அந்த நாள் என் வாழ்வில் நிலை நின்றுவிட்டது . நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நடந்தது.இராணி சீதை மன்றத்தில் நடந்த விழா.புறநானூறுற்றுப் புதுமை என்ற தலைப்பில் பேசத் தொடங்கினேன். சிகரத்தை அண்ணாந்து பார்த்தேன் !செம்மேனி எம்மான் ! ஏன் பதறுகிறீர்கள்! அந்தத் தொடர் நினைவில் இல்லையா என்றார் தலைவர். நான் பாடலைச் சொல்கிறேன் . நான் எழுதிய பாடலை என்றும் மறப்பதில்லை எனத் தன்னேரில்லாத தலைவர் கலைஞர் எழுந்தார் .அவையினர் ஆர்ப்பரித்தனர் .
“துளித்த நறுஞ் தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்கிய குரல் முழங்கும் கடல் ” என்ற புரட்சிக்கவிஞரின் பொன்வரிகளின் உருவகம் அவையினர் முன் நிமிர்ந்து நின்றது .
குடிசைதான் ! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைந்திருக்கும் –
வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை –
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும்
தலைகாட்டா மானத்தின் உறைவிடம் –
மறவன் மாளிகை !
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள்
வழியனுப்பப் பொக்கை வாய்தனைத்
திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன் ” ஒரு சேதி பாட்டி ! ” என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி ! மூச்சுக்கு மூச்சு
இடைவேளை ஏற்படட்டும்.
பின், பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி ! வேடிக்கை நேரம்
இதுவல்ல பாட்டி – உன் வாடிக்கைக்
கேலியை விட்டுவிடு. ‘மடிந்தான்
உன் மகன் களத்தில்’ என்றான் – மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை !
“தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு-
களமும் அதுதான். காயம் மார்பிலா ? முதுகிலா ?
கழறுவாய் ” என்றாள் – முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள் ;
வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை
நோக்கி முடுக்கினாள் வேகம் ! ” கோழைக்குப்
பால் கொடுத்தேன் குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர் வீரனாம் !
முன்பொருநாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து
கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா ?
அடடா மானமெங்கே – குட்டிச் சுவருக்கும்
கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் –
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும் !
மதுவும் சுராவும் உண்டு வாழும்
மானமற்ற இனத்தவனா நீ –
ஏடா மறத் தமிழ்க் குடியிலே மாசு
தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் – தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே ?
தினவெடுக்கவில்லையா ? அந்தோ !
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே –
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய் !! என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்குச்
செரு முனையில் சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் –
அங்கு நந்தமிழ் நாட்டை காக்க ஓடிற்று இரத்த வெள்ளம் !
பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள் !
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை –
மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு –
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி !
இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள் !
“” எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் ” என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை –
அடடா !
கருத்தறியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? “
இந்தப் புறநானூற்றுப் போர் வரிகளைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் தமக்கே வாய்த்த தறுகண்மையோடு எழுத்து விடாமல் கூறி அமர்ந்தார். அவையின் கையொலி அடங்கப் பலமணித் துளிகள் ஆனது. கலைஞர் எழுதிய இந்தக் கவிதை வரிகளில் புறநானூற்றில் இல்லாத புதுமைகள் பொதிந்திருப்பதைக் காணலாம் .
புலமைப் பெருமாட்டியார் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய இப்பாடல் மங்காத தமிழ் வரலாற்றில் மரகதமணியாகும் .
நச்செள்ளையார் கண்டீரக்கோப் பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம் பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று, அதிகமான் நெடுமான் அஞ்சிபால் ஔவையார் இருந்தது போல நள்ளியின் அவைப் புலவராகும் சிறப்பும் பெற்றாரென்பர் .
ஒரு தமிழ் மறவன், போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்;அவன் போரில் பாய்ந்த திறத்தால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து * வேறாய்க் கிடப்பதாயிற்று. அதனையறியாத பலர், போர் முடிவில் இல்லம் போந்து அவன் தாயைக் கண்டு “ நின் மகன் பகைவர்க்கு முதுகு புண்பட்டு மாண்டான் ” என்று பொய்யாகக் கூறினர்.
அவன் தாய் அப்போது மிக்க முதுமை யெய்தியிருந்தாளாயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு இழுக்காதலை யெண்ணினாள்; கண்களைத் தீயெழத் திறந்து நோக்கி, “ என் மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன் ” என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள்.
அங்கே மறவர் பிணங்கள் மலிந்து கிடந்தன. அவளுக்குத் தன் மகனுடலைக் காண்பது அரிதாயிருந்தது. கள முழுதும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக் கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்; அவன் முகத்திலும் மார்பினும் விழுப்புண் பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன் ” எனத் தெரிந்தாள்.
அக்காலை அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை நிறுவினான் என்ற உவகை மிகுந்தது.
அதுதானும் அவனை அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இந்தக்காட்சி காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக இப்பாட்டினைப் பாடுவாராயினர்.
நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின் உண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.—-புறம் 278
இப்பாடலுக்கு விளக்கம் வரைந்த உரைவேந்தர் திறமும் நினைக்கத்தக்கது .
முதுமையால் மேனி பசுமை குன்றி நரம்பு மேலெழுந்து இனிது காணத்தோன்றுதலால் “ நரம்பெழுந்து உலறிய தோள்” என்றார். பசுமையின்றி விளர்த்து நரம்பு தோன்றத் திரங்கி நிற்பதுபற்றி வயிற்றுக்கு முளரி யுவமமாயிற்று. நன்றெடுத்து மொழிவாரினும் தீதெடுத்து மொழிவா உலகத்துப் பலராதலால், “பலர் கூற” என்றார்.
கூறுவோரது பொய்யுரை கேட்டவருக்குத் தன் மகனது மறத்தின்கண் ஐயந்தோன்றவே, ஒரு தலையத் துணியமாட்டாளாய், “மண்டமர்க் குடைந்தனனாயின் உண்ட வென்முலை யறுத்திடுவன் யான்” எனச் சினந்துரைத்தாள். மகனது மாண்பை ஓரளவு அறிந்திருந்தமையின், “உடைந்தனனாயின்” எனக் கூறின் “அறுத்திடுவென்” என்ற சொல் வாயினின்று வெளிவரும் போதே அக்கை தன் மறக்குடிக்குடைமையாகிய வாளைத் தேர்ந்து கொண்டமை “கொண்ட வாள்” எனப்பட்டது.
பட்ட வீரர்களின் குருதியால் போர்க்களம் சிவந்தமையின் செங்களம் என்றும், இனிது கண்டறிய வகையில் அவள் மகன் கிடவாமையின், “துழவுவோள்” என்றும், சில வேறாகிய மகனது உடம்பைக் கண்டதும் காதன் மிகுதியால். கழுதலின்றிப் பட்ட புண்ணைத் தேர்ந்து பழியின்மைகண்டு அவன் உள்ளம் விம்மி வீங்குதலுலால், “சிதைந்து வேறாகிய படுமகன்” என்றும் வுரைத்தார். சிதைந்து வேறாகிய மகனது கிடக்கை அவளது மறமாட்சி என்பது இதனால் வற்புறுத்தப்பட்டது. விழுப்ண் வீங்குபுகழ் பெற்றதோடு குடிப்பழியும் போக்கினமையின் பெரிதாயிற்றென வறிக.
இந்தப் புறப்பாடலின் அரிய சொற்களை எழுத்துக்கு எழுத்து ஆராய்ந்து எண்ணித்தோய்ந்த முத்தமிழறிஞர் கல்லைப் பிசைந்து கனியாக்குவது போல உருவிய உறைவாளின் ஒளிமின்னல் போலத் தேர்ந்த சொற்களால் அந்த எழுத்தோவியத்தை வரைந்தார்.
1.மானத்தின் உறைவிடம் –
மறவன் மாளிகை !
2 ஓடி வந்தான் ஒரு வீரன் ” ஒரு சேதி பாட்டி ! ” என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி ! மூச்சுக்கு மூச்சு
இடைவேளை ஏற்படட்டும்.
பின், பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி !
3.கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள் ;
வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை
நோக்கி முடுக்கினாள் வேகம் !
4.இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் –
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும் !
மதுவும் சுராவும் உண்டு வாழும்
மானமற்ற இனத்தவனா நீ –
5.கருத்தறியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? “
இந்தத் தொடர்களின் ஆழம் புறநானூற்றில் இல்லாத புதுமை , காக்கைப் பாடினியாருக்குக் கலைஞர் சூட்டிய கலை மாலை .இந்த வீர வரிகளை மேடைகளிலும் திரைப்படத்திலும் நடிப்புத்திலகம் மனோரமாவும் – நடிப்பியற் செம்மல் சிவகுமாரும் ஏற்ற இறக்கத்தோடு எடுத்துரைப்பதைக் கேட்டுத் தமிழினம் தலை நிமிர்ந்து நின்றது .
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….
Leave a Comment
You must be logged in to post a comment.